Sunday, September 04, 2011

4. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா


கற்றாரும் கல்லாரும் உருகுகவி
வாதவூர் கருணை வள்ளல்


என திருக்குற்றாலப்புராணப்பாடலில் சொல்லியபடி திருவாசகம் எனும் தேன் வாசகம் எம்மைப் போன்ற கல்லாதாரையும் உருகிக் கனிய வைக்கும் என்பதை உணர்ந்ததால், திருவாசகத்தின் தேனைப் பார்த்துக் கொண்டே, அதைப் பருகாமல், இந்தக் கட்டுரைக்குத் தேவையான அங்குள்ள சில தேவையான சொல்வளங்களை மட்டும் இங்கே எடுத்துப் போடுகிறேன்..

நாயினேனை நலமலி தில்லையுட்
கோலமார்தரு பொதுவினில் வருகென (கீர்த்தி திருவகவல்)

எத்தனை அடக்கம் தன்னைப் பற்றி மாணிக்கவாசகருக்கு பாருங்கள். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆதிசிவனையே குருவாகப் பெற்று அவர்தம் வாக்கினால் ’தில்லைப் பொதுமன்றில் தன்னைக் காண வருக’ என்ற கட்டளையை ஏற்று, திருப்பெருந்துறையிலிருந்து தில்லை செல்கிறார் வாதவூரரர். கீர்த்தித் திருவகவல் எனும் அவர் அருளிய பாடல் இறைவனின் அருட்செயலைக் கூறுவதாகும்.

அத்துடன் இந்தப் பாடலில் தன் வரலாற்றையும் ஆங்காங்கே தேன் தூறலாக தூவித் தருகிறார். புரவிகள் வாங்கும் வழியில் இறைவன் ஆட்கொண்டதும், குருவாய் அருள் பாலித்ததும், பாண்டியன் பார்வையில் பல திருவிளையாடல் (பரியை நரியாக்கியது போன்றவை) செய்தும், இறைவன் மாணிக்கவாசகர்தம் மகிமையை உலகுக்குக் காட்டியதும் மிக அழகாக கீர்த்தித் திருவகலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி தில்லை வருகவெனப் பணித்ததும் அவர் தில்லை செல்லும் வழியில் சிவன் அருளிய திருத்தலங்களை வலம் வருகிறார். கீர்த்தி திருவகலே தில்லையில் பாடப்பெற்றதாகும். அவற்றில் பல திருத்தலங்கள் மூவர்களால் பாடப்பட்ட பெருமையைப் பெற்றதாகும் சில திருத்தலங்கள் பெயர் இன்றும் அழிந்தோ மறைந்தோ போயின. அப்படிப் பெயர்கள் மறைந்துபோன ஊர்கள் சில:

கல்லாடம், கோகழி, நந்தம்பாடி,ஓரியூர், சந்திரதீபம், பாண்டூர், சாந்தம்புத்தூர் போன்றவை.

"பூவலமதனிற் பொலிந்தினிதருளி பாவ நாசமாக்கிய பரிசும்" – யான் இந்த பூமியை வலம் வந்து மேற்கொண்ட தலயாத்திரையில் வழிபட்ட தலங்கள் எல்லாம் அழகிய காட்சி தந்து என் பாவங்களை நாசம் செய்த இயல்பு - என்று தில்லையாண்டவனை நோக்கிப் பாடிய வாதவூரார் தமிழகம் மட்டுமல்லாமல் இன்றைய ஆந்திரமாநிலத்தில் உள்ள நல்லமலை வரை சென்று வந்ததையும், மேலைக் கர்நாடக மலை, மற்றும் மேலைக் கடலோரம் போன்றவைகளையும் குறிப்பிடுகிறார். இன்றைய நல்லமலைத் தொடர், கிழக்கு, தென் மேற்காக சென்று சற்று பிரிந்து மேற்குமலைத் தொடரைச் சேர்ந்து இணைந்து கொள்ளும். இந்த நல்ல மலை பழைய காலத்தில் மகேந்திர மலை என்பதாக் அழைக்கப்பட்டதாகவும், பின்னர் திருப்பருப்பத மலை என்ப் பெயர் பெற்றதாகவும், பின்னரே நல்லமலை என்ற பெயரில் இருப்பதாகவும் சைவ வரலாற்றுப் புத்த்கங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீசைலம்,, அஹோபிலம், திருமலைக்கோயில்கள் இத் தொடர்மலையில் இருப்பனவாகும்.( The earliest known historical mention of the Hill - Srisailam, can be traced in Pulumavis Nasik inscription of 1st Century A.D.) “மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித்தருளியும்” என்று அவர் கீர்த்தித் திருவகலில் ஆரம்பவரிகளில் தொடங்கும்போதே இது புரியும். ஸ்ரீசைலமலைக் கோயில் சரிதத்தில் இறைவன் ஸ்ரீசைலத்தில்தான் அம்பிகையை தன்னிடத்தே கொண்டு உலகையே உற்பவித்தான் என்பதாக வரும். வாதவூரரின் கீர்த்தித் திருவகலில் இளைய வேடன் போல இறைவன் சென்று அங்குள்ள வேட்டுவ மகளாகப் பிறந்த பார்வதிதேவியை மணந்த செய்தி வருகின்றது, இந்தக் காட்சி இன்றைக்கும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவின் போது உறசவவிழாவாக நடத்தப்படுகிறது. பின் அங்கிருந்து கன்னடநாடு என தற்போது அழைக்கப்படும் பகுதிகளுக்கும் சென்று வந்ததை ”பஞ்சப்பள்ளியில் பான்மொழி தன்னோடும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் வாதவூரர் குறிப்பிடும் பஞ்சப்பள்ளியும் கர்நாடக பஞ்சஹல்லியும் ஒன்றா என்பது தெரியவில்லை. இன்றைய பஞ்சிம் (கோவா) முன்னொரு காலத்தில் அக்ரஹாரப் பெயராக பஞ்சஹள்ளி என்று பெயர் பெற்றதாக கூகிளில் ஒரு செய்தி உள்ளது. http://en.wikipedia.org/wiki/Villages_and_Agraharas_in_Goa_and_their_ancient_names

ஆனால் கோகழி என்ற ஊரைப் பற்றிய பழைய செய்திகள் இந்த கோகழி என்பதும் கர்நாடகத்தில்தான் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. கோகழி என்பது ஆந்திரத்தைச் சார்ந்த ஊர் என திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியனார் சொல்வதை வைத்து ஆந்திரத்தில் உள்ள ஒரு சிவத்தலம் என்று சொல்வோரும் உண்டு. கோகழி என்பதன் தமிழ்ப்பதத்தின் பொருள் திருவாவடுதுறையே என்பதால் குடந்தை அருகே உள்ள திருவாவடுதுறையைத்தான் மாணிக்கவாசகர் குறிக்கிறார் என்றும் சில நூல்கள் சொல்கின்றன. ஆனால் இங்கே இன்னொன்றைக் கவனிக்கவேண்டும் கோகழி எனும் ஊரின் சொல்லாட்சி திருவாசகத்தில் ஐந்து இடங்களில் வருகிறது என்பதிலிருந்து கோகழி ஆண்ட குருநாதர் மிக அதிகமாகவே வாதவூரரைக் கவ்ர்ந்திருக்கிறார் என்பதும் புரியும். கர்நாடக மாநிலத்து மேற்குக் கரையோரம் கார்வார் அருகே காணப்படும் ஆத்மநாதர் (முக்திநாதர்) கோயில் கொண்டுள்ள கோகரணமும் கோகழியும் ஒன்றா எனப்தையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பரும் சம்பந்தரும் கோகரணத்தைப் பாடிய பதிகங்கள் உள்ளன. ஆதி காலத்தில் இந்தப் பழைய பதி கோகழி எனப் பெயரில் வழங்கப்பட்டதா என்றும் ஆராய வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில் மாணிக்கவாசகர் தமிழ் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பழக்கமான சில சிவத்தலங்களையும் குறிப்பிடுகிறார். திருவாரூர், திருவிடைமருதூர், கடம்பூர், திருவாஞ்சியம், குத்தாலம் (இது துருத்தி என மணிவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது,) சீர்காழி (இது கழுமலம் என்று மணிவாசகரால் குறிப்பிடப்பட்டாலும் திருஞானசம்பந்தரும் சீர்காழியை பல நாமங்களால் தொழும்போது அதில் கழுமலம் என்ற பெயரும் உண்டு), திருவண்ணாமலை, திருப்பராய்த்துறை, திருவெண்காடு, திருவையாறு (இவை சோழநாட்டுத் திருத்தலங்கள்), திருவாதவூர், திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கையூர், திருப்பூவணம், மதுரை, குற்றாலம் போன்ற பாண்டி நாட்டுத் தலங்களும், காஞ்சி, திருக்கழுக்குன்றம், திருவெற்றியூர் போன்ற தொண்டைநாட்டுத் திருத்தலங்களும் அடங்கும், மலைநாடு எனப் பொதுவாக சேரநாட்டை அழைத்தாலும் மலைநாட்டுத் திருத்தலங்கள் ஏதும் காணப்படவில்லை. தேவூர் என்ற ஒருதலத்தில் நடந்த சிவன் திருவிளையாடலைப் பற்றி ஒரு இடத்தில் பாடுகிறார். இது ராமேவரத்தையோ அதன் அருகே உள்ள ஒரு தீவையோ குறிக்கிறது என்பர் சிலர். தேவூர் பற்றியும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.

தேவார மூவர் பாடிய மொத்தத் திருத்தலங்கள் 275 தலங்களாகும் இவற்றில் தமிழகத்தில் மட்டுமே 266 தலங்களும், ஆந்திரத்தில் இரண்டும், இலங்கையில் இரண்டும், கருநாடகத்தில் ஒன்றும், வடநாட்டில் நான்கும் அமைந்துள்ளன. மூவர் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லையென்பதும் முன்பே எழுதினோம். அதே சமயத்தில் திருவாசகம் முழுதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஏனெனில் தில்லை இறைவனே முன்னின்று அவர் பாடிய பாடல்களை மறுபடி பாடவைத்து எழுதினான் என்பதை ’வாதவூரர் பாட சிற்றம்பலத்தான் எழுதியது’ என்ற குறிப்பின் மூலம் காணலாம். வாதவூரர் காலத்தில் அவர் சென்ற போது உள்ள கோயில்கள் இத்தனைதானா என்ற கேள்வி கேட்கத் தோன்றும். ஷேத்திரத் திருவெண்பா எழுதிய ஐயடிகள் காடவர்கோன் கூட 23 ஷேத்திரங்கள் பற்றித்தான் எழுதினார், அதில் ஒன்று வடநாட்டு உஜ்ஜயினி கோயில் பற்றியது என்பதும் நாம் அறியவேண்டிய ஒன்று.

அடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் சமயங்களில் நிலையை பார்ப்போம். மகாபாரத காலத்துக்குப் பிறகு, இப்பூவலகில் எந்தக் காலத்திலும் சமயத்தை அடிப்படையாக வைத்து மனிதர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதோ, உயர்த்திக் கொள்வதோ, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதோ அன்று முதல் இன்று வரை அப்படியே தொடர்கிறது. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அறிந்தோ அறியாமலோ அவன் பிறக்கும்போதே சமய முத்திரையுடன் பிறக்கும் அவலம் இந்த உலகில் இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.

மாணிக்கவாசகர் பாடலிலிருந்தும் அவர் காலத்தில் இருந்த இந்த சமயவேற்றுமைகள் பளிச்செனத் தெரியத்தான் செய்கின்றன.

திவாகர்

(மேலே உள்ள படம் - 1870 ஆண்டைய தில்லை கோயில் - நன்றி விக்கி தளம்.

இன்னும் வரும்