Thursday, July 06, 2017

அமெரிக்காவின் குற்றாலம்


மெல்லினமாம் குழல்வாய்மொழியாள் உடனுறை வல்லினமான 
அருள்மிகு திருக்குற்றாலநாதரே..

குழல்வாய்மொழியாள்.. என்ன அழகான தமிழ்ப்பெயர்.. அகத்தியர் தந்த தமிழ் மண்ணல்லவா.. எங்கள் அம்பிகைக்கும் இனிய தமிழால் பெயர் சூட்டி எங்கள் பெருமைமிக்க குழல்வாய்மொழியாளை இடம்கொண்ட திரிகூடப் பெருமானே..

வணக்கம், 

நலம்.. உன் நலத்தை அறிய விருப்பமும் கூட.. (சாதாரணமாக உன்னை யாரும் நலம் விசாரிக்கமாட்டார்கள்தான்.. இருந்தும் அங்கே தற்சமயம் அரசியல் சமூக சூழ்நிலை அசாதாரணமாக இருப்பதால் எதற்கும் உன்னை இப்படிக் கேட்டுவிடுவது நல்லதுதான் எனத் தோன்றியது..)

இத்தனைநாள் உன் நினைவே எனக்கு வரவில்லை என்பதை நீ நினைவில் வைத்துக் கொண்டு சமீபத்தில் அதை எனக்கும் நினைவூட்டவேண்டும் என்று நீ நினைத்ததால்  என்னை இந்த பொகோனோ மலையின் (Poconos) நடுவிலிருந்து விழும் புஷ்கில் (Bush kill Falls) அருவிக்கு அனுப்பி வைத்தாயோ என்னவோ..

இங்கே பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கும் புஷ்கில் அருவியைப் பார்த்தபிறகுதான் உன் நினைவே வந்தது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்..

அமெரிக்காவின் வாழ்க்கை உன்னை மறக்கடிக்கிறது என்பது என்னவோ வாஸ்தவம்தான். சட்டதிட்டங்களை மிக நேர்மையான முறையில் வரைமுறையாக்கி அதற்குக் கீழ்ப்படியும் குணங்களையும் மக்களுக்குத் தந்து அத்துடன் எங்கெல்லாம் சட்ட ஒழுங்கும் நேர்மையும் இருந்தால் அங்கெல்லாம் செல்வ வளத்தையும் மகிழ்ச்சியும், கொண்டாட்டங்களும் சேர்த்துக் கொடுக்கும் உன் இன்னருள் எங்கெங்கும் நிறைந்து நிற்கும் இந்த அமெரிக்காவை நான் ‘பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த’ கதையாக பார்த்துக் கொண்டே நாளைக் கடத்திக் கொண்டிருப்பதால் உன்னை நான் நினைக்கவில்லை.. இதுதான் உண்மை என்பதும் உனக்கும் தெரியும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் என்னைப் போன்றோர் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். போகிறார்கள்.. எத்தனையோ பேர் இங்கேயே தற்காலிகமாகக் குடியேறுகிறார்கள்.. இந்த மண்ணின் வளத்தையும் வனப்பையும் அதிகமாகப் போற்றுகிறார்கள். என்னைப் போலவே வியக்கிறார்கள்.. இந்த சுதந்திர பூமியில் எதையும் செய்வதற்கு சுதந்திரம் கொடுத்திருந்தாலும் சட்டம் ஒழுங்கு நியாயம் நேர்மை உண்மை என்பது உதட்டளவில் கொள்ளாமல் நல்ல விதமாக நடைமுறைப்படுத்துகிறார்களே என்று பாராட்டுகிறார்கள்.. அரசியல் தலைவர்களோ அதிகாரிகளோ ஆட்சி செய்பவர்களோ மக்களுக்கு அதிகம் மதிப்பு கொடுக்கிறார்களே என்றெல்லாம் அதிசயிக்கிறார்கள். சாலை அமைப்பையும், இல்லங்கள் அமைப்பையும் சீராக வைத்திருக்கும் கலையைக் கண்டு மகிழ்கிறார்கள், யாரும் யாருக்கும் எப்போதும் அடிமையல்ல என்ற சுதந்திர தாக்கம் எல்லோர் மனதில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அவரவரளவில் மரியாதை தருகிறார்களே என்ற உண்மையை உணர்கிறார்கள்,, தனிமனிதர் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்ற தனித்துவ தத்துவத்தைப் பயின்றுவைத்திருக்கிறார்கள் எனப் புகழ்கிறார்கள். பலமான வல்லரசு என்றாலும் அவர்தம் மக்கள் என வரும்போது அவர்களுக்குப் பயந்து பணிந்து வணங்குகிறார்களே எனவும் பாராட்டுகிறார்கள். தவறாமல் செலுத்தப்படும் மக்களின் வரிப்பணத்தை சீராக மக்களுக்கேத் திருப்பி வசதி செய்துதரும் அரசாங்கத்தை நினைக்கையில் உள்ளம் குளிர்ந்து போகிறது கூட.

வற்றாத கருணைகொண்ட குற்றால நாதரே.. உனக்கு என்ன இருந்தாலும் இந்த அமெரிக்க மக்கள் மீதும் மண் மீதும் கரிசனம் அதிகம்தான். ஆனாலும் சற்று ஆழமாக சிந்தித்தால் உன் கரிசனத்துக் காரணம் புரிகிறதுதான்.. எங்கெல்லாம் தர்மம் சிறக்கின்றதோ அங்கெல்லாம் உன் அபரிமித அன்பு இருக்கும் என்கிற தார்மீகக் காரணம் புரிகிறதுதான்.

அடடா, எந்தக் காரணத்துக்காக இந்தப் பதிவை ஆரம்பித்தேனோ அதை மறந்துவிட்டேனே.. இந்த மண்ணின் வனப்பு அப்படித்தான் மறக்கடிக்கச் செய்கிறது.. அழகான பொகோனோ மலையின் அழகான புஷ்கில் அருவியை மறந்து அமெரிக்காவை புகழ்ந்துகொண்டிருந்தால் எப்படி’..

இந்த அருவியை பென்சில்வேனியாவின் நயாகரா என்று கூட புகழ்கிறார்கள்.  உண்மையாகப் பார்த்தால் அந்த ஒரிஜினல் நயாகரா நீர்வீழ்ச்சி அப்படி ஒன்றும் மிக அழகான இயற்கைக் காட்சி இல்லைதான். நயாகரா அருவி என்பது மிகப் பெரிய அளவில் அகலமாய் வந்து ஆழமாகக் கீழே விழும் பிரும்மானடமான அருவி என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.  இந்தியாவுக்கு தாஜ்மகால் போல அமெரிக்கா வந்தால் நயாகராவைப் பார்க்காமல் போகமுடியாதுதான்..  அதேவேளையில் இங்கே பச்சைப் பசேலென இயற்கை அழகு பொங்க கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும் அருவி எதுவென்றால் நிச்சயமாக புஷ்கில் அருவியைத் தாராளமாகவே சொல்லலாம்.


கோடை வெய்யிலை அப்படியே குளிரவைத்துக்கொண்டு பசுமையை உடலெல்லாம் பூசிக்கொண்டு  உயர்ந்து நிற்கும் பொகோனோ மலையின் நடுப்பகுதியிலிருந்து விழும் புஷ்கில் அருவி என்பது நூறு அடி உயர அருவிதான். பொகோனோ என்றால் இந்த மண்ணின் பழைய பாஷையில் ’இரு மலைகளுக்கிடையே ஓடும் ஓடை’ என்ற பொருளாம். ஏன் இப்படி மலைக்குப் பெயர் வைத்தார்களோ.. மலையைத் துளைத்துக் கொண்டு அதிக அகலமில்லாமல் அளவான முறையில் புஷ்கில் அருவி கீழே பெரும் ஓசையுடன் விழும் அழகு இருக்கிறதே.. ஆஹா.. கண்கொள்ளாக் காட்சிதான். அங்கேயே அப்படியே அதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிடலாம்தான்.

இந்தச் சூழல்தான் அப்படியே எனக்கு குற்றாலத்தின் சூழ்நிலையை என் மனத்தே நிரப்பிவிட்டது...  புஷ்கில் அருவியை குற்றாலத்தில் ஓடும் அருவி போல என் கண்ணுக்கு விருந்தாக நீதான் காண்பித்தாயோ என்றுதான் அந்த வேளையில் நினைத்தேன்.. சுற்றிலும் உள்ள மலைப்பகுதியும், உயர்ந்த பச்சை மரங்களும், மரம் சார்ந்த நிழலும் மலையோடு ஒட்டிய வனப்பும் அப்படியே குற்றாலம்தான் இடம் மாறி இங்கே வந்துவிட்டதோ என்று கூட திகைத்தேன்..

ஏன்.. குற்றாலத்தில் வெவ்வேறு இடங்களில் விழும் அருவிகள் போல இந்த பொகோனோ மலையின் இந்தப் பிராந்தியத்திலும் ஏழெட்டு அருவிகள் கூட உண்டுதான். நீக்கமற எங்கெங்கும் நீ இருக்கிறாய் என்ற தெளிவு இருந்தாலும் உனக்கென குற்றாலத்தில் இருப்பது போல ஒரு கோயில் இங்குக் கட்டப்படவில்லை என்ற குறை உண்டு. ஆனால் இன்னொரு வகையாகப் பார்த்தால் கோயில் என்றெல்லாம் எதற்கு.  நீயே அருவியாக, மலையாக, மரமாகக் கண்ணுக்குத் தெரியும் போது உன்னை எதற்குக் கருவறையில் பூட்டி வைக்கவேண்டும் என்ற ஏடாகூடமான கேள்வி கூட மனத்தில் எழுந்ததுதான். குற்றாலத்தில் அருவி விழும்போது அங்கே தைரியமாகக் குளிக்க அனுமதி உண்டு ஆனால் இங்கே இந்த புஷ்கில் அருவியைப் பராமரிக்கும் கம்பெனியார் பயப்படுகிறார்களோ என்னவோ யாரையும் தண்ணீர் விழும் இடத்தில் குளிக்க அனுமதிப்பதில்லை. சில வகையான பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு சரியான இடத்தில் குளிக்க வசதியும் செய்து தரலாம்தான். நயாகரா போன்று அபாயகரமான இடம்  இது அல்ல என்று தெளிவாகத் தெரிந்ததால் அப்படி நினைத்தேனோ என்னவோ..

பொதிகைமலை எனும் அழகுதமிழ்மலையில் அமிர்தம்போல அருவிகளை விழவைத்து வேடிக்கைக் காண்பிக்கும் திருக்குற்றாலநாதரே! இந்த புஷ்கில் அருவியைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது உன் பெருமையைத்தான் கொஞ்சம் கூடவே நினைத்துக் கொண்டேன். காரணத்தைச் சொல்கிறேன்.

புஷ்கில் அருவியை சுற்றியுள்ள வனத்தை வளைத்து பாதுகாப்பு வளையம் கட்டி சுற்றுலா தலம் போல தரம் உயர்த்தி,  உள்ளே அழைத்துச் செல்ல பாதை வகுத்து ’கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை மற்றவர்களுக்குக் கண்காட்சியாகக் காட்டுவது போல’ கீழே விழும் அருவியை காட்டிவிட்டு பிறகு அவர்களை வெளியே அனுப்பும்போது ’ஆஹா எப்படிப்பட்ட இயற்கை ஆனந்தம் பெற்றோம்’ என்கிற அனுபவத்தில் வந்தவர்கள் முகத்தில் ஆச்சரியத்தைப் புகுத்தி அனுப்புகிறார்கள்.  இந்தக் குறிப்பிட்ட இடத்தை விட்டால் வேறெங்கிருந்தும் இந்த அருவியைக் காண முடியாதுதான். ஆனால் இந்தக் குறிப்பிட்ட இடத்துக்குள் நுழைய இதற்கென ஒரு விலையுண்டு.  வார இறுதி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஐம்பதினாயிரம் டாலர் வரை டிக்கெட் மூலமாகவே வசூல் செய்து விடுகிறார்கள். விலை கொடுத்து இயற்கையாகக் கிடைத்த அழகைப் பார்க்க வைக்கிறார்கள்.. மேலேயிருந்து கீழே விழும் அருவியின் இடத்திலிருந்து மறுபடியும் மேலே ஏறிச் சென்று சற்று களைப்போடு வருபவர் இளைப்பாற எலுமிச்சை நீரைப் பருகத் தருகிறார்கள் – எலுமிச்சை நீர் ஐந்து டாலர்தான்.


அமெரிக்காவின் குற்றாலம் என்று சொல்லிவிட்டோமே, ஆனால் நம் குற்றாலத்தில் இப்படியெல்லாம் உண்டா.. என்று மனதுக்குள் கேட்டுப் பார்த்தேன்.. சிரிப்போடு நீதான் வந்தாய்..  அந்தக் குற்றாலத்தை மனக்கண்ணே காண்பித்தாய். அங்கே அருவி கண்ணுக்கு அழகான விருந்து. குளியல் உடலுக்கு நோய் தீர்க்கும் மருந்து.. நேரம் காலமறியாமல் அருவி விழுவதை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம்.. குழல்வாய்மொழியாளோடு நீ குலாவுவது போல அருவியில் குதூகலித்துக் கொண்டே குளிக்கும் காதலர்களை ரசிக்கலாம். பாவைகளின் ஓரவிழிப் பார்வைக்கு ஏங்கியபடியே பாறைகளின் மத்தியிலே  அருவியின் தண்ணீர் பாய்ந்து வழுக்கி விழும் வாலிபர்களைக் காணலாம். ’ஹோ’வென சப்தத்துடன் கீழே விழும் அந்த அருவியின் ஓசையோடு இயைந்து அகத்தியரின் அழகான தமிழில் குற்றாலக் குறவஞ்சி பாடலாம். இயற்கையோடு இயற்கையாக வாழ்க்கையை பாவிக்கும் யோகியரை வணங்கலாம். போக்கும் வரவும் இல்லா புண்ணியனாய் வண்ண வண்ணச் சித்திரங்களாய் ஆடிக்கொண்டிருக்கும் உன் சித்திரசபையைக் கண்ணார தரிசிக்கலாம். கோலமயில்கள் தோகை விரித்தாடும் காட்சியைக் கண்டு பொறாமையோடு பாடும் கானக் குயிலோசை கேட்கலாம். கோயிலுக்குள் வந்து இத்தனையும் இலவசப் பரிசாகக் கொடுத்த உன்னைக் கண்டு தரிசித்து மகிழலாம்.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கூட பாடலாம்தான்..

பி.கு : முதலும் முடிவுமில்லா திரிகூடமலை இறைவா.. உன்னருளால் விரைவில் வரவிருக்கும் என்னுடைய புதிய புதினத்தில் இந்த அருவிதான் முதலும், முடிவும் என்பதையும் குறித்துக் கொண்டு வாசகர்களிடம் சேர்க்கவும்.

நன்றியுடன்
உன் திவாகர்.


First two pictures - Bush Kill Falls, PA
Last one : Main Falls Thirukutralam.