Wednesday, July 05, 2006

வாழ்க வலைப்பூ வையகம்:

ப்ளாக் - தமிழில் இடுகை (?)அல்லது வலைப் பதிவு அல்லது வலைப்பூ - ஒரு கணினி வந்ததன் மூலம்தான் எத்தனை எத்தனை அற்புதங்கள் நிகழ ஆரம்பித்துவிட்டன?

என்னுடைய நண்பர்கள் பலரும் கடந்த ஒரு வருடமாகவே இதைப் பற்றி பேசி வருகிறார்கள். நானும் சற்று முயன்று பார்த்தேன். என்னுடைய சில முக்கிய கோப்புகளை பதிவு செய்தேன். பிறகு மறந்து விட்டேன்.

சமீபத்தில் என் நண்பன் ஜெயராஜின் (சிங்கப்பூர்)இணைய கடிதம் - அக்கடிதத்துடன் ஒரு வலைப்பூ தகவலைப் பற்றிய் இணைப்பு, ஆச்சரியமான விஷயமாகத்தான் பட்டது.

ரஜ்னிராம்ஜி என்ற அன்பரின் வலைப்பூவில் என்னைப் பற்றியும் என் புத்தகங்களையும் பற்றியும் ஒரு அன்பர் மிக மிக பாராட்டுதல்களோடு குறிப்பாக கொடுத்திருந்தார். அதைப் படித்ததும் முதலில் நெகிழ்ச்சி - சற்று யோசித்துப் பார்த்ததில் என்னைப் பற்றிய ஒரு பயம் - வாசகர்களின் எதிர்பார்ப்புகளை இனியும் என்னால் ஈடு செய்து எழுதமுடியுமா என்ற கேள்வி கூட என்னுள் எழுந்து விட்டது.

ரஜ்னி ராம்கியில் இருந்து ஜோ, பின்பு வஜ்ரா ஷங்கர், சமுத்ரா - இப்படி சில பூக்களை வாசம் பிடித்தேன்.

இப்பொழுது 'ப்ளாக்' இன் அருமை புரிந்தது. மனிதர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் இந்த வலைப் பூக்கள். நல்ல நல்ல எழுத்தாளர்களை உருவாக்க உதவும் மிகப் பெரிய களம்.

ஆனால் இப்படிப்பட்ட நல்ல கருத்துகள் கொண்ட எழுத்துகளை படிப்பவர்கள் மிக மிகக் குறைந்தவர்தானே?

இப்படிப்பட்ட எழுத்துகள் கணிணி மூலமாகத்தான் பார்க்க நேரிடும் என்பதால் சாதாரண வாசகனை சென்றடைவது எப்படி?

இன்றைய வாராந்தரிகள் வெறும் பொழுதுபோக்கு பத்திரிகைகள்தான். ஆனால் இவைகளால் சாதாரண மனிதனை அடைய முடிகிறதே? மணமில்லா காகிதப் பூக்களை விட வாசம் வீசும் இந்த 'ப்ளாக்' பூக்கள் எல்லோரையும் அடைவது எப்போது?

என்னுடைய வழிகாட்டியும் ஆப்தருமான 'ஹிந்து' சம்பத் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் - 'It is better to tell a few than mass, provided 'that few' are worth' - உண்மைதான்.

ஆனாலும் அவ்வப்போது சமயம் கிடைக்கும்போதெல்லாம் நல்ல கருத்துகள் அனைவரையும் சென்று அடையவே வேண்டும் - பார்ப்போம்.....

திவாகர்.

'அணுசக்தியும் இந்தியாவும்' ஒரு அருமையான கட்டுரை
'சமுத்ரா' எழுதியுள்ளார். பார்க்க :
www.vettri.blogspot.com
தமிழ் மணம் (www.thamizmanam.com)