திருமலைத் திருடன் நாவல் பற்றி டாக்டர் நா.கண்ணன் தன் எண்ணங்களை மின் தமிழ் குழுமத்தில் பதிவு செய்தது - அவர் அனுமதி பெற்று இங்கு பதிக்கப்பட்டுள்ளதுநண்பர்களே:மின்தமிழ் மூலம் கிடைத்த நண்பர்களில் விசாகபட்டணம் திவாகர் ஒருவர். அவர்
ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர். அவர் மூன்று
சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். என் வைணவ அபிமானம் கருதி எனக்கு
சமீபத்தில் அவர் எழுதிய "திருமலைத் திருடன்" என்ற நாவலை வாசிக்க அனுப்பி
வைத்தார். மேலும், அந்த நாவல் என்னுள் எழுப்பும் எண்ணங்களை
இம்மின்மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டியிருந்தார். தேன்
குடிக்கக் கூலியா?
ஏனெனில் என்னை
இவர் தீர்க்கமாக நாவலை விமர்சிக்கும் படி சொல்லியுள்ளார். விமர்சனம்
என்பது ஒன்று, நட்பு என்பது வேறொன்று. எனவே ஒரு சமகால இலக்கியவாதியாக,
ஆழ்வார்க்கு அடியேனாக இந்நாவலை வாசித்து முடித்த போது நிற்கும் என்
எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நடுவு நிலமை என்பது எங்கும்
கிடையாது. உலகில் எல்லாமே சார்புடையவையே. எனவே இவ்விமர்சனமும்
சார்புடையதே.நாவலாசிரியருக்கு கதை சொல்லத் தெரியவேண்டும். அதுவும் சமகாலக்
கதாசிரியர்களுக்கு, சரித்திரக் கதாசிரியர்களுக்கு இது அவசியம். ஏனெனில்,
அக்காலக் கதை சொன்ன வியாசனுக்கும், நமக்கும் அதிக வித்தியாசமுள்ளது.
மகாபாரதத்தில் கதை அதிகம். அதை விஞ்சும் ஒரு காவியம் இன்னும் மண்ணில்
தோன்றவில்லை. அவன் எழுதிய நாவலில் அவனும் ஒரு பாத்திரமே. ஆனால்,
திருமலைத் திருடன் நடந்த காலத்தில் வாழவில்லை திவாகர். அவர் என்ன
நடந்திருக்கும் என யூகித்து ஒரு கதை சொல்கிறார். எனவே உள்ளதை உள்ளபடி
சொல்லும் மகாபாரத உத்தி இங்கு செல்லுபடியாகாது. ஆனாலும், தன் கற்பனைத்
திறனை ஊட்டி ஒரு நிகழ்வை, தான் கேட்டறிந்ததை, தான் உண்மை என்று நம்பும்
ஆவணங்களை மனதில் வைத்து ஒரு முழு நீள நாவல் எழுதியிருக்கிறார்.
ஒரே
வாசிப்பில் முடித்து விடக்கூடிய நடை. விறு,விறுப்பான நடை. ஒவ்வொரு
அத்தியாயத்திலும் வாசகனை ஈர்த்து வைக்கும் கொக்கியொன்று முடிவில்.
இவருக்கு நன்றாகவே கதை சொல்லத் தெரிகிறது!ஆண்கள் எழுதும் கதையில், ஆண்களை ஈர்த்து நிற்க வைப்பது பெண்கள். இதை
நன்கு அறிந்த நாவலாசிரியர் ஒன்றுக்கு இரண்டு என்று இரண்டு கதாநாயகிகளை
நடமாட விடுகிறார். தமிழ் சினிமாக் கதாநாயகிகளில் பெரும்பாலோர் வட
நாட்டுக்காரர்களே. காரணம் அவர்களது பளிங்கு போன்ற வெள்ளைத் தோல், கட்டான
உடல். அதே பாணியில் இக்கதையிலும் முதலில் அறிமுகமாகும் கதாநாயகி கங்கை
அழகி. வில், வாள் பயிற்சியில் தேர்ந்த பெண். இரண்டாவது கதாநாயகி தமிழ்ப்
பெண். தமிழ் பெண் என்பவள் பண்பானவள். அடக்கமானவள். அறிவு பூர்வமானவள்.
பக்தியுடையவள். இதுதானே நாம் விரும்புவது? அதையும் நன்கு அறிந்த ஆசிரியர்
அப்படியே இரண்டாவது கதாநாயகியை உருவாக்கியிருக்கிறார். இரண்டு பேரும்
அறிமுகமாகும் காட்சியிலேயே இன்பக் கிளுகிளுப்பை தாராளமாக வைக்கிறார்
ஆசிரியர். குதிரை சவாரி. ஒட்டி, உறவாடி, மேலும், கீழும் அசையும் ஒரு
பயணம். ஒன்றில் கதாநாயகி முன்னால், இரண்டாவதில் பின்னால்.
அடடா! இது
போதாதோ நம்மை நாவலுடன் ஒட்ட வைக்க :-)கதை சோழர் காலத்துக்கதை. இராஜ இராஜ சோழன், இராஜேந்திரன் போன்றோர் ஆட்சி
செய்து முடிந்துவிட்ட காலக் கட்டம். இராமானுசர் எனும் துறவி இன்னும்
உலாவிக் கொண்டு இருக்கும் காலம். (அவர் 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர். பல
சோழ ஆட்சிகளைக் கண்டவர்). பௌத்தமும், சமணமும் வலுவிழந்து சைவமும்,
வைணவமும் கோலோட்சும் காலம். சோழர்கள் இறையாண்மை உத்தியாக
சாளுக்கியர்களுடன் திருமண உறவு கொண்ட காலம். சாளுக்கிய குலகுரு
எப்படியும் சோழ வள நாட்டை ஆக்கிரமித்துவிட வேண்டுமென ஆசைப்படும் காலம்.
இது பின்புலம்.
ஆனால், ஆசிரியரைக் கவர்ந்திருப்பது அக்காலக்கட்டத்தின் சமயச் சூழல்.
வடவேங்கடம் அப்போதே மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. அது
தெலுங்கர்களுக்கும், கன்னர்களுக்கும், தமிழர்களுக்கும் ஈர்ப்பிடமாக
இருந்திருக்கிறது. அக்கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வம் யார்? பாலாஜி
என்றால் அது தேவியா? ஸ்ரீநிவாசன் என்றால் பெருமாளா? இல்லை வேங்கடத்து
ஈசன் என்றால் சிவனா? இல்லை, சமணர்கள் விட்டுச் சென்ற தீர்த்தங்கரின்
கோயிலா? இது அன்று தொட்டு இன்றுவரை உலாவிவரும் கேள்விகள். இதில் "அவர்"
சிவனா இல்லை திருமாலா? என்ற கேள்வியை மட்டும் கேட்டு, அக்காலத்தில்
இருந்து வந்த சைவ-வைணவச் சமயச் சூழலை அனுசரித்து ஒரு நாவலை
உருவாக்கியிருக்கிறார்.
இது மிகவும் ஆழமான கேள்வி. தத்துவ விசாரம் செய்ய வைக்கும் கேள்வி. ஆனால்,
ஆசிரியர் இந்நாவலை ஒரு ஜனரஞ்சக அளவிலேயே எழுதியிருக்கிறார். காரணம்
இவருக்கு முன் சரித்திர நாவல் எழுதிய கல்கியும், சாண்டில்யனும் ஜனரஞ்சக
ஆசிரியர்களே. அவர்களின் தாக்கம் இந்நாவலில், கதைத்தேர்வு, சொல்லும்
விதம், காட்சி அமைப்பு என்று பல அம்சங்களில் தெளிவாகவே புலப்படுகிறது.
எனவே ஆழமான புரிதல் வேண்டுவோர் இறுதியில் திகைத்து நிற்பது
தவிர்க்கவியலாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.
எனவே, ஜனரஞ்சக அளவில் இந்நாவல் ஒரு வெற்றி. ஆனால்......
பகுதி 2:
திருமலைத் திருடனின் கருப்பொருள் இரண்டு. ஒன்று திருப்பதி, இரண்டு,
இராமானுஜன். மற்றவையெல்லாம் இக்கருப்பொருளுக்கு ஆபரணங்கள் போல்
ஜோடிக்கப்பட்டுள்ளன.
எவரெஸ்ட் முகடு உலகின் உச்சியாக நிற்கிறது. அதுவே அதன் ஈர்ப்பிற்குக்
காரணம். உயிரைக் கொடுத்து மலையேறும் ஒருவரிடம் 'ஏன் இம்மலையைத் தேர்வு
செய்தீர்கள்? எனக்கேட்ட போது, "because it is there" என்று பதில்
வந்ததாம்.
திருப்பதியின் ஈர்ப்பும் அப்படித்தானோ?
திருப்பதி ஒரு புத்த விகாரம் என்று தலித் அடம்பிடிக்கின்றனர்,
சரி, அதைப் புத்த விகாரம் என்று கொண்டாலும் இந்தியாவில் இத்தனை புகழ்
கொண்ட ஒரு புத்த விகாரம் இருந்ததற்கான ஒரு கதையோ, ஒரு பாடலோ இதுவரை
கிடைக்கவில்லையே?
அதுவொரு சமணக் கோயில் என்று முன்பு தமிழ்வலையில் ஒரு கட்டுரை வந்தது.
பல நல்ல சமணக் கோயில்கள் இன்றும் உள்ளன. திருப்பதியும் அதிலொன்று என்றால்
சமணர் கூட்டம் 'சரவணபெலகுளா' விற்கு ஏன் போகிறது? திருப்பதிக்கு
வந்தல்லவோ பாலாபிஷேகம் செய்ய வேண்டும்?
இல்லை, அங்கு காஞ்சீபுரம் காமகோடி பீடத்துப் பெரியவர்கள் 'வில்வ பூஜை'
செய்கின்றனர் எனவே அதுவொரு சிவன் கோயில் என்று சொல்கின்றனர் சிலர்.
அவன் சிவன்தான். இல்லையென்று யார் சொன்னது?
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை, முனிவர்க்
குரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை,
பெரியவண் குருகூர் வண்சட கோபன் பேணின ஆயிரத் துள்ளும்,
உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால் உய்யலாம் தொண்டீர் நங் கட்கே. 8.1.11சிவனின் பிள்ளையான முருகனை சிவம் என்றே சொல்வதில்லையா? அதுபோல்தான்
வேங்கடவனும். அவனைச் சிவன் என்று ஏன் சொல்லக்கூடாது? ஆயினும், அது மற்ற
சிவன் கோயில் போல் இல்லை என்பது பார்த்தால் புரிகிறது. (btw,
திருவாய்மொழி இப்பாடல் மூலம் இந்திய சமய ஒழுங்கை, அதன் உறவுகளைச்
சரியாகப் புகல்கிறது. அவன் பெரிய அப்பனாக உள்ளதால்தான் அவன் "பெருமாள்"
என்றழைக்கப்படுகிறான். தேவிகளில் பெருந்தேவியாக ஸ்ரீதேவி இருப்பதால் அவள்
"மகாதேவி" என்று அழைக்கப்படுகிறாள். சாதாரணமாக குடும்ப உறவு என்று
பார்த்தால் கூட சிவனின் மனைவியான அம்பாளுக்கு அண்ணன். அப்படியெனில்
அக்குடும்பதிலேயே மூத்தவன். இவ்வளவு எளிமையாகப் புரிய வைத்தும் பலர் வீண்
வாதம் செய்வது எதனால் என்று இன்றளவும் எனக்குப் புரிவதே இல்லை)
இல்லை, இல்லை, கோயில் மதில் சுவரில் சிம்ம வாகனம் உள்ளது. பெரும்பாலும்
தேவியை சிம்ம வாகினியாகக் காட்டும் வழக்கமுண்டு. மேலும் அவரை "பாலா"-ஜி
என்று சொல்கிறார்கள். எனவே அவள் அம்பாளேதான் என்றும் சொல்கிறார்கள்.
வேங்கடவனை அம்பாள் என்று வழிபடலாம். ஏனெனில், தேவியின் அம்சமாக அவன்
வரும் போது அவள் 'நாராயணி' என்று அழைக்கப்படுகிறாள். சிவன் கோயில்களிலேயே
மிகவும் பிரபலமான மீனாட்சி கோயில், 'நாராயணி' கோயில்தானே. அது அப்படி
இருக்க, திருப்பதியை ஏன் அம்பாள் கோயிலாக்க முயல வேண்டும்?
நல்ல வேளையாக முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இந்தச் சச்சரவில் உள்ளே நுழைந்து
அதுவொரு மசூதி, தேவாலயம் என்று சொல்லவில்லை. அவ்வளவு ஈர்ப்பு
அக்கோயிலுக்கு!!
இன்று இந்தியாவின் வாதிக்கன் என்று சொல்ல வேண்டுமெனில் அது
திருப்பதிதான். வாதிக்கன் போல் அங்கு தனியான செலாவணிக் காசு இல்லை.
அதுவொன்றுதான் குறைச்சல். மற்றபடி தனி அரசாங்கம்தான். அங்கு சென்று
உண்டியலில் வந்த காசை சல்லடை போடுவதையும், அண்டா, அண்டாவாக அக்கார
அடிசல், புளியோதரை, லட்டு என்று நெய் வழியும் பாத்திரங்களையும்
கண்ணுற்றோர் 'இந்தியா ஏழை நாடு' என்று இமயமலையில் இருந்து கூவினாலும்
நம்ப மாட்டார்கள். இதுதான் எல்லோரையும் ஈர்க்கிறதா? இந்தியாவின் புகழ்
பெற்ற கோயிலை 'எங்கள்' கோயில் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படும்
மனோபாவம்தானா இந்த சர்ச்சைகளுக்கு ஆதாரம்?
திருமலை எப்போதுமே இப்படித்தான் 'ராஜாங்கம்' செய்ததா? வடவேங்கடம்
பற்றியக் குறிப்புக்கள் சங்கப்பாடல்களில் நிரம்ப உள்ளன. அது திருமால்
என்பதில் யாருக்குச் சந்தேகம் வரும்? ஆனால், திருப்பதிக்கு அவ்வளவு புகழ்
அப்போது இருந்ததா? இவ்வளவு புகழ் பெற்றபின் தானே அதற்கு இவ்வளவு போட்டி!!
இக்கோயிலை இவ்வளவு பிரபலமாக்கியது யார்?
காவி கட்டி, முக்கோல் ஏந்திய ஒரு துறவி. பெயர் இராமானுஜன்!
அதுவும் கிரகஸ்தனாக இருந்து கொள்கைக்காக காஷாயம் கட்டியவர். தன்
இன்னமுதான பேரரளுளானக்கு அடியவர் தமக்கு ஈசன் போன்றவர், அவரிடம் ஜாதி
பார்க்கக் கூடாது என்ற உயர்ந்த கொள்கைக்காக இல்லறம் துறந்தவர்!! இவர்
இட்ட கட்டளையின் பேரில் திருப்பதிக்கு அடியவர் கைங்கர்யம் செய்ய அது
இன்றுள்ள நிலையை அடைந்திருக்கிறது.
அவர் காலத்தில் அது புதர் மண்டிக் கிடந்திருக்கிறது. அதன் புகழ் அறிந்த
இராமானுஜன் தன் முதலிகளில் ஒருவரை அங்கு அனுப்பி கைங்கர்யம் செய்ய
திருவுள்ளம் கொண்டார். ஆனால், இராமானுஜரின் திருமுக மண்டலம் காணாமல்,
எங்கோ இருக்கும் வேங்கடவனுக்கு தொண்டு செய்ய யார் போவர்? ஒருவரும்
துணியவில்லை. இராமானுஜருக்கோ மனம் தாளவில்லை. "உங்களில் ஒரு ஆண்பிள்ளை
கூட இல்லையா?" என்று கேட்டிருக்கிறார். அனந்தன் என்று சொல்லக்கூடிய முதலி
இராமானுஜர் மேல் இரக்கம் கொண்டு அவரை விட்டு அகல முடிவு செய்கிறார்.
அவரும் அவர் துணைவியாரும் கோயிலைத் துப்புரவு செய்து பராமரித்து
வருகிறார்கள். இப்படி இருக்கும் போது ஒரு நாள் கைங்கர்யத்திற்கு கால
தாமதமாகிவிடுகிறது. ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குக் கோபம். ஆளை அனுப்பி இந்த
அனந்தனை அழைத்துவாரும் என்கிறார். அனந்தனோ அது பெருமாளின் அருளப்பாடு என
அறிந்தும், "யோவ் வேங்கடவரே! நான் இங்கே திருப்பணி செய்வது உமக்கென்று
எண்ணிவிட வேண்டாம். எம் இதத்தாய் இராமனுஜன் மனது நோகக்கூடாதே என்று வந்து
பணி செய்கிறேன். ரொம்ப அலட்டிக் கொள்ள வேண்டாம்!" என்று பதில்
சொல்லியிருக்கிறார். இந்தத் திமிர் எங்கிருந்து வருகிறது? உடையவர், எம்
உள்ளம் உடையவர் என்று இராமானுஜன் மேல் கொண்ட ஆராக்காதலால்! இராமானுஜர்
இல்லையேல், இன்றளவும் அக்கோயில் வெறும் வேங்கடவனாக, ஒரு சிறு கோயிலாக
இருந்திருக்கும். அதற்கான இத்தனை அறக்கட்டளைகள், கோயில் ஒழுங்குகள்,
நித்ய ஆராதனைகள் போன்ற எத்தனை அழகுகளைச் செய்வித்தவர் யார்? இராமானுஜர்.
இராமானுஜரின் பெருமையை திவாகர் மிக அழகாகச் சொல்கிறார்,
" எழுபத்தினான்கு
சிம்ஹாசனாதிபதிகள் - எழுநூறு யதிகள் - ஒன்பதினாயிரம் முதலிகள் -
பன்னீராயிரம் பூணூல் சாத்தாத முதலிகள். இவர்கள் அத்தனை பேருக்கும்
தலைவராய் ஒரு சமய உலகையே ஆள்கிறாராமே?" என்று.
எனவே அவர் திருப்பதி புகழ் பெரும் முன் தமிழகத்தை ஈர்த்திருக்கிறார்.
திருவரங்கம் எனும் கோயிலை 'வாத்திகன்' போல் மாற்றி, ஒரு மதாச்சாரியர் ஒரு
'போப்' போன்ற உயர்ந்த நிலைக்கு வந்து அரசாங்கம் செய்த போது, இத்தாலியில்
நடந்தது போல், தமிழகத்திலும் அரசியல்வாதிகள் அவரைக் 'காலி' பண்ண
முயன்றிருக்கின்றனர். அவரை அறியாமலே அவரைச் சுற்றி ஒரு அரசியல் ஓட்டம்
சதா இருந்து கொண்டு வந்திருக்கிறது.
இந்த இரு பெரும் நிகழ்வுகள்தான் கதைப்புலன். போதாதோ! இவரது 'திருமலைத்
திருடன்' சுடச் சுட விற்றுப்போயிருக்கும். வெறும் பாலாஜி படத்தைப்
பெரிதாக வைத்ததற்காகவே காஞ்சி மடத்தில் காசு கொட்டும் போது, திருமலை
பெயர் கொண்ட ஒரு நாவல் விற்றுப்போகாதிருக்குமா?
ஆயினும், திவாகரின் அணுகலில் ஒரு முழுமை இல்லை என்று தோன்றுகிறது.
இராமானுஜர் மேல் மரியாதை இருக்கிறது. திருப்பதி மேல் காதல் இருக்கிறது.
ஆயினும் அதன் பின்புலத்தை இன்னும் கூர்ந்து கவனித்து இருக்கலாமென்று
தோன்றுகிறது. திருவேங்கடம் பற்றி அறிய அவர் திருவரங்கம் பயணப்பட்டிருக்க
வேண்டும். அங்குதான் அதன் சரித்திரம் புதைந்து கிடக்கிறது.
திவ்யப்பிரபந்தங்களின் வியாக்கியானங்கள், வைணவப் பெரிவர்களின்
நேர்காணல்கள், அங்கு தவழும் ஐதீகங்கள் என்று ஒரு சுற்று வந்தால் அத்தனை
தகவல்களும் கிடைத்திருக்கும். ஆனால் அவர் தன்னை ஒரு 'சைவர்' என
பாவித்துக் கொண்டு, சைவப்பார்வையில் இந்நாவலைக் கொண்டு செல்கிறார்.
இதனால் இருக்கின்ற குழப்பங்களுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் இன்னொரு
குழப்பத்தை இந்நாவல்மூலம் தந்திருக்கிறார். அது எப்படி?
பகுதி 3:
இந்த நாவல் தோன்றுமுன் கேட்கப்பட்ட கேள்விகளை நாம் யூகிக்கலாம்?
1. தமிழகத்தில் சைவ, வைணவ பேதம் எப்படி சோழர்கள் காலத்தில் தலை
விரித்தாடியது? பௌத்தர்களையும், சமணர்களையும் வெல்வதில் கை கோர்த்த
இந்துக்கள், வென்றபின் பிரிந்ததேன்? இதில் இராமானுஜரின் பங்கு என்ன?
2. சோழ சாளுக்கிய உறவு எந்நிலையில் இருந்தது? திருமணத்தொடர்பு
உண்மையிலேயே உள்ளத்தொடர்பாக மலர்ந்ததா? இல்லை வெறும் அரசியல் சதுரங்க
விளையாட்டாக இருந்ததா?
3. தனது ஆன்மீக ஆளுமையால் தமிழகத்தையே ஆச்சர்யப்படுத்திய இராமானுச
முனியைக் கொல்ல சோழ அரசு முயன்றதா?
4. வட வேங்கடத்தை வைணவப் பாசறையில் வசப்படுத்தியதில் இராமானுசரின் பங்கு என்ன?
இக்கேள்விகளுக்கு அவர் பாணியில் விடை தேடுகிறார் நாவலாசிரியர். அவர் முன்
வைக்கும் scenerios
1. தமிழர்கள் தங்கள் அளவில் சைவ-வைணவ பேதம் பார்க்கவில்லை. ஆனால்
இப்பிரிவினையை அரசியல் ஆதாரங்களுக்காக சாளுக்கியர்கள் தூண்டி
விடுகின்றனர் என்பது ஆசிரியரின் யூகம். இதன் காரணமாக சைவ-வணைவ பேதமறியாத
சிதம்பரத்தைத் துண்டித்து பேதமையை உருவாக்குகின்றனர் என்று கதையை
நகர்த்துகிறார் ஆசிரியர்.
2. இப்பேதமை உருவாக்குபவன் சைவனாகவோ, வைணவனாகவோ காட்டப்படவில்லை.
சாமர்த்தியமாக, இதற்கு தூபம் போடும் சூத்திரதாரியான சாளுக்கிய குருவை
நாத்திகனாகக் காட்டிவிட்டார் ஆசிரியர்!
3. இந்தப் பிரிவினை வாதத்தின் தொடர்ச்சியாக வட வேங்கடநாதன் சிவனா? இல்லை
பெருமாளா? என்ற கேள்வியை எழச் செய்கின்றனர். இக்கேள்விக்கு எப்படி விடை
காண்பது? ஸ்ரீ இராமானுஜரையே கேட்டுவிட வேண்டியது என்று போகிறது கதை.
4. இராமானுஜர் எப்படி இச்சிக்கலைத் தீர்த்து வைத்திருப்பார் என்பதில்
இந்நாவல் ஒரு புதிய கோணத்தை முன் வைக்கிறது. அதுதான் கதையே!!
இந்நாவலில் மிக அழகாக இராமனுஜரின் ஆளுமை காட்டப்படுகிறது. ஆசிரியர் என்று
வருகின்ற சைவாச்சாரியார் (அகோர சிவாச்சாரியார்), சோழ இளவல், கங்கை இளவரசி
என்று எல்லோரும் அம்மாமுனியின் அன்பிற்குள் வசப்படுகின்றனர். "பெரியோரைக்
காண்பதும் நன்றே" என்ற முதுமொழிக்கு இணங்க, அவர் அருட்கண் பார்வை பெற்ற
எல்லோரும் உள்ளத்தெளிவு பெருகின்றனர். குறிப்பாக ஆண்டாள் வேஷம் போட்டு
உடையவர் முன் ஆடி, அவர் அருள் பெற்ற கங்கை அரசி இறுதியில் மாபெரும் தவறு
செய்துவிட்ட பின், மனம் மாறி ஒரு கோபிகை போல் உள்ளம் கதற, கண்ணனிடம்
காதல் மொழி பேசுவது மிக ரசமாகக் காட்டப் படுகிறது. இன்னொரு கதாநாயகியோ சிவப்பித்து. அது வேங்கடவனைத் தில்லைக் கூத்தனாக கண்டு நெருங்குகிறது.காமத்தை எரித்த சிவனை காதல் மொழி பேசும் காதலனாக சித்தரிப்பதில்
சைவக்குரவர்களே தடுமாறுகிறார்கள். ஆயினும், நல்ல வேளையாக மாணிக்க வாசகர்
உதவ, சிவனைக் காமேஸ்வரனாகக் காட்ட முடிகிறது நாவலாசிரியரால்.
ஆயினும்,
நாவலாசிரியரின் யூகம் சரிதானா?
தமிழகத்தில் ஏற்பட்ட சைவ-வைணவப் பிளவிற்கு வேறு உட்காரணங்கள்
இருந்திருக்க வாய்ப்புண்டா?
இராமானுஜர் உண்மையில் இப்பிரச்சனையை எப்படித் தீர்த்து வைத்தார்? ஏன் அதை
வேறொரு கோணத்தில் ஆசிரியர் அணுகுகிறார்?
இராமானுஜ சித்தரிப்பு இன்னும் மேம்பட்டு இருக்கலாமோ? நாவலாசிரியருக்கு
வைணவ உரைப் பரிட்சயம் இல்லாதாலோ, இராமானுஜ நூற்றந்தாதியை அனுபவித்து
மீளாளதாலோ இச்சித்திரம் குறை உடையதாக உள்ளதோ?
வட வேங்கடத்தில், கர்பகிரஹத்தில் ஆசிரியர் வைக்கும் காட்சி உண்மையில்
நடந்திருக்க வாய்ப்புண்டா? அச்சித்தரிப்பின் மூலம், வடவேங்கடவ
சந்நிதியையே அசுத்தம் செய்துவிட்ட ஒரு பாபம் நாவலாசிரியரைத் தொடருமோ?
போன்ற கேள்விகள் எழுகின்றன. மெல்ல விடை காண்போம்.
பகுதி 4:
தமிழகத்தில் சைவ, வைணவ பேதம் எப்படி சோழர்கள் காலத்தில் தலை
விரித்தாடியது? பௌத்தர்களையும், சமணர்களையும் வெல்வதில் கை கோர்த்த
இந்துக்கள், வென்றபின் பிரிந்ததேன்? இதில் இராமானுஜரின் பங்கு என்ன?
இக்கேள்வி ஆராயப்பட வேண்டியது. தமிழனாகப் பிறந்து, கொஞ்சம் ஆன்மீக
ஈடுபாடு உள்ள அனைவரிடமும் எழும் கேள்வி இது. ஏன் ஊருக்கு ஊர் சிவன்
கோயில், பெருமாள் கோயில் இருக்கிறது? இந்துக்களுக்கென்று ஒரு கோயில்
போதாதா? ஏன் இந்த dicotomy? இந்த Polarity? சிவனும், விஷ்ணும் வேறு,
வேறா? சைவ சித்தாந்தம் என்பது வேதாந்ததிற்கு முரணா? இக்கேள்விகளெல்லாம்
ஒன்றுக்குகொன்று தொடர்புடையவை. இக்கேள்விதான் திருமலைத் திருடன்
நாவலுக்கும் பிரதானமாக உள்ளது.
இக்கேள்வியின் ஆழ, அகலத்தைக் கண்டு, மெல்ல விலகி ஒரு எளிய பதிலைச்
சொல்லிவிட்டுச் செல்கிறது நாவல். அது தத்துவத் தேடலுள்ள ஒருவனுக்கு
திருப்தி அளிக்காது. நாவல் சொல்கிறது, சோழ அரசை ஆட்டம் காண வைக்க
பில்வணகுரு (சாளுக்கியர்) ஏற்படுத்தும் திட்டமே இந்த சைவ-வைணவ பேதமென்று.
அப்படி நிகழ்ந்திருக்க நியாமில்லை என வாதாட வரவில்லை. ஏனெனில், ஆந்திர
மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு எழுதிகிறார் நாவலாசிரியர். இதற்கான
குறிப்புக்கள் அவரிடம் நிறைய இருக்கும். ஆயினும் இப்படிக் காட்டுவதின்
மூலம் அவர் தமிழர்கள் வெகுளிகள், அவர்களுக்குள் இப்பேதமில்லை எனுமொரு
முகத்தைக் காட்டுகிறார். அதை எப்படி முழு உண்மை என்று ஏற்றுக் கொள்ள
முடியும்? நெருப்பில்லாமல் புகையாதே? சிறு தணலைத்தானே பில்வணன் பெரும்
நெருப்பாக மாற்றுகிறான். அத்தணல் எப்போது தமிழ் மண்ணில் தோன்றியது?
அதற்கான காரணிகள் என்னென்ன? இதை நாவல் எடுத்துச் சொல்லும் என்று
எதிர்பார்க்கவில்லை. இதையொரு வாய்ப்பாகக் கருதி ஆராய்ந்து பார்க்கலாம்!
இந்திய மண்ணில் தத்துவங்கள் தோன்றி, மடிந்து, தோன்றிய வண்ணமே உள்ளன.
அதற்கான முழுச் சுதந்திரத்தை பாரத தேசம் வழங்குகிறது. இது இஸ்லாமிய,
கிறிஸ்தவ உலகங்களில் காணமுடியாத ஒரு அதிசயம். வேதாந்தம் என்பதே ஒரு
ஆய்வுப்பாட்டை, ஒரு research methodology, an enquiry system. தேடுதல்
என்பது உயிருள்ள இயக்கம். அது இயங்கிக் கொண்டே இருக்கும். தேடுதல்
நின்றுவிட்டது என்றால் இறப்பு மேலோங்கிவிட்டது என்பது பொருள். இம்முறை
இம்மண்ணில் இருப்பதால்தான் வேதங்கள் தோன்றின. வேதத்தைக் கேள்வி கேட்க
உபநிடதங்கள் தோன்றின. அவற்றை பிரபலப்படுத்த புராண, இதிகாசங்கள் தோன்றின.
இவை எல்லாவற்றையும் இடித்துரைக்க பௌத்தம் தோன்றியது, சமணம் தோன்றியது,
இன்னோரன்ன பிற சமயங்கள் தோன்றின. இதை மிக அழகாகத் திருவாய்மொழி செப்பும்:
வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவைதோறும்
அணங்கும் பலபலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனேஅவன் யார்? என்ற வேட்கை வரும் போது அதன் பதிலாக இத்தனை துறைகள்
தோன்றுகின்றன என்கிறார் நம்மாழ்வார். ஆயின் இத்தோற்றம் உண்மையானதோ?
எனில், இல்லை அது மதிவிகற்பம் என்றும் சொல்கிறார்.
இந்த அழகான பாடலைத் தந்திருந்தால் திருமலைத் திருடன் இன்னும் சிறப்புற்று
இருக்கும்.
ஆக மனிதனின் மதி விகற்பத்தால் சைவ, வைணவ பேதம் தோன்றி இருக்க வேண்டும்!
அதற்கான சூழல் என்ன?
வேத நெறி தமிழ் மண்ணில் அன்றும், இன்றும், என்றும் செழித்து இருக்கும்.
அதில் சந்தேகமில்லை. ஏனெனில் அது பாரத தேசம். அது இம்மண்ணின் சொத்து.
ஆனால், அதற்குப் புறனான பௌத்தமும், சமணமும் தமிழ் மண்ணில்
வேரூன்றுகின்றன. ஒரு நூற்றாண்டு, இரண்டு நூற்றாண்டல்ல..பல நூற்றாண்டுகள்.
தமிழ்ச் சமயமல்லாத இந்நெறிகளால் தமிழ் மனதைப் புரிந்து கொள்ள
முடியவில்லை. தமிழ்ச் சமுதாயம் ஐந்திணைக் கோட்பாட்டுடன் வளர்ந்தது.
அகத்திணை மரபு என்பது இம்மண்ணின் இயல்பு. ஆனால், உடலே பொய் அதை வதை செய்
எனும் சமணமும், ஆசையே துன்பத்திற்குக் காரணம் அதை அறுத்து எறி என்னும்
பௌத்தமும் தமிழ் மரபுடன் நேரடியாக மோதுகின்றன. எனவே நீருபூத்த நெருப்பாக
அகத்திணை மரபு, தமிழ் மண்ணில் மலரக் காத்துக் கொண்டு இருக்கிறது.
பௌத்தமும், சமணமும் அரசியலில் கலந்து தங்கள் தலையில் தானே மண்ணை வாரி
போட்டுக் கொண்ட போது மெல்ல, மெல்ல ஆழ்வார்களின் ஈரப்பாசுரமும்,
சைவக்குரவர்களின் திருப்பதிகங்களும் ஒலிக்கத் தொடங்குகின்றன. அவை
நேரடியான சங்கத்தின் எதிரொலிகள். இறைவனைப் பற்றிப் பேசும் பாடலில் காதல்
வயப்பட்டு போகும் இரண்டு யானைகளை மேற்கோள் காட்டுகிறார் அப்பர்.
சங்கத்தலைவி செய்யும் மடலூர்தலை முன்வைக்கிறாள் பாராங்குச நாயகியும்,
பரகால நாயகியும் (நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்). சட்டென, சங்கம்
மீண்டும் தமிழ் மண்ணில் பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிடுகிறது. An
exuberance of passion, love and celebration!
இதுவரை happy story! ஆனால், இப்பாதையில் எங்கோ கோளாறு நிகழ்ந்து
விடுகிறது! ஒரு சாரார் பாட்டுடைத் தலைவனாக நாரணனை எடுக்க, மற்றொரு சாரார்
சிவனை எடுத்துவிடுகின்றனர். இந்த இரண்டு கடவுளரும் வேதக்கடவுளர். வேத
நெறிப்படி இவர்களின் தோற்றம் மிகத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
பெயரில்லாத, பேதமில்லாத பரம், ஒரு விளையாட்டாக தன்னைப் பேதப்படுத்திக்
காட்ட எண்ணுகிறது (சங்கல்பம்) (அலகிலா விளையாட்டு - நம்மாழ்வார்,
கம்பன்). அது எப்படி நிகழ்கிறது என்றும் வேதம் சொல்கிறது. பரம் முதலில்
நான்முகனைப் படைக்கிறது. அவன் மூலமாக மற்றைய தெய்வங்களையும், பிற
உலகையும் படைக்கிறது. இதை திருவாய்மொழி இப்படிச் சொல்லும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரேஆக நான்முகன் படைப்பாக ருத்திராதி தேவர்கள் உருவாகுகிறார்கள்.
இதனால்தான், பத்மநாபனை சிவனின் அப்பன் என்று நம்மாழ்வார் சொல்கிறார்.
இந்த வழக்கில் ஒரு நெறி இருக்கிறது. ஆதியில் இருந்தது ஒன்று, அதுவே
தன்னைப் பலவாகக் காட்டிக் கொள்கிறது என்று.
இதையேதான் சைவக்குரவர்களும் சொல்கிறார்கள். ஆனால், அந்த ஒன்றைச் சிவன்
என்று சொல்லிவிடுகின்றனர். பேசாமல் சங்கரர் சொன்னது போல் 'பிரம்மம்'
அல்லது வேறொரு பெயர் வைத்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. அதைச்
சிவன் என்று சொல்லப் போக, வேத விளக்கத்துடன் நேரடி முரண் கொள்ள வேண்டிய
ஒரு சூழல். ஏற்கனவே நிருவப்பட்ட ஒரு கொள்கையை, நெறியை, ஐதீகத்தை மாற்ற
முயலும் போது பிரிவினை தோன்றுகிறது. "மதி விகல்பம்" என்று சரியாக இதைப்
படம் பிடிக்கிறார் நம்மாழ்வார். சரி, இந்தப் புதிய சித்தாந்தத்தை
பௌத்தம், சமணம் போல் வேறொரு சமயம் என்று சொல்லியிருந்தாலும் பிரச்சனை
வந்திருக்காது. ஆனால், இதுதான் வேதநெறி என்று சொல்லும் போது head on
collision நடந்து விடுகிறது. பேரா.ரெ.கார்த்திகேசு இம்மன்றத்தில் முன்பு
சொன்ன மாதிரி 'அந்தச் சிவன்' வேறு, 'இந்தச் சிவன்' வேறு என்பதுதான்
சரியான பதில். வேதத்தில் சொல்லப்படும் சிவன் வேறு, திருமூலர் சொல்லும்
'அன்பும் சிவனும் வேறென்பார் அறிவிலார், அன்பும் சிவனும் ஒன்று' எனும்
சிவன் வேறு.
தென்னாடுடைய சிவன் ஒரு தனி entity. நம்மாழ்வார் பேசும் ஆதிப்பிரானும்,
இச்சிவனும் ஒன்றுதான். பேயாழ்வார் காணும்
தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்துஒன்றுதான். ஆனால் அவனைச் 'சிவன்' என்று சொல்லப் போய் பெரிய குழப்பத்தையே
தமிழ் மண்ணில் உருவாக்கிவிடுகின்றனர். மிக, மிகச் சாதாரணன் தெருவில்
கேலியாகப் பேசும், "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு"
என்பதுதான் எவ்வளவு புத்திசாலியான விளக்கம்.
இப்படி இவர்கள் செய்துவிட்டுப் போனதால் ஒரு eternal conflict இங்கு
நடந்து கொண்டு இருக்கிறது. அப்பயதீட்சதர் எப்படியாவது வேதம் சொல்லும்
பரம் சிவன்தான் என்று மோதிப் பார்க்கிறார். வேதம் பேசும் வைதீக தெய்வம்
சிவன்தான் என்று நிருவிக்கொண்டு இருக்கும் போதே கபாலிகர்கள் தாங்களும்
சைவர்களே என்கின்றனர். 'வேத மந்திரத்தை முணுமுணுக்கும் பார்ப்பனர் பேசும்
தெய்வமோ சிவன்?" என்று கேள்வி கேட்கின்றனர் சித்தர்கள். இவர்கள் பூஜை
புனஸ்காரம் என்று சிவ அபிஷேகத்திற்கு தயாராகும் போது "நட்ட கல்லும்
பேசுமோ?" என்று கேள்வி எழுப்புகிறார் "சிவ" வாக்கியர். ஆக, ஏகப்பட்ட
குழப்பம்! ஒன்று வேத மார்க்கத்தை ஒட்டு மொத்தமாக தலை முழுகியிருக்க
வேண்டும். தென்னிந்திய சைவ சித்தாந்தமும், தென்னாடுடைய சிவனும் வேறு
என்று பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும் (இவை இலங்கையிலும்,
தென்னாப்பிரிக்காவிலும், மலேசியாவிலும், மின்வெளியிலும்
நிகழத்தொடங்கிவிட்டது). ஆனால் செய்யவில்லை. இதனால்தான் மலேசியர்கள்,
ஈழத்தவர்கள் தங்களை "இந்துக்கள்" என்று சொல்லிக்கொள்வதில்லை. "சைவர்கள்"
என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்தக் குழப்பம், இந்த compromise அப்படியே திருமலைத் திருடனில்
எதிரொலிக்கிறது! இது compromise செய்யக் கூடிய விஷயமா? ஆனாலும் அதற்கான
முயற்சியும் நடந்திருக்கிறது, தமிழ் மண்ணில். தாயுமானவர், வள்ளலார்
போன்றோர் சைவ சித்தாந்த மார்க்கத்திலும், காஞ்சி மடாதிபதிகள் போன்றோர்
வேதாந்த வழியிலும் ஒரு compromised theory வை முன் வைக்கின்றனர். ஆனால்,
பல தார மணம், இரட்டைப் பெண்டாட்டிக்காரன் கதையாக பெரிய தலையிடியுடன்
தமிழகம் பல நூற்றாண்டுகளாக அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டு
பொறுக்காமல் ஒரு நிலையில் வள்ளலார், சைவ மதம் விட்டு விலகி "மதமெனும்
பேய் பிடியாதிருத்தல் வேண்டும்" என்று சூளுரைத்து, 'சமரச (compromise)
சன் மார்க்கத்தை' நிருவுகிறார். அருட்பெருஞ்சோதி வழிபாட்டை
முன்வைக்கிறார்.
இந்தப் பின்னணியில்தான் இராமானுச மாமுனியின் தீர்க்க தரிசனத்தை, வழி
நடத்தலை, அவரது அளப்பரிய பங்களிப்பைக் காண வேண்டும். அவர் சதுர்வேதி,
பழுத்த வேதாந்தி, தமிழன். வேத மார்க்கமும் புரியும், ஐந்திணை மரபும்
புரியும். எனவேதான் இவையிரண்டையும் ஒருங்கிணைத்து 'ஸ்ரீவைஷ்ணவம்' எனும்
சித்தாந்தை முன் வைக்கிறார். இராமானுஜருக்குப் பின்தான் வைணவம் தோன்றியது
என்பது போலும், இராமானுஜர்தான் சைவ, வைணவ பேதத்தை வளர்த்தெடுத்தார் என்பது
போன்றும் பொய்க்கதைகள் தமிழ் மண்ணில் உலவுகின்றன. உண்மையைப் பார்த்தால்,
அன்றிருந்த குழப்பான தத்துவ சூழலில், மிகச்சரியான பாதையைக் காட்டியவர்
உடையவர். அதனால்தான் இதுவரை இந்தியா கண்டிராத அளவு ஒரு துறவியை தலையில்
வைத்துக் கொண்டாடுகிறது உலகம். இவருக்கு மிகத்துணையாக ஆழ்வார்களின்
அருளிச் செயல்கள் வந்து அமைகின்றன. வேதத்தில் இல்லாத தெளிவு, மதி நலம்
ஆழ்வார் பாசுரங்களில் உள்ளதை இராமானுஜ பரம்பரை கண்டு கொள்கிறது. எனவேதான்
ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி *
தாழ்வாது மில்குரவர் தாம் வாழி * - ஏழ்பாரும்
உய்ய, அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி *
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
என்று சொல்லத்தொடங்கினர். ஆழ்வார்கள் வாழ்க, வைணவ சமயக் குரவர்கள் வாழ்க,
அவர்கள் உரைத்த உரைகள் வாழ்க, செய்ய மறை (வேதம்) தன்னுடன்!! என்று
முத்தாய்பாக வேதத்தை வைக்கின்றனர். இங்கு வேதத்திற்கும்,
ஆழ்வார்களுக்கும் முரண் இல்லை. இங்கு ஆகமத்திற்கும், வேதத்திற்கும் முரண்
இல்லை. இங்கு கபாலிகர்கள் இல்லை. இங்கு சித்தர்கள் எதிர்குரல் இல்லை. A
clean, neat approach. இதை நாவலாசிரியர் உணர்ந்தாரா என்று தெரியவில்லை.
இராமானுஜரின் தீர்க்க தரிசனம், அவர் வழிகாட்டலை தமிழகம் அப்பட்டியே
ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதில் சிவ, விஷ்ணு பேதமில்லை. அதில் வடமொழி,
தென்மொழி பேதமில்லை, பிராமணன், சூத்திரன் பேதமில்லை, வட இந்தியன் தென்
இந்தியன் பேதமில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற திருமந்திரத்தின்
ஓங்கிய குரல் அது.
ஆனால் தமிழக சரித்திரம் காட்டுவது என்ன? அவரை ஒழிக்க சோழ அரசு
முயல்கிறது. எப்படிச் சொல்லி?....
பகுதி 5
தனது ஆன்மீக ஆளுமையால் தமிழகத்தையே ஆச்சர்யப்படுத்திய இராமானுச
முனியைக் கொல்ல சோழ அரசு முயன்றதா?
ஒரு நாவலை வாசித்தோமா, நாலு வரியில் நல்லா இருக்கா, நல்லா இல்லையான்னு
சொல்லிட்டுப் போகாம இப்படி என்ன வள வளன்னு பகுதி, பகுதியா
எழுத்திக்கிட்டு என்று சிலர் எண்ணலாம். திவாகர் எடுத்துக் கொண்டிருக்கும்
கதைக்கரு அப்படி. உண்மையில் இவர் இதை ஒரு முழு ஆராய்ச்சி நாவலாகக் கொண்டு
வந்தால் பல பாகங்கள் எழுத வேண்டிவரும். ரொம்ப சிம்பிளா கதையை
முடுச்சிட்டார்!இராமானுஜருக்கு பல முகங்கள் உண்டு.
மிக நல்ல மாணவன்
-அவருக்கு ஒரு குரு என்றில்லை, படித்தறிய வேண்டியிருந்தால் தயங்காமல்
பெரியவர்களிடம் சிட்சை பெறுவார்,
தேர்ந்த படிப்பாளி
- இல்லையெனில், ஆதி சங்கரரின் அத்வைத்த சித்தாந்தத்திற்கு amendment
செய்ய முடியுமா? இவர் செய்வித்தது விசேஷ அத்வைதம்,
உலககுரு
- எல்லோருக்கும் உவப்பான, எல்லோருக்கும் பயனளிக்கும் ஒரு சித்தாந்தைத் தருகிறார்.
"ஏழ்பாரும் உய்ய, அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி" என்பது சாற்று. உலகம்
முழுவதும் உய்ய அவர்கள் உரைத்தவை என்பது தெளிவு. இல்லையெனில் இன்று
இஸ்கான் இயக்கம் இப்படி உலகம் முழுவதும் பரவி இருக்காதே!
மதாச்சாரியார்
- மதம் என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு
எடுத்துக்காட்டு ஸ்ரீவைஷ்ணவம். யார் வம்பிற்கும் போகாமல், தங்கள்
குரவர்கள் செய்த உரையை கண்ணெனக் கொண்டு தனியாக இயங்கும் ஒரு இயக்கம்.
ஸ்ரீரங்கம் கோயில் ஒழுங்கைப் பார்த்தாலே எவ்வளவு திட்டமிடுதல் உள்ளே
போயிருக்கிறது என்பது புரியும். மிகக்கச்சிதமாக இயங்கும் மதம் [ பெயர்
சொல்ல வேண்டாம், உள்நாட்டு, வெளிநாட்டு மதங்கள், அதிலுள்ள உள்பூசல், ஊழல்
இவைகளை ஒப்பு நோக்கினால்தான் புரியும் இராமானுஜரின் தீர்க்க தரிசனம்]
சமுதாய சீர்த்திருத்தவாதி
ஜெகத்குரு என்று சொல்லிவிட்டால் சமுதாயம் மேம்படும் திட்டங்களை முன்வைக்க
வேண்டும் என்பது வெளிப்படை. இது பற்றி நிறைய எழுதலாம். ஆயினும்
சுருக்கமாக. ஸ்ரீவைஷ்ணவன் என்று ஆனபின் ஒருவனின் சாதி பற்றி விசாரிப்பது
என்பது தாயின் கற்பை சோதிப்பதற்கு ஒப்பு என்பது இராமானுஜ மொழி. எவ்வளவு
வஜ்ஜிர வரிகள். அடுத்து இது 'ஸ்ரீ' சம்பிரதாயம் என்பதால் பெண்களுக்கு
அளப்பரிய சுதந்திரம் உண்டு இங்கே. இதையும் தமிழக சமுதாயத்தை ஒப்பு
நோக்கியே அறிய முடியும். அரங்கனுடன் ஒன்றறக் கலந்தவர்கள் இருவர். ஒருவர்
திருப்பானாழ்வார் எனும் தலித். இரண்டு ஆண்டாள் எனும் பெண்.
திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரின் முக்கிய பங்களிப்பென்று ஒரு
பட்டியல் தருகிறார்:
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்
வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே.
இராமானுசன் உலகில் தோன்றிய பின்
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன.
தர்க்க ரீதியாக சம சமயங்களை வீழ்த்தியது மட்டுமல்ல. சமுதாய மாற்றத்தின்
மூலம் காபாலிகம் போன்ற வழக்கங்கள் ஒழியவும் காரணமாக இருந்திருக்கிறார்.
இந்நாவலில் காபலிகம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது.
இன்றுவரை வேதம் காட்டும் பரம் பொருள் யார்? அதனை அழைக்க வேண்டுமெனில்
எப்பெயர் கொண்டு அழைப்பது என்பது பெரிய கேள்வி. ஆனால் இதற்கான விடை நம்
மரபைத் தேடினால் கிடைக்கும். வேதாந்த விசாரங்களில் மிகவும் பிரதானமான
கேள்வி இது. இம்மரபில் வந்த மிகப்பிரபல ஆச்சார்யர்களான ஆதி சங்கரர்,
இராமானுஜர், மாத்வர் இவர்கள் மிகத்தெளிவாக வேதம் காட்டும் பரம் பொருளை
நாரணன் என்று சொல்வதே பொருந்தும் என்று காட்டியிருக்கின்றனர். ஆயினும்
இராமானுஜருக்கு சிறப்பு என்னவெனில் இதை தமிழ்ப் பாசுரங்கள் வழியாக நிலை
நிறுத்தியது. விசிஷ்டாத்வைதம் எனும் கருத்தே திருவாய்மொழியிலிருந்து
பெறப்படுகிறது. எனவே,
தென் குருகைவள்ளல் வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது
இராமானுஜருக்குப் பிறகு உபய வேதாந்திகள் என்ற புதுப்பெயர் வருகிறது.
முதல் வேதமும், தமிழ் வேதமும் இரண்டு கண்கள் என்று பயிலும் ஒரு புதுவகைத்
தமிழர்கள்!
எனவே இவ்வளவு செய்திருக்கும் ஒரு மகான் சோழ மண்ணில் உலவிக் கொண்டு
இருக்கிறார். சும்மாவா? ஒரு சுற்று போகிறார் என்றால் குறைந்தது 20,000
பேர்கள் உடன் செல்வார்களாம்! தாங்குமா? இவர் புறப்பாடு என்றால் அதுவொரு
விழாவாக இருந்திருக்கும். இதனை அக்கறையுள்ள எந்த அரசுதான் கண்காணிக்காமல்
இருக்கும்? சோழ அரசும் இதற்கு விதி விலக்கல்ல.
குரு பரம்பரைக் கதைகளின் படி, சிவாச்சார்யர்களின் (a conservative force)
தூண்டுதலின் பேரில் ஒரு சோழ அரசன் இராமானுஜரை அவமதிக்கும் நோக்குடன்
"சிவாத் பரதரம் நாஸ்தி" என்று ஓலையில் எழுதி இவரைக் கையெழுத்து இடும்படி
செய்ய முயன்றிருக்கிறான். நாரணன் பரம் என்று ஸ்தாபிதம் செய்ய வந்தவரை
சிவம் பரம் என்று எழுதச் சொன்னால் வம்புதானே? இதை முன்னமே அறிந்த
கூரத்தாழ்வான், இராமானுஜரை சோழநாட்டை விட்டு மேலக்கோட்டை போகும் படி
செய்துவிட்டு, தான் அரசவைக்குப் போய் கண்ணிழந்து அவதிப்பட்டான் என்பது
கதை.
இதை இந்த நாவல் மிக நாசுக்காக எடுத்தாள்கிறது. நாவல் சைவ bias கொண்டு
இருப்பதால் முழுக்கதையும் சொல்லாமல், கோடி காட்டுகிறது. மேலும்
சிவாச்சாரியரை இராமானுஜரின் நண்பராகவும் காட்டுகிறது நாவல். இந்த அதிரடி
திட்டத்தை முன் வைப்பது பில்வண குரு, சிவாச்சாரியர் இல்லை என்று
சொல்கிறது நாவல். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது கடவுளுக்கே வெளிச்சம்!
வைணவ குருபரம்பரைக் கதைகள் இராமானுஜரை நாடு துறத்திய சோழ மன்னனை பெயர்
சொல்லிக் கூட அழைப்பதில்லை. அவனுக்கு இறைத் தண்டனையாக புற்று நோய் வந்து
இறந்ததை வைத்து கிருமி கண்ட சோழன் என்றே அழைத்து வருகிறது. இந்நாவலில்
அந்த கிருமி கண்ட சோழன் ஆட்சிக்காலம் பேசப்படுகிறது. இராஜேந்திர சோழனின்
பேரனான அதிராஜேந்திர சோழனே அவன் என்பது இந்த நாவல் மூலம் புலப்படுகிறது.
அவன் கிருமி கண்டு இறப்பதாக நாவல் பேசுகிறது.
இதுவே ஒரு நாவலுக்கான கரு என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் தொல்துறை
முன்னாள் இயக்குநர் நாகசாமி இப்படியொரு நிகழ்வு சோழ பரம்பரையில் நிகழவே
இல்லை என்று சொல்கிறார். இது வைணவர்கள் கட்டும் கதை என்கிறார். ஆனால்
நாவலாசிரியர் அந்த அணியில் இல்லை என்பதை தி.தி நாவல் காட்டுகிறது.
http://www.tamilartsacademy.com/journals/volume4/articles/article11.xml
கடைசிப் பகுதி (அப்பாடா!!)
வடவேங்கடவன் திருமால் என்பது சங்கம் தொட்டு இருந்துவரும் சாட்சி என்பதைத்
தி.தி முன்னுரையும், சிறப்புரையும் செப்புகிறது. ஆயினும் இராமானுஜர்
காலத்தில் அவன் முருகனா? சிவனா? அம்பாளா? திருமாலா? என்ற கேள்வி எழுந்தாக
சரித்திரம் கூறுகிறது. வேடிக்கையாக இருக்கிறது. இதுவென்ன பெரிய காரியமா?
திருமஞ்சனம் செய்விக்கும் அர்ச்சகர்களுக்குத் தெரியாதா? அங்கிருக்கும்
திருமேனி சங்கு சக்கரதாரியா இல்லை மானும், மழுவும் கொண்ட சிவனா? என்று?
இதில் எதற்கு இத்தனை பூசி மெழுகல்? ஏனோ தெரியவில்லை, இப்படியொரு நிகழ்வு
நடந்ததாக ஸ்ரீராமானுஜ வைபவம் போன்ற குருபரம்பரைக் கதைகளும் சொல்கின்றன.
இதை இராமானுஜர் எப்படித் தீர்த்து வைத்தார்? ஸ்ரீராமானுஜருக்கோ அவர்
வழியில் வரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கோ இறைவன் என்பவன் அர்ச்சாவதார வடிவில்
(சிலை) அருள் பாலிக்கும் வாழும் தெய்வம். சிலை வடிவம் என்பது அவன் வேண்டி
எடுத்துக்கொண்டுள்ள ஒரு திருமேனி வடிவம். எனவே அதை என்றும் கற்சிலை
என்றோ, சுதை வடிவம் என்றோ அவர்கள் வாயால் கூடச் சொல்வதில்லை. அது அவன்
இஷ்டம், அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை என்பது அவர்கள் சித்தாந்தம்.
(இது விளையாட்டு விஷயமில்லை, இதைத் தத்துவ பூர்வமாகவும், பல நேரடி
நிழவுகள் மூலமும் காட்டியுள்ளனர்). எனவே இராமானுஜர், கேள்விக்குரிய
தெய்வங்களின் ஆயுதங்களை (அடையாளங்களை) வேங்கடவம் முன் வைத்துவிட்டு
நடையைச் சாத்திவிட்டார். அடுத்த நாள் பார்க்கும் போது, வேங்கடவன் சங்கு
சக்கரத்தைத் தரித்துக் கொண்டு நின்றான் என்பது சரித்திரம். உள்ளதை
உள்ளபடி சொல்லமுடியவில்லை நாவலாசிரியரால். ஏன்?
அது அறிவுக்கு ஒவ்வாதது என்று அவர் கருதுகிறார். அப்படி அவர் கருதுகிறார்
என்றால் இந்திய சமயத்தின் ஆதாரமான ஒரு கொள்கையை அவர் புரிந்து
கொள்ளவில்லை என்று பொருள். மூர்த்தி வடிவில் இறைவனைக் காண்பது இந்தியா
கொண்டுவந்துள்ள ஒரு வழக்கம். இதை மறுப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே.
இந்துவான ஆசிரியர், அதுவும் சைவப் பற்றாளரான நாவலாசிரியர் இதைப் புரிந்து
கொள்ளவில்லை என்று எப்படி இப்படிப் பிரகடனப்படுத்த முடிகிறது? அவன்
சிலையாக நிற்கிறான். so what? அப்படி நிற்பதால் அவன் ஆட்சியில் ஏதாவது
குறை உள்ளதோ? இல்லையே?
இரண்டாவது, ஸ்ரீராமானுஜ தரிசனத்தை, அவரால் என்ன செய்ய முடியும், என்ன
செய்ய முடியாது? என்று ஒரு நாவலாசிரியர் எப்படித் தீர்மானிக்கமுடியும்?
இராமானுஜர் செய்வித்தாக சரித்திரம் கூறும் நிகழ்வு நடந்திருக்க
வாய்ப்பில்லை என்று கருதி வலிந்து ஒரு புனைக்கதையை அங்கு புகுத்துகிறார்.
அதுவும் எப்படி? சொல்லுகிறேன், சொல்லுமுன் ஒன்று தெரிந்து கொள்ள
வேண்டும். ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்தபின் ரங்கன் புத்துணர்ச்சியுடன்
பல தெய்வீக நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டிய வண்ணமே உள்ளான். இன்றுவரை.
அதைப் பூலோக வைகுந்தமாக மாற்றியவர் நம் உடையவர். அவருக்கு தனது சகல
சக்திகளையும் வழங்கி அருள் பாலித்ததாகவே ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்புகிறார்கள்.
எனவே, அவர் நிகழ்த்திக் காட்டிய ஒரு நிகழ்வை நம் பகுத்தறிவு ஏற்றுக்
கொள்ளவில்லை என்பதற்காக மாற்றமுடியாது.
பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறியும் மனது எப்படிச் செயல் படுகிறது
என்பதே இன்னும் பிடிபடவில்லை! நமது மூளை எப்படிச் செயல் படுகிறது என்று
தெளிவாக, அறிவு பூர்வமாக இங்கு விளக்க முடியும். அடுத்த நூற்றாண்டின்
மில்லியன் டாலர் கேள்வி 'நினைவு" (memory) என்றால் என்ன? என்பது.
நினைவுகள் என்றால் என்ன? அவை எப்படி, எங்கே இருக்கின்றன. அதற்கு
பருண்மையான பருப்பொருள் வடிவமுண்டா? இவை இன்னும் தெரியாத புதிர்கள்.
அறிவியலே சில நேரங்களில் புதிர் நிரம்பியதாக உள்ளது. இப்படி நான் எழுதி
அனுப்பும் இந்த மின் கடிதம் எப்படி உங்கள் கைக்கு வந்து, உங்கள்
கணினியில் வாசிக்க முடிகிறது என்பது 100% விளக்கப்படக்கூடிய உண்மையல்ல.
எலெக்றானிக்ஸ் எனும் அறிவியலில் இலத்திரன் இருக்கு, இல்லை எனும்
நிலைகளில் செயல் படும் விதத்தால் சில நிகழ்வுகளை pin point செய்து விளக்க
முடியாத நிலை. எலெக்றானிஸ் வேலை செய்கிறது என்பது உண்மை. ஒரு
டிரான்சிஸ்டர் எப்படிச் செயல்படுகிறது என்பது இன்னும் 100% புரிந்து
கொள்ளப்படவில்லை. இது அசித்து பற்றிய புரிதல் என்றால், சித் ஆன மனிதனைப்
புரிந்து கொள்ள முடியுமோ? உயிர்வேதியியல் படித்தால் தெரியும் ஒரு சின்ன
நிகழ்வு, உயிர்வளி (ஆக்சிஜன்) சிவப்பு அணுவால் (இரத்தம்) ஏற்றுக்
கொள்ளப்படுகிறது. எப்படி? கிரப் சைக்கிள் என்று இதை விளக்குவார்கள். நான்
படித்த காலத்தில் அது ஒரு ஏ3 அளவு பேப்பரில் விளக்கப்பட்டத். சமீபத்தில்
ஒரு ஆய்வகம் போயிருந்த போது சினிமா போஸ்டர் போல பெரிய படம். மிகச்
சிக்கலான வழித்தடங்கள். இராசாயன மாற்றங்கள். ஆயிரத்துச் சொச்சம் வேதியல்
குடுக்கல் வாங்கல். அட! ஒரு சின்ன மூலக்கூறு உள்ளே புகுந்து பின் மூச்சாக
வெளியே வருகிறது. அதை இன்னும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பகுத்தறிவு என்ற பெயரில் இறைவனைக் கேலி செய்கிறோம். இந்த மன்றத்தில் உள்ள
எவராவது ஒரு தீக்குச்சியைத் தட்டியவுடன் தீ எப்படி உருவாகிறது, அத்தீ
எப்படி ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கிற்கு குறை படாமல் பரவுகிறது
என்று அறிவியல் பூர்வமாக விளக்கிவிட முடியுமா? தினப்படி பார்க்கின்ற ஒரு
நிகழ்வு. தீபம் எப்படித் தன்னில் குறைவில்லாமல் தன்னை பரப்பிக் கொள்ள
முடிகிறது? முயன்று பாருங்கள். அப்போது புரியும், கற்றது கைமண் அளவு
என்பது.
அறிவியலை நான் குறை சொல்லவில்லை. நான் தொழில்முறை விஞ்ஞானி.
அத்துறையில் இருப்பதால் அதன் நிறை குறை அறிந்தவன்.இராமானுஜரின் தெய்வீகச் செயல்களைக் குறைகூற மனது கூசுகிறது. குறை
மதியுடைய நம்மால் குண பூரணர்களைப் புரிந்து கொள்ள முடியுமா?
சரி, இந்நாவல் எப்படி இந்நிகழ்வை எடுத்தாள்கிறது எனப்பார்ப்போம்!
வேங்கடவன், முருகனா? அம்பாளா? சிவனா? திருமாலா? என்ற சரித்திர நிகழ்வைக்
குறைத்து சிவனா? இல்லை திருமாலா? என்று முதலில் குறைத்துக் கொள்கிறார்.
இராமானுஜர் சொன்னது கேள்விக்குரிய தெய்வங்களின் ஆயுதங்களை அவன் முன்
வைக்கச் சொன்னது. ஆனால், நாவலாசிரியர் விபூதியையும், சங்கு சக்கரத்தையும்
வைக்கச் சொல்கிறார். வேங்கடன் அடுத்த நாள் பட்டை அடித்துக் கொண்டு
நிற்பான் என்றா எதிர்பார்க்கிறார். சிவ லிங்கத்திற்குக் கூட விபூதியைப்
பூச முடியாதே. அங்கு கூட தங்கத்திலோ, வெள்ளியிலோ பட்டை போன்ற
வடிவங்களைத்தானே சூட்டுகிறார்கள்!
இவர் தெய்வம் தானாக சங்கு சக்கரத்தைச் சூடிக்கொள்ளாது என்று நம்புவதால்
(இது என்ன ஆத்திகம் பின்?) கர்ப்பக்கிரகத்தின் மேலுள்ள கற்பாறையை ஒருவர்,
அதுவும் வலுவில் குறைந்த பெண் (அது repair நிமித்தம் under
constrcution-ல் உள்ளது என்றால் கூட, ஒரு பெண்ணினால் கோயில்
நிர்மாணத்திலுள்ள ஒரு கல்லைத் தூக்கி நகர்த்திவிட்டு, உள்ளே புக
முடியாது) நகர்த்திவிட்டு உள்ளே புகுந்து சங்கு சக்கரத்தை வைக்கிறாள்
என்பது புனைவு.
முதலில் பல கோடி மதிப்புள்ள நகையுள்ள கர்ப்பகிரகத்தை, அதுவும்
மேற்கூரையைப் பிரித்து களவாடியதாக சரித்திரமே கிடையாது. it is almost an
impossible task. மதுரையைக் கொள்ளையடிக்க மாலிக் காபூர் வந்த போது சில
எளிய வழித்தட மாற்றத்தின் மூலம் அவனை ஏமாற்றிவிட்டார்கள். கதவை உடைத்து
உள்ளே புகுந்து திருடினால் ஒழிய கல் நிர்மாணத்தில் இருக்கும் ஒரு கோயிலை
மேற்கூரையப் பிரித்து எக்காலத்திலும் உள்ளே நுழைய முடியாது.
இரண்டாவது, இதுதான் பயங்கரம்! அந்தப் பெண் சங்கு சக்கரத்தை பெருமாள் சிலை
மேல் பொருத்தப் பார்க்கிறாள். அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒட்டிக்கொள்ள
மறுக்கிறது. உடனே தன் கையைச் சுவரில் இடித்து இரத்தம் பீறிட வைத்து, அந்த
ரத்ததையும் விபூதியையும் குழைத்து சிமிண்ட் போல் ஆக்கி பின் சங்கு
சக்கரத்தைப் பொருத்திவிடுகிறாள்.
எப்படித்தான் இப்படியொரு கற்பனை இவருக்குள் போனதோ தெரியவில்லை. இந்த
சிமிண்ட் விவகாரத்திற்காகத்தான் இராமனுஜர் விபூதியை வைக்கச் சொன்னதாக ஒரு
புதுக்கதை விட்டிருக்கிறார் ஆசிரியர்.
மிக, மிகப் புனிதமான திருமேனி வேங்கடவனின் திருமேனி. அந்த மலையே
புனிதமென்றும், அதில் கால் படுவதே பாவம் என்றும் கருதுவோருண்டு. அந்தப்
புனிதத் திருமேனி மீது ரத்ததையும் சாம்பலையும் பூச, கற்பனை என்றாலும்
எப்படி இவருக்கு மனது வந்தது?
அது மட்டுமல்ல, ஸ்ரீராமானுஜர் அடுத்த நாள் வந்து அவன் திருமேனி மீது
விபூதி இருப்பதைப் பார்த்துவிட்டு, புளகாங்கிதமடைந்து திருவாய்மொழிப்
பாடலொன்றைச் செப்புவதாக எழுதுவது அபத்தத்திலும் அபத்தம். இராமானுஜரை
இதற்கு மேல் அவமதிக்க முடியாது. திருவாய்மொழியில் எங்கெல்லாம் நாராயணனைச்
சிவன் என்று சொல்லுகிறார்களோ அங்கெல்லாம் கவனமாகப் பொருள்
சொல்லியிருக்கிறார்கள் பூர்வாச்சார்யர்கள். நாவலாசிரியர் புரிந்து
கொண்டுள்ள அர்த்தத்தில் ஸ்ரீராமானுஜரும் புரிந்து வைத்திருத்தார் என்று
சொல்வது நம் மடமையை அவர்மீது சுமத்துவது போலாகும். நம்மாழ்வார்
உளக்கிடக்கை என்ன என்பதை விளக்க பல நூற்றாண்டுகளாக உரையாசிரியர்கள்
முயன்றிருக்கிறார்கள். இல்லையெனில் "ஆச்சார்ய ஹிருதயம்" என்ற கிரந்தமே
தோன்றியிருக்காது. இம்மாதிரி யாரும் திருவாய்மொழியை அபத்தமாகப் புரிந்து
கொள்ளக் கூடாது என்பதற்காக வந்த நூலே, "ஆச்சார்ய ஹிருதயம்".
வேங்கடவன் மிக, மிக வைதீக தெய்வம் என்று இவருக்குத் தெரியும்தானே? வேத
மந்திரம் சொல்லும் போது இடுகாட்டில் அலையும் ருத்ர மந்திரம் வரும் போது,
அதைச் சொன்ன பிறகு வேதப் பிராமணர்கள் தங்கள் கை கால்களை சுத்தி செய்த
பிறகே அடுத்த மந்திரத்திற்குப் போவர் என்ற வேதநெறியை இவர் எப்படிப் புறம்
தள்ள முடியும்? உண்மை அப்படி இருக்கும் போது, புனிதமான அத்திருமேனி மீது
சாம்பலைப் பூசுவதென்பது அபசாரத்திலும், அபசாரம் அல்லவோ?
நாவலாசிரியர் திருவாய்மொழி அறியாதவரா? திருவாய்மொழி என்ன சொல்கிறது?
அணங்குக் கருமருந் தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய்
துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே. 4.6.7
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்து,இவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்,
கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே. 4.6.8ஆட்டிறைச்சி, கள், துணங்கு இவை எறிந்து பெருமாளை வழிபடக்கூடாது
என்றல்லாவா செப்புகிறது. வேதம் வல்லோரைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம்
பணிந்து வழிபட வேண்டும் என்றல்லவா சொல்கிறது.
இவ்வளவு இருக்கும் போது கற்பனை என்றாலும் கூட திருப்பதியை அவமதிக்க
எப்படி மனம் வந்தது?
அக்கதையில் வரும் பில்வணன் யார்? நாவலாசிரியர்தானோ?ஒரு சௌகர்யத்திற்கு இதைச் செய்பவள் முன்பு நாத்திகராக இருந்தவள் என்று
சொன்னாலும், இது நிகழும் போது அவள் மனம் மாறிவிடுகிறாள். ஒரு சாதாரண
வாசகனுக்கு இது உணர்ச்சி பூர்வமாக இருக்கலாம்.
ஆனால் ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு இது அருவெறுப்பாக உள்ளது. 1. அர்ச்சாவதாரம் என்றால்
என்னவென்று ஆசிரியர் புரிந்து கொள்ளவில்லை, 2. அற்புதங்கள் உலகெங்கும்
நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஸ்ரீராமானுஜர் செய்வித்த அற்புதமொன்றும்
ஒதுக்கத்தக்கதல்ல. அதற்காக வலிந்து ஒரு வேண்டாத கற்பனையைப் புகுத்த
வேண்டிய அவசியமில்லை. அப்படிப் புகுத்தினாலும் கொஞ்சமாவது பொருந்தும்
வண்ணம் செய்ய வேண்டும்!
மேலும், ஐதீகம் என்பது community writing என்று பார்த்தோம். அதை அப்படியே
சொல்வதே அழகு. கோபல்ல கிராமம் கதையில் ஒரு இக்கட்டான நிலையில் மரம்
வளைந்து கொடுத்து ஓடிவரும் மக்களைக் காக்கும். இது வேங்கடவனின் அருள்
என்று அம்மக்கள் நம்புவர். கி.இராஜநாராயணன் உள்ளதை உள்ளபடி
சொல்லிவிட்டார். இதற்கும் அவரொரு கம்யூனிஸ்ட். ஆனால், ஒரு தேர்ந்த கதை
சொல்லி என்பவன், மாஜிக்கல் ரியலிசம் என்று வந்தால் அதை அப்படியேதான்
சொல்ல வேண்டும். அதை இன்னும் கூட மெறுகேற்றிச் சொல்லமுடியும்.
ஆக என்ன புரிகிறது என்றால் வேங்கடவன் எப்படி திருமாலாகவும், சிவனாகவும்
இருக்கிறான் என்பதை ஆசிரியர் புரிந்து கொள்ளவில்லையென்று! அருளிச்
செயல்களைப் புரிந்து கொள்ள ஆச்சார்ய உரைகளே தெளிவு தரும் மார்க்கம்.
அவன், சிவனாகம், திருமாலாகவும் இருப்பது தத்துவம். அதை வெறும் சிலை
விவகாரமாக்குவது பக்குவமின்யைக் காட்டுகிறது
நாவலில் உள்ள structural errors. கட்டுமானப் பிழைகள்:
நாவல் முழுவதிலும் திருவாசகம் தாராளமாகப் புழங்கப்படுகிறது. திருவாசகம்
3ம் நூற்றாண்டு என்று ஆசிரியர் கருதினாலும், அதை 14ம் நூற்றாண்டிலேயெ பல
சைவ அறிஞர்கள் வைக்கின்றனர். நான்கு சமயக் குரவர்களில் கடைசியாகத்தான்
மாணிக்கவாசகரைக் காண்பது முறைமை. அப்படியிருக்கும் போது, சோழர் காலத்தில்
தோன்றியிராத ஒரு பனுவலை பாரிய அளவில் கையாள்வது பிழை. இல்லை, அது 3ம்
நூற்றாண்டுதான் என்று ஆசிரியர் கருதினால் அதற்கான ஆதாரங்களை நூலில்
காட்டியிருக்க வேண்டும்.
அதே போல் ஒரு அத்தியாத்தின் ஆரம்பத்தில் மகாகவி பாரதியை மேற்கோள்
காட்டுகிறார். ஒரு சப்பைக்கட்டு கட்டினாலும், குற்றம் குற்றமே! அன்பு
என்பதற்கான மேற்கோளாக ஆயிரம் பழமையான பாடல்களைக் காட்டமுடியும்
(instead).
திருவேங்கடவன் யார் என்று வருகின்ற ஸ்ரீராமானுஜ வசனத்தில், "கோவிந்தா, நீ
யார் என்று காட்டிவிடு என்று அவனையே கேட்டுவிடுவோம்!" என்று வரும். இது
என்னைப் பார்த்து, "கண்ணா! உன் பெயர் என்னவென்று நீயே சொல்லிவிடு" என்பது
போலில்லை :-)?
அம்மங்கைக்குக் கண்ணன் கதை பிடிக்கும்...பக்கம் 98-99.
காளிங்கன் அபயனைவிட இரண்டு வயது சிறியவன்.....(பக்.98).
அதாவது காளிங்கன் அபயனுக்குத் தம்பி. இவர்களைக் கண்ணன், பலராமன் என்று
அழைக்கிறாள் அம்மங்கை. எப்படி, தம்பியான காளிங்கனைப் பலராமன் என்றும்.
அண்ணனான அபயனை கண்ணன் என்றும்! வேடிக்கையாக இல்லை? பலராமன் மூத்தவன்.
கண்ணன் இளையவன்!!
கடைசியாக, இவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை வைத்து ஒரு
வெள்ளைக்காரன் நாவல் எழுதுகிறான் என்று வைத்துக் கொண்டால், அவன்
குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆராய்ச்சி செய்து, எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி
ஒரு மெகா நாவலைக் கொண்டு வந்திருப்பான். ஆனால், தமிழக இலக்கிய சூழலில்
அப்படியெல்லாம்
நிகழ்வதில்லை. ஆய்வு செய்யும் திறன் இல்லையா? இல்லையே! நம்மவர்க்குதான்
சூப்பரான மூளையாச்சே! பின் ஆவணங்களுக்குக் குறைவா? சே, சே! வைணவ
சரித்திரம் விலாவாரியாக ஸ்ரீரங்கத்தில் எழுதப்பட்டு உள்ளதே! உடையவர் என்ன
பேசினார், எப்படிப் பேசினார் என்பது கூட அப்படியே பதிவாகியுள்ளதே! பின்?
ஒரு வெள்ளைக்காரனுக்குள்ள துணிவு நமக்கு வாராது. நம்மை நாம்
ஸ்மார்த்தர்கள் என்றும், ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றும், சைவ சித்தாந்திகள்
என்றும் இன்ன பிற சமய அடையாளங்களை இட்டுக் கொண்டு பெரும் வலையில்
அகப்பட்டுத் தவிக்கிறோம். இந்த வலைகளிலிருந்து மீண்டு, உண்மை காணும்
துடிப்பு என்றுமே நமக்கு இருந்ததில்லை. ஏதோ வாயா வார்த்தையாக வந்த
செய்திகள், அங்கொன்றும் இங்கொன்றுமென்று கிடைத்த தகவல்கள், குழும
அபிப்பிராயங்கள் இவைகளையே நம்பியே நம் சரித்திரம் ஓடுகிறது. ஐதீகங்கள்
நிரம்பிய நாட்டில் சரித்திரம் காண்பதரிது. எனவே சரித்திரம் எழுதுகிறேன்
என்று வரும் போது நம்மையறியாமல் ஐதீகங்களே எழுதிக்கொண்டு வருகிறோம்.
மேலும், வாசகனை ஒரு பொருட்டாக தமிழக ஆசிரியர்கள் கண்டு கொண்டதே இல்லை.
இதுவே நமது 'தரக்குறைவிற்கு' முக்கிய காரணம். "இது போதும் அவனுக்கு!"
என்றொரு மனோபாவம். மேலும் வாசிப்பவன் யார்? என்றே தெரியாத ஒரு சூழல்.
முன்பு மணியன் என்றொருவர் எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுத்தெல்லாம்
வீட்டில் விகடன் வாசிக்கும் 'மாமிகளையே' மனதில் கொண்டு வந்ததாகும்.
அப்படியானதொரு வாசகப் பார்வை வறட்சி. ஆனால் வெளிநாட்டில் ஒரு நாவல்
எழுதும் முன், பயப்படுகிறான். அவன் வாசகர் வட்டம் அறிவு பூர்வமானது என்று
நம்புகிறான். எங்காவது தவறாக எழுதிவிடின் மானம் போய்விடும் என்று
பயப்படுகிறான். இதற்கெல்லாம் மேலாக அவன் வாசகனை மதிக்கிறான். அவனுக்கு
'தரமான' நாவலை வழங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான்.
திருமலைத் திருடன் நாவல் இன்னிலைக்கு உயர்ந்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பை
ஆசிரியர் தவற விட்டு விட்டாரோ என்றொரு சந்தேகம் வந்து நிற்கிறது நாவலைப்
படித்து முடித்த போது!! முன்னுரை எழுதிய சிற்பி பாலசுப்பிரமணியம் இதை
உணர்ந்துதானோ, சரித்திர நாவல் எழுதுவது என்பது கத்தியில் நடை பயிலுதல்
போல என்று எழுதியிருக்கிறார்!!
--~--~---------~--~----~------------~-------~--~----~
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---
Labels: THIRUMALAI THIRUDAN - FROM THE HEART OF DR.N.KANNAN