இமாலயன்
1962 ஆம் வருடம் நவம்பர் 19ஆம் நாள்.
நவம்பர் 19, 1962 சனிக்கிழமை – இந்த நாள் இந்திய சரித்திரத்திலே
ஒரு முக்கியமான நாள். தென்னகம் எப்படியெல்லாம் தவித்ததோ, இந்திய மேற்குப் பகுதிகள்
எப்படியெல்லாம் விஷயம் அறிந்து மிரண்டதோ யாம் அறியோம். ஆனால் வடமாநிலங்களும், வடகிழக்கு
மாநிலங்களிலும் அங்குள்ள மக்களுக்கெல்லாம் மிகப் பெரிய பயத்தை உருவாக்கின நாள். தில்லி
அரசாங்கமே கதி கலங்கிப் போயிருந்தது எனறு சொன்னால் அது மிகை அல்ல என்று பத்திரிகைக்காரர்களால்
எழுதப்பட்ட நாள், உலக அளவில் தலைவர்களால் கெட்டிக்காரர் என்று வானளாவப் புகழப்பட்ட
பாரதப் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து யார் பேச்சைத்தான்
கேட்டு நம்புவது என்று பரிதவித்த நாள்.. அகன்ற பரந்த பாரதம் சிறுத்துவிடுமோ என்று விஷயம்
தெரிந்த அனைவருமே பயந்த நாள்.
ஆம் அன்றுதான் சீனத்தின் மிகப் பெரிய ராணுவம் தம் காலாட்படைகள்
மூலம் அநாயசமாக இந்தியாவின் மலை உச்சிப் பகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய அருணாசலப்பிரதேசத்தை
முழுங்கிகொண்டு, அதன் எல்லை நகரமான போம்டாலாவைத் தாண்டிக்கொண்டு அசாம் மாநில எல்லைக்குள்
காலடி வைத்த நாள். ஏறத்தாழ நமக்கு வடக்கு எல்லையான இமயமலையின் ஒருபகுதியை வலுக்கட்டாயமாக
பிடுங்கியாகிவிட்ட திருப்தியில் ஏனைய பகுதிகளையும் சுற்றி வளைத்த நாள்.
அருணாசப் பிரதேசத்திலிருந்து அசாம் எல்லைக்குள் அன்றிரவு
நுழைந்த சீனா அடுத்த நாள் அசாமின் மிகப் பெரிய நகரமான தேஜ்பூரைக் கண்டிப்பாகப் பிடித்துவிடும்
என்று எல்லோருமே எண்ணியதால் அவசரம் அவசரமாக தேஜ்பூர் காலி செய்யப்படுகின்றது. பிரம்மபுத்ரா
நதியில் படகு மூலம் முதற்கொண்டு மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள்.
வெளிநாடுகளின் வழியே கிடைத்த வெவ்வேறு தகவல்களால் கவலை அடைந்த இந்தியப் பிரதமர் ஆகாசவாணி மூலம் தில்லியிலிருந்து பேசுகிறார்.
அசாம் இந்தியாவை விட்டு கை நழுவிப் போனதற்கு அசாம் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.
அடுத்து கல்கத்தா வருவார்களா? சீனப்படையின் விமானப்படை இனியும் சும்மா இருக்காமல் இந்தப் போரில் கலந்து கொண்டு கல்கத்தா மீது குண்டு வீசுமா என்றெல்லாம் வடமாநிலங்களெங்கும் அதிர்ச்சிப்
பேரலைகள்.
தேஜ்பூர் நகரம் முழுதும் இருட்டில் அடைந்து கிடக்கிறது தொலைத்
தொடர்பு சாதன வசதிகல் சரியில்லாத கால கட்டம்.. பீகிங் ரேடியோ அலைவரிசை மட்டுமே அந்த
நகரத்தில் ஒலிக்கின்றது. என்ன நடக்கின்றது என்று யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. இண்டியன்
எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு சில வெளிநாட்டுப்
பத்திரிகையாளர்கள் மட்டும் மிகத் தைரியமாக தேஜ்பூர் தேயிலை முதலாளிகள் விருந்தினர்
மாளிகையில் பீகிங் ரேடியோ செய்தியைக் கேட்டுக் கொண்டே அடுத்து வரப் போகும் சீனப் படையினரை
எதிர்நோக்கும்போது அடுத்த நாள் காலைநேரத்தில்தான் அப்படியொரு செய்தி அதே பீகிங் ரேடியோவில்
அறிவிக்கிறார்கள்.
சீனப்படைகள் ‘தாமாகவே’ யுத்த நிறுத்தம் செய்து கொண்டு முந்தைய பழைய
நிலைக்கு உடனடியாகத் திரும்புவார்கள் என சீனப் பிரதமர் சூ என் லாய் அறிவிப்பதாக அந்தச்
செய்தி சொல்கிறது.
இதிலென்ன விசேஷம் என்றால் அருணாசலப்பிரதேசப் பகுதியெங்கும்
டெலிபோன் வசதிகள் மோசமான நிலையில் இருந்த காலம் அது. பீகிங் செய்தி ரேடியோ மூலம் தேஜ்பூரில் செய்தி இருபதாம்
தேதி வருகின்றது என்றால் பத்தொன்பதாம் தேதி இரவே அருணாசல மலைமுகடுகளில் முன்னேறிக்கொண்டிருந்த சீனப்படைகள்
எல்லாம் திரும்ப தங்கள் ஆதியில் இருந்த இடத்துக்காக ஓடிக்கொண்டிருந்தனர். (இதற்கு இன்னமும் அங்குள்ள பெரியவர்களே சாட்சி, அவர்கள் கண்கண்ட காட்சி) அங்கு முகாமிட்டிருந்த சீன வீரர்களுக்கு அதுவும் ஒரே இரவு நேரத்தில் ”சீனத் தலைவரின் யுத்த நிறுத்தம்” செய்தி எப்படிக் கிடைத்தது? மலைகள் ஏராளமாக நிறைந்த அருணாசலப்
பிரதேசத்தில் இவர்களுக்கு சூ என் லாய் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையை
எப்படித் தெரிவித்திருப்பார்? சீனப்படைகள் கைப்பற்றிய மலைகளில் உள்ள மலைமக்கள் யாவரும்
சீனப்படையை வெறுத்துக் கொண்டிருக்க, அவர்களில் பலரும் இந்தியாவுக்காகப் போராடி உயிர் விட்டிருக்க, யுத்தத்தின் சூழ்நிலை தமக்கு சாதகமான வேளையில் திடீரென சீனா ஏன் யுத்த நிறுத்தம் செய்யவேண்டும்.
சீனாவின் இந்தியப்படையெடுப்பு பற்றிய பல புத்தகங்கள். பல
கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு பெரிய மாநிலத்தைக் கைப்பற்றிய சீனா அதிவேகமாக
இந்தியாவின் படைகளை வென்றுகொண்டே வந்தவர்கள் இந்த திடீர் அறிவிப்பான ‘தாமாக முன்வந்து செய்த நிறுத்தம்’ பற்றி இதுவரை யாருமே முக்கியத்துவம் காட்டவில்லை. இதுதான் வியப்பு.
19 ஆம் தேதி சீனப்படைகள் நிச்சயமாக ‘போம்டாலா’ விலிருந்து
சற்றுக் கீழே உள்ள தேஜ்பூரை கடகடவென அடைந்து காலியாகக் கிடக்கும் அந்த முக்கியமான நகரைக்
கைப்பற்றிப் பெரிய அளவில் இந்தியாவோடு பேரம் பேசி இந்த யுத்தத்தின் பிரச்சினைகளை அவர்களுக்குச்
சாதகமாக முடித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் யுத்த நிறுத்தம் செய்தது ஏன். அதுவும்
தாமாக முன்வந்து எந்தக் காரணத்தையும் முன் வைக்காமல் யுத்த நிறுத்தம் செய்தது ஏன்
– இந்தக் கேள்விக்கு அன்றைய நிலையில் யாருக்குமே பதில் சொல்லத் தோன்றவில்லை.. ’ஆஹா..
சீனா, தாமாகவே முன்வந்து யுத்த நிறுத்தம் சொல்லி உடனடியாக பழைய நிலைக்குத் திரும்ப ஒப்புக்கொண்டது. அசாம் மாநில எல்லைக்குள் வரவே இல்லை.. எடுத்துக் கொண்ட அருணாசலப் பிரதேசமலைகளும் திரும்பக் கிடைத்துவிட்டன.. இதுவே
போதும்’ என்ற மனநிலையில்தான் அன்றைய இந்திய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது என்னவோ வாஸ்தவம்தானே.
ஆனால் இந்த யுத்த நிறுத்தம் சீனாவால் ஏன் அன்று (நவம்பர்) 19/20 ஆம்தேதி
பார்த்துச் சொல்லவேண்டும் என்கிற கேள்விக்குறிக்குப் பதில் சொல்லும் விதமாகத்தான்
‘இமாலயன்’ என்கிற இந்த புதினத்தை எழுதியுள்ளேன்.
சுதந்திரம் கிடைத்த பதினேழு வருடங்களிலேயே அதுவும் ஒரு நியாயமான ஜனநாயக நாடாக
மாறிப்போன இந்தியாவை நம் மனதில் இன்றைய நிலையில் நினைத்துக் கொண்டு அன்று நடந்த அந்த
இந்தோ சீன யுத்தத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லப்போனால், அந்த யுத்தம்தான்
இந்தியாவை இந்தியனுக்கு இதயம் திறக்கச் செய்தது. அந்த ஒரு யுத்தம்தான் இந்தியாவின்
பலம் பலவீனம் இரண்டையும் கண் திறக்க வைத்தது. தேசத்துக்கு அதன் வளர்ச்சிக்கு, தேசத்தின்
புகழ் உலகமெங்கும் பரவி, மிக பலமான வளநாடு இந்தியா என்று இன்று சொல்வதற்கு ஆதிகாரணம்தான் அன்றைய இந்தோ சீன யுத்தம் என்று சொன்னால் கூட மிகையாகாது.
இந்த இந்திய சீன யுத்தம்தான் ‘இமாலயன்’ புத்தகத்துக்கு மேடை.
இந்த மேடையில் ஆடுகின்ற கதாபாத்திரங்கள் எல்லாவகைக் குணங்களையும் கொண்டவர்கள். அரசியல்வாதிகள்,
ஆட்சியாளர்கள், அலுவலகர்கள், அரசர்கள், வீரர்கள், சாதாரண மக்கள் என எல்லோரும் இந்த மேடையில் வந்து
போகிறார்கள். அவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய்து நவரசங்களையும் நம்மிடையே தந்து செல்கிறார்கள். ஆட்டுவிப்பவன் மட்டும் என் எழுத்தைக் கைக்கொண்டு ஆட்டி வைத்திருக்கவேண்டும் என்றுதான் சொல்வேன்.
இந்தப் புத்தகம் புதினம்தான். இந்தப் புதினத்தில் சொல்லப்பட்டதெல்லாம்
நடந்ததா இல்லை கற்பனையாக எழுதப்பட்டதாக எனக் கேட்டால் உறுதியான ஒரு விளக்கம் என்னிடம்
நிச்சயமாக இல்லை. என்னால் விளக்கம் தரவும் இயலாத நிலை.. இந்த நிலை ஏன் வந்தது என்பதை
இப்புதினத்தைப் படித்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
நான்காண்டுகள் இந்தப் புதினத்துக்காக செலவிட்டிருக்கிறேன். தகவல்கள் வரவேண்டும். தகவல்களின்
தரம் தெரியவேண்டும். இந்தோ சீன யுத்தத்தைப் பற்றிய எழுதியவர்கள் புத்தகங்களைப் படித்துள்ளேன். கொஞ்சம் மார்க்ஸையும் மாவோவையும் பற்றியும் அவர்களின் சித்தாந்தங்கள் பற்றியும் படித்தும் கேட்டும் உள்ளேன். நேருஜியின் சோஷலிஸ சித்தாந்தத்தையும் படித்திருக்கிறேன். கல்வியாளர்கள், பத்திரிகை ஜாம்பவான்கள், இந்திய ராணுவப்படையில்
ஓய்வு பெற்ற வீரர்கள், புத்தமதத்துப் பெரியவர்கள், தலாய்லாமா விசுவாசிகள், சீனத்துப்
பேராசிரியர்கள் இவர்களிடமெல்லாம் கடந்த நான்கு வருடங்களில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இது பற்றி உரையாடியுள்ளேன். இமயத்தின் காதலர்களிடம்
அவர்களைத் தூண்டிவிட்டு கதை கேட்டிருக்கிறேன். இமயத்தில் குடிகொண்டோரிடமுமிருந்து இறைவன்
அருளால் சில முக்கிய விஷயங்கள் தெரிந்துகொள்ள சந்தர்ப்பங்களூம் கிடைத்தனதான்.. இத்தனையும் இப்புத்தகத்தில் ஆங்காங்கே தூவியுள்ளேன்.
இந்தப் புதினத்தை எழுதும்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களெல்லாம்
என்னால் எழுத்தில் வடிக்க முடியாதுதான். முடிந்தவரை கதையோட்டம் மூலம் வாசகர்களிடமும்
பகிர்ந்து கொண்டுள்ளேன். இமாலயன் புதினத்தை முடிக்கும்போது அவனைப் பிரிகின்றோமா என்கிற
எண்ணம் என் மனத்தில் ஒரு மூலையில் எழுந்தது என்னவோ உண்மைதான்.. ஆனால் அது மாயையான உணர்ச்சி,
இமாலயனை நான் படைக்கவில்லை. என்னுள்ளத்திலே எப்போதிலிருந்தோ அவன் இருந்து எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தே இருக்கவேண்டும்.
காலம் வந்தபோது என் எழுத்தின் வழியாக வெளிப்பட்டிருக்கவேண்டும்.. அதனால் மட்டுமே உறுதியாகச்
சொல்லமுடியும், என்னால் இமாலயனை எந்தக் கணமும் பிரியமுடியாது..
வழக்கம்போல என் எழுத்துக்களைப் பதிப்பித்து வரும் பழனியப்பா
பிரதர்ஸ் இமாலயனையும் புத்தகமாக வெளியே கொண்டு வந்துள்ளார்கள். 561 பக்கம் கொண்ட இப்புத்தகம், படிக்கக் குளிர்ச்சியாக டிஜிடல் பிரிண்டர்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது, விலை ரூ 480/-.(தான்). என் எழுத்துக்களுக்கு எப்போதும் ஆதரவு தரும் வாசகர்கள் ‘இமாலயன்’ புத்தகத்தையும் வாங்கிப் படித்து தங்கள் கருத்துகளைப் பதிப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!!
அன்புடன்
திவாகர்
Pazhaniappa Bros., 25, Peters Road, Royapettah 600014 Ph. 28132863.43408000
Coimbatore "683, Raja Street Phone No,2393704
Tiruchi. Theppakkulam, Phone 2702160
Salem: 77, Cherry Road, Salem Phone No. 2450711
Madurai: 23A, West Gopuram Street, Madurai Phone 2346258
Erode: 959, Broke Road, Erode Phone No,.2256261.