Sunday, January 17, 2010

மகேந்திர 'சுதேசி அய்யர்'நான் கொஞ்சம் பொறுப்புள்ளவன் என்று மனதில் நினைப்பு உண்டு. அதுவும் ஒரு சங்கம் மூலமாக சில பல செயல்கள் செய்யும்போது இந்த ‘பொறுப்புள்ளவன்’ என்பது மட்டும் எப்படியோ என் நினைவில் கொஞ்சம் அதிகமாகவே தங்கிவிட்டு தொல்லைகள் செய்யும். அதைப் போலத்தான் ஒய்.ஜி. மகேந்திரா அவர்களின் வியட்நாம் வீடும், அத்துடன் 'சுதேசி அய்யர்’ என்ற நாடகங்கள் இரண்டும் விசாகப்பட்டினத்தில் போடும்போதும் அவை இரண்டுமே ஒரே வகைப்பட்ட ‘நெய்’யில் செய்யப்பட்ட பதார்த்தமாக இருப்பதாக (பெயரைப் பார்த்தவுடன்) என் ‘பொறுப்புணர்வு’ எனக்குள் சொல்லியதால் ஐயா, சாமி!, வியட்நாம் வீடு போடுங்கள், வியட்நாம் வீடு பிரெஸ்டிஜ் பத்மநாப அய்யர் கதை எல்லோரும் அறிந்ததே.. ரசித்துப் பார்ப்பார்கள்.. அதற்காக அதே ‘டைப்’ மாதிரி ‘பிராண்ட்’ தெரிகின்ற ‘சுதேசி அய்யர்’ பதிலாக வேறு ஏதாவது நாடகம் போடுங்கள் என்று சொல்லலாமோ என்று தீவிரமாக யோசித்தவன் கூட.. (எவ்வளவு சமூகப் பொறுப்புணர்ச்சி பார்த்தீர்களா!).

நல்ல காலம் யோசித்ததோடு சரி.. அவரிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், மகேந்திரா அவருக்கென்ன, அவர் கையில் உள்ள பல நாடகங்களில் ஏதாவது ஒன்றைப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார். ஆனால் ஒரு அற்புதமான நாடகத்தைக் காணும் வாய்ப்பை பலருக்கு கொடுக்காமல் நான் நழுவவிட்ட வாய்ப்பை நினைத்து அவர் வருந்தியிருக்கலாம்.. (எனக்கு இது அற்புதம் என்பது நாடகம் பார்த்தபிறகுதானே தெரிந்தது!!)

துணுக்குத் தோரணங்கள் மூலம் தமிழர்களை ஒரு இரண்டுமணிநேரம் கவலையை மறக்கடித்து சிரிக்கவைத்து விட்டு, அவர்கள் இருக்கையை விட்டு எழுந்த அடுத்த நிமிஷத்தில் எதற்காக, எந்த ஜோக்குக்காக சிரித்தோம் என்ற நினைவே இல்லாமல் அடுத்து வரும் கவலைகளிலும் நிகழ்வுகளிலும் மனத்தைச் செலுத்த வைக்கும் நாடகங்கள்தான் இப்போது அதிகம்.. ஆனால் நாடகம் முழுதும் சிரித்துக் கொண்டே இருந்தாலும் சிந்தனையுள் ஆழ்த்தி, அடடே.. எத்தனை நல்லவிஷயங்களை நாம் மறந்து வருகிறோம், எத்தனை பண்பாட்டுச் செல்வமிக்க நாட்டில் பிறந்திருக்கிறோம், இந்த சுதேசி அய்யரைப் போல நாமும் செயல்பட்டால் என்ன, அட.. செயல்படாவிட்டாலும் பரவாயில்லை.. முயற்சித்தாவது பார்க்கலாமே.. என்ற எண்ணம் நாடகம் பார்ப்பவர் எல்லோரிடத்தும் தோன்றுகிறதே.. இங்கேதான் ஒய். ஜி. மகேந்திராவும் நாடக ஆசிரியர் சித்ராலயா ஸ்ரீராமும் இந்த ‘நாடகம்’ எனும் ஆயுதத்தை மிகச் சரியாக மக்களின் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். மிகப் பெரிய வெற்றியும் கண்டிருக்கிறார்கள்! இருவருக்கும் ஒரு ஜே!

இப்படித்தான் அந்த இந்திக்காரர் ராஜு ஹிரானி தன் முன்னாபாய் படங்கள் மூலம் செய்தார். நம் தமிழிலும் சினிமா மூலம் இப்படியெல்லாம் செய்வார்களா என ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இப்படிப் பட்ட நாடகம் மூலம் மகேந்திரா அதை செய்து காட்டியிருப்பதே ஒரு மாபெரும் சாதனைதான்.

சுதேசி அய்யர் கதை ரொம்ப சிம்பிள்! பாரத பாரம்பரியத்தில் அதி தீவிர நம்பிக்கை கொண்டவரும், அதை தன் குடும்பத்தவர் எப்பாடுபட்டாவது பாதுகாக்கவேண்டுமே என்ற எண்ணமும், கவலையும் கொண்ட சுதேசி அய்யர் எனும் ‘கிழத்தின்’ ‘டெய்லி டார்ச்சர்’ தாங்கமுடியாமல் அந்த அய்யரின் ‘அதி நவ நாகரீக குடும்பம்’, (அவர் மாடர்ன் டைப் இண்டெபெண்டண்ட் திங்கிங் மனைவி, மல்டி-கல்சர், அட்வான்ஸ்ட் மகள், சதா ஸெல்ஃபோன், இண்டர்னெட், எஃப் டி.வி.. கேர்ள்ஸ், கிரிக்கெட் என அலையும் இரண்டு மகன்கள்..) ஒரு திட்டம் போடுகிறார்கள். கிழத்தைக் கொண்டுபோய் ‘முதியோர் காப்பகத்தில்’ சேர்ப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அதிர்ச்சி அடைகிறார் அவர். பதில் திட்டமாக விஞ்ஞானி நண்பரின் உதவியோடு, குடும்பத்தினருக்கு மாயாஜாலம் போல ஒரு அறையில் இருந்து ‘டைம் மெஷின்’ மூலம் 1945 ஆம் ஆண்டுகாலத்திய வாழ்க்கைச் சூழல் உள்ள மெட்ராஸ் மாநகரத்துக்கு, மாற்றிவிடுகிறார். (ஆகா!.. மாடர்ன் ட்ரெண்ட் யுகத்துக்குத் தக்கவாறு ஏகப்பட்ட இங்கிலீஷ் வார்த்தைகளையும் சரியான விகிதத்தில் கலந்துவிட்டேன்!!)

இனி சிரிப்பும், அந்தக் கால சிறப்பும் போட்டி போட்டுக் கொண்டு நாடத்தில் நம்மை லயிக்க வைத்து விடுகிறது. 60-65 வருடங்களுக்கு முன் உள்ள மனித நேயம், உறவின் சிறப்பு, உற்சாகமான வாழ்க்கை, சுதந்திரப்போராட்டத்தின் உணர்வு, பண்பாட்டின் மீதுள்ள அக்கறை என பல கோணங்களில் வாழ்க்கைக் காண்பிக்கப்படுகின்றது. சீரியல் பார்க்காமல் எப்படி வாழ்க்கைப் பொழுது போகும் என்று சாடுகிறாள் மனைவி.. ‘ஐய்யோ, டி.வி.. வருவதற்கே இன்னும் முப்பது ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமடி’ என்கிறார் நக்கலோடு அய்யர்.. ‘அப்பா! பாய் ஃப்ரெண்ட்ஸ் இல்லாமல் போர்’ப்பா..’ என்கிற பெண்ணுக்கு அங்கு குடுமிகள் கொண்ட இளைஞர்களைப் பார்த்து ஒழுக்கம் கற்றுக் கொள் என்று புத்திமதி சொல்கிறார்.. ‘ஸெல் கையிலோ காதிலோ இல்லாமல் எப்படி’ என்று கேட்கும் மகன்களுக்கு ‘ஸெல் இன்னமும் எங்குமே வரவே இல்லயடா பிள்ளைகளே!’ என்று கையை விரிக்கிறார்.. ‘எஃப் டி.விக்குப் பதிலாக தியாகராஜ பாகவதர் பாட்டை ஆகாசவாணி ரேடியோவில் கேளு’ என்று இலவச அறிவுரையும் கொடுக்கிறார் சுதேசி. எரிச்சலாக அவரைப் பார்த்தவர்களுக்கு, ‘வேறு வழி இல்லை.. அட்ஜஸ்ட் செய்து கொண்டு ஒரு முப்பது நாட்கள் காத்திருந்தீர்களேயானால் விஞ்ஞானி திரும்பவும் பழைய ‘புதிய’ யுகத்துக்கே கொண்டுவிடுவார்.. அதுவரை பொறுமை காக்கவும் என்று அறிவுரை வேறு.. ‘கிழவர்கள் காப்பகம்’ செல்லவேண்டிய கிழம் நன்றாக இவர்களைப் பழிவாங்கிவிட்டதாக மனதுள் கறுவினாலும் இவர்களுக்கு வேறுவழியில்லைதான்.
ஆனாலும் இந்த முப்பது நாட்களில் இவர்கள் பல நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது நாடகம் பார்ப்பவர்களுக்கும் ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறார் சுதேசி அய்யர் என்கிற ஒய்.ஜி. .மகேந்திரா. கடைசியில் காந்தியையே காட்சிக்குள் கொண்டுவந்து கலக்கிவிடுகிறார்.

மனைவி மகளிடம்: உனக்குத் தெரியுமா,, நாளைக்கு மிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம்ம வீட்டுக்கே வராராம்..

ஒரு மகன்: காந்தி வந்தா தனியா வரக்கூடாதா.. ஏன் இந்த மோஹன் தாஸையும், கரம்சந்தையும் கூடவே கூட்டிண்டு வராரோ..

அய்யர்: அடேய்.. ஞான சூன்யம்.. காந்தியோட முழுப்பேர் கூட தெரியாம வளர்ந்திருக்கியேடா..

மகன் : அது சரி.. காந்தி எப்படி வருவார்..

அய்யர்: ஆமாம்.. முன்னாடி முப்பது டயோட்டா குவாலிஸ், பின்னாடி முப்பது கார், கூடவே டஜன் கணக்குல ஏகே 47 கறுப்பு பூனைப்படை இவங்கள்லாம் சூழ வருவாரு.. முண்டம்.. காந்தி நடையா நடந்துதான் வருவாரு..’

மகேந்திரா’ வின் திடீர் காமெடி வெடிகளுக்குக் குறைவே கிடையாது. காந்தி வந்ததும் உட்கார்ந்துகொண்டு தமிழில் பேச ஆரம்பித்ததும் எல்லோரும் ஆச்சரியப்படவே, காந்தி தான் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது தமிழ் பயன்றதாகக் கூறுகிறார்.

அய்யர் (மகேந்திரா): அப்படின்னா இந்தத் தமிழ் நடிகைகளையெல்லாம் ஒரு கப்பல்ல போட்டு சௌத் ஆஃபிரிக்கா அனுப்பிடணும்பா..

அய்யரின் மச்சினன்: ஒருவேளை பாதிக்கடலில் கப்பல் கவுந்துடுச்சுன்னா.. அவங்க எப்படித் தப்பிப்பாங்க..

அய்யர்: ‘அது இன்னும் பரவாயில்லேடா.. தமிழ்நாடு தப்பிச்சுடுமே..’

ஒய்.ஜி. மகேந்திரா ஏற்கனவே ‘பாரத் கலாசார்’ என்ற அமைப்பின் மூலம் கலைச் சேவையும் செய்து வருபவர். ஆனால் இந்த நாடகம் அவருக்கு, அவருடைய ஐம்பதாண்டு காலக் கலைச் சேவைக்கு மிகப் பெரிய மைல்கல். பாரத கலாசாரத்தின் சிறப்பை வெகு அழகாக ஒரு நாடகத்தின் மூலம் வேறு யார்தான் கொண்டு வரமுடியும்..

மற்ற தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு என் பரிந்துரை: ஒய்.ஜி.எம் நாடகம் போடும்போது ‘சுதேசி அய்யரை’ கட்டாயம் போடவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள்.. அது நம் வருங்காலச் செல்வங்களுக்குச் செய்யும் சேவை என நினைத்துக் கொள்ளுங்கள்! அய்யர்.. அய்யங்கார் என்ற யோசனைகளோ., ‘பிராண்டாச்சே’ என்ற தயக்கமோ வேண்டவே வேண்டாம்! ஒருவேளை என்னைப் போல ஒரு ‘பொறுப்புணர்ச்சி’ கொஞ்சம் ஸ்ட்ராங்காக தோன்றினாலும் என்னைப் போலவே சமயம் பார்த்து அந்த உணர்ச்சியைத் தள்ளிவிட்டு மறந்தும்விடவும்.!!

திவாகர்

Labels: