Monday, June 25, 2018

ஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகைஇந்தக் கட்டுரை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு மிகப்பழைய வழக்கு ஒன்றினை உங்கள் முன் தெரிவிக்க ஆசை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தென்னகப் பூமியை (திருப்பதியும் சேர்ந்துதான்) பேரரசன் ராஜேந்திர சோழன் ஆண்டபோது அவனுக்கு ஒரு புகார் வந்தது. திருமலையில் அவன் முன்னோர் வழங்கிய சில நகைகள், நில உபயங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகையினால் உடனடியாக ஒரு குழுவினை அனுப்பிவைத்து இந்தக் குறைகள் களையப்படவேண்டும் என்பதே அந்தப் புகார். அந்த பேரரசன் உடனடியாக ஒரு அமைச்சர் குழுவை அங்கே அனுப்பி குற்றம் செய்தோரைக் கண்டித்துத் தண்டனை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிலைமையையும் சீர் செய்து கோயில் நிர்வாகம் சிறப்பாக செயல்படவேண்டி ஆணை பிறப்பித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தான். இந்தக் கல்வெட்டு இன்னமும் திருமலை பற்றிய வரலாறு எப்படியெல்லாம் தொடங்கியது என்பதற்கான முன்னுரையாக இன்றும் பதிவாக்கப்பட்டுள்ளது. சரி இது பற்றி பின்னர் வருவோம்.


சில நாட்கள் முன்பு வரை ஸ்ரீவேங்கடேஸ்வரா தொலைக்காட்சியில் அதிகாலைப் பொழுதில் ஸ்ரீ வேங்கடவன் தரிசனம் காண்பிப்பதற்கு முன்பேயே தன் முகம் காட்டி இன்று என்னவெல்லாம் திருமலைக் கோயிலில் நிகழ்ச்சிகள் என்பதை மிக சாந்தமாக கையைக் கட்டிக்கொண்டு கனிவான குரலில் ஒரு பக்கமாக தலையைச் சாய்த்து புன்முறுவல் கூட அதிகமாக வெளிக்காட்டாமல் கடமையைச் செய்யும் கர்மகர்த்தாவாக ‘இன்று இதுதான் இது’ என்பதாக நாளும் தன் பாணியில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் சொல்லிக்கொண்டிருக்கும் இவர் திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் இல்லாமல் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.

அவர்தான் திருவாளர் டாக்டர் கொல்லப்பள்ளி ஏ.வி. ரமண தீட்சிதலு, திருமலை ஸ்ரீவேங்கடவன் கோயில் தலைமை அர்ச்சகர். நீக்கப்பட்டதன் காரணம்: பணி ஓய்வு வயது ஏறுவது கூட தெரியாமல் பணியாற்றியது. (1987 ஆம் ஆண்டில் ஆந்திரமாநில அரசுச் சட்டப்படி கோயில் அர்ச்சகருக்கான உச்சகட்ட பணிஓய்வு வயது 65. அறுபத்து ஐந்து வயது முடிந்தவுடன் அடாவடியாக ஆண்டவன் சேவையை விட்டு விட்டு வீட்டில் உட்காரவேண்டும்.)

அட வேங்கடவா! ஸ்ரீமான் ரமணதீட்சிதலு அவர்களுக்கு திடீரென 65 வயது எப்போதோ கடந்துவிட்டதை இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் எப்படித்தான் துப்பறிந்துக் கண்டுபிடித்தார்களோ.. ஒருவேளை இவருக்கு அதிகார வர்க்கத்தார் ரொம்ப செல்லம் கொடுத்துவிட்டார்களோ.. அவரே போய்விடுவார் என்று தினம் தினம் அவன் கோவில் வாசலிலே சாவிக்காகக் காத்திருந்தார்களோ என்னவோ.. இப்படியெல்லாம் ஆகவில்லை என்பதற்காக ஸ்ரீமான் ரமண தீட்சிதலுவை வேறு வழியில்லாமல் திடீரென தூக்கிவிட்டார்கள் போலும்.


வேறு ஒன்றுமில்லை.. விஜயநகரமன்னரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் அளித்த ஆபரணங்கள் ஏன் சிறப்பு அலங்காரத்துக்காக வழங்கப்படுவதில்லை.. எனக் கேட்ட ஒரு கேள்விக்காக அவர் பதவி பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ராஜா அன்பாக அளித்த நகைகள் 1996 ஆம் ஆண்டு வரை அர்ச்சகர் பொறுப்பில்தான் இருந்தன. ஆனால் அந்த வருடம் சுப்ரீம் கோர்ட்டால் பிறப்பிக்கப்பட்ட சில உத்தரவுகளால் கோயில் நகை மீதிருந்த அதிகாரமும், கோயில் மிராசு அதிகாரமும் அர்ச்சக வர்க்கத்தினமிருந்து பறிக்கப்பட்டது. இந்த உத்தரவுப்படியே கோயில் நகைகள் அதிகாரிகள் வசம் பட்டியலிடப்பட்டு கொடுத்தாகி இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த கோர்ட் கேஸ் கூட மறு விசாரணை கோரியும் நியாயம் வழங்க மறு தீர்ப்பு கேட்டும் இன்னமும் நிலுவையில் உள்ளதுதான். இது ஒருவகை குழப்பமான வழக்கு. யார் யாருக்கு இந்தக் கோயில் மீது என்னென்ன சொந்தம், மிராசுகள் எனப்படுவோர் யார் யார் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதெல்லாம் எழுதி இந்தச் சமயத்தில் யாரையும் குழப்ப மனம் இல்லை. அத்துடன் இந்த கோயில் மிராசு வழக்கு பற்றியும் கோயில் லட்டு பற்றியும் நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதிப் பதிப்பித்துள்ளேன். (http://aduththaveedu.blogspot.com/2012/04/blog-post.html) இது ஒருபக்கம் அந்த கேஸ் அங்கே கிடப்பது போல இருக்கட்டும்.

சரி, திடீரென இந்த வருடம் இந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர் நகைகளைப் பற்றி இந்த தலைமை அர்ச்சகர் இந்த பிரச்னையை ஏன் எழுப்பவேண்டும். இருபது வருடங்களாக இந்தத் தலைமை அர்ச்சகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். ஏன் இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்கவில்லை. இதற்கு ஸ்ரீ ரமண தீட்சிதலு தரும் பதில் ‘நாங்கள் ஒவ்வொருமுறையும் அந்தப் பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், அவர்கள் ஒவ்வொருமுறையும் ஏதாவது சாக்கு சொல்லிப் பொழுதைக் கழித்து விடுவது வழக்கமாகிவிட்டது. இனியும் விடுவதாக இல்லை என்கிறபடியால் என் கேள்வியை பத்திரிகையாளர் கூட்டம் போட்டு அதைப் பொதுவில் வைத்தோம்’.


 அடக்கடவுளே.. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் இத்தகைய நகைகள் வழங்கியதை எத்தனையோ கல்வெட்டு, செப்புப் பட்டயம் என பொறித்துப் போயிருக்கிறாரே.. போதாதற்கு அரசரின் மனைவியர் இருவர் போட்டி போட்டுக் கொண்டு அல்லவா ஆண்டவனுக்கு அலங்கார ஆபரணம் செய்திருக்கிறார்கள்? அத்தனையும் கல்வெட்டாக செப்புப் பட்டயங்களாக மாபெரும் ஆவணமாக இருக்கிறதே.. 1996 வரை கண்முன் இருந்த இந்த நகைகள் என்ன ஆயிற்று? பழைய நகைகள் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டாமா.. இன்னமும் நம் நாட்டு கோஹினூர் வைரக்கல் இங்கிலாந்து நாட்டு ராணியின் மகுடத்தில் இருப்பதை எத்தனை பெருமையாகவோ பொறாமையாகவோ அல்லது எரிச்சலாகவோ ஏன் பெருமிதமாகவோ உணர்ந்து கொண்டே இருக்கிறோம்.. அட, திப்பு சுல்தானின் வாள் ஒன்று சில வருடங்கள் முன்பு இங்கிலாந்தில் ஏலம் விட்டபோது நமது இந்திய நாட்டின் ஏகபோக தேசப்பற்றாளர் திருவாளர் மல்லையா லண்டனுக்குப் பறந்து சென்று ஏலக்காரர்களிடம் அதிகப் பணம் கொடுத்து மீட்டினாரே.. அப்படி இருக்கையில் ஐந்நூறு வருடங்கள் பழமையான பாரம்பரியம் மிக்க நகைகள் திருமலையில் திருவேங்கடவனுக்கு சார்த்தப்படாமல் எங்கே போய் விட்டன. தலைமை அர்ச்சகர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைத்தவுடன் களவு போய்விட்டதா? காணாமல் போவிட்டதா?

சரி, அதிகாரவர்க்கம் என்ன சொல்கிறது.. ‘பழைய நகைகள் மராமத்து செய்யப்படுவது என்பது பண்டைய காலத்திலிருந்தே வரும் வழக்கம்தான். எல்லா நகைகளும் எங்கும் காணாமல் போகவில்லை.. புது உருவில் வந்து கொண்டே இருக்கிறது.. அதில் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் நகைகளும் அடக்கம்’ என்று ஒரேயடியாக ஒரே போடு போட்டு சந்தடி சாக்கில் தலைமை அர்ச்சகரையும் நீக்கிவிட்டு கூடவே அதே வயது காரணத்தின்பேரில் இன்னும் மூன்று அர்ச்சகர்களையும் தூக்கிவிட்டார்கள்.

அது சரி, இவர்கள் நீக்கியதற்கு மறைமுகக் காரணம் தெரிந்துவிட்டது. இவர்கள் ஊழல்கள் வெளிப்பட்டதால் இவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது எல்லோருமே தெரிந்த ரகசியம் போலத்தான் சொல்கிறார்கள். ஆனால் நீக்கியதற்கான காரணத்தை நேர்மையாகவே சொல்லி இருக்கலாம். ஏனெனில் ஆதியிலிருந்தே ஸ்ரீ ரமண தீட்சிதலு மற்றும் தலைமை அர்ச்சகர்கள் மூன்று பேர் திருமலை தேவஸ்தான பணியாளர்களே இல்லை. அவர்களுக்கு மாத சம்பளமோ, கிராஜுவிடி, பென்ஷன், லீவுத் தொகை போன்ற அரசாங்க பண உதவிகளோ கிடையாது. இவர்கள் அரசாங்கப் பணியாளர் என அரசாங்கமும் ஒரு ரிகார்டும் வைத்துக் கொள்வதில்லை. ஒருநாள் கூட விடுமுறை எடுக்கமுடியாமல் இரவு பகலெனப் பாராமல் இறைவனுக்கு சேவை செய்யும் இவர்களுக்கு சம்பாவனை என்ற ஒரு கௌரவத்தால் தினம் செய்கிற பூஜைக்கேற்றவாறு சன்மானம் வழங்கப்படும். அவ்வளவுதான். இதுதான் பண்டைய காலத்திலிருந்து செய்யப்பட்டு வருகின்றது.. இன்றளவும் தொடர்கின்றது.

திருமலை வேங்கடவனுக்கு தலைமை அர்ச்சகராக மொத்தம் நான்கு குடும்பங்களுக்குதான் கடந்த சில தலைமுறைகளாக பொறுப்பு வழங்கப்படுகிறது. இந்த நான்கு குடும்பங்களில் ஸ்ரீ ரமண தீட்சிதலு சார்ந்த கொல்லப்பள்ளி குடும்பத்தாரும் ஒன்று. இப்படித்தான் பல ஆண்டுகளாக இந்த திருப்பணி செய்யப்படுகிறது. இவர்களுக்கு சம்பளம் என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை.  பிரசித்திபெற்ற 1996 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னும் அதன் பின்னர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகவும் இது தொடர்ந்து கொண்டுதான் வருகின்றது. திருமலை திருவேங்கடவனின் தனிப்பட்ட கோயில் பூசை விதானம் பற்றியோ அதன் ஆகமவிதானங்கள் பற்றியோ, தலைமை அர்ச்சகர்கள் பற்றியோ உச்சநீதி மன்றமும் சரி, மாநில அரசாங்கமும் சரி இதுவரை தலையிட்டதில்லை. தலைமை அர்ச்சகருக்கு உரிய கௌரவத்தில் குறை வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்ததால் பழைய பழக்கத்தையே தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் திடீரென இப்போது இந்த வழக்கங்களை மாற்ற முன் வந்ததோடு மட்டுமல்லாமல் வயது அதிகமாகிப் போகின்றது என்ற கவலையும் இவர்கள் மீது பட்டு அரசாங்கம் நடவடிக்கையும் எடுத்து விட்டது.

அரசியல் காரணங்களுக்காக, குறிப்பாக மாறிவிட்ட தற்போதைய ஆந்திர அரசியல் காரணங்களுக்காக ஸ்ரீரமண தீட்சிதலு இத்தகைய நடவடிக்கையை எதிர்கொண்டாலும், ஒரு தலைமை அர்ச்சகர், அதுவும் திருமலைக் கோயில் தலைமை அர்ச்சகர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை அரசாங்கத்தார், முக்கியமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் உணரத் தவறியதேன்?

ஸ்ரீரமண தீட்சிதலுவின் ஏனைய குற்றச்சாட்டுகளும் கவனிக்கத்தக்கவை.
1. பிரமுகர்கள் தரிசனத்துக்காக, அந்த பிரமுகர்களின் வசதித்தன்மையை ஒட்டி திருவேங்கடவனுக்குச் செய்யவேண்டிய பூஜை வகையறா கூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வற்புறுத்தல் அல்லது ஆணைகள் வரும் காலகட்டத்தில் அது அதிகாலை சுப்ரபாத சேவையாகட்டும் வழக்கமான காலைநேரத்து தோமாலை சேவை போன்றவை தாறுமாறாக நடக்க வழி வகுக்கின்றனர். ஒரு சில சமயங்களில் சுப்ரபாத சேவை நள்ளிரவில் அப்படியே தொடரச் செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சுப்ரபாத சேவைக்காக வந்த வி.ஐ.பி காலையில் அதுவும் அதிகாலை வரை தூங்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காக திருவேங்கடவன் தரிசனத்தை நள்ளிரவில் நிறுத்தாமல் அவரை ஒரு சில நிமிடம் கூட பள்ளிகொள்ளவிடாமல் தொடர் ஓட்டம் போல 24/7 சுவாமியாக்கி, அந்த நள்ளிரவிலேயே சுப்ரபாதம் ஆரம்பிக்கவைத்து திருவாராதனைகளை வழக்கம்போல தொடங்கிவிடுகின்றனர். வேறு எந்தக் கோயிலிலும் இப்படி நடப்பதில்லை. தினமும் ஏராளமான பிரமுகர்கள் குலசேகரப்படி வரை அழைத்துச் செல்லப்பட்டு வருவதும், சாதாரண பக்தர்கள் அருகே செல்லமுடியாதபடி மகாத்வாரம் வழியே சுவாமியை ஒரு நொடி காண்பித்து உடனடியாக துரத்தப்படுவதும் வாடிக்கைதானே..

2. பிரதான அர்ச்சகர்கள் ரொடேஷன் முறையில் சுவாமி திருப்பணிக்காக கருவறைக்குள் வருமுன் அடுத்த பிரதான அர்ச்சகருக்கு தேவஸ்தான அதிகாரி முன்னிலையில் சுவாமியில் அலங்காரத்துக்கான வரைமுறைகள், இன்னின்ன நகைகள் தேவையானவை, வைர வைடூரியங்கள் இவை பற்றிய தகவல்கள் தேவஸ்தான அதிகாரியால் பதிவு செய்யப்படவேண்டும். இது 1996 வரை நடந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தாறுமாறாகிப்போனது. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் அளித்த பிரத்யேக நகைகள் சுவாமியில் சிறப்பு நாள் சிறப்பு அலங்காரத்துக்காக தருவிக்கப்படவேண்டும். அது நிறுத்தப்பட்டது.

 3. பொட்டு எனச் சொல்லப்படும் கோயில் உள்ளே அமைந்த சமையலறையை தேவஸ்தான அதிகாரம் சீர்படுத்துவதாக பத்துநாட்கள் வரை ஏதேதோ மராமத்து செய்து அந்தக் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வெளியே இருந்து சமையல் செய்யப்பட்டு சுவாமிக்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டது. இதுவரை இப்படி நடந்ததில்லை.


அர்ச்சகர்கள் மீது 1987 முதலே திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஆந்திர அரசாங்கமும் குறி வைத்து தாக்கிக்கொண்டே வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தில் வம்சாவழி அர்ச்சகர்கள் வரக்கூடாது என்றும் இருக்கும் அர்ச்சகர்கள் கூட 65 வயது வரைத்தான் அங்கே பூஜை செய்யவேண்டுமென்றும் அரசாணை ஒன்று 1987 இல் திரு என்.டி.ஆர் தலைமையில் உள்ள அரசு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து கோர்ட்டில் எதிர்த்து வாதாடப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் ஒரு அர்ச்சகர் ஒரு கோயில் கோபுரத்தின் மணியை அடித்து நியாயம் கேட்டு அங்கிருந்து குதித்து உயிர்விட்டார். 2007 ஆம் ஆண்டில் திரு ஐ.ஒய்.ஆர் கிருஷ்ணாராவ் எனும் ஆந்திர அரசாங்க தலைமை அதிகாரி அர்ச்சகர்களுக்கு இந்த கேஸை வாபஸ் வாங்கினால் இந்தத் தடைச்சட்டத்தையும் அரசு பரிசீலிக்கும் எனும் வாக்குறுதியை நம்பி சில கோர்ட் கேஸ்கள் வாபஸ் வாங்கப்பட்டாலும் இதுநாள் வரை எந்த அரசாங்கத்தாரும் அர்ச்சகருக்காக ஒரு குழுவைக் கூட அமைக்கவில்லை.

அர்ச்சகர்களைப் பற்றியும் அவர்கள் திருவேங்கடவனின் மேல் கொண்ட பற்றினைப் பற்றியும் சரித்திரம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வைஷ்ணவ பரம்பரை இங்கே அர்ச்சக சேவகம் புரிந்து வந்திருக்கிறது. இராமானுஜரும், தேசிகர்சுவாமியும், மணவாள மாமுனியும் பரிபாலித்த திருக்கோயில் இது. மத்திய காலத்தில் திருக்கோயிலின் பொறுப்பு முழுதும் அர்ச்சகர்கள் கையில் இருந்ததற்கு ஏகப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூட வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் மலேரியா அங்கு வந்ததால் யாரும் திருமலை செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. அர்ச்சகர் குடும்பம் அனைவரும் அந்தத் தடையை மீறி மலையிலேயே இருப்போம் என்று சேவை செய்தவர்கள். இவையெல்லாம் கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

திருமலை ஆண்டவனுக்கு பிரதானம் எப்போதுமே அவனை நாடி வரும் பக்தர்கள்தான். பிரதான அர்ச்சகர்களாக இருந்தாலும் சரி, சாதாரண அர்ச்சகர்களாகவோ வேதம் பாடும் பண்டிதராகவோ இருந்தாலும் சரி, பக்தர்களுக்காகத்தான் அவன் அங்கே கோயில் கொண்டிருக்கிறான். இது முறையான பதில்தான் என்றாலும் அந்த எளிய பக்தர்களை சிறைக் கைதிகள் போல பாவித்து பலமணி நேரங்கள் அறையில் அடைத்து அதன்பிறகு அவனை நெருங்க நெருங்க ஒழுங்கான முறையில் சீர் செய்யாமல் அரக்க பரக்க நெருக்கி மகாத்துவாரம் வரை மட்டுமே அவர்களை இழுத்து வந்து அனுப்பி வைக்கும் அதிகார வர்க்கத்தைப் பற்றி ஏற்கனவே மூன்று பிரிவுகளாக எழுதி அதனை வம்சதாரா வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். (http://vamsadhara.blogspot.com/2014/02/blog-post_22.html) பக்தரும் சரி, பிரதான அர்ச்சகரும் சரி, எங்கள் நடைமுறைக்கு ஒத்துப் போகாவிட்டால் கஷ்டம்தான் என்பதை சமீப காலமாக அரசாங்கமும் அதிகாரிகளும் சர்வ சாதாரணமாக நிரூபித்துள்ளார்கள்.

எல்லாம் தெரிந்த  அந்த அதிகாரிகளும் அரசாங்கமும் ஒன்றை மட்டும் அடியோடு மறந்துவிடுகிறார்கள். அது வேறொன்றுமில்லை. அந்த திருமலைத் தெய்வம்தான். அவர் சாட்சி பூதம். சதா நின்று கொண்டே ஒரு கணம் கூட இமைக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு வரும் சாட்சி பூதம்.

ஹிரண்யகசிபு கதை நினைவுக்கு வருகிறது. அவன் கொடுத்த கஷ்டங்களையெல்லாம் மகன் பிரகலாதன் அனுபவித்துக் கொண்டிருந்ததை தந்தை எனும் முறையில் அவனேக் காண சகியாது, ‘அடேய்.. நாராயணன் இங்கே வந்து உனக்கு உதவமாட்டானடா.. எல்லா வரங்களையும் நானே பெற்று நானே தெய்வமாகிவிட்டேனடா.. என்னையே தெய்வம் என ஒப்புக் கொள்.. அப்படி ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அவனையாவது என்னிடம் வரச்சொல். ஆனால் அவன் வரமாட்டானடா’ எனக் கெஞ்சும் ராட்சனனிடம் பிரகலாதன் சொன்னானாம். ‘உண்மையான பக்தனுக்காக என் நாராயணன் இதோ உன் வெற்றிகளின் அடையாளமாக உன் கையால் நீயே கட்டிய  இந்தத் தூணிலும் இருந்து கூட வருவான்.. அப்படி வரவில்லையென்றால் நான் அவன் பக்தனே அல்ல..” என்ற பிரகலாதனின் சொல்லை முடிக்கக்கூட விடாமல் நாராயணன் நரசிம்மனாக அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்துவிட்டான்.

இது ஹிரண்யகசிபுக்களின் காலம் போல. துரதிருஷ்டவசமாக இந்த அதிகார வெறி பிடித்த பலவான்களாகத் திகழும் ஹிரண்யகசிபுகள் பக்திமிக்க பிரகலாதர்களைப் பெறவில்லையோ என்னவோ..

பக்தன் எனச் சொல்லும்போது ஸ்ரீகிருஷ்ணதேவராயன் நினைவுதான் வருகிறது. அவன் கோயில் வாயிலிலே எப்போதும் தாம் அவனை வணங்குவது போல பிரத்தியட்ச சிலையாக தாம் இருக்க விரும்பினான். அவனோடு அவன் மனைவியர் இருவருமே மண்டப வாயிலிலேயே அவன் தரிசனத்துக்காக இப்போதும் காத்துக் கிடப்பதாகத்தான் அவர்கள் சிலைகளைப் பார்க்கும்போதெல்லாம் நான் உணர்வேன். உத்தமன். அந்த ஒரு திராவிட அரசன் வந்ததால் மட்டுமே தென்னகத்தில் எத்தனையோ கோயில்கள் சீரமைக்கப்பட்டன. அந்த பக்தன் தன்னை ஆண்ட திருவேங்கடவனுக்கு பய பக்தியோடு அளித்த நகைகள் இந்த இருபது வருடங்களில் எங்கு போயினவோ என்ற ஆதங்கத்தால்தான் இந்தக் கட்டுரை எழுந்துள்ளது.

மறுபடியும் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பேரரசன் ராஜேந்திர சோழன் செயல்பட்ட விவரத்துக்கு வருகிறேன். கங்கைகொண்டசோழபுரத்தில் மிகப் பெரிய கோயில் கட்டி வரலாற்றில் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றவன் தொண்டை மண்டலத்து திருவொற்றியூர் திருக்கோயில் கோபுரத்தைக் கட்டியவன் அந்த மகராசன் திருமலைக் கோயிலுக்கு  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  நியாயம் செய்தது போல உரியவர்கள் இப்போதும் நியாயம் செய்யத்தான் வேண்டும். உடனடியாக ஒரு மேல்நிலைக் குழு அமைத்தாகவேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் கலைக்கப்பட்டு அங்கே எளியவர்களும் ஆன்மீகவாதிகளும் ஆளுமை தெரிந்த மேன்மக்களும் கலந்த ஆளுமைக்குழு அமைக்கப்பட்டு எல்லாவிதக் குறைகளும் களையப்படவேண்டும். கலியுகத் தெய்வம்தான் இதற்கு ஆவன செய்யவேண்டும். திருமலையில் சாந்தி நிலவவேண்டும். எளிய பக்தர்கள் சீராக அவன் அருகே உள்ள குலசேகர ஆழ்வார் வாயிற்படிவரை வந்து செல்ல அருள் புரியவேண்டும். அர்ச்சகர்கள் அவன் மனம் விரும்பும் வகையில் வேதோத்தமமாக பூஜை செய்ய அனுமதி வழங்கவேண்டும்.

திருமலைத் திருடன் நாவல் மூலம் அவனை அருகில் இருந்து அண்ணாந்து பார்த்தவன். என் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது போல எத்தனையோ கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்தக் கள்வனின் அருகேயே கள்ளத்தனம் நடக்கவிடலாமா?

அகலகில்லேன் இறையுமென அலர்மேல் மங்கையுறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வோனே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன்னடிக் கீழமர்ந்து புகுந்தேனே. (நம்மாழ்வார்)