விஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 5
ஒரு தமிழ்ப்பள்ளி சீரழிகிறதே..
திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலை.. ஆகா.. பெயரே எவ்வளவு அழகாக இருக்கிறது.. விஜயவாடாவில்தான் இந்தத் தமிழ்ப் பாடசாலை இருக்கிறது.. அதுவும் ஆந்திராவிலேயே (சித்தூரைத் தவிர) ஒரே ஒரு தமிழ்ப் பாடசாலையாக்கும் என்ற பெருமை வேறு இந்தப் பள்ளிக்குண்டு.
ஆனால் இந்தப் பெருமை எல்லாம் இனி எத்தனை வருடங்கள், அல்லது மாதங்கள் என்று கேட்கும் நிலையில் திருவள்ளுவர் தமிழ்ப் பாடசாலை இன்று இருக்கிறது..
1957 இலோ அதற்கும் முன்போ, இந்தத் தமிழ்ப்பாடசாலை தர்ம மனம் கொண்ட இராமசாமி நாடார் (விஜயவாடா பருப்பு மில் முதலாளி) அவர்களால் இலவசமாக நிலமும் கட்டிடமும் வழங்கப்பட்டு அமர்க்களமாக தொடங்கப்பட்டது. இந்தத் தமிழ்ப் பள்ளிக்கு நடிகர் சிவாஜி கணேசன் அந்தக் காலத்தில் ரூ.10000 கொடையாக வழங்கினாராம்(!!). தமிழ்தான் ஆதாரப்பாடம். தமிழ் மூலமாகவே மற்ற பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஒரு சமயத்தில் அதாவது 1965,66 ஆம் வருட சமயத்தில் 800 மாணவர்கள் வரை இத் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்ததால், ஆசிரியர்கள் அதிகம் பேர் தேவைப்பட்டனர். அப்போது ஆந்திராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் கூட மிகவும் ஆதரவாக இருந்ததுடன், ஆசிரிய ஆசிரியைகளை அரசாங்க உத்தியோகஸ்தராக நல்ல சம்பளம் கொடுத்து ஏற்றுக் கொண்டது. இதனால் இருபதிலிருந்து முப்பது தமிழர் ஆந்திரா அரசின் உத்தியோகஸ்தராக ஆனார்கள். (அப்படி ஆனவர்களெல்லாம் இப்போது ஓய்வு பெற்று ஓய்வூதியம் கூட பெறுகிறார்கள்,) அத்தோடு மட்டுமல்லாமல் பள்ளியைக் கட்டிக் கொடுத்த தர்மவான் இந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் ஒரு சிறிய பிள்ளையார் கோவிலோடு வீடுகளையும் கட்டிக் கொடுத்தார் (தங்குவதற்கு) என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
பள்ளி இரண்டடுக்குப் பள்ளிதான். எதிரே உள்ள மைதான இடத்திலும் சிறார்கள் படிக்கும் சின்ன வகுப்புகள் கூட கட்டிக் கொடுத்தவர். திருவள்ளுவர் தமிழ்ப்பாடசாலையில் விளையாட மைதானம், நூலகம் என எல்லாவகையிலும் வசதிகளோடு பள்ளி இருந்ததால் ஊரில் இருந்த தமிழர்களில் அதிகம்பேர் தங்கள் பிள்ளைகளை இங்கு அனுப்பி பாடம் பயில வைத்தனர்.
1978-80 களில் நான் இங்கு வந்த சமயத்தில் மாணவர்கள் எண்ணிக்கை பழைய அளவுக்கு இல்லையென்றாலும் என்னுடைய நண்பர்களின் தம்பி தங்கைகள் அதிகம் பேர் படித்து வந்தார்கள். அவர்களைப் பற்றி வரும் சில குறைகளைக் கேட்க அந்த தம்பி தங்கையர் சார்பாக நானும் நண்பர்கள் கூட செல்வதுண்டு. அப்படித்தான் பழக்கம் அந்தப் பள்ளியோடு ஆரம்பித்தது. நம் செயல் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருத்தல் நம் சுபாவத்தில் இல்லை என்பதால் நல்லதோர் பள்ளியில் அதன் மேடைகளில் பாரதி விழா, பட்டி மன்றம் போன்றவை ஏற்பாடு செய்தால் நல்லதுதானே என்று ஆரம்பித்தோம். முதலில் பள்ளி நிருவாகத்தினர் (அந்த காலகட்டத்தில் இருந்தவர்கள்) எங்களோடு ஒத்துழைக்க மறுத்தனர். ஆனால் எங்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் முதன் முதலாக பாரதி விழாவை அரங்கேற்றினர் (1979). பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, மாறுவேஷப் போட்டி எனப் பலவகைகளில் போட்டிகளை உருவாக்கி மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துப் பொதுமக்களையும் (நாங்களே பொதுதானே) இந்த விழாவில் பங்கேற்கவைத்தோம். மிகப் பெரிய அளவில் விழா வெற்றியைத் தந்தது பள்ளியாளர்களுக்கே ஒரு ஆச்சரியத்தைத் தந்தது. மேலும் மூன்று நான்கு முறை (பட்டிமன்றங்கள், திருவள்ளுவர், பாரதி ஆண்டுவிழா) தமிழ் நிகழ்ச்சிகள் அங்கேயே செய்து காட்டினோம். மிக நல்ல முறையில் தமிழ்மக்கள் ஆர்வமாக வந்திருந்து ஒத்துழைப்புக் கொடுத்தனர். தமிழ்ப் பள்ளி நல்ல பெயரை அனைவரிடமும் பெற்றது. ஆனாலும் இளைஞர்களான எங்களால் அந்தப் பள்ளிப் பொறுப்பாளர்களிடம் நல்ல பெயர் வாங்கமுடியவில்லை. காரணமும் அவர்களேதான். இந்த மாதிரியான பொது நிகழ்ச்சிகளை மேலும் நடத்த மறுத்ததுதான்.
இப்படி ஒரு அருமையான மேடையையும் மாணவர்கள் அவர்தம் குடும்பங்கள் என்ற அளவில் ஏராளமான பார்வையாளர்களையும் கையிலேயே வைத்துக் கொண்டு, ஏன் இப்படி இத்தனை வருடம் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே.. தமிழை மிக நல்ல முறையில் வளர்ப்பதற்கு வெறும் பள்ளி மட்டுமே போதாது.. மாணவர்களையும் தமிழர் குடும்பத்தையும் வசப்படுத்தவேண்டும் என்றால் நல்ல நல்ல தமிழ் நிகழ்ச்சிகளையும் தரவேண்டும், உங்கள் வசம் தமிழர்களை ஈர்க்கவேண்டும், உச்சத்தில் ஒருகாலத்தில் 800 மாணவர்கள் வரை படித்த பள்ளியில் மாணவர்கள் அப்போது 400 அளவில் குறைந்துவிட்டதே.. உங்களிடம் மேலும் உழைப்பு வேண்டாமா.. என்று நாங்கள் போர்க் கொடி பிடித்ததுதான்.
ஆனால் அவர்கள் அந்த காலகட்டத்தில் எங்கள் வாதங்களை லட்சியம் செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். இன்னொரு காரணம் தமிழ்க்குடும்பங்கள் மெல்ல மெல்ல மாறி தமிழ்ப் போதனையிலிருந்து ஆங்கில போதனைக்கு செல்லத் தொடங்கியது. சமீபத்தில் இந்தத் தமிழ்ப் பள்ளியும் ஆங்கில போதனைக்கு தன்னை தயார்படுத்திகொண்டாலும், காலம் கடந்த செயலாக மாறிவிட்டது.
சரி.. இந்தப் பள்ளியின் தற்போதைய நிலை என்ன.. மிகவும் சிரம திசையில் உள்ளதாக அறிந்தபோது மனம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஆரம்பப் பள்ளியில் (ஒன்றிலிருந்து ஐந்து வரை) சுமார் 100 பேர்களும், உயர்நிலைப்பள்ளியில் 54 மாணவர்களுமே இருக்கின்றார்கள். இந்தப் பள்ளியை தற்போது நடத்திவரும் கமிட்டி அங்கத்தினர் சிலர் நமக்கு இன்னமும் நண்பர்கள்தான். அவர்களும் முதலில் தமிழ்க் குடும்பத்தினர் பரவலாக இருக்கும் இடத்திற்கு சென்று தமிழ்ப் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்குமாறு வற்புறுத்தத்தான் செய்கிறார்கள். குறைந்த செலவில் பஸ் கட்டணம் வசூல் செய்து சற்று தூரத்தில் உள்ள தமிழ்க் குடும்பத்தினரை வரச் சொல்லி வற்புறுத்தினர். ஆனாலும் ஆதியிலேயே அசட்டையாக இருந்துவிட்டதால், முயலாமை இப்போது இயலாமையாக மாறி விட்டது என்பதை எல்லோருக்குமே தெரியும் என்றாலும் வெளியே சொல்ல முடியவில்லை. அரசாங்கம் வேறு அடிக்கடி பயமுறுத்திவருகிறது. அங்கிருந்து வரும் ‘எய்டட் ஸ்கூல்’ அந்தஸ்து பரிபோகும் நிலையில் உள்ளதும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தாலும் என்ன செய்தால் இந்தப் பிரச்னை தீரும் என்று முழிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் வெளிப்படையான விமர்சனம்தான். இருந்தாலும் பள்ளி நடத்துவோர் மிகவும் தீவிரமாக செயல்படவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று உணர்த்தும் நல்ல நோக்கமே இப்படிப்பட்ட விமர்சனம்.
இதற்கு மாற்றுவழிகள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு தெலுங்கையும் பயிற்றுமொழியாகக் கொண்டுவந்தால் பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள எத்தனையோ ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும். ஆனால் நாளுக்கு நாள் தேயும் தமிழ்மொழி ஆதரவு மேலும் தேய்ந்தால் ‘மைனாரிடி’ அந்தஸ்து போய் அங்கு தெலுங்கு பள்ளி அந்தஸ்து கூடுதலாகிவிடலாம் என்ற பயம் உண்டோ என்னவோ. (இது தவிர்க்கப்படவேண்டிய அச்சம்) ஆரம்பப் பள்ளியின் சேர்ப்பை அதிகப்படுத்த கடுமையாக உழைக்கவேண்டும். ஆரம்பப்பள்ளியின் பிள்ளைகள் அதிகமாக அதிகமாக மேல்நிலையில் வருடா வருடம் கூடும். ஏறத்தாழ ஒரு கார்பொரேட் பள்ளி செயல்படுவதைப் போல (நிதி விஷயங்களைத் தவிர) செயல்பட்டு ஆரம்பப்பள்ளியை மிக நல்ல நிலையில் உயர்த்தவேண்டும். முக்கியமாக ஆசிரியப் பெருமக்கள் (தற்சமயம் இருப்பதே மிகக்குறைவுதான்) மிக நல்ல முறையில் கல்வியின் தரத்தை உயர்த்தப் பாடுபடவேண்டும். கல்வியின் தரம் உயர்ந்ததாக கருதப்படும் எந்தப் பள்ளியும் சோடை போனதில்லை என்ற வரலாற்று உண்மையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
முக்கியமான ஒன்று. அடிக்கடி கலைநிகழ்ச்சிகளும், தமிழ்நிகழ்ச்சிகளும் பள்ளியில் நடத்தவேண்டும். நிகழ்ச்சிகளுக்கு பல தமிழ்க் குடும்பங்களையும் அழைக்கவேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு பள்ளி நிர்வாகம் செயல்படவேண்டும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிக மிகத் தேவையான ஒன்று. பள்ளியின் புகழை பலவிதங்களில் பரப்பும் வகையில் நிர்வாகமும் ஆசிரியர்களும் முயன்றால் குறைந்தபட்சம் நான் 1978-80 இல் பார்த்த அந்தப் பழைய பள்ளியின் களையாவது வர வாய்ப்புண்டு.
விஜயவாடாவில் ஒரு தமிழ்ப்பள்ளி எப்போதோ இருந்ததாக ஞாபகம் என்று மற்றவர் சொல்வதைக் காட்டிலும், விஜயவாடா தமிழ்ப் பள்ளியா.. மிக நல்ல, மிகத் தரமான முறையில் செயல்படுகிறதே.. என்று மிகப் பெருமையாக சொல்லப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன். நான் மட்டுமல்ல எல்லோருமே விரும்புவார்கள்..
திவாகர்
Labels: Vijayawada Tamil School