Saturday, December 04, 2010

உறவுகள் எத்தனையோ எனக்குண்டு
பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்
அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்
அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்
மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான
மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்
அவனோர் அம்மான் சிறிசானாலும்
இவனென் மருமான் புள்ளிமான்போல
நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்
தேனொழுக அத்தான் எனவழைப்பாள்
சும்மாவே இருக்கும் இவரெனக்கு
அம்மாஞ்சி என்றே பெயருண்டு
பெரியப்பா பெரியம்மா பெரியக்கா
பெரியண்ணா பெரியத்தை என்றே
பெருங்கூட்டப் பெரிசுகள் எனக்குண்டு
அன்பான அம்மாவழி சித்திகளும்
பண்பான அப்பாவழி சித்தப்பன்களும்
இவரல்லாமல் சித்தியார் பெற்றபெண்ணும்
இவளோடு உதித்த தம்பிமாருமுண்டு
உதிரத்தால் வந்தசொந்தங்கள் இவரென்றால்
மதிகொண்ட மனைவியால் எனைச்சேர்ந்த
பந்தங்கள் பலவகையாய் பலபேருண்டு
சொந்தங்கள் எங்கெங்கும் கணக்கிலாமல்
எத்தனையோ இருந்தாலுமென் நாவினிலே
அத்தனை பெயர்களையும் ஒருபோதும்
மறவாமல் பெயர்சொல்லி அழைக்காமல்
உறவின் பெயர் சொல்லியழைப்பேனடா

"இத்தனை உறவுகளை" என்மகனே
அத்தனையும் என்பாட்டன் என்னப்பனுக்கு
சொன்னதை மறக்காமல் எனக்கும்தான்
என்னப்பன் அப்படியே சொன்னாலும்
இத்தனை உறவுகள் என்னப்பனுக்கில்லையடா
அத்தனை சொந்தங்கள் இல்லைதான்
ஏதோ பேருக்குசில பேர்களென்றே
தோதான சிலசொந்தம் என்னப்பன்
எனக்களித்த அன்பான கூட்டம்போல்
என்மகன் உனக்காக என்மூலம்
வரவில்லை என்றாலும் மகனே
வரம்போல அம்மாவும் அப்பாவும்
யாமிருக்க பாட்டனும் பாட்டியும்
யாமுனக்கு தந்தோம் ஆனாலும்
வரும்காலம் உறவுகள் என்றேதுமில்லையென
இருக்கின்ற விஞ்ஞானம் முழங்குதடா
பிறக்கும் குழந்தையின் சுவடுகளேயில்லாமல்
கருப்பைக்குள் வைத்திடாமல் காப்பாற்ற
சோதனைக்குழாயாம் பரிணாமப் பிறப்புகளாம்
வேதனையாய் இருக்குதடா கேட்பதற்கு
தாயும் தந்தையும் பேருக்கென உண்டாம்
சேயொன்று பெற்றிடுவாராம் சிரமமில்லாமலே
நான் இன்றுனக்கு ஒன்றுரைப்பேன்கேள்
நானுனக்கு என்பாட்டன் எடுத்துரைத்த
உறவுகள் பெயர்யாவும் சீரியகல்கொண்டு
மறக்காமல் உளியெடுத்து செதுக்கி
இவையாவும் வருங்காலம் தெரியவே
சுவையாக எழுதிவை என் மகனே!
உறவுகளெல்லாம் காலத்தின் கொடுமைக்கு
சிறகொடிந்த பறவையாய் சீரழிந்தகதையை
நாளைய மனிதனெனும் ஓர்பிறவி
மூளைகொண்டு படித்தாலும் படிக்கலாம்
அடடா இப்படியெல்லாம் உறவுப்பெயர்கள்
கூட்டாக ஒருகாலத்தில் இருந்தனவாம்
ஒன்றேயொன்றான எமக்கிது புதுசெய்தி
என்றெலாம் பலசொல்லி வியக்கலாம்.