Tuesday, August 30, 2011

2. மாணிக்கவாசகர் மூவருக்கு முன்னவரா, பின்னவரா?

திருமுறையில் மாணிக்கவாசகர் பாடல்களை முறையாகத் தொகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பி அவர்கள் ஒரு பாடலில் வாதவூரர் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்

வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை வண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி, பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சைவப் பெருந்தகை நம்பியாண்டார் நம்பி திருவாதவூரரைப் பற்றி தம் ’கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ (பதினோராம் திருமுறை) எனும் பாடலில் (58) வாதவூரரைப் பற்றியும், வாதவூரர் பாடிய சிற்றம்பலத்திருக்கோவைப் பாடல்களைப் பெருமைப் படுத்தியும் எழுதிய பாடல் இது,. அவர் பாடிய திருக்கோவைப்பாடலுக்கு மற்ற கோவைப்பாடல்கள் இணையாக வராது என்பதை இங்கே குறிப்பிடுகிறார். (பின்னே! தில்லையம்பலத்தானே அந்தணன் உருவில் நேரில் வந்து அவர் சொல்ல இவர் எழுத கடைசியில் திருவெம்பாவையை முடித்தவுடன் ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று நேயர் விருப்பமாகக் கேட்டு திருக்கோவையை எழுதி வாங்கிக்கொண்டதாக அல்லவா வாதவூரர் வரலாறு சொல்கிறது!.)

ஆனாலும் இப்படி அழகாக வாதவூரரைப் புகழ்ந்த நம்பியவர்கள் திருத்தொண்டர்புராணத்தில் வாதவூரர் பற்றி ஏதும் சொல்லவில்லை.

பெரியபுராணத்திலும் திருத்தொண்டர்புராணத்த்லும் வாதவூரர் புகழ் பாடப்படாமைக்குக்காரண்ம் எளிமையானதுதான். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதவில்லை, ஆகையினால் நாமும் எழுதவேண்டாம் என்று அவர்கள் இருந்துவிட்டதுதான்.

ஆனால் மனுநீதிச் சோழனைப் பற்றி ஏன் எழுதவேண்டும். அவரைப் பற்றி சுந்தரர் எழுதவில்லையே என்று ஆராயும்போது, மனுநீதிச் சோழன் என்பான் சோழர் குல விளக்கு. உலகத்துக்கே சோழர்களின் நீதி தலையானது என்பதை நிரூபித்த மகாமன்னன். மிகப் பெரிய சிவபக்தன்.

(” தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ் சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதி (பெரிய புராணம்)- சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து, அருமையாகப் பெற்ற மிக இளைஞ னாகிய அம்மகன், நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாய தெய்வக் கலைகள் பலவற்றையும் தம் மனம் திருந்த ஓதி)

தனக்கு அடுத்து பதவியேற்கப் போகும் சிவநெறிச்செல்வனான மகனை, அவன் அறியாது செய்த பாவத்துக்காக நீதியின் கண்கொண்டு தேர்க்காலில் இட்டவன். இத்தகைய செயலை யார்தான் செய்வர். மனித இனத்திலேயே முடியாத செயல் ஒன்று என்னவென்றால் தம் மகனைத் தம் கையால் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் தியாகம் செய்தல். இப்படிப்பட்ட மகனை பசுவின் கன்று ஒன்று இவன் தேர்க்காலில் பட்டு இறந்தமைக்காக தண்டிக்கிறான். இத்தகைய தியாகம் சோழகுலத்துக்கே தலைமகுடமாய் விளங்கிப் பெருமை சேர்த்ததால், அந்த மனுநீதிச் சோழனின் புராணத்தை முதலாக பெரியபுராணத்தில் தலைவாசலாக வைத்து திருத்தொண்டர் புராணத்தை ஆரம்பிக்கிறார்.

ஆனால் ஒரு மனுநீதிச் சோழனைத்தவிர திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் குறிப்பிடத்தவறிய வேறு எந்த அடியாரையும் அவர் குறிப்பிடவில்லை.

அப்படியானால் சுந்தரர் எழுதிய இந்த அறுபது (அறுபதும், சுந்தரர், சுந்தரரின் தாய்-தந்தை ஆக மூவர் சேர்ந்து அறுபத்துமூவர்) திருவடியார்கள்தான் அந்த மொத்தப் பழைய காலத்தில் சிவனுக்கு மிகவும் பிடித்த திருவடியார்களாக இருந்திருப்பார்களா.. இந்தக் கேள்வி குழந்தைத்தனமானது என்று எண்ணத்தோன்றும். சிவன் அருள் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர், எல்லோரையும் எழுதவேண்டுமென்றால் அது முடியாதுதான். ’ஒரு சிலரை’ சுந்தரர் இறைவன் திருவருளால் திருவாரூரில் அன்று நினைத்துப் பார்த்துப் பாடியிருக்கவேண்டும் என்ற ஒன்றுதான் இந்த ஒன்றுக்கு சான்றோர்கள் கூட பதிலாகச் சொல்லுவர்.

சுந்தரர் எழுதவில்லை, ஆகையினால் அவருக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் அருள் பெற்ற சிவனடியார்கள் இத்தனை பேர்தான் என்று நாம் கருதமுடியாதல்லவா.. சுந்தரமூர்த்தியாரும் இதுதான் முடிவு என்று சொல்லவில்லையல்லவா.. எத்தனையோ சிவனடியார்கள் சரிதம் விடுபட வாய்ப்புண்டு அல்லவா (அவர் மாணிக்கவாசகராகட்டும் அல்லது வேறு ஒருவராகத்தான் இருக்கட்டும்). ஆகையினால் திருத்தொண்டத் தொகைக்கும் அதன் அடி ஒற்றி எழுதப்பட்ட பெரியபுராணத்துக்கும் வாதவூரரைப் பொறுத்தவரை எவ்வித சம்பந்தமுமில்லை என்ற முடிவுக்கு முதலில் வரலாம் என்றுதான் தோன்றுகிறது.

மூவரில் மூத்தவரான அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏறத்தாழ நாற்பதினாயிரத்துக்கும் மேலாக பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். சரியாக கிடைத்த பாடல்களை முறையாகத் தொகுத்ததில் நமக்கு எஞ்சியவை 8250 பாடல்கள் மட்டுமே.

மூவருக்குப் பின்னவரா மாணிக்கவாசகர் என்ற பார்வையில் இரண்டாவதாகப் பார்க்கையில் மாணிக்கவாசகப் பெருமான் பற்றி நேரிடையாக எழுதப்பட்ட இரண்டு திருவிளையாடல் புராணங்கள். இவைகள் மாணிக்கவாசகர் பின்னவர் எனும் கருத்தை ஒப்பவில்லை. அரிமர்த்தனபாண்டிய அரசன் அவையில் அமைச்சராக இருந்த மணிவாசகர் குதிரைகளுக்காக செலவழிக்க வேண்டிய செல்வத்தை திருப்பெருந்துறை கோயிலுக்காக செலவழித்ததால் ஏற்படும் அவமானங்களும், இறைவன் அதற்கு பிறகு செய்த நரியைப் பரியாக்கியது, வையை பெருகியது, கரை கட்டியது, பிட்டுக்கு மண் சுமந்த கதைகள் மூலம் அவன் செய்த லீலைகளையும் விளக்கியுள்ளன.

பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் எனும் நூல் ஏறத்தாழ வாதவூரர் எழுதிய கீர்த்தித் திருவகலை ஒட்டியே மேற்கண்ட சம்பவங்களை எழுதியுள்ளது. இந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் பன்னிரண்டாம் நூற்றாண்டு கடையிலோ அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டது என்பர். இன்னொரு பெரிய புராணம் பரஞ்சோதி முனிவர் எழுதியது. (பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும்) இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு என்பார். பரஞ்சோதியார் வாதவூரர் அவதரித்த படலமாகவே ஆலவாய்த் திருவிளையாடல்களில் அவர் வரலாற்றைப் பாடியுள்ளார்.

ஆயினும் சரித்திர ஆய்விலும் சமய ஆய்விலும் மிகவும் தேர்ச்சி பெற்ற சதாசிவப்பண்டாரத்தார் இந்த இரு நூல்களும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்பதை விவரித்துச் சொல்கின்றனதான் என்றாலும் இது சரித்திர ஆய்வுக்குப் பொருந்தாது, ஆகையினால் மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் பிற்பட்டதுதான் என்று தன் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதைப் போலவே மாணிக்கவாசகர் தம் திருச்சிற்றம்பல திருக்கோவையில்

மன்னவன் தெம்முனை மேற்செல்லுமாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன்
(மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான் – நன்றி தேவாரம் தளம்)


இங்கு கூறப்பட்ட வரகுணன் எனும் தென்னவன் எனும் பாண்டியமன்னன் கி.பி 800-830 இல் ஆண்ட முதலாம் வரகுணனாகவோ அல்லது 1862 இல் ஆண்ட இரண்டாம் வரகுணனாகவோ இருக்கவேண்டும் என்கிறார் பண்டாரத்தார். இந்த ஒரு வரியால் மாணிக்கவாச்கரின் காலத்தைக் கணக்கிடமுடியுமா.. ’வரகுணன்’ என்ற பட்டப் பெயரை எந்த பாண்டிய அரசனும் பெற்றிருக்கலாமே.. திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுணபாண்டியனாகவோ அல்லது பட்டினத்தடிகள் பாடிய மிகச் சிறந்த சிவபக்தசிரோன்மணியாக இருந்த வரகுணனாகவோ கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அந்தக் கால அரசர்கள் எல்லோருக்குமே அதிகமான அளவில் பட்டப்பெயர்கள் இருந்தன என்பது நரசிம்மபல்லவன் அல்லது மகேந்திர பல்லவன், ஏன் ராஜராஜ சோழன் சரித்திரத்திலிருந்தும் தெரியும். ஆகையினால் இந்த வரகுணனுக்கே அமைச்சகராக வாதவூரர் பணிபுரிந்தார் என்றும் சொல்ல முடியாத் நிலை. கடந்து போன சரித்திரத்தில் அதி விரைவாக எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாது - அது விரிவாக வெளிப்படும் வரை.

மாணிக்கவாசகர் தில்லையிலே அதிக வருடங்கள் இறைப் பணி செய்தவர். தில்லையம்பதி வெகுவாக அறியப்பட்டது மூவர் காலத்தில்தான் என்று சொல்வர். அதற்கு முன்பு தில்லையைப் பற்றிய அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூட சொல்வர்.

நாம் தில்லை பற்றிய திரட்டிய தகவல்களை கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.

திவாகர்

இன்னும் வரும்.

Labels: