Thursday, September 08, 2011

7, மாணிக்கவாசகர் - மூவருக்கும் முன்னவரா, பின்னவரா (இறுதிப்பகுதி)



மாணிக்கவாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முன்னவரா அல்லது பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவரா என்ற அவர் காலத்துக்காக ஏறத்தாழ எல்லாச் செய்திகளையும் அலசிவிட்டோம் என்றாலும் மூவர் பாடிய பாடல்களில் இவர் பெயர் வருகிறதா அல்லது வாதவூரர் பாடிய பாடல்களில் மூவர் பற்றிய செய்தி ஏதேனும் வருகிறதா என்றால் பதில் அப்படி இல்லைதான் என்பதே. மூவர் பாடிய தேவாரங்களில் பாடல் பெற்ற தலங்கள் பெரும்பாலும் சோழநாட்டையும் தொண்டை நாட்டையுமே சார்ந்தது என்பதும், பாண்டிய, சேர நாட்டுத் திருத்தலங்கள் என வரும்போது சிவத்தலங்கள் பெரும்பாலும் வைப்புத்தலங்களாக மட்டுமே பாடப்பட்டவை என்பது உண்மைதானே.

மூவர் பாடிய பாடல்களில் பாடல் பெற்ற தலங்கள் 275 என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அவர்கள் செல்லாமலேயே தாம் பாடிய பாடல்களில் ஊரின் பெயர் பெற்றிருந்த தலங்கள் 267 பாரதமெங்கும் உள்ளன என்பதை அந்தப் பாடல்களிலிருந்தே அறியலாம். இவை தேவார வைப்புத் தலங்கள் என்று பெயர் பெற்றவை. இப்படிப்பட்ட வைப்புத் தலங்களில் மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறையும் அவர் பிறந்த வாதவூரும் இடம் பெறுகிறது. அப்பர் சுவாமிகள் பாடும் பாடலில் இரண்டு முறை (6-70-2, 6-71-11) பெருந்துறைக் கோயில் இடம்பெற்கின்றன. அதைப் போல வாதவூர் கோயில் பற்றி திருஞானசம்பந்தர் தம் பாடல் ஒன்றில் (02-39-7) போற்றிப்பாடுகிறார். ஆனால் அப்பர் சுவாமி பாடும் பெருந்துறைப் பாடல் அங்குள்ள் ஆதி கைலாயநாதர் கோயில் என்பதாகவும் அது பெருந்துறை அருகில் உள்ள வடக்கூர் என்ற பகுதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருந்தால் வடக்கூர் என்றுதானே அப்பர் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கவேண்டும். பெருந்துறை என்று ஏன் இரண்டு முறை இரு வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தார் என்றும் பார்க்கவேண்டும்.

அடுத்து உத்தரகோசமங்கையூர். இது சிறந்த சிவபக்தனான இராவணனின் மனைவியான மண்டோதரியின் பிறந்த ஊர் என்று.(http://www.shaivam.org/siddhanta/sp/spt_t_uttarakocamangai.htm) சொல்லப்படுகிறது. மாணிக்கவாசகர் 38 இடங்களில் உத்தரகோசமங்கையூரைப் பற்றிப் பாடி இருக்கிறார். ஆனால் இத்தலத்தை மூவர்களில் ஒருவர் கூட பாடவில்லை. வைப்புத் தலமாகவும் போற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த ஊர் பாண்டியப் பழம்பதி என்பதும் சங்க இலக்கியத்தில் இலவந்திகைப்பள்ளி எனவும் குறிக்கப்பட்டதாக இக்கோயில் தலவரலாறு கூறுகிறது. தேவார மூவர்களும் பாண்டியநாட்டில் பல சிவத்தலங்களைப் பாடவில்லை என்பதும் கவனத்தில் கொண்டு இந்தச் செய்தியை நோக்கவேண்டும். மேலும் தேவாரமுதலிகள் எழுதிய பெரும்பகுதிப்பாடல்கள் கிடைக்கவில்லை என்பதும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இப்படிப் பார்க்கையில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்கவேண்டும். மாணிக்கவாசகர் சிவனடியார்களைப் போற்றி பல பாடல்களைப் பாடியவர். திருக்கோத்தும்பி பதிகத்தில்

”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி”

திண்ணன் கண்ணப்பர் இறைவன் மீது வைத்த அன்பு என்பது ஒப்பில்லாத அன்பு, அந்த அன்போடு ஒப்பிட்டால் நான் இறைவன் மீது வைத்திருக்கும் என் அன்பு என்பது ஒன்றுமே இல்லை என்று பொருள் வரும்.

இன்னொரு பதிகத்தில் அடியவர் பற்றி அழகாகச் சொல்கிறார்.

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்
அருளைப் புரியாய்

(சக்தியானவள் உன் இதயத்தில், அந்த சக்தியின் இதயத்தில் நீ இருக்க, எனது உள்ளத்தின் நடுவிலோ சிவனும் சக்தியுமாய் இருவரும் இருக்க, இப்படிப்பட்ட நான் உன் அடியார் உள்ளத்திலும் இருக்க அருள் புரிவாய் ஈசனே!)

இந்தப் பாடல் ஒன்றே வாதவூரர் எப்படியெல்லாம் சிவனடியார்களை மதித்துள்ளார் என்பதற்கு சான்று.. இப்படிப்பட்ட பெரும் வள்ளல், சீர்காழியைப் பற்றி சொல்லும்போது “கழுமலமனதிற் காட்சி கொடுத்தும் (கீர்த்தித் திருவகவல்) என்று தனக்கு சிவன் கழுமலத்தில் காட்சி கொடுத்ததை பாடும் வாதவூரர், சீகாழிப்பதி ஞானசமபந்தன் எனும் சிவப்பாலகன் ஞானப் பாலுண்டு சிறிய வயதிலேயே பல கோயில்கள் பாடி, மதுரையம்பதியிலே சமணர்களோடு வாதில் வென்றதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஞானசம்பந்தர் ஞானப்பாலுண்ட நிகழ்ச்சியும் மதுரையில் சமணர்களை வென்ற நிகழ்ச்சியும் என்பது சாதாரணமான மனிதச் செயல் அல்ல. சம்பந்தர் வாழ்ந்த காலத்திலிருந்து மிகச் சிறப்பாக பிற்காலம் முழுவதும் பேசப்பட்ட நிகழ்ச்சியைப் பற்றி ஒரு வார்த்தையும் மாணிக்கவாசகர் நாவிலிருந்து வரவில்லை. அதே போல கல்லிலே கட்டி கடலில் போடப்பட்ட நாவுக்கரசரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட மாணிக்கவாசகர் பாடலில் இல்லை, திருநாவலூரில் ஆட்கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமியைப் பற்றியும் ஒரு வரி பாடவில்லை. எத்தனைதான் 8ஆம் நூற்றாண்டு சுந்தரர் பாடல்கள் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொகுக்கப்பட்டாலும் எல்லா சிவன் கோயில்களிலும் ஆங்காங்கே பாடப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கங்களை (ஏதோ சில்வற்றையானும்) அடியார்கள் ஓதிக் கொண்டுதானே இருந்தார்கள். வாதவூரார் தில்லையிலே தங்கினார், சீர்காழி சென்றுள்ளார், திருவிடைமருதூர் சென்றுள்ளார், தேவார முதலிகள் பாடிய காவிரி கீழ்ப்பகுதி தலங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று வந்ததையும் குறிப்பேட்டில் எழுதுவது போல கீர்த்தித் திருவகலில் தந்துள்ளார். இத்தனைக்கும் வாதவூரரின் அனைத்துப் பாடல்களும் கிடைத்த நிலையில், சிவனடியார்களை இதயத்தில் வைத்துப் போற்றும் வாதவூரர் ஏன் ஞானசம்பந்தரைப் பற்றியோ, அப்பர் பற்றியோ அல்லது சுந்தரர் பற்றியோ பாடவில்லை என்ற கேள்வி எழுகிறது.

“கிடந்தான் தில்லை அம்பலமுன்றிலில் மாயவனே”
என்ற வரி மாணிக்கவாசகர் பாடலில் வருகிறது. அதை வைத்து அவர் மூவர்களுக்குப் பிற்காலத்தினர் என்று சொல்பவர் உண்டு. மாயவனும் சிவனும் அந்த முற்காலக் கட்டங்களில் ஒரே கோயிலில் இருப்பது சகஜம்தான். மதுரையில் சுந்தரேசப் பெருமானுக்குத் திருமணம் தம் கையால் முடித்தவனே பெருமாள்தான். தில்லையில் சிவனின் ஆனந்த தாண்டவம் காண மாயவன் முன்பே வந்திருக்கமாட்டானா? முதலாழ்வார் காலத்தில் சிவனும் விஷ்ணுவும் சமமாகவே கோயிலில் போற்றப்பட்டதை அவர்களது சில பாடல்களே சொல்கின்றன. மகேந்திர பல்லவன் மும்மூர்த்திகளுக்கும் சேர்ந்து குடைவரை எடுப்பித்தவன், காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு உள்ளேயே விஷ்ணுவும் கோயில் கொண்டுள்ளார். திவ்யஸ்தலம் கூட. அதே போல ஒன்றாம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்ட பேரூர் சிவாலயத்தில் வரதராஜப்பெருமாள் இருக்கிறார். இத்தலம் வைப்புத்தலம் கூட. மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறையுடன் பேரூரையும் புகழ்ந்து ஒரே பாட்டில் திருநாவுக்கரசர் பாடியுள்ளார். (6-70-2)அப்படிப்பட்ட காலத்தில் தில்லையில் மாயவன் எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில்தான் குடியேறினான் என்று எந்த சரித்திர ஆசிரியரும் மிகச் சரியாகச் சொல்லவில்லை. தந்தி வர்மன் காலத்தில் விஷ்ணு தில்லையில் வந்திருக்கலாம் என்பது வெறும் ஹேஷ்யம்தான். தில்லைக் கோயிலில் சிற்றம்பலத்தான் எப்போது வந்தானோ அப்போதே மாயவனும் அங்கே வந்திருக்கவேண்டும். (அணிமுடி ஆதி அமரர் கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து – என்றும் எழுதியவர் வாதவூரர் என்பதை நினைவுகொள்ளவேண்டும்)

தில்லையில் பாடிய திருக்கோவையில் வரகுணன் பற்றிப் பாடினதால் அவன் மதுரையை ஆண்ட வரகுணபாண்டியனைப் பற்றித்தான் பாடினார் என்று பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். ஆனால் வரகுணன் எனும் ஒன்பதாம் நூற்றாண்டு பாண்டிய மன்னரைப் பற்றிப் பாடியவர், தனக்கு மிகவும் பிடித்தமான மதுரையம்பதியில் நிகழ்ந்த மாபெரும் வரலாற்றுச் சம்பவம், அதுவும் வரகுணனின் முப்பாட்டனார் கூன் பாண்டியனும், அவன் மனைவி, மங்கையற்கரசியும் சம்பந்தப்பட்டது, அதுவும் இறைவன் அருள் பெற்ற ஞானசம்பந்தர் சம்பந்தப்பட்டது பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

திருக்கோவையில் எழுதப்பட்ட வரகுணன் பற்றிய சம்பந்தத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1) வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத் தான் (8-19-8 திருக்கோவை)

வரகுணன் எனும் தென்னவன் ஏற்றிப் போற்றும் தில்லை சிற்றம்பலத்தான் (சுருக்க விளக்கம்)

2) மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டு (8-23-12)


(கயல் மயக்கத்தையுடைய உயர்ந்த பெரிய களியானையையுடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த – சுருக்க விளக்கம்) – நன்றி தேவாரம் தளம்.

முதலில் வந்த வரகுணன் தென்னவன் புகழும் சிற்றம்பலத்தான் எனவும் இரண்டாவதில் வந்த வரகுணன் இமயத்தில் அல்லது ஏதாவது இமயமலையை ஒத்த ஒரு பெருமலையில் மீன் சின்னத்தை வைத்தது என்பதனைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஆராய முன்வரவேண்டும். முதலாம் வரகுணன் என்ற பாண்டியன் பெருவீரன் ஆனால் அவன் காலத்தில் காவிரிக்கு வடக்கே பெரும் சக்தியாக இருந்த பல்லவரை மீறி அவனால் வடக்குப் பகுதியை தாண்டமுடியாது என்பது ஒருபுறம், இந்த முதலாம் வரகுணனின் பேரன் இரண்டாம் வரகுணன் சில போர்களில் தோல்வியைத் தழுவினான் என்பதும், இரண்டாம் வரகுணன் காலத்துக்கு சற்று முன்பே விஜயாலய சோழன் தஞ்சையை கம்பவர்ம பல்லவனிடமிருந்து கைப்பற்றி சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த காலம் என்பதையும் சரித்திரம் சொல்கிறது. (சமீபத்திய கண்டுபிடிப்பான இந்தளூர் செப்பேடுகள் தஞ்சையை கம்பவர்மனிடமிருந்து விஜயாலயன் மீட்டதாக சொல்கிறது. இது புத்தம் புதிய தகவல் என்பது ஒருபுறமிருக்க பழைய சரித்திர ஆசிரியர்கள் தஞ்சையை முத்தரையனிடமிருந்து விஜயாலயன் மீட்டதாக அத்தனை புத்தகங்களிலும் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்). இதே இரண்டாம் வரகுணன் காலத்திலேயே சோழ அரசன் முதலாம் ஆதித்தன் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று சோழ ராஜ்யத்தை மிகப்பெரிதாக விரிவுபடுத்தினான் என்பதையும் அதே சரித்திரம் சொல்கிறது.

இந்தத் தகவல்களில் இருந்து தில்லையில் இருந்த வாதவூரர் ஒன்பதாம் நூற்றாண்டு வரகுணனைத்தான் பாடி இருக்கிறாரா அல்லது பொதுவாக சத்குணமுள்ள பாண்டிய அரசன் (யாரோ முற்காலப் பாண்டியனாகவும் பொருள் கொள்ளலாம்) என்று சொல்லியிருக்கிறாரா என்பது இங்கு கூர்மையாக நோக்கத்தக்கது. ஒரு வரகுணன் என்ற வார்த்தையைக் கொண்டு இன்னும் அவர் ஒன்பதாம் நூற்றாண்டவர்தாம் அல்லது தேவார மூவர் காலத்தவருக்குப் பிற்பட்டவர் என முடிவு கொள்வது சரியானதுதானா என்பதை நோக்கவேண்டும்.

ஏற்கனவே பாவைப்பாடல்களின் வித்தியாசங்களைக் கொண்டு ஆண்டாளும் மாணிக்கவாசகரும் பாடியதால் இருவரும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பதைக் குறிப்பிட்டோம்.

சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் வாதவூரர் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் விவரமாகத் தகவல்களைத் தெரிவித்தோம்.

சீர்காழியை பிரமபுரம் என்றோ சீர்காழி என்றோ குறிப்பிடாது அதன் பழைய பெயரான கழுமலம் என்று வாதவூரர் சொல்லியிருப்பதையும் தெரிவித்தோம். கழுமலப்பதி என்பது ஞானசம்பந்தரின் சீகாழிப்பதி பாடல்களில் அடிக்கடி வரும். அதே போல குத்தாலம் (மயிலாடுதுறை-திருவாவடுதுறை மத்தியில் வரும் தலம்) என்ற ஊரின் பழைய பெயர் துருத்தி என மாணிக்கவாசகர் குறிப்பிட்டதையும் தெரிவித்தோம். மாணிக்கவாசகர் எழுதிய சில ஊர்கள் அப்பர் சுவாமிகளாலோ, அல்லது சுந்தரர், சம்பந்தர் பெருமானாலோ பாடப்படாததையும் தெரிவித்தோம்.

வாதவூரும், திருப்பெருந்துறையும் மிகப் பழமையான ஊர்கள் என்பதையும் தெரிவித்தோம்.

வாதவூரரின் தமிழைப் பற்றிய பல குறிப்புகள் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் தமிழில் அவர் தந்த சில சிறப்புச் சொற்களையும் பிரித்துக் கொடுத்துள்ளோம். வடமொழி கலப்பினால் காலத்தைக் கணக்கிடமுடியாது என்பதையும் விவரித்தோம்.

அதே போல புத்தபிக்குகளுடன் வந்த மன்னன் சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரிவித்தோம். புத்தசமயத்தினர் வந்த காலம் பிற்கால சோழர்களின் ஆரம்ப காலம் என்று கணக்கிடுவதில் உள்ள சிக்கல்களைத் தெரிவித்தோம். மாணிக்கவாசகர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராயின் அந்தச் சமயத்தில் சோழர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் அந்த இலங்கை அரசனை இப்படி அனுமதித்திருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகின்றதல்லவா. ஆனால் அதே பிக்குகள் மூவருக்கு முந்திய நூற்றாண்டுகளில் வந்திருக்க அநேக வாய்ப்புகள் உண்டு. காரணம் தமிழகத்தில் சிதறிக் கிடந்த அரசுகள் பற்பல. அப்பர் காலத்தில்தான் (ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம்) தமிழகத்தின் வடக்கே மகேந்திரபல்லவனும் தெற்கே க்டுங்கோன் பாண்டியனும் சிறிது சிறிதாக தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தனர். சோழர்கள் பூரணமாக வலுவிழந்திருந்த காலகட்டம். இந்த சிற்றரசர்கள் முழுசுதந்திரத்தோடு ஆண்டுகொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தின் தில்லைப்பகுதியில் ஆண்ட ஏதாவது ஒரு சிற்றரசன் ஆதரவில் புத்தமதத்து பிக்குகளும், சிங்கள அரசனும் வந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஏற்கனவே தில்லையம்பதி என்பது மிகப் பழைய பதியானது என்பதும் குறிப்பிட்டோம். சமீபத்தில் மடலிட்ட திரு தியாக சத்தியமூர்த்தி (தொல்பொருள் ஆய்வாளரும், தொல் ஆலயங்களைப் பாதுகாக்கும் ரீச் அமைப்பின் தலைவர்) அவர்கள் சென்னை அருகே சாளுவம்குப்பத்தில் பழைய முருகன் கோயில் ஒன்றினை அகழ்வாராய்ச்சியின் மூலம் உலகின் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். இந்தக் கோயில் சங்ககாலத்தைச் சார்ந்ததாகும். தில்லை, திருவரங்கம் போன்ற கோயில்கள் ஆகமம் எனும் சாத்திரம் கோயில்களுக்கு வரும் காலத்துக்கு முன்பேயே இருந்திருக்கின்றன என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

முடிவாக மாணிக்கவாசகர் காலம் பற்றி மாணிக்கவாசக சுவாமிகளின் இனிய பாடல்கள் மூலமாகத்தான் பயணம் செய்து இக்கட்டுரையை எழுதிவருகிறோம் என்பதை ஒருமுறை கவனத்தில் கொண்டுதான் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட பல சிறப்புகள் கொண்ட இந்த தில்லை மூதூரில் ஏன் மாணிக்கவாசகர் தேவார மூவர் காலத்துக்கு முன்பேயே வந்திருக்க முடியாது?

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்!!


அன்புடன்

திவாகர்.

(நன்றி! முதலில் நாசா டாக்டர் நாக கணேசனுக்கு. என்னைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் அவர்தான். அவரால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மாணிக்கவாசகரிடம் எம் சிந்தையைப் பறிகொடுத்து உருகிய பேரினபம் கிடைத்தது. கட்டுரையை அவ்வப்போது படித்துக் கருத்துகள் தெரிவித்த சான்றோர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி. இக் கட்டுரைகளை உடனுக்குடன் படித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.)