Wednesday, June 04, 2008

நான் எழுதுவது கடிதம் அல்ல...நெஞ்சம்..........

இ-மெயில்,தொலைபேசி மற்றும் கைபேசி காலத்தில் காகிதத்தில் கடிதம் எழுதி அனுப்புவது என்பதெல்லாம் இப்போது அடியோடு நின்றுவிட்டதோ என்று நினைக்கிறேன்..


கடிதம் சுவைபட எழுதுவது ஒரு மாபெரும் கலை. கடிதம் மூலமாக 1940 களில் சுவையான நகைச்சுவை சிறுகதை எழுதி ஆரம்பித்தவர் எனக்குத் தெரிந்தவரை எழுத்தாளர் தேவன் என்றுதான் நினனக்கிறேன். ஏன்.. 1970-75 வரை கடிதங்கள் மூலமாக எழுதப்படும் சிறுகதைகளை மிக நன்றாக பிரபலப்படுத்தியது குமுதம் வார இதழ்.

அந்த காலத்து நம் காந்தி அடிகள் முதற்கொண்டு நேரு. ராஜாஜி வரை அவர்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தும் பிரபலமானவைதான். நமது முதல்வரின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதங்கள் மிகவும் பிரபலம். அரசியல் நிகழ்வுகளை அவர் பார்வையில் அப்படியே மிக அழகாக பிரதிபலிக்கும்.

கடிதங்களைப் பலவகைகளாக பிரிக்கலாம்; காதல் கடிதம் படிக்கவே வேண்டாம்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.. காதலர்களுக்கு இன்பம் பெருகிக் கொண்டே இருக்கும். காதல் கடிதங்கள் மிக பிரபலமானதும் கூட. முதல் கடிதம் கொடுக்கும் காதலனுக்குக் கை நடுங்குதலும், அதனைப் பெற்றுக் கொள்ளும் காதலிக்குக் கிடைக்கும் உள்ளூற ஊறும் மகிழ்ச்சிகளும் ஏராளம் என்பதினை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.அன்னை தன் பிள்ளைகளுக்கு எழுதும் கடிதங்களில் பாசம் அப்படியே கொந்தளிக்கும், தங்கை அண்ணனுக்கு எழுதும் கடிதங்களும் அண்ணன் தங்கைக்கு எழுதும் கடிதங்களும் கூட சுவைபடும் விதத்தில் எழுதப்படும்போது நன்றாகவே இருக்கும். (நேற்றைய காதலி இன்றைய தங்கையாக மாறாத பட்சத்தில்) அதே போல நண்பர்கள் மத்தியிலோ அல்லது தோழிகளுக்குள்ளோ எழுதப்படும் கடிதங்களில் ஆயிரம் விஷயங்கள் இருப்பதாகத்தோன்றும். 1980களில் நானும் சிதம்பரத்தில் இருந்த என் தங்கை (சித்திபெண்) ராஜியும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் சுவையாக இருந்ததாக நினைவு.

விஜயவாடாவில் இருக்கையில் என் நண்பன் ஒருவன் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கும் பெண்ணுக்குக் காதல் கடிதம் அவன் எழுதுவதாக ஆங்கிலத்தில் எழுதித் தரச் சொன்னான். நமக்கு அதுதான் ஆங்கிலக் கடித முதல் அனுபவம். இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேன் (அவன் பரபரப்பையும் மீறித்தான்)

பார்த்துப் பார்த்து யோசித்து பொறுக்கி எடுத்த வார்த்தைகளை நிரப்பி எழுதப்பட்ட கடிதம். அவனும் அதைப் படித்துப் பார்த்து சந்தோஷப் பட்டான். அடுத்த நாள் மிகத் தைரியமாக அவளிடம் 'மை பெர்சனல் லெட்டர் ஓன்லி ஃபார் யுவர் ஐய்ஸ் ' என்று கொடுக்க அவளும்
வாங்கிக் கொண்டாள்தான். அந்தக் காதலனை விட எனக்கு பதற்றம் அதிகம்தான். இதுவரை நன்றாகவே நடந்தது.

அடுத்தநாள் அவனைக் கூப்பிட்டு அனுப்பினாள். 'இதை நீதான் நிஜமாக எழுதினாயா.. ஒரே தப்பு தப்பா இருக்கே' என்று ஒரு கோபப் பார்வையுடன் அவனைப் பார்த்ததும் இந்தப் பைத்தியக்கார நண்பன் உடனடி சரெண்டர் ஆகி உண்மையைச் சொல்லிவிட்டான்.

அவள் எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்..."இதில் எத்தனை தப்பு இருக்கு தெரியுமோ.. ஸ்பீக்கிங் இங்கிலீஷில் முதல்ல கடிதம் எழுதறதே தப்பு. அதுவும் லவ் லெட்டெர்லாம் எழுதறச்சே ஒரு அப்பீல் வேணும்.." என்று சண்டைக்கு வந்துவிட்டாள். எனக்கு கொஞ்சம் ஈகோ முன்னால் வந்து அவளுடன் சண்டை போடவைத்தது.

'இதோ பார்.. இங்கிலீஷ்ல்லாம் அந்நிய பாஷை.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா சொல்லு.. ஆனா இப்படித்தான் இலக்கியார்த்தமா எழுதணும்னா ஷேக்ஸ்பியரைத்தான் எழுதவைக்கணும்.. நீ டீச்சராத்தான் போவே போ.." என்று சாபமும் கொடுத்தேன். (என் சாபம் பலிக்காமல் அவள் வங்கியில் ஆபிசரானது வேறு கதை).

பின் ஒருநாள் இவள் கதையை வைத்து 'காதல் கடிதம்' என்ற பெயரில் நாடகமே எழுதி ஐந்து முறை மேடையேற்றியும் ஆகிவிட்டது. அவள் எதிர்பார்த்த அந்த இலக்கிய இங்கிலீஷ் கடிதங்கள் இப்போதுள்ள 'எஸ்.எம்.எஸ்' பாஷையில் துண்டாடப்படுவதை பார்க்கும்போது, என்னுடைய 'ஸ்பீக்கிங் இங்கிலீஷ்' கடிதம் எவ்வளவோ மேல்தான் என்று இப்போது தோன்றுகிறது.

பொதுவாக பெண்கள் எழுதும் கடிதங்கள் மிக நன்றாகவே இருக்கும். சுவையாகவும் பலசமயம் சுள்ளென உறைக்கவும் செய்யும். என் நண்பன் ஒருவன் தனக்கு வந்த காதல் கடிதம் ஒன்றில் காதலி எழுதிய சில வரிகளை மட்டும் காண்பித்தான் (மற்றவைகளை மறைத்துக் கொண்டு). அவனுக்கு உள்ள குடிப்பழக்கத்தை ஒரு காதலியால் எப்படி உணர்த்தமுடியமோ அப்படி உணர்த்தி இருந்தாள். "நீ குடிக்க குடிக்க என் பொட்டு சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருக்கிறது..."

இவன் குடியால் அழியப்போகிறானாம்..இவள் விதவை ஆகிவிடுவாளாம்..எப்படி இருக்கிறது வார்த்தை விளையாட்டு.. அவனுக்குப் புரிந்ததோ என்னவோ அதைப்படித்த நானும் என் நண்பன் தேவாவும் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்லிச் சொல்லி அந்தப் பெண்ணின் கூரிய புத்தியை மெச்சிக் கொள்வோம்.

விஜயவாடாவில் என் நண்பன் மணிக்கு நான்தான் கடிதம் எழுதித் தரவேண்டும். அவன் மனைவி உட்பட அவன் சுற்றம் சூழல் அத்தனை பேருக்கும் அடிக்கடி கடிதம் எழுதுவான். அவன் மிக மிகக் கடுமையாக சொல்லும் வார்த்தைகளை சிலசமயம் அப்படியே அவன் சொல்வதைப் போலவே எழுதச்சொல்வான். குறிப்பாக அவன் மனைவி ஊரில்
இருக்கும்போது எழுதும் கடிதங்களில் கடுமை காரமாக இருக்கும். "நீ என்ன பண்றே.. எங்க அண்ணன் வீட்டுக்குப் போய் போன தடவை கொடுத்த ரூபாய் ஆயிரத்தை வட்டியோடு வசூல் பண்றே..வட்டிப்பணத்தோடு விஜயவாடா வா.. இல்லையென்றால் அங்கேயே கிட.. நான் வர்ர வரைக்கும்"

எனக்கு என்று பார்க்கும்போது ஒரு எழுத்தாளர் என்ற வகையில் தபால்மூலம் கடிதங்கள் இன்னமும் வரத்தான் செய்கின்றன. இவர்களெல்லாம் நிச்சயமாக இந்தக்கால இளைஞர்கள் இல்லை என்பதும் நான் அறிவேன்.. கணினி இவர்களின் கைகளுக்கு எட்டும் அளவில் இல்லை என்பதும் புரிகின்றது. சேலம் பொதியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர். சு.வேல்மணி மாதம் ஒருமுறை அன்பு மேலீட்டால் ஒரு போஸ்ட் கார்டில் தமிழை வளர்க்கும் வழி வகைகளை எழுதி அனுப்புவார். எங்கள் ஏரியா போஸ்ட்மேன் சொல்வார் "உங்கள் ஒருவருக்குதான் இப்படி கடிதங்கள் வருகின்றது", என்று. (மற்றவை எல்லாமே பாங்க், கிரெடிட் கார்ட் பில், இன்ஸ்யூரென்ஸ்...) ஆனாலும் தினம் மூன்றுவேளை வரும் தபால்காரர் இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் வருவதாகக் கேள்வி. முன்பெல்லாம் தசரா மாமூலை அதட்டி வாங்குபவர்கள் இப்போதெல்லாம் கேட்பதே இல்லை என்று கூட சொல்லலாம்.

இன்றைய தபால்காரருக்கும் தபாலாபீசுக்கும் வேலை அவ்வளவாக இல்லை. சென்றமுறை என் கிராமத்துக்கு (சீர்காழி தாலுகா திருநகரி) சென்றபோது அந்த 'போஸ்மாஸ்டரம்மா (பெயர் உஜ்ஜீவனம். வயது 65 க்கு மேல் இருந்தாலும் எப்படி வேலைக்கு அனுமதிக்கிறார்கள் என்பதை அடுத்தமுறை விசாரிக்கவேண்டும்) 'தபாலாபிஸையே வங்கி போல காலம் மாற்றிவிட்டது' என்றார்.

பேப்பரும் பேனாவும் இனி தேவையில்லைதான்...

கம்பனோடு கவிதை போயிற்று என்பார்கள். இருபதாம் நூற்றாண்டோடு கடிதமும் போயிற்று. இனியும் யாருக்காவது ஒன்றிரண்டு கடிதங்கள் வந்தால் அதை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்.. பிற்காலச் சந்ததியினர் இந்த அதிசயப் பண்டத்தைப் பார்க்க உதவும். எங்காவது புகைப்படக் கண்காட்சியில் காந்தி, நேரு கடிதங்களைப் பார்க்கும்போது 'எங்கப்பாவுக்கு கூட அந்தக் காலத்தில் இப்படி கடிதமெல்லாம் வருமாம்.. எங்க வீட்ல பார்த்ததா ஞாபகம்'
என்று அவர்கள் பெருமைப்படும் வாய்ப்பையும் அளித்தவர் ஆவோம்....

திவாகர்

Labels: