வயோதிகமும் வானப்பிரஸ்தமும்
மிகவும் வயதானவர் நோய்வாய்ப்பட்டுவிட்டார்.. கட்டிலில் படுத்துக்கொண்டு காலன் வருகைக்காகக் காத்திருக்கும் கடைசிக்கட்டம்.. மனதில் பல நினைவுகள் தோன்றித் தோன்றி மறைந்தாலும் எதையும் வாய்விட்டுப் பேசமுடியவில்லை. வார்த்தை புரளுகிறது. கட்டிலைச் சுற்றி உள்ள உற்றார் உறவினர்கள் ஏதோ கேட்கிறார்கள். பாதி புரிகின்றது.. மீதி புரியவில்லை.. அந்தக் கடைசி கட்டத்திலும் கேள்வியின் சாரம் புரிகின்றது. தெரிந்தவர்களிடம் யார் யாரிடம் எத்தனை காசுகள் கொடுத்து வைத்துள்ளாய், விவரம் சொல்’ என்கிறார்கள். இன்னும் வேறென்ன ஒளித்து எந்தந்த இடத்தில் வைத்திருக்கிறாய், மேலே போவதற்குள் வாய்திறந்து சொல்லிவிடு என்கிறார்கள். ஒரு மகன் ஒரு குறிப்பிட்ட நிலத்தை தனக்குதான் எழுதிவைக்க மன்றாடுகிறான். இன்னொருவன் வேறு ஏதோ சொத்துக்காக கையில் பத்திரம் வைத்துக்கொண்டு கையெழுத்தைப் போடு என்கிறான்.. கட்டிலில் படுத்தவர்க்கோ இத்தனை கேள்விகளிலும் ஓர் ஆனந்தம்.. தான் கடைசியில் கட்டையில் போவதற்கு முன் இத்தனை உறவினர்களையும் ஒரு சேரப் பார்த்துவிடுகிறோமே என்று.. ஒவ்வொருவருக்கும் முறையே அவர்கள் தேவைக்கான பதிலைச் சொல்ல வாய் திறந்தாலும் நாவிலிருந்து சொல் ஏதும் வரவில்லை.
இந்தக்
கட்டத்தைதான் பல்லாண்டுகளுக்கு முன்பு (ஏழாம் - எட்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்த பெரியாழ்வார் ஒரு பாடலில்
நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். அதாவது இப்படி ஒரு கட்டம் வயதான காலத்தில்
எல்லோருக்கும் வருவது சகஜம் என்றாலும் ஆண்டவனை முன்னமேயே முறையாக நினைத்துப்
பழகியவருக்கு இந்தக் கடைசி கால கட்டங்களை எளிதில் சமாளிக்கலாமென்பார்
சோர்வினால்பொருள்வைத்த துண்டாகில்
சொல்லுசொல்லென்று சுற்றுமிருந்து
ஆர் வினவிலும் வாய்திறவாதே
ஆர் வினவிலும் வாய்திறவாதே
அந்த காலம்அடைவதன் முன்னம்
மார்வமென்பதோர் கோயிலமைத்து
மார்வமென்பதோர் கோயிலமைத்து
மாதவனென்னும் தெய்வத்தைநாட்டி
ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு
ஆர்வமென்பதோர் பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே
சமீபத்தில் விசாகப்பட்டினம் அருகே ’வானப்பிரஸ்தம்’ என்ற ஒரு இடம் சென்றிருந்தோம். அங்கு சென்று வந்த பிறகு மேற்கண்ட பாடல்
அடிக்கடி என் நாவில் வருகிறது. அதைப் பற்றிய பதிவுதான் இது.
வேதகாலத்தில்
அதன் பின்னர் வந்த காலங்களிலும் வானப்பிரஸ்தம் (வாநப்ரஸ்த) என்பது
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைப் பயணத்தில் இன்றியமையாத ஒன்று என்று சொல்லப்படுகின்றது. மனிதனின்
வாழ்க்கைப் பயணத்தை நான்கு வகையாகப் பிரிப்பர். பிரம்மச்சரியம், கிருஹாச்ரமம்,
வாநப்ரஸ்தம், ஸன்யாசம் என்பர். அதாவது ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக் கடமைகளை
சரிவர முடித்தபின் வானப்பிரஸ்த முறையில் காடு செல்லவேண்டும். காட்டிலேயே எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து
காலத்தைக் கழிக்கவேண்டும். இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது. கணவன் மனைவியாகவே
கடைசிகாலத்தை வானப்ரஸ்தத்தில் கழிப்பர். வானப்பிரஸ்தம் என்றால் காடேகுதல் அல்லது
காடு புகுதல் என்றும் சொல்லலாம்..
பழைய புராணக் கதைகளில் இப்படிப்பட்ட வானப்பிரஸ்தக் கதைகளைப்
படித்திருக்கிறோம். வேதகால மன்னர்கள் அனைவருமே தம் கடைக் காலத்தை இப்படிக் கழித்ததாக
புராணம் சொல்லுகிறது. மகாபாரதக் கதையில் இளவயதிலேயே தன் அண்ணன் திருதராஷ்டிரனை
மன்னனாக்கிவிட்டு பாண்டு மன்னன்
மனைவியரோடு வானப்பிரஸ்தம் ஏகினான் (அதன் பின் அங்கே அந்த வாழ்வில் பிள்ளைகளைப்
பெற்ற கதைகளுக்கெல்லாம் நான் போகப்போவதில்லை). தமிழ்ப் பெருங்காவியமான சீவக
சிந்தாமணியில் கூட சீவகன் எல்லா மனைவியரோடும் நீண்டகாலம் சுகமாக இருந்து ஜீவித்து,
அரசாண்டு, கடைசியில் வானப்பிரஸ்தம் ஏகுவதைப் படித்ததும் நினைவுக்கு வருகிறது.
அதாவது வயதான
காலத்தில் இந்த இகபரசுக உலகின் எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு,
சொந்தபந்தங்களை ஒதுக்கி விட்டு கண்காணா இடத்துக்குச் சென்று விடுவதுதான்
வானப்பிரஸ்தம் என்று பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
நாங்கள்
அப்படியாகப்பட்ட ஒரு வானப்பிரஸ்தத்தை இந்தக் காலக் கண்கொண்டு பார்த்தோம். அங்கே
உள்ளவர்களின் கதை ஏறத்தாழ பழைய வேதகாலக் கதைபோலத்தான் என எடுத்துக் கொண்டாலும் ஒரு
சில வேறுபாடுகள் (அவை நல்லவையோ அல்லவையோ) கண்டோம்.
இந்த வானப்பிரஸ்தத்தில்
வந்து தங்கும் முதியோர் பெருமக்கள் ஏழைகள் அல்ல. காட்டில் அலைந்து திரிந்து கண்டதை
உண்டு கடவுளை நினைத்துக் கொண்டு எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் கூட்டமும் அல்ல.
இத்தனைக்கும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் மாதாந்திர வருமானம்
வந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும் இடமும் சோலைகள் சூழ்ந்த இயற்கைக் காட்சிகள்
நிறைந்த இடம்தான். வேளா வேளைக்கு நல்ல சுகாதாரமிக்க ஆகாரங்கள், பொதுவான ஒரு
அறையில் ரசித்துக் கொண்டே காணவேண்டி ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, கம்ப்யூட்டர்,
நெட், தியான அறை என்று சொகுசாக வாழ்க்கைப்பயணம் செல்வதற்கான எல்லா வசதிகளும் கொண்டதுதான்
இந்த வானப்பிரஸ்தம் என்று நேராகப் பார்த்துத் தெரிய வந்ததுதான். இது முதியோர்
இல்லம் அல்ல, முதியோர் விருந்தினர் மாளிகை என்ற முடிவுக்குக் கூட யாராலும்
வரமுடியும்.
ஒவ்வொருவரையும் நலம்
விசாரித்தோம்.. வானப்பிரஸ்தத்தில் வசதிகளுக்கு ஒரு குறையும் இல்லை என்றுதான்
அவர்கள் நா சொல்கிறது. ஆனால் அவர்களோடுப் பேசப்பேச அங்குள்ளோர் உள்ளங்களில்
தேங்கிக்கிடக்கும் ஏக்கங்களும், எத்தனைதான் அத்தனைத் தேவைகளும் அவ்வப்போது
பூர்த்தி செய்யப்பட்டாலும், தனிமை என்றொரு கொடுமை அவர்களை எப்படியெல்லாம்
வாட்டுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். வேதகால மக்கள் வயதான காலத்தில் கடமையை முடித்த கையோடு உள்ளத்தில் உவகையோடு வானப்பிரஸ்தம்
சென்றார்கள். ஆனால் இங்கிருக்கும் மக்கள் அப்படி அல்ல என்றும் புரிந்த்து. ஆனாலும்
இவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை இது என்பதால் வெளியே புன்சிரிப்பும் உள்ளே
வேதனையும் கலந்த இந்த வாழ்க்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி வருகிறார்கள்
என்றுதான் தோன்றியது.
இவர்கள் தங்கள்
பிள்ளை குட்டிகளைப் பிரிந்திருந்தாலும் அவர்களைக் குறை சொல்லவில்லை என்பது
முக்கியம். தாம் பெற்ற செல்வங்களின் தற்காலத்து நிலைமை அவ்வாறு தம்மைப்
பிரித்திருக்கிறது என்கிறார்கள். அதே சமயம் அப்படிப் பிரிந்து வந்ததில் ஏராளமான
வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்த
வானப்பிரஸ்த வாழ்வில் எத்தனைதான் அமைதியான சூழ்நிலையில் அரவணைப்பில் ஆதரவாக இங்கு
இருந்து வந்தாலும் சொந்தங்களின் அமர்க்களத்துக்காகத்தான் அவர்கள் மனம் ஏங்குகிறது.
சண்டையோ சச்சரவோ எதுவானாலும் குறையில்லாமல் அவர்களுடனேயே அனுசரித்துப் போவதைத்தான்
அந்த மனங்கள் விரும்புகின்றன. அத்தான் அம்மான் உறவிலிருந்து அம்மா அத்தை உறவு வரை
அத்தனை உறவுக்கூட்டத்தையும் கிட்டவைத்துப்பார்க்க வேண்டும், மகன், மருமகள், மகள், மாப்பிள்ளை, பேரன்
பேத்திகள் சுற்றம் இவை சூழ்ந்த நிலையைத்தான் மனம் வெகுவாக விரும்புகிறது.
மேலை நாடுகளில்
இத்தகைய ‘இண்டிவிஜுவல்’ வாழ்க்கை வெகுகாலமாக இருந்து வருகின்றன. இளமைக் காலம் முதலே
அவர்கள் அதற்குப்
பழக்கப்பட்டுவிட்டார்கள். இன்னும் சற்று விளக்கிச் சொல்ல வேண்டுமென்றால் தனிமை வாழ்வை விரும்பி ஏற்றுக்
கொள்பவர்கள் மேலைநாடுகளில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தனிமையையும், தனிமையின்
இன்பத்தையும், இன்பத்தில் கிடைக்கும் சுதந்திரத்தையும் வெகுவாக ரசிப்பவர்கள்.
ஆனால் பாரதம்
ஆரம்பத்திலிருந்தே மேலைக் கலாசாரத்தோடு வேறுபட்டே இருக்கின்றது. உணர்ச்சிகளுக்கும்,
பந்தபாசத்துக்கும் இங்கே அதிகம் பங்குண்டு. இதுவரை இப்படித்தான்.. இனியும் இப்படித்தானோ என்பது நிச்சயம் கேள்விக்குறிதான்..
இந்தக் கேள்விக்குப் பதில்சொல்வது போலத்தான் நம் நாடெங்கும் ஏராளமான வசதியான வானப்பிரஸ்தங்கள்
ஏற்கனவே வந்துவிட்டன.
சரி, மேலே
பெரியாழ்வார் பாடலுக்கு வருவோம். கடைசிகாலக்கட்ட்த்து மனிதனுக்குத் தெய்வத்தின்
அருள் வேண்டும் என்பதற்காகப் பாடிய பாடல் இது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் பெரியாழ்வார் பாடலின்
நாயகனுக்கு அத்தனைக் கஷ்டத்திலும் ஒரு சுகம் உண்டு. அந்தக் கடைசி கட்டத்திலும் அவனைச் சுற்றி
உற்றாரும் சுற்றாரும் இருக்கின்றனர்.
அப்போதெல்லாம் கூட்டுக் குடும்பம்தான்.. மக்கட்செல்வமும் உறவினரும்
எந்நேரமும் கூடவே இருப்பர். வயோதிகம் என்பது எல்லோருமே கடந்து செல்லும் பாதைதான் என்பதை
இப்போதைய மனிதரை விட நன்றாக உணர்ந்தவர்கள். ஆகையினால் வயோதிகர் ஒரு சுமை அல்ல அவர்களுக்கு.
எத்தனைதான் செல்வம் சேர்த்து அதைச் சரிவரப்
பங்கிடமுடியாமல் வாய்பேச முடியாமல் அந்த வயோதிகர் வானுலகம் சென்றாலும் தான் போகும்போது அத்தனை
சுற்றத்தையும் ஒரு சேர பார்த்துவிட்டோமே என்ற மனத் திருப்தி மட்டும் நிச்சயம்
இருந்திருக்கும். மண்ணில் பிறந்து வாழ்ந்து அதே மண்ணில் புதையுண்டு போகும்போது
மற்றவர்களும் அந்தத் திருப்தியைத் தந்தனர்.
ஆனால் இப்போது வயதான காலத்தில், நோய் வந்து காலன் நெருங்கும்போது மனிதன் இப்படியெல்லாம் இருக்க நேரிடுமா?.. உதிரம் கொடுத்துப் பெற்றெடுத்த பிள்ளைகளும் அந்த நேரத்தில் உற்றார்
உறவினர்களும் சுற்றும் இருப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியுமா.. பணமோ செல்வமோ பாசத்தை
அள்ளித் தரமுடியுமா, வயோதிகர்களின் தனிமைத் துயரத்தைப் போக்கும் வழிதான் என்ன.. இவர்களின்
ஏக்கப் பார்வைக்கு என்ன பதில்..
நீண்டதொரு பதில் ஏக்கம்தான் நமக்கும் அவர்களிடமிருந்து
தொற்றிக்கொள்கிறது….
(படங்கள் அனுமதி பெறப்பட்டது)