Thursday, June 05, 2008


மனைவி அமைவதெல்லாம்:

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று கவியரசன் பாட்டெழுதிப் போய்விட்டார். {என்னைப் பொறுத்தமட்டில் கண்ணதாசன் ஒரு சித்தன். இதைப் பல இடங்களில் பல நண்பர்களிடம்  எழுதியும் சொல்லியும் வருகிறேன்}

எஸ்.எம்.எஸ் ஜோக்கிலிருந்து சர்தார் ஜோக்கு வரை இந்த 'மனைவி' அடிபடுவதுபோல யாருமே அடிபடுவதில்லைதான். மனைவியைப் பற்றி ஆதியில் இருந்தே ஆயிரம் ஆயிரம் துணுக்குகளைப் படித்தாயிற்று. ஆனால் இன்னமும் அவள் 'ஜோக்குகளில்' வந்து கொண்டே இருக்கிறாள். இனியும் வருவாள். அவ்வளவு எளிதாக அவளை கழட்டி விட முடியாது போலும் (ஜோக்குகளிலிருந்துதான்)

சிலர் ஜோக்குளைப் படித்தால் சிரிப்பதற்குப் பதிலாக சிந்திக்கத்தான் தோன்றுகிறது.. ஒரு பெண் அவள் கல்யாணம் முடிக்கும் வரை மென்மையாக, அனைவரும் விரும்பத் தக்க வகையில் பார்வையில் படுகிறாள் . ஆனால் கல்யாணம் என்று வந்தவுடன் அந்த மென்மையும் காணாமல் போய் பெண்மையும் அடங்கிப்போய் கணவன் கண்களுக்கு ஏன் அப்படிப்பட்ட கடினப் பொருள் போல தெரியவேண்டும்.. ஒரு வேளை பெண் எனப்பட்டவள் இப்படித் தான் கல்யாணம் ஆனவுடன் மாறிவிட வேண்டுமென்று பிடிவாதமாக மாறிவிடுகிறாளா... இப்படியெல்லாம் கேட்கத் தோன்றும்தான். ஒவ்வொரு சமயம் இந்த ஜோக்குகளைப் படிக்க நேரும்போது எரிச்சல் கூட வரும்.

உண்மையில் மனைவி எனப்படுபவள் ஒரு கணவனுக்கு இறைவன் கொடுத்த வரம்தான். தேவன் எழுதிய கட்டுரைகளை (புத்தகப் பெயர் - 'விச்சுவுக்குக் கடிதங்கள்') படித்துக் கொண்டிருந்தபோது அவர் இந்தக் கவிதைவரிகளை சுட்டிக்காட்டியிருந்தார். மனைவி என்பவளை எப்படிப்பட்ட தேவதையாக நினைத்து எழுதுகிறார், படியுங்களேன்..

"காரியம் பார்ப்பாள் கணக்கும் எழுதுபவள்
காய்கறியாக்கவும் கெட்டி அவள் கை பட்டால்
வேம்பும் கரும்பல்லவோ ருசி..

ஆபத்து வேளையில் அறிவு சொல் மந்திரி
அரும் பிணிக்கு அவளே சஞ்சீவி.
துன்பம் வரும்போது ஆறுதல்
தரித்திரகாலத்தில் அருநிதியாம் அந்தத் தேவி.

அங்குமிருப்பாள், பின்னிங்குமிருப்பாள் உம் அண்டையிலும்
கட்டிக் காப்பாள் உமக்கு கற்பவருத்தமில்லாமல்
கவலைகள் அத்தனையும் தலையேற்பாள்.."

கவிமணி அவர்களின் கவிதைத் தேன் இது. தேவன் 'விச்சு'வுக்கு மனைவியின் அருமை பெருமைகளை இந்தக் கவிதைகள் மூலமாக எழுதினார். இதைவிட அழகாக யாரால் மனைவியின் பெருமைகளை சுட்டிக்காட்டமுடியும்.. உண்மையாகவே இது மனதார ஒப்புக் கொள்ளவேண்டிய வார்த்தைகள்தானே..

நம் இந்தியக் கலாச்சாரத்தில் ஆதியிலிருந்தே மனைவி என்பவளுக்கு குடும்பத் தலைவி என்ற அந்தஸ்து உண்டு. குடும்பத்தில் அதிகமான அதிகாரங்கள் அவளுக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. மனைவி குடும்பத்தில் ஒரு மந்திரி அதுவும் நிதி இலாகாவைத் தன் வசம் வைத்திருக்கும் முதல் மந்திரி போலத்தான் செயல்பட்டு வருகிறாள்

மூத்த பத்திரிகையாளரும் கட்டுரையாளருமான எஸ்.குருமூர்த்தி ஒரு கூட்டத்தில் (விசாகப்பட்டினத்தில்) பேசும்போது குறிப்பிட்டார். 'நம் இந்தியாவில் மட்டும்தான் குடும்ப சேமிப்பு என்பது குடும்பத் தலைவிகளால் மிகச்சரியாக பராமரிக்கப்பட்டுவருகின்றது. நம் பழமையான குடும்பத்தில் அவளால் சேமிக்கப்பட்ட எந்த சொத்துமே வீண் போவதில்லை. கஷ்டம் என்று வந்தால் நாம் நம் அரசாங்கத்தை நம்பி இருக்கத் தேவையில்லை. ஆனால் மேலை நாடுகளில் ஒவ்வொரு குடும்பத்தலைவியும் சுயேச்சதிகார முறையில் வளர்க்கப்படுவதால் குடும்பம் முழுவதுமே அந்த நாட்டு அரசாங்கத்திடம் அடிமைப்படவேண்டி இருக்கின்றது, ஒருவேளை அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது அந்த நாட்டு அரசாங்கம் கைவிட்டுவிட்டால் அந்தக் குடும்பங்களின் கதி அதோகதிதான். அதைத்தான் 'கத்ரீனா' சூறாவளி அமெரிக்காவை சீரழித்தபோது பார்த்தோம்.."

இது உண்மையான வார்த்தைதான். மனைவி என்பவள் நிர்ப்பந்திப்பதால்தான் குடும்பச்செல்வங்கள் நம் இல்லங்களில் பெருகுகின்றன. அவை நகை மூலமாகவோ நிலம் மூலமாகவோ காகிதப் பணம் மூலமாகவோ கூட இருக்கலாம். நம் குடும்பங்களில் உள்ள தங்க நகைகளை எல்லாம் வெளிக் கொணர்ந்து வெளியே கொட்டினால் அந்தச் செல்வத்தை வைத்து ஐரோப்பியாவையும் அமெரிக்காவையும் விலைக்கு வாங்கி விட முடியும்.. இந்தச் செல்வங்களையெல்லாம் நமக்கு சேர்த்துக் கொடுத்தது தாய்க்குலம்தானே.. ஆனால் இவைகளையெல்லாம் விட அன்பும் பாசமும் அந்த மனைவி நம் குடும்பத்தில் வைத்திருப்பது மேலும் பெரிய சிறப்பு அல்லவா.. அவளுடைய அந்த அன்புக்கும் பாசத்துக்கும் ஏது விலை?

ஒரு பெண் கல்யாணமானவுடன் அதாவது மனைவி என்ற பெயர் கிடைத்தவுடன் அவள் நிலையே அடியோடு மாறுபடுகிறது. சொந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தாலும், ஒருவேளை பிறந்த வீட்டில் அதுவரை பொறுப்பற்று இருந்தாலும் கூட தனக்கென ஒரு புதிய சொந்தங்கள் கிடைக்கும்போது அவள் அந்தப் பொறுப்பை பயமின்றி ஏற்று செயல்படுகிறாள் என்றே சொல்லவேண்டும். அதுவும் அந்தப் பொறுப்பை சரிவர நிர்வகித்து குடும்பத்தில் மற்ற எல்லோரையும் கரை ஏற்றும் வரை அவளுக்கு நிம்மதி என்பதே கிடையாதுதான்.

பொதுவாகச் சொல்லப்போனால் நாம் சரியாக நம் தாய்க் குலத்தை மதிப்பதில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்த குடும்பத்தலைவிக்கு நாம் என்ன கைமாறு செய்கிறோம்.. வேறு ஒன்றும் தேவையில்லை. அவ்வப்போது அவள் செய்யும் செயல்களை வாய் விட்டு ஒரு 'சபாஷ்' போட்டாலே போதும். அவள் உச்சி குளிர்ந்துவிடும். முக்கால்வாசி கணவன்மார்கள் இப்படி செய்கிறார்களா என்று அவர்களை கேட்கவேண்டும்.

'அதெல்லாம் சரி சார்.. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் சார்.. உங்கள் வாதம் எல்லா மனைவிகளுக்கும் பொருந்துமான்னு சொல்லுங்க சார்..' என்று சிலர் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது..

'நான் பெரும்பான்மையான மனைவியரைப் பற்றிச் சொல்கிறேன்' என்று தப்பித்துக் கொள்ளவில்லை. மாறாக 'மனைவியை மதிக்க நாம் சரியாக கற்றுக் கொண்டால் பாதிப் பிரச்னை தீர்ந்த மாதிரி..' என்கிறேன்.

அட.. அந்த மீதிதான் சார் எங்க பிரச்னை.. அதற்கு ஏதாவது ஒரு தீர்வு உங்களிடமிருந்தால் சொல்லுங்கள்..

என்ன தீர்வு..? பேசாமல் மனதுக்குள்ளேயே கண்ணதாசன் பாடலை அடிக்கடி பாடிக் கொண்டே இருங்கள்.. மனசாவது திருப்திப்படும்...

திவாகர்.
ப்டம்: ரவிவர்மாவின் ஓவியம். (நன்றி: இணையம்)

Labels: