Tuesday, February 18, 2014

திருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு மாறவேண்டுமா? - 2



உலகின் மற்ற பகுதிகளில் உள்ளோர் திருமலையில் நாள்தோறும் கூடும் கூட்ட்த்தைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் பெருங்கூட்டத்தை சமாளிப்பது (Crowd Control Management) என்பதில் திருமலையில் உள்ளவர்களை விட அனுபவஸ்தர்கள் உலகில் வேறெங்கும் இருக்கமுடியாது என்றுதான் சொல்வர். எந்நேரமும் கூட்டம் என்பதால் திருமலை உத்யோகஸ்தர்களுக்கு கூட்ட சமாளிப்பு என்பது பால பாடம் போலத்தான் இருக்கவேண்டும் என்பர். திருமலையில் தினம் கூட்ட்த்தைக் கட்டுப்படுத்தி எப்படியோ தரிசனம் செய்துவைக்கும் உத்யோகஸ்தர்களைப் பாராட்டத்தான் செய்வார்கள். உலகிலேயே இந்த உத்யோகஸ்தர்கள்தான் கூட்ட சமாளிப்புக் கலையில் வல்லவர்கள் என்று பரிசும் விருதும் கூட வழங்கக் கூடத் தயங்கமாட்டார்கள்.

ஆனால் உண்மையில் அங்கே நடப்பதென்ன.. எந்தக் கஷ்டம் வந்தாலும் பாலாஜியின் தலையில் போட்டுவிட்டு கோவிந்தநாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கும் பக்தர்கள் இந்த தரிசனத்துக்காக எத்தனைக் கஷ்டப்படுத்தப்படுகிறார்கள் என்று யாருமே உணர்வதில்லைதான்.. இத்தனை கஷ்டப்பட்டோம்.. இதோ சுவாமியைத் தரிசித்தாயிற்று.. இதுதானே வேண்டும்.. இதற்காகத்தானே வந்தோம்.. கிடைத்தது போதும்.. ஒரு நிமிஷம் கூட நின்று சரியாகப் பார்க்க முடியவில்லையென்றாலும் அவன் தரிசனம் கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தை அவர்கள் முகத்தில் தெரிய கோயிலை விட்டு வெளியே வருகிறார்கள். அப்படி வரும்போது, ஒருவேளை அவர்களிட்த்தில் ஒரு ஓட்டெடுப்பு நடத்தினால், அதாவது இந்த்த் தரிசனத்துக்காக இத்தனைக் கஷ்டப்பட்டீர்களே என்று கேட்டால் அதற்கான பதில் என்ன வரும் தெரியுமா.. “தரிசனம் நன்றாக ஆயிற்று சார்.. அது போதும்.. கஷ்டத்தையெல்லாம் விடுங்க.. பகவானைப் பார்க்க எத்தனை கஷ்டம் வேண்டுமானாலும் படலாம் என்று ஆனந்தமாக சொல்வார்கள்.

இது உண்மையில் அவர்கள் பக்தியின் வெளிப்பாடு. ஆண்டவன் மீது வைத்திருக்கும் தூய்மையான பக்தி கஷ்டத்தை நிராகரிக்கச் சொல்கிறது. சுவாமி சன்னிதி வரை முண்டியடித்து வரும் கூட்டம் வேங்கடபதியின் அந்த தரிசன்ம் முடிந்து கர்ப்பக்கிருகத்தின் வெளியே காலடி வைத்த்தும் அந்த பக்தன் படுகின்ற ஆன்ந்தம் ஒன்றே அவன் மனதில் முழுவதும் ஆக்கிரமிப்பதால் அவனால் குறை ஒன்றும் கூறமுடிவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் பக்தர்களை சிரமப்படுத்தவா வேங்கடவன் விரும்புகிறான்?.. நிச்சயமாக இருக்க முடியாது. தன்னைக் காண வரும் பக்தர்களின் அந்த சிரமத்தைக் குறைக்கும் மிகப் பெரிய பணியை இந்த உத்யோகஸ்தர்கள் மீதல்லவா கொடுத்துள்ளான்.. இறைவனின் இந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்களா இவர்கள்? ஆனால் இந்த உண்மையை மறந்து இங்கே கோயிலை ஆளும் மேன்மையாளர்கள் பக்தனின் தரிசன ஆனந்தத்தை ஏதோ தங்கள் ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாக்க் கருதுவதால் பக்தர்களின் சிரமங்களைக் குறைக்க வழி ஏதும் தேடுவதில் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்றே சொல்லலாம். (அதே சமயத்தில் அவர்களிடமிருந்து காணிக்கைகள் நிறைய தேவைப்படவே அதற்கான கூடுதல் உண்டியல்களையும் சுவாமி சன்னிதி உள்ளேயே பொருத்தி இருக்கிறார்கள்)


நம் பாரதத்தில் கோயில், திருவிழா என்றால் கூட்டம் அதிகம்தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த பிரச்னைகளை பாரதம் சந்தித்து வந்துகொண்டுதான் இருக்கிறது. பன்னிரெண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் புனித ஸ்நான உற்சவங்களான கும்பமேளா, கோதாவரி-கிருஷ்ணா நதி புஷ்கரங்கள், கும்பகோண மகாமகக் குளத்துக் குளியல் உட்பட ஆண்டுக்கொருமுறை வரும் திருவண்ணாமலை தீபவிழா போன்ற  உற்சவங்களிலும் இன்னும் எத்தனையோ புனிதமான, இடத்துக்கு இடம் மாறுபடும் ஏராளமான நிகழ்வுகளிலும் லட்சக்கணக்கான அளவில் மக்கள் கூட்டமாகக் கூடுவதும், கும்பலில் சிக்கி அவர்களில் சிலர் மாள்வதும் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இவைகளுக்கும் திருமலை திருப்பதியில் கூடும் கூட்டத்துக்கும் நாம் முடிச்சுப் போடமுடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் பெருங்கூட்டம் கூடுவதென்பது திருமலையில் தினப்படி நடக்கும் நிகழ்வு இது. மற்ற இடங்களிலோ எப்போதோ நடக்கும் நிகழ்வுகள்.


திருமலையில் தினப்படி நடக்கும் நிகழ்வு என்று சொல்லும்போது சபரிமலையை ஓரளவு நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். சபரிமலையில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தை மாதம் முதல் வாரம் முடிய ஏறத்தாழ 60 நாட்களுக்கும் மேலேயே மக்கள் கூடுகிறார்கள். தரிசனத்துக்காக ஒருநாளைக்கு  சராசரியாக ஒன்றரை லட்சம் பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். இவர்கள் இருமுடியுடன் ஒருமுறை, பிறகு நெய்யபிஷேகத்துக்காக மறுமுறை என இருமுறை தரிசிப்பவர் கூட. அடியேனும் பல வருடங்களாக சபரிமலைப் பயணம் மேற்கொண்டவன் என்ற அடிப்படையில் பார்த்தது என்னவென்றால் பொதுவாக நடை திறந்திருக்கும் பட்சத்தில் பதினெட்டாம் படி வழியாகவே சபரிமலை கோயில் வெளி வளாகத்திலிருந்து நேரடியாக எந்த நேரத்திலும் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்தில் தரிசனத்தை முடித்துக் கொள்ளமுடியும் (இது பொதுவான சமயங்களில் சொல்வது, மகர ஜோதி சமயத்தையோ அல்லது வேறு சில மிக விசேஷமான சமயத்தையோ கணக்கிலெடுக்கவில்லை). இந்த விஷயத்தை சபரிமலை யாத்ரீகர்கள் அனைவருமே ஒப்புக்கொள்வர். இதை எழுதும்போது நான் ஐயப்பன் தரிசன நிகழ்வு என்ற ஒன்றை மட்டுமே இங்கே எடுத்துக் கொண்டுள்ளேன் என்பதும் சபரிமலை யாத்திரையின் வேறு நிகழ்ச்சிகளில் காணப்படும் கூட்டக் கட்டுப்பாடு முறைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பேசப்போவதில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.

திருப்பதியில் சராசரியாக சாதாரண நாட்களில் 50000 அல்லது 60,000 வரையும் வார இறுதி நாட்களில் ஒவ்வொரு சமயம் தினத்துக்கு ஒரு லட்சம் வரை பக்தர்கள் (விக்கிபீடியா) கூடுகிறார்கள். ஆனால் இவர்கள் ஒரே ஒருமுறை சுவாமி தரிசனத்துக்காக  சராசரியாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பற்றி மட்டும் நாம் சொல்லவே முடியாது. குறைந்தபட்ச நேரமாக 4/6 மணிநேரமும் அதிகபட்சமாக 12/18 மணிநேரமும் (சராசரி) ஆகின்றதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. (இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில் தெலுங்கு தொலைக்காட்சியில் இன்று - செவ்வாய்க்கிழமை - எட்டு மணி நேரத்துக்கும் மேலாக தரிசனத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி ரிப்பன் வருகின்றது) இத்தனைக்கும் திருமலையில் காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை நடை சாத்தப்படுவதில்லை.

சபரிமலைக் கோயிலென்பது சிறிய கோயில்தான் என்றாலும், சுற்று வட்டாரத்தில் ஏகப்பட்ட வெட்டவெளி உள்ளது, கூட்டத்தை சீராக்கி உள்ளே அனுப்பி வைப்பதென்பது எளிது.. என்று வாதம் செய்வோருக்கு மலையை, மலையின் அளவைப் பொறுத்தவரை திருமலை சபரிமலையை விட பெரியது, மிகவும் முன்னேறிய நிலையில் உள்ள மிகப் பெரிய தலமாக இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

சபரிமலை கோயிலைச் சுற்றி உள்ளதைப் போல அகலமான மேம்பால தரிசன சுற்று வழிப் பாதை ஒன்றை திருமலையில் மாடவீதி அருகேயே அமைக்கலாம். சபரிமலையில் இது சிறியது.. அங்கே சிறிய கோயில் என்பதால் சிறிய அகல சுற்றுப் பாதை. ஆனால் திருப்பதி போன்ற பெரிய தலங்களில் இந்த தரிசனப்பாதை மாட வீதி அருகேயே  வலம் வருவது போலவும் அமைக்கலாம். மாடவீதியில் மலையப்பர் திருவலம் வரும் இடமாகையால் அதற்கான இடங்களைத் தகுந்தவாறு பிரித்து திட்டமிட்டு இந்தப் பாதையை அமைக்கலாம். திருமலையில் பாதாளத்தில் இருக்கும் கூடங்களையும் வழிகளையும் அடைத்து விட்டு வெளியேயே காற்றோட்டமாக மேம்பாலம் போல கட்டப்பட்ட அகலவழிப் பாதையாக அமைக்கவேண்டும்.  ஒரே சமயத்தில் எத்தனை பக்தர் நிற்பது என்பதை நிபுணர்கள் நிர்ணயிப்பது எளிதுதான். அப்படிக் கணிக்கும்போது எதிர்காலத்தையும் கணக்கிலெடுத்துக் கணித்தால் நல்லது. மேம்பாலம் கட்டப்பட்டால் நகரும் கூட்ட்த்துக்கு அது ஏதுவாக இருப்பதோடு பக்தர்கள் நிதானமாக போகவும் வழி செய்யப்படவேண்டும். 

திருமலையின் பாதாளவழியாக்க் கட்டப்பட்ட வேலிப் பாதைகள் மிகக் குறுகலானவை. ஓரோர் இடத்தில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே நகரமுடியும் அளவுக்கு எந்த காலத்திலோ எப்போதோ எதிர்காலத்துக்கான திட்டமில்லாமல் கட்டப்பட்டவை. இவை அத்தனையும் அகற்றப்பட்டு மேம்பால அகலப் பாதையில் குறைந்தபட்சமாக பதின்மர் வரிசையாக செல்லும் அளவுக்கு சுற்றுப் பாதையில் வழி வகை செய்தாலே பக்தர்களின் பாதி துயரங்கள் போகும். பெரிய கோபுரவாசலில் இருந்து தற்போது செல்லவைக்கப்படும் பாதையிலேயே செல்ல வைக்கலாம்.

இன்று இருக்கும் முன்னேறிய இயந்திரகாலத்தில் இவை அனைத்தையுமே தானியங்கி நகரும் பாதையாகக் கூட செய்யமுடியும். தானியங்கி நகரும் பாதை அமைப்பது பற்றி திருமலை நிர்வாகத்தில் ஒரு காலத்தில் பேசப்பட்ட்துதான். ஆனால் ஏன் இன்னும் முடிவு ஒன்றும் எடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை.

தானியங்கி நகரும் பாதை அபாயகரமில்லாதது. தானியங்கி நகரும் பாதையில் முதியவர்கள் சிறார்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம். ஆனால் தற்சமயம் விமான நிலையம், ரயில் நிலையம், வர்த்தக வளாகம் என மக்கள் அதிகமாக புழங்கும் எல்லா பொது இடங்களிலும் வந்து விட்ட தானியங்கிப் பாதையை மக்கள் அனைவருமே பழகக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இது நிச்சயமாக திருமலைக் கோயிலிலும் கொண்டு வரப் படவேண்டும்.


கோயிலுக்குள் தானியங்கி பாதையை எப்படி அமைப்பது என்பது கட்டுமான நிபுணர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கோயிலின் உள்ளே எந்த ஒரு பகுதியிலும் மாற்றமில்லாமலேயே மூவர் அல்லது நான்கு பேர் ஒரு வரிசையில் செல்வது போல வழியமைக்கலாம். தற்சமயம் உபயோகத்தில் உள்ள பொதுப் பாதை வழியாகப் பார்க்கையில் கோயில் இரண்டாவது கோபுரம் தாண்டி உள்ளே (வரதராஜர் சன்னிதி அருகே) செல்கையில் ஒவ்வொரு சமயம் கூட்டம் கட்டுக்கடங்காமல் ‘கிட்ட வந்தும் எட்ட முடியாத சூழ்நிலையாக மாறுவதையும் இடித்துக்கொண்டு ‘கோவிந்தா’ என்கிற வார்த்தை கூட வராத சூழ்நிலையில் மக்கள் ஒருவரையொருவர் தள்ளுவதையும் அங்குள்ள கோயில் பணியாளர்கள் ஏதும் செய்ய இயலாத சூழ்நிலையில் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இங்கிருந்து எப்படியோ தள்ளித் தடுமாறி திருவேங்கடவன் சன்னிதிக்குள் ’சாகசம் செய்து விட்ட வெற்றி வீரனாக’ உள்ளே நுழையும் கூட்டம் அங்கே உள்ளேயும் சீரடையாமல் நெருக்கிக் கொண்டே சுவாமி தரிசனம் செய்வதையும் இன்னமும் பார்த்துக் கொண்டேதான் கோயில் ஊழியர்கள் இருக்கிறார்கள்.அத்துடன் அவர்கள் பங்குக்கு இன்னும் கொஞ்சம் பக்தர்களை தள்ளுவதையும்தான் நாம் பார்க்கின்றோம். இது தானியங்கி பாதையில் நிச்சயம் மாறும். கோயிலில் எந்தப் பகுதியையும் இவர்கள் இடிக்கவோ மாற்றவோ தேவையேயில்லை. தரிசனம் போக மற்ற சேவை சமயங்களில் தாராளமாக நேரத்தை ஒதுக்கு நிறுத்தப்படலாம். இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்துக் கொண்டாலே போதும். மொத்த்த்தில் கோயில் நிர்வாகத்தின் கடமை பக்தர்களுக்கான சேவை மட்டுமே என்பதையும் மனதில் கொண்டால் இந்த வழி முறை எளிதாக நடக்கும். அது போக பக்தர்கள் மன மகிழ்ச்சியோடு சுவாமியைத் தரிசனம் செய்யும் மிகப் பெரிய வாய்ப்பை வழங்கிய உத்யோகஸ்தர்களுக்கு நன்றியும் சொல்லிக் கொள்வார்கள். திருமலையை விட அதிகம் பக்தர்கள் புழங்கும் சபரி மலையில் இந்த இயந்திர வழிகள் இல்லாமலேயே பக்தர்களைக் மனதில் கொண்டு செயல்படுகிறார்கள். சபரி மலையை விட அதிகம் பணம் புழங்கும் திருமலையில் இயந்திர நகரும்பாதை அமைப்பது எளிது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

தற்சமயம் திருமலையில் பாதாள கிருகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்கள், குறுகலான ஏணிப்படிகள், இருட்டு ஒருவழிப்பாதைகளுக்கு இந்த மேம்பால வழி ஆயிரம் மடங்கு உயர்ந்தது. வைகுண்டம் காம்ப்ளெக்ஸில் தற்சமயம் இருக்கும் கூடங்களிலும் தர்மதரிசன கூடங்களிலும் சாமான்கள் வைக்கும் கோடவுன்களாகப் பயன்படுத்தலாம். (அதற்குதான் இவை பயன்படும், அது கூட அப்படியாவது உதவுமா என்று நிபுணர் குழு பரீசலித்த பின்னர்தான் முடிவு செய்யப்படவேண்டும்).

மேலே குறிப்பிட்ட வகைகள் எல்லாமே தி.தி தேவஸ்தானத்துக்கு ஏற்கனவே தெரிந்த வழிதான்.. இது ஒன்றும் புதிதல்ல. தானியங்கிக்கான வரைபடிவம் கூட அவர்களிடத்தில் இப்போதும் இருக்கும். இவர்கள் எத்தனையோ புதிய இயந்திரங்களை வாங்கி மடைப்பள்ளியில் லட்டு செய்வதற்காகவும், அன்னதானத்துக்கான சமையலறையை நவீனப்படுத்தவும் செய்கிறார்கள்.  தரிசன விஷயத்திலும், கூட்டத்தை மட்டுப்படுத்தி எளிமைப்படுத்துவதிலும் இவர்கள் நவீன வசதிகளைக் கொண்டு வரலாமே.. ஏன் கொண்டுவருவதில்லை.. ஏன் இன்னமும் பழைய ராயர் காலத்து பாதாள அறை வழிமுறைகளையே பயன்படுத்துகிறார்கள்.

உண்மையில் பக்தர்கள் மற்றும் தரிசன விஷயத்தில் இவர்கள் எந்த முன்னேற்றத்தையும் விரும்பவில்லை என்றுதான் தெரிகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள அரசாங்கம் இங்கு பக்தர்களை கீழிருந்து ‘லிஃப்ட் அல்லது ரோப் வே’ மூலம் அழைத்துச் செல்லும் மார்க்கத்தை அமைக்க ஒரு தனியார் குழுமத்துக்கு அனுமதி அளித்தது. சந்திரகிரியிலிருந்து மேலே கோயில் வாசல் வரை செல்லும் இந்த பிராஜக்ட் நிறைவேற்றமுடியவில்லை. காரணம் ஆகம விதிமுறை ஒப்புக் கொள்ளவில்லையாம்.. இதற்கும் ஆகமத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்கவேண்டாம். எதிர்ப்பு அலையில் இந்த வேலை திரும்பப்பெறப்பட்டது.  

இரண்டு வருடங்களுக்கு முன்பு கீழ்திருப்பதியில் ஒரு மாநாடு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தாரால் நடத்தப்பட்ட்து. இந்த மாநாடு இந்த சிக்கலான கூட்டக் கட்டுப்பாடு சீர்திருத்தம் பற்றி கொஞ்சம் சாவகாசமாக்க் கூட விவாதித்தது. கூட்டத்தில் அந்நாள் முந்நாள் செயல் அதிகாரிகள் கலந்துகொண்டு திருமலைக்கு வரும் கூட்ட்த்தைக் கட்டுப்படுத்த வழிகளைக் கேட்டனர். இதில் கலந்து கொண்ட சிலர் கூட்டம் எளிதாக தரிசிக்கும் வகையில் ஆலய அமைப்பையே சற்று மாற்றவேண்டுமென பேசியபோது வேறு சிலர் ஆகம சாத்திரத்துக்கு விரோதமான முறை என்பதால் கோயிலில் எதையும் தொடக்கூடாது என்று காட்டமாகக் கூறி மாற்றம் என்ற சொல்ல வந்தோர் வாயை ஒரேயடியாக மூடிவிட்டனர். ஆகம சாத்திரத்தை ஆதரித்துப் பேசிய பலபேர்கள் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி முன்னர் இங்கு இருந்த ஆயிரங்கால் மண்டபத்தை ஆகமவிதிகளை மீறி இடித்ததையே மிகப் பெரிய குற்றமாக சாடிக்கொண்டிருந்தனரே தவிர பெருங்கூட்டத்தை சமாளிக்கும் விதங்களைப் பற்றி ஏதும் பேசவில்லைதான். அழகான வட்ட வடிவாக மடைப்பள்ளியில் ஒரு காலத்தில் செய்யப்பட்ட பிரசாத லட்டுகள், இன்று இயந்திரமயத்தில் அரைவட்டமாகிப் போனதில் யாருக்கும் கவலை இல்லை. அங்கே ஆகம விதிகள் என்பது குறுக்கிடவில்லையோ என்னவோ. 

ஆகம முறை எனப் பார்க்கும்போது திருமலைக்கோயில் ஆகம் விதிகளுக்குட்பட்டுக் கட்டப்பட்டதல்ல என்பதை இவர்கள் எத்தனை பேர் அறிவார்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் சரித்திரமும் இலக்கியமும் இந்தக் கோயிலைப் பற்றி என்ன சொல்கின்றதென விவரமாகப் பார்ப்போம்.


(தொடர்கிறது - ஓம் நமோ வெங்கடேசாய)
Pictures courtesy : Tirumala.org and 3rd Image - Rush at Sabarimala Ent. gate (thanks wiki)