Saturday, June 16, 2012

ஏடு தந்தானடி இறைவன்

    ஏடு தந்தானடி இறைவன் !

                                      

 ஏடு தந்தானடி தில்லையிலே
அதைப் பாடவந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட

ராஜராஜ சோழன் திரைப்படத்தில் தேவாரப் பாடல்களின் பெருமையைக் கூறும் இந்தப் பாடலை எஸ்.வரலட்சுமியின் குரலில் எல்லோரும் கேட்டிருப்போம்.

 பழந்தமிழ் தெய்வீகப்பாடல்கள் என்றால் முதலில் தமிழர்தம் நாவில் வருவது தேவாரம் என்ற சொல்தான்.. 'நாவிற்கினியது தேவாரம்' என்போர் பெரியோர். ’நல்லோர் நாவில் நவில்வது தேவாரமே’ என்ற வாசகத்தை தென்னாட்டில் சில சிவன் கோவில்களில் எழுதி வைத்திருப்பதைக் காணலாம். தேவாரப்பாடல் எல்லாமே ‘பண்ணோடு’ கிடைத்திருப்பதால் இசையோடு கலந்த தேவாரப்பாடல்களே தமிழகத்தின் ஆதி இசைப்பாடல் என்று கூட சொல்லலாம். ஒருமுறை திருவானைக்கா ஜம்புகேசுவரர் சன்னிதியில் ஒரு பெண்மணி தனியாக ஒரு மூலையில் கண்ணீர் பெருக தேவாரம் பாடிக்கொண்டு இருந்ததை நெகிழ்ச்சியாகப் பார்த்ததுண்டு. தேவாரம் பாடும்போதே அதன் பொருளை உணர்ந்துகொண்டு பாடினோமேயானால் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான கட்டங்களை நாமும் அனுபவிப்போம். தேவாரப் பாடல்களில் பல பாடல்கள் இன்னின்ன பலன்களைத் தருகின்றன என்று பட்டியலே இடலாம். தமிழகத்தில் பலர் இல்லத் திருமணங்களில் இப்படிப் பலன் தரக்கூடிய தேவாரப் பாடல்கள் சிறு சிறு புத்தகங்களாக அச்சடிக்கப்பட்டு திருமணத்தில் பங்கு பெறுவோருக்கு இலவசமாகத் தருவதைப் பார்த்திருக்கிறோம்.

இந்தத் ’தேவாரம்’ என்ற பெயர் இந்தப் பாடல்களுக்கு எப்படி எப்போது வந்திருக்கும் என்ற கேள்வி என்னுள் வெகு நாட்களாகவே உண்டு. அவ்வப்போது இவை பற்றிக் குறிப்புகள் கிடைக்கும்போதெல்லாம் பத்திரப்படுத்திக்கொள்வதுண்டு. அத்துடன் இந்தத் தெய்வீகப் பாடல்கள் மூவர் காலத்திற்குப் பின் சில நூறு ஆண்டுகள் மறைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே, அதுவும் சரிதானா என்ற கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. ராஜராஜ சோழன் தில்லையில் தேவார ஏடுகளைக் கண்டெடுக்காவிட்டால் தேவாரம் எனும் பொக்கிஷம் நமக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதற்கேற்றாற்போல சமீபத்தில் ஒரு பெரிய சரித்திர ஆய்வாளரின் கட்டுரை ஒன்று படித்தபோது அவர் பெரிய கோவில் கட்டிய ராஜ ராஜ சோழன் தான் இந்தப் பாடல்களுக்கு தேவாரம் என்று பெயர் கொடுத்து கோவில்களில் வழிபடச்செய்தான் என்று வேறு எழுதி இருந்தார்.

ஆனால் அவர் கட்டுரையில் பல தகவல்கள் அவர் எண்ணங்களுக்கு உகந்தவாறு எழுதியிருந்ததால் அதைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் இந்த தேவாரம் எனும் சொல் இந்தப் பாடல்களுக்கு யார் பெயரிட்டார்கள், நடுவில் எங்கேதான் இந்தப் பாடல்கள் போயின, இதைப் பற்றி ஏன் சரியான முறையில் ஆராயக்கூடாது, - தேடுவோமே, என்ற பிடிவாதம் தோன்றியதால் வந்த வினைதான் இந்தப் பதிவு. பல கல்வெட்டுகள், சில இலக்கியங்கள் என்னுடைய இந்த சிறிய ஆராய்ச்சிக்குக் கை கொடுத்தன. முடிந்தவரை தவறுகள் வராமல் தொடரவேண்டும் என்பது என் விருப்பம். அப்படி தவறுகள் தென்பட்டால் உடனடியாகத் தெரிவிக்கவும். தவறுதான் எனத் தெரியும்
பட்சத்தில் திருத்திக்கொள்கிறேன்

.                                           

திருமுறைகளில் முதல் மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார் ஆகியோர் நடையாய் நடை நடந்து, நாடெங்கும் சென்று, சாதாரண மக்களோடு கலந்து, கோவில்கள்தோறும் தரிசித்து மனமுருகி இறைவனைப் போற்றிப் பாடிய பாடல்களைத்தான் நாம் இப்போது 'தேவாரம்' என அழைக்கிறோம். ஆனால் இந்த ’தேவாரம்’ எனும் தமிழ்ச்சொல் தமிழ்நாட்டில் அந்த நாட்களிலேயே பேச்சு வழக்கில் இருந்தாலும் இந்தத் தெய்வப் பாடல்களுக்கு தேவாரம் எனும் தலைப்பு அப்போதுக் கொடுக்கப்படவில்லை. எல்லாப் பாடல்களும் பத்து பாடல்கள் வகையாகப் பாடியிருந்ததால், ‘திருப்பதியம்’ என்றே இந்தப் பாடல்கள் அழைக்கப்பட்டன. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மூவர் முதலிகளால் பாடப்பட்ட இந்த தெய்வீகப்பாடல்கள் ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம்பி ஆண்டார் நம்பி அவர்களுக்குக் கிடைத்த இறைவன் சமிக்ஞையின் பேரில், ராஜராஜ சோழனால் தில்லைக்கோயிலில் திருச்சுற்றில் உள்ள அறையொன்றில் ஓலைகளாகக் கண்டெடுக்கப்பட்டு அவற்றை முறை செய்ததாக வரலாறு சொல்கிறது. இந்த நிகழ்வினை உறுதி செய்து மேலும் இருநூறு ஆண்டுகள் கழிந்தபின்னர் (பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதி) சைவ சித்தாந்த ஆச்சாரியர் உமாபதி சிவம் அவர்களால் அழகிய தமிழால் பாடப்பட்டது கூட..

வரலாறு உண்மையே. திருவாரூர் கோவிலில் சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழன் தேவாரப்பாடல் ஒன்றைக் கேட்கப்போய், அதன் சுவையில் ஒன்றி, மொத்த பதிகத்தையும் பாடி அருளும்படி அந்த பக்தரைக் கேட்டானாம். ஆனால் அதற்குப் பதில் சரிவரக் கிடைக்கவில்லையாதலால, அவைகளை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று நாடுதோறும் தேட ஆரம்பித்தான்.. அச்சமயம் திருநாறையூரில் பொல்லாப்பிள்ளையார் அருளால் நம்பி ஆண்டார் நம்பி மூலம் இந்த ஓலைகள் முழுதும் தில்லையில் உள்ளது என்ற செய்தி கிடைத்ததும், அவரையும் அழைத்துக்கொண்டு தில்லைக்கோயிலில் திருப்பதியப் பாடல் ஓலைகள் கண்டெடுக்கப்பட்டதும், நம்பி ஆண்டார் நம்பியவர்கள் ஏழு திருமுறைகளாக வகுத்து முறை செய்ததும் எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வுதான்.

இப்படியிருக்கும்போது இடைப்பட்ட முன்னூறு ஆண்டுகள் அதாவது எட்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு முடிவு வரை இந்தப் பாடல்கள் பாடப்படவில்லையா.. தெய்வீகப்பாடல்கள் ஆயிற்றே.. அதுவும் அதே சமயத்தில் மூவர் முதலிகளின் பாடல்கள் அவர்கள் காலத்திலிருந்தே அழியா வரம் பெற்றவை. அதில் பல பாடல்களால் அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டவை.. அப்படி இருக்கையில் முன்னூறு ஆண்டுகள் ஏன் மறைந்திருக்கவேண்டும்.. ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் – இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா..

ஆனால் மூவர் பாடிய பாடல்களுக்கு என்றுமே, அது இடைப்பட்ட காலமாக இருந்திருந்தாலும், அழிவில்லைதான். அவர்களின் பாடல்கள் ராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பேயே கோவில்கள்தோறும் பாடப்பட்டு வந்தன.

இவற்றைப் பற்றிய சில விவரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.To be continued...