Saturday, October 04, 2008

நான் அனுப்புவது கடிதம் - நண்பனுடையது

நான் எழுதுவது கடிதம் அல்ல http://vamsadhara.blogspot.com/2008/06/blog-post_04.html என்று சென்ற முறை ஒரு மடல் இந்த வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். அதனைப் படித்த என் நண்பன் தேவா (விஜயவாடா) ‘ஆஹா.. இப்படியெல்லாமா கடிதம் பற்றி கண்டபடி எழுதுவது.. யாரும் அப்படி கடிதம் எழுதாவிட்டாலும் நான் எழுதுகிறேன் பார்’ என்ற ஆவேசத்துடன் எனக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் போட்டான். கூடை கூடையாக அன்பு மற்றும் அறிவுரைகளை முன்வைத்து தாராளமாக எழுதப்பட்ட எட்டு பக்கங்கள் கொண்ட கடிதம். என்றாலும் நண்பனின் கடிதம் ஆயிற்றே என ஆர அமர படித்துவிட்டு அவனுக்கு நானும் சளைத்தவன் அல்ல என்ற வகையில் (ஏதோ எழுத வேண்டுமே என்று சாதாரணமான நன்றியையும், அவன் பற்றிய விஷயங்களையும் விசாரித்து) ஒரு இரண்டே பக்க பதிலும் எழுதி அவன் செய்தது போலவே தபால் மூலமாக அனுப்பி வைத்தேன்.

(பார்த்தீர்களா.. காலம் இருக்கும் இருப்பை? தபாலில் கடிதம் எழுதிப் போடுவது இன்னமும் தொடர்கிறது!!!).

அவன் என் பதிலைப் படித்துவிட்டு சும்மா இருந்திருக்கவேண்டும். அப்படித்தான் இருப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்பதைப் போல சமீபத்தில் எனக்கு இன்னொரு கடிதம் எழுதி அதையும் தபால் மூலம் அனுப்பிவைத்தான் (இந்த வகையிலாவது அஞ்சல் அலுவகத்திற்கு பிஸினஸ் கொடுத்தால் அது ஒரு தேச சேவைதானே)

அவன் எனக்கு அனுப்பி வைத்த அந்த இன்னொரு கடிதத்தை அவன் அனுமதி இல்லாமலேயே இங்கு பதிப்பித்திருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------

அன்பு நண்பா! வணக்கம். நான் தேவா.
உன் கடிதம் சற்று ஏமாற்றமே.. எப்படி இருந்தது என்றால் “பொது ஜாதகப்பலன் படிப்பது போல இருந்தது.. ரசம் போன பழைய கண்ணாடி போல இருந்தது.. முகவரி இல்லாத கடிதம், க்ளைமாக்ஸ் இல்லாத சினிமா, இன்னும் உதாரணங்கள் கைவசம் உள்ளது, இப்போது வேண்டாம்.

“மான்குட்டி” போல துள்ளி எழுமே உன் வார்த்தைகள்... சொறி நாய் குட்டி போல சொறிந்து இருந்தது. எம்டன் நாவல் எழுதும் கைகளா..? நம்ப முடியவில்லை.. வில்லை.. வில்லை.. (வால்யூம் போகப்போக ஸ்லோ).

நண்பனே.. நான் சொல்லிய பொருள் உனக்குப் புரிந்ததா.. மனதில் ஆழமாகப் பதிந்ததா? என்று எனக்குப் புலப்படவில்லை. அதாவது - மனித இதயங்களிலிருந்து முளைத்து அன்பு வளர வேண்டும்.

‘நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊரு போய் - எல்லை வாசல் கண்டபின், இனி பிறப்பதில்லையே..’

ஊருக்கு உபதேசம் இல்லை நண்பா.. உண்மையின் பிம்பங்களை நாம் வணங்குவதில் தவறேதும் இல்லை என்பதுதான் என் சிந்தனை. அந்த ஆசையைத்தான் முந்தைய கடிதம் மூலம் வெளிப்படுத்தினேன்.. நண்பர்களே! நீங்களும் அதையே சிந்திக்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. புதுவையில் சேவை மனம் கொண்ட சில நண்பர்கள் எப்படியெல்லாம் சேவை செய்து வாழ்கிறார்கள் என்பதைக் கண்டபோது நான் இன்னும் பின்னால்தான் இருக்கிறேன் என்பது புரிந்தது.

சேவையில் கிடைக்கும் ஆனந்தமே ஒரு சுவைதானே.. எனக்கு மட்டும் இல்லை. உனக்கும் இருக்கும். உணர்ந்தும் இருக்கிறாய் என்பது தெரியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் ஆனந்த உணர்வுகள், சிலர் அதை அனுபவிப்பார்கள் - சிலர் அதை மாற்றத்தின் மறுபக்கமாக மறந்திருப்பர்.

நண்பா! புதுவைக்கு சமீபத்தில் போனபோது திருமூலர் பாட்டுதான் ஞாபகம் வந்தது. ‘ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு, காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு, நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தனரே’.

சுவைக்குச் சர்க்கரை தேடுவோர் மத்தியில் தண்ணீர் குடித்தபின் இனிக்கும் நெல்லிக் கனியை நான் விரும்புபவன். இன்று பலர் பழைய சுவடுகளை மறந்து, ஈகோ’வை உள் வாங்கி, தொலைத்து விட்ட உறவுகளை தேவைப் படும்போது தேடும்போது எனக்கு சிரிப்பு வருகிறது. இவர்கள் தேடும்போது அவை தொலைந்தே போய்விட்டனர் என்பதை உணரமறுக்கின்றனர். அதோடு இல்லாமல் தன் குழந்தையின் உலகைத் திறக்கும் சாவியையும் தொலைத்து விட்டு நிற்கின்றனர். அதனால்தான் இன்று பல மாடிக்கட்டடங்களின் உச்சி மாடியில் ‘நிலா’ சற்று கிட்டே இருக்கிறது. சோறும் இருக்கின்றது. ஆனால் ஊட்டத்தான் தாய் இல்லை.

இன்று எல்லோருடைய வாழ்க்கையும் எதிர்பார்ப்புடன் ‘கணக்கு’ போட்டு நடக்கிறது. மாப்பிள்ளைக்கு வரதட்சிணை மேல் கணக்கு, டாக்டருக்கு நோயாளியில் ‘பில்’லின் மேல் கணக்கு, பட்டுப்புடவைகளும் பளபளக்கும் நகைகளும் உலாவும் சபையில் நகையற்ற கழுத்தைக் கண்டால் ஏழ்மையின் கணக்கு.. இன்று கல்யாணத்தில் கலந்துகொள்வதைக் கூட ‘நகைகள்தான்’ தீர்மானிக்கின்றன. நண்பா.. எனக்கு அவ்வளவாகக் கணக்கு வராது. ஏன்.. ‘என் பள்ளிப் பருவத்தில் ‘கணக்கு’ப் புத்தகத்தில் ஒளித்துவைத்த மயிலிறகு கூட குட்டி போடாமல் முட்டைதான் போட்டது.

புதுவையில் நான் சிறுவயதில் இறக்கிவைத்த ‘காகித டைடானிக் காதல் கப்பல்’ மழையில் மூழ்கிப் போன இடம் பார்த்தேன். சிறுவயதின் நினைவுச் சின்னங்கள் சிதிலமடைந்து காணாமல் போய்விட்டதையும் பார்த்தேன். அந்த நாளில் நான் மிகவும் விரும்பிய ‘எது எடுத்தாலும் இரண்டு ரூபாய் பிளாட்ஃபாரப் புத்தகக்கடை இன்று இருபது ரூபாய்.லேட் ஆன புத்தகத்தை லேடஸ்ட் ஆகப் படிக்கும் வறுமைகள் உலாவும் அற்புத இடம். அதுவும் இல்லையேல் ‘அரசு நூலகம்’. பல மேதைகளை உருவாக்கிய இடம். இந்த புத்தகங்கள்தான் ஒரு புது உலகத்தைத் திறந்து காட்டிய ஞானாசிரியர்கள்.

பெரிய பெரிய புத்தகங்களை வைத்து இருப்போர் எல்லாரும் புண்ணியவான்கள்தான். என் பள்ளி ஆசிரியரின் வீட்டில்தான் இந்தப் பொன்மொழியின் பொருள் புரிந்தது. அந்தப் புத்தகங்கள்தான் எத்தனை பயன்களைத் தந்தது அவருக்கு? விருந்தினர் வந்தால் அந்தப் புத்தகங்களே தலையணை, மற்றும் அவர் மனைவிக்கோ உருட்டிய பச்சைச் சப்பாத்திகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க ஒவ்வொரு பக்கத்திலும் வைக்க உதவுகிறது

நண்பா! என்னைப் பொருத்தவரை புத்தகங்களை சரியாகப் படிப்பது கரையான்கள்தான். சில கடித்து குதறுகிறது.. சில கரைத்துக் குடிக்கின்றன.

நான் படிக்கும்பொதெல்லாம் சில வரிகளைக் கோடிடுவேன். அது எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் கைகுலுக்கல்.

திவா! குற்ற உணர்ச்சியின் படிக்கட்டில் கால்வைக்காமல், இன்றும் ஒரு தொழிலை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் அது புத்தகம் ‘சுடுவது’தான் (சுடுவது என்பது ஒருமுறை என்னிடம் வந்தால் அந்தப் புத்தகம் இரவலாகவே இருந்தாலும் திருப்பித் தரப் படமாட்டாது என்று பொருள் கொள்ளவும்) மாற்றான் வீட்டு அலமாரிப் புத்தகத்திற்கும் வாசம் சற்று அதிகமாக இருப்பதுவும் ஒரு காரணம். என் வீட்டு அலமாரியில் சில சுடாத புத்தகங்களும் உண்டு. அவைகளில் உன்னுடையதும் அடங்கும்.

நண்பா! இன்னமும் உன் புத்தகங்களின் ஏடுகளை மூளையில் ‘டௌன்லோட்’ செய்து கொண்டுதான் இருக்கிறேன். உன் ‘எம்டன்’ எப்போது வாசகர்களைத் தாக்கும். உன் வீட்டிற்கு வந்தபோது கொஞ்சம் நான் படித்தேன் என்பதால் ஏக்கம். உண்மையில் மிக அற்புதமான ஸ்டோரி நெட்டிங்க் இருந்தது. நான் மேல் கரும்பை மட்டும்தானே ரசித்தேன்.. அடிக்கரும்பின் ருசியைப் பற்றி சொல்ல வேண்டுமா?

உன் வீட்டில் மனைவி மக்களைக் கேட்டதாகச் சொல். விருந்தோம்பல், இன்று சரியாக உணர்ந்து உண்மையாக பகிர்ந்தளித்த அந்த அன்பு உள்ளத்திற்கு உளம் கனிந்த வாழ்த்துகள். இது ‘முகஸ்துதி’ இல்லை. உங்கள் முகம் மலர்ந்து அளித்ததற்கு என் அகம் மகிழ்ந்த பாராட்டு மலர்கள்.

நீயும் எழுது.. கம்ப்யூட்டர் வரையாதே!!

இதோ ஒரு சிறு தோஷ மலர்ச் செண்டு.

ஜலதோஷம் உண்டு
செவ்வாய்தோஷம் உண்டா?
அவளுக்கு அதுவாம் அதனால்
திருமணம் தடையாம்..
என்ன உலகமடா சாமியோவ்..
எங்கும் மடமையடா சாமி..
தோஷம் இல்லை சாமி.. மனிதன் போடும்
வேஷமடா சாமி.. வேஷம்..

அன்பு
தேவா.
--------------------------------------------------------------------

அப்பாடி.. முடித்து விட்டான். ஆனாலும் அவன் சிந்தனை எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்.. தேவா.. அவன் கவிஞன் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். அவன் எதார்த்தவாதி என்று கூட ஒரு எண்ணம் கூட உண்டு. அவைகளையும் மீறிய சிந்தனையாளன்.

அதுசரி.. நான் கடிதம் எழுதுவது பற்றி முந்தைய பதிவில் சொல்லியது உண்மைதானே.. பேனாவில் மை போட்டு கையால் எழுதும்போதுதான் இதயத்தில் இருக்கும் பளுவையும் நம்மால் இறக்கி வைக்கமுடியும்.. அவனால் எளிதாக இறக்கிவைக்க முடிகிறது.

திவாகர்

Labels: