Wednesday, June 06, 2007

பிடிச்சுகிச்சு:

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் என்ற் பெயரை ஒரு பெரிய கதைக்கு (2 பாகங்கள்) தலைப்பாகக் கொடுத்தாலும் அதன் கதாநாயகன் மட்டும் அந்த ஜஸ்டிஸ் இல்லைதான். ஆனால் கோர்ட் அதாவது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தக் கதையின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுவார் தேவன். அவர் இந்தக் கதை எழுதிய காலக்கட்டத்தில் கோர்ட்டுகளில் ஜூரர் சிஸ்டம் உண்டு போலும். அதாவது வெவ்வேறு வகையில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள ஏழு அல்லது ஒன்பது நபர்களை ஜூரர்களாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பெரிய கிரிமினல் வழக்கிலும் நியமிப்பார்கள். அந்த ஜூரர்களின் மெஜாரிடி முடிவின் படி 'கனம்' நீதிபதி தீர்ப்பு சொல்லுவார். இதற்கு அப்பீல் கிடையாது. (வழக்குகளும் விரைவாக முடிக்கப்பட்டு முடிந்தவரை நல்ல நியாயமும் கிடைக்கச் செய்யும் வழிமுறை இது)

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் புதினத்திலும் இப்படி ஒரு கேஸ். கொலை வழக்கு. கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் இருக்கும் 'வரதராஜபிள்ளை' (ஏறத்தாழ கதாநாயகன்) பாத்திரத்தை நல்லவராகவே கதை முழுவதும் சுட்டிக்காட்டி வருகிறார் தேவன். ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சாட்சிகள் இவை அனைத்தும் வரதராஜபிள்ளைக்கு எதிராகவே கோர்ட்டில் அரங்கேறிகொண்டிருக்கின்றன.

இப்படி ஒருநாள் மிக முக்கிய சாட்சியை ஜூரர்கள் முன் வைக்கப்பட்டு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் வெகு பரபரப்பாக வாதித்துக் கொண்டிருக்கிறார். கோர்ட் முழுவதுவமே ஒரே ஸீரியஸ். நீதிபதி முதற்கொண்டு பார்வையாளர் வரை எல்லோருமெ உன்னிப்பாக வாதத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.

அப்போது ஜூரர்களில் ஒருவர், முத்தையா பிள்ளை மிக மெதுவான குரலில் பக்கத்தில் உள்ள இன்னொரு ஜூரரிடம் பேசுகிறார்.

"பிடிச்சுகிச்சு"

அந்த இன்னொரு ஜூரர், முத்தையா ஏதோ முக்கியமான பாயிண்டைப் பிடித்துவிட்டார் போலும் என்ற ஆவலினாலோ அல்லது பொறாமையாலோ அவரைத் திருப்பி கேட்பார்.

"என்ன பிடிச்சுகிச்சு?"

மிகவும் இயல்பாகவும் அதே மெல்லிய தொனியில் முத்தைய்யா பதில் சொல்லுவார்.
"நேத்து ராத்திரி... மொட்டை மாடில படுத்தேனா?... ஒரே பனியா?... அதான் பிடிச்சுகிச்சு.." என சொல்லிவிட்டு மூக்கையும் உறிஞ்சுவார்.

சளி பிடித்துவிட்டதாம் அவருக்கு. பிடிக்கட்டும். ஆனால் அதை சொல்வதற்கும் நேரம் காலம் உண்டல்லவா? இப்படி கோர்ட்டில் முக்கியமான கட்டத்தில் வாதத்தை கேளாமல் தனக்கு தோன்றியதை உடனடியாக பக்கத்து நபரிடம் சொல்லியே தீரவேண்டுமென்ற ஒரு உணர்ச்சி...

இந்த ஆவல் உணர்ச்சியை நிறைய பேரிடம் இப்போதும் பார்க்கலாம். தேவனுக்கு மற்றவர்களை மிக மிக உன்னிப்பாக கவனிக்கும் குணம் உண்டு என்பது அவர் கதைகளை படித்த பலருக்குத் தெரிந்ததுதான்.

'மிஸ்டர் வேதாந்தம்' என்றொரு புதினம். தேவன் 'ஆனந்த விகடன்' நிர்வாக ஆசிரிய்ராக 15 வருடங்கள் பணி புரிந்தவர். தன் பத்திரிகை தொழில் சம்பந்தப்பட்ட கதையாகவே 'மிஸ்டர் வேதாந்தம்' புதினத்தை வெளியுலகுக்குக் காட்டினாரோ என்னவோ. இந்தக் கதையின் நாயகன் வேதாந்தம் ஒரு வளரும் எழுத்தாளன். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரிடம் தன் எழுத்துக்களைப் பிரசுரிக்கும்படி கோருவான்.

'ஸார், .. நீங்க படிச்சுப் பார்த்துட்டு..நல்லா இருந்தா உங்கப் பத்திரிகைல பிரசுரம் பண்ணுங்க..ஸார்.. நான் ரொம்ப நல்லாவே எழுதியிருக்கேன் ஸார்.."

அதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் நிதானமாக சொல்லுவார்.
'எல்லாம் சரிப்பா.. நீ நல்லாவே எழுதியிருக்கே.. ஆனா பாரு.. எங்களது பிரபல பத்திரிகை.. அதனால நீ என்ன பண்றே.. முதல்ல அங்க இங்க எழுதி பிரபலமாயிட்டு அப்பறமா இங்கே வா... அப்ப நீ ஒரு குப்பையை எழுதிக் கொடு..அத அப்படியே நாங்க எங்க பத்திரிகைல பிரசுரிக்கிறோம்..அதுவரைக்கும் நீ எத்தனை நல்லா எழுதினாலும் அது குப்பைக்கூடைக்குத்தான் போகும்..."

தேவனின் இந்த வார்த்தைகள் இன்றைக்கும் சத்தியமான நிலையில் நிலைத்து நிற்கின்றன. பிரபல பத்திரிகைகளும் இன்றளவிலும் அவர் வார்த்தைகளை அப்படியே காப்பாற்றுகின்றன

Labels:

தேவன் நாவல்களில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமே ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். சிறிய கதாபாத்திரம் ஒவ்வொன்றிலும் கூட தேவனின் கைவண்ணத்தை ஆங்காங்கே காணலாம். இதோ 'கல்யாணி' புதினத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தைப் பற்றி தேவன் சொல்வதைப் பார்ப்போம்:
-------------------------------------------------------------------------------------
'கும்பகோணத்தில் மடத்தெருவில் இருந்தது டாக்டட் பி.ஜி. கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் 'டிஸ்பென்ஸர்ய்' என்று வைத்துக் கொண்டிருந்தார் டாக்டர். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிக மிக செங்குத்தாக இருக்குமாகையால், அதில் ஏறி பழக்கப்பட்ட பேர் அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது முப்பத்திரண்டு படிகள் என்பது 'நெட்டுருப்' பாடம்.

மாடியில் டாக்டரின் அறைக்கு உள்ளே, டாக்டர் உட்காருவதற்காக ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறைய புஸ்தகங்களாகவே அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோரு இரும்பு நாஃற்காலியும் ஒரு ஒற்றை பெஞ்சும் போட்டிருக்கும். இரும்பு நாற்காலியில் உட்கார உரிமை பெற்றவர் ஒன்று, டாக்டரின் அத்யந்த நண்பராக இருப்பர் அல்லது யாராவது பெரிய உத்யோகஸ்தராக இருப்பார்.

ஒற்றை பெஞ்சு நிறைய வியாதிஸ்தர்கள் கூடி, ஹாலின் பல இடங்களிலும் நின்று, மாடிப்படியிலும் கூட விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் படிக்கு ஒன்றாகப் பதுமைகள் நின்றன போல் சிலர் நிற்கத் தொடங்கிய பிறகுதான் டாக்டர் பி.ஜி.கிருஷ்ணன அதிவேகமாக 'டிஸ்பென்ஸரிக்குள்' பிரவேசிப்பார். டாக்டர் வந்தவுடன் யாரையும் கவனிக்காமலே 'டக் டக்' கென்று தன் அறைக்குள் சென்று விடுவார். காத்திருப்பவர் கண்களெல்லாம் அதன்பின் அறைகதவை நோக்கியிருக்கும். இரும்பு நாற்காலியில் 'விருதா' கால்ட்சேபம் செய்ய வந்திருக்கும் 'லோட்டா ஆசாமியைப் பார்த்து ஒரு புன்னகை செய்வார்.

'சுக்காம்பாளையத் தெருவிலே ஒரு கேஸ். மூணு நாளாக 105,106 டிகிரி. என்னிடம் சொல்லல்லை. விடியக் கார்த்தாலை வந்து என்னைக் கூப்பிடறான், கேளுங்க ஸார்! நாம் கை வெச்ச உடனே ஆளு 'க்ளோஸ்' ஆகும் - நமக்கு கெட்ட பேரு! இருந்தாலும் மனசு கேழ்க்கிறதா? போய் ஒரு இஞ்செக்ஷன் பண்ணிவிட்டு ஒடி வருகிறேன். இப்படித்தான் பாருங்கோ.. நம்ம ஆலந்தூர் 'கோண்டு'! உங்களுக்குத் தெரியுமே ஸார்! சினிமாவெல்லாம் 'ஆக்ட்' பண்ணியிருக்கானே; அவனுக்கு ஸீரியஸாயிடுத்து போனமாசம்...வேற ஒருத்தர் ட்ரீட்மெண்ட்.. ரேழிக்கே கொண்டுவந்துட்டா. நான் அந்தப் பக்கம் அகஸ்மாத்தாப் போனேன். அவன் தாயாதி பங்காளிகள் படீர் படீர்னு நெஞ்சிலே அடிச்சுக்கறா! மெல்லக் 'கோண்டு' மார்பிலே கை வெச்சேன்.. ரொம்ப லைட்டா 'பீட்டிங்' -அம்மாமார்களே! இங்கே இவருக்கு அடிச்சுக்கிற மட்டும் நீங்க அங்கே அடிச்சுக்கவேண்டாம்.. சித்தெ பொறுத்துக்குங்கோ!இன்னேன். ஒரு 'கிளிஸரைன்' இனிமாவைக் கொடுத்து உள்ளே கொண்டுபோகச் சொன்னேன். மறுநாளைக்கு மறுநாள் 'கோண்டு' வந்து சாஸ்திரிகள் ஓட்டல்லே ரைஸ்-இட்லி கிடைக்குமா?ன்னு கேழ்க்கிறான்' என்பார்.

எதிரில் உட்கார்ந்திருக்கும் 'லோட்டா' ஆசாமி பரவசமாகிவிடுவார். இப்படி இன்னும் கதைகளை உதறி விசிறி விட்டு டாக்டர் ஆரம்பிப்பார்.

ஒரு சீக்காளி மருந்து வாங்கிகொண்டு வெளியே போனவுடன் இதரர்களுக்கு அவனுடைய கதையை ஹாஸ்யரஸத்துடன் சொல்வார் டாக்டர். மற்றவர்கள் தங்களைப் பற்றியும் இப்படி ஒரு பேச்சு நடக்கும்' என்ற நினைவே இல்லாமல் கேட்டு ஆனந்திப்பார்கள்!

எல்லோரிடமும் என்ன உடம்பு என்று சொல்லிவிடும் சுபாவம் அவருக்கில்லை. 'ஒன்றுமில்லை! பயப்படாதே! நீ தெரிந்து கொண்டு என்ன லாபம்? நான்தானே தெரிந்துகொண்டு மருந்து கொடுக்கவேண்டும் உனக்கு! சாப்பிடு..பார்க்கலாம்..போ' என்பார். அந்த ஆசாமி போன உடனே, 'ஆச்சு, இவன் இந்த சீசா முழுக்கச் சாப்பிட இருக்கமாட்டானே.. காலப்பிங் டி.பி..- நான் என்ன செய்யறது.. ஏன்? யார்தான் என்ன செய்யமுடியும்?" என்பார். அவர் பேச்சில் நிஜகலப்பு இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன? சதா தமாஷாக இருக்கும்!
-------------------------------------------------------------------------------------

தேவன் இந்த டாக்டரைப் பற்றி கதையில் முன்கூட்டியே கதாநாயகன் நண்பன் மூலமாக நமக்கு அறிமுகம் செய்கிறார் - எப்படி என்று படியுங்களேன்:
-------------------------------------------------------------------------------------
'பி.ஜி.கிருஷ்ணன் வைத்தியம் என்றால் உனக்கு தெரியாதோ? ஆள் க்ளோஸ்! தம்பி.. பேஷண்ட் ஃபட்..ஆஸாமி ஃபினிஷ்! கிருஷ்ணன் வந்துட்டுப் போனாலே பின்னாலே அழுகுரல்; அதைத் தொடர்ந்து சிவசாம்ப சாஸ்திரிகள் மந்திரம் எல்லாம் கணீரென்று கேட்கும்'
------------------------------------------------------------------------

தேவனின் இன்னொரு புதின கதாபாத்திரத்தின் மூலம் மறுபடியும் சந்திப்போம்.

Labels: