நேற்றுதான் என்னுடைய புதிய நூல் ‘ஆனந்த விநாயகர்’ புத்தகம் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் மூலம் வெளியே எட்டிப் பார்த்தது. ஆனந்த விநாயகர் புத்தகம் வந்த கதை சுவையானது.
சென்ற வருட ஆரம்பத்தில் ஓர்நாள் எனது தெலுங்கு இலக்கிய நண்பர் ஸஹ்ருதய ஸாகிதி பிரபாகர் ‘உங்கள் அலுவலகம் வரலாமா’ என்று தொலைபேசியில் கேட்டார். வாருங்களேன் என்றேன். வந்தவர் தனியாக வரவில்லை. குண்டூர் நாகார்ஜுனா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் பாலமோகன் தாஸ் அவர்களையும் அழைத்து வந்தார். எனக்கு ஆச்சரியம்தான்.
பேராசிரியர் பாலமோகன் தாஸ் தான் சமீபத்தில் ஓய்வு பெற்றதையும், ரஷியா சென்றதையும் சுருக்கமாக சொல்லிவிட்டு, தான் அங்கு விநாயகர் பற்றிய நூலை எழுதியதையும், அந்த நூல் காகிநாடாவில் இந்நாள் தமிழக கவர்னர் திரு ரோசையா மூலம் வெளியிடப்பட்டதையும் தெரிவித்தார். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியையும் தந்தார். அத்துடன் ஒரு ஆங்கில துணை நூலையும் தந்தார்.“உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் ஆனந்த விநாயகரை தமிழில் கொண்டு வரவேண்டும்” என்றார்.
நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். சாதாரணமாக என் மனதில் தோன்றும் கருத்தை எழுத்தில் வடிப்பது வேறு. இன்னொருவர் நூலை நம் மொழியில் வடிப்பது வேறு. இத்தனைக்கும் இது முழுக்க முழுக்க ஒரு தெய்வ அடிப்படையான நூல். அதுவும் மூத்த கடவுள், முழுமுதற்கடவுள் கணேசனார்.
முதலில் என்ன சொல்வது என்பது புரியாமல் விழித்தேன்.
“ஏன் ஸார்.. ஏதேனும் தயக்கமா.. எதுவானாலும் சொல்லுங்கள்.. உங்களுக்கு தேவைப்பட்ட கால கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு எப்படியும் இந்த புத்தகம் தமிழில் வேண்டும்’ என்றார் அவர்.
சாட்சாத் கணபதியே என்னை முறைத்துப் பார்த்துக் கேட்டதாகப் பட்டது. உடனடியாக ஒப்புக் கொண்டேன். கணபதியின் புத்தகத்துக்கு எதிர்வார்த்தை சொல்ல நான் யார் எனப் பட்டது கூட..
அவர் மகிழ்ச்சியுடன் போய்விட்டார். எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி முதலில் போய்விட்டது. காரணம் மொழி பெயர்ப்புப் புத்தகங்கள் என வரும்போது நம் கருத்துகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மூலப் புத்தகத்தின் கருத்தோடு, அந்தக் கருத்து சிதைவுறாமல் அப்படியே எழுதவேண்டும். மேலும் கணபதி என வரும்போது, தமிழர்கள் வணங்கும் ‘பெரிய கடவுளை’ தமிழ்நாட்டுக்கேற்றவாறு வழங்கவேண்டும் என்றும் பட்டது. ஆகையினால் மூலநூல் ஆசிரியரிடம் சிறிது அனுமதி கேட்டேன். அவர் உடனடியாக’ புத்தகம் உங்கள் கையில் சார்.. உங்கள் இஷ்டம்’.. என்று அனுமதியும் கொடுத்தார். புத்தகம் எழுத எழுத சொல்லவொண்ணா ஆனந்தத்தைத் தந்தார் இந்த ஆனந்த விநாயகர்.
தமிழகக் கோயில்களில் பிள்ளையார் சிறப்பு பெற்ற இடங்களைப் பற்றியும், ஈழத்தில், சிங்கப்பூரில், மலேயாவில் உள்ள பிள்ளையார் கோயில்கள் பற்றியும் இந்த தமிழ்ப் புத்தகத்தில் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தகவல்கள் அனைத்தும் மூலப் புத்தகத்தில் உள்ளவாறே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இருக்கும் வடமொழி சுலோகங்கள் அனைத்தும் என் மனைவி திருமதி சசிகலா அவர்கள் மூலம் தமிழாக்கப்பட்டது என்பதால் என்னுடைய நன்றியை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழனியப்பா பிரதர்ஸ் திரு செல்லப்பன் அவர்களுக்கும், புத்தகத்தை அழகுற வடிவமைத்த மூத்த எழுத்தாளரான திரு முத்துக் குமாரசுவாமி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக திரு முத்துக் குமார சுவாமி அவர்களின் உதவி பல வகைகளில் இந்தப் புத்தகத்தில் படங்கள், புகைப்படங்கள் மூலமாகக் கிடைத்தது என்பது மகாகணபதியின் கருணையாகும்.
விநாயகன் வினைதீர்ப்பவன். விநாயகனைப் பற்றி எழுது என்று மூல நூல் ஆசிரியர் பேராசிரியர் பாலமோகன் தாஸ் அவர்களை அனுப்பியதும் அவனே.. ஆகையினால் இந்தப் புத்தகத்தின் எல்லாப் பெருமைகளும் அவனுடயதே. மூலநூல் ஆசிரியருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!
புத்தகத்தைப் பெற
ஆனந்த விநாயகர்,
விலை ரூ 195,
பழனியப்பா பிரதர்ஸ்,
25, பீட்டர்ஸ் சாலை,
சென்னை - 600 014.மற்றும் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை.