Tuesday, May 11, 2010

ஈசனே சிவகாமிநேசனே
நமக்கு மிகவும் பிரியமானவரைச் சென்று காணும்போது கிடைக்கும் இன்பத்துக்கு ஈடு இணையெல்லாம் ஏது.. சிதம்பரத்தில் கொலுவிருக்கும் சபாநாயகனான தில்லையம்பலத்தானைத் தான் சொல்லுகிறேன்..

காலம் மாறினாலும் அவன் கோலம் மாறவில்லைதான். அது எப்படி மாறும்? பிரபஞ்சத்தின் மத்தியில் கோயில் கொண்டு தானும் ஆடி, அகிலத்தையும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் அவன் ஆட்டத்துக்கு ஈடு இணை இல்லைதான். அந்த வித்தகன் நர்த்தனம் மட்டுமா ஆடுகிறான், அவனைக் கண்ணாறக் காணும் நம்மையும் நம் மனத்தையும் ஒருசேர ஆட்டுவிக்கிறான். அவன் அருகேயே நிற்கும் நாயகியைப் பாருங்களேன்..

அவனை இடம் கொண்டவளுக்கு எத்தனை அடக்கசொரூபம்.. மதம் கொண்ட யானையைப் போன்ற ஆயிரமாயிரம் யானைகளின் சக்தி கொண்ட மகிஷாசுரனைக் கொன்ற அந்த உக்கிர சொரூபியா இவள்.. இத்தனை சாந்தம் சிவகாமசுந்தரியிடத்தில் எப்படி இடம் கொண்டது.. சிவனின் இடப்பாகத்தைக் கொண்டதாலா..

அல்லது தலைவன் தன் இடது காலைத் தூக்கிய கோலத்தில் இருக்கும்போது, தூக்கப்பட்ட அந்த இடதுகாலே தன்னுடையதுதானே என்ற உண்மையை நமக்கு இப்படி அடக்கமாகக் காண்பிக்கிறாளோ.. அவனுள் ஆடியது தாமே என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறாளோ.. அவன் ஆடிய ஆட்டத்தின் சக்தி தானே என்றாலும், அந்த ஆட்டத்தால் உலகமே இயங்குகிறது என்று எத்தனைப் பெரியவர்கள் அறிந்து வியந்து நின்றாலும், அந்த உண்மையை எளிமையாய் உலகத்தோருக்குக் காண்பிக்க, இப்படி அடக்கசொரூபமாய் பக்கத்தில் நின்றிருக்கிறாளோ.. இருக்கலாம்.. மாயாசொரூபி அவள்..

அல்லது ஒற்றைக் காலில் நின்றாடும் ஈசனுக்கு அந்தக் கஷ்டம் சிறிதும் தெரியாமல் அவன் அருகிலேயே துணையாக நின்று ஆறுதல் தருகிறாளோ.. அன்னையாய் பக்தருக்குத்தான் ஆறுதல் தருபவள், உலகை ஆளும் ஈசனுக்கும் அன்னையாய் மாறினாளோ.. இருக்கலாம். கணவனுக்கு ஒவ்வொரு சமயத்தில் மனைவிதான் மந்திரி., மனைவிதான் அன்னை.. அவள்தான் எல்லாமும்.. ஈசன் மட்டும் விதிவிலக்கா என்ன.. அப்படித்தான் தோன்றுகிறது..

ஒருவேளை தன்னோடு போட்டி போட்டு ஆடியதால் என்னதான் ஈசன் வென்றாலும் அவள் துணை தேவைதான் என்பதையும் வெளிக்காட்ட ஈசனே அவன் அருகேயே அவளையும் ஒருசேர நிற்கவைத்தானோ, அவள் இல்லையேல் அவன் இல்லை என்பதை உலகத்தாருக்கு உணர்த்த நடத்தப்பட்ட அந்த நர்த்தனம் நாடகமோ.... இருக்கலாம்.. இந்த ஆதி தம்பதியர் எதையும் செய்வார்கள்..

இப்படி இருக்குமோ, போட்டி போட்டு ஆடும்போது தலைவனின் ஆட்டத்தை ரசிக்கமுடியவில்லையே.. இப்போதுதான் ஆற அமர சுகமாக ரசிப்போமே என்று அவன் ஆடும் ஆட்டத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே ஆவலாய் அருகேயே நிற்கிறாளோ.. ஈசனின் முதல் ரசிகை அவளேயென்ற பெருமிதத்தோடு அவன் ஆட்டத்தைப் பார்க்கிறாளோ..

இருந்தாலும் அவன் அருகே இருக்கையில்தான் அவள் முகத்தில் எத்தனை அழகு.. சிவகாமியின் அழகைக் காண, இந்த அழகுக்காகவே ஈசன் எத்தனைமுறை போட்டி வைத்தாலும் வேண்டுமென்றே ஆடுவானோ என்னவோ.. அவன்தான் ஆதி நாடகத்தானாயிற்றே .. ஆடும் ஆதிசிவனையும் ஆட்டுவிக்கும் இந்த அழகுக்காக அவன் செய்தாலும் செய்வான்..

ஆஹா.. அவள் அழகி மட்டுமல்ல.. மஹா சக்தியல்லவா.. விவரம் தெரிந்தவள்.. மறுபடியும் எங்கே போட்டி என்று கேட்டு இவர் ஆட்டத்தைத் தொடங்குவாரோ என்று, தலைவனை ஒரு காலிலேயே அதுவும் அவனுக்கு சொந்தமான வலது காலிலேயே அங்கேயே நிலையாக நிற்கவைத்துவிட்டாளோ.. அப்படித்தான் இருக்கும்.. இடது கால் அவளுடையதல்லவா.. அது தூக்கியபடிதான் இருக்கும்.. அது இறங்காதவாறு பார்த்துக் கொள்ள முழு உருவமாக சிவகாமசுந்தரியாக பக்கத்திலேயே காவல் இருப்போமே.. என்று அருகேயே நிற்கிறாளோ.. ஆனால் பாருங்களேன் அவள் முகத்தை.. ஏதும் தெரியாத சின்னஞ்சிறு சிறுமி போல வந்து நிற்கிறாள்.. அப்படித்தான் தெரிகிறது..

என்ன இருந்தாலும் அவள் அடக்கசொரூபிதான்.. அடக்கமே உருவான அம்பிகையே! உன் தாள்களுக்கு வணக்கம்!! ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராசனே உன் தாள்களுக்கு வணக்கம்!!.(சென்ற ஞாயிறன்று காலை தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் கிடைத்த அபூர்வமான அவகாசத்தின் விளைவுதான் இந்தப் பதிவு - படம் உதவி கூகிளார்)

Labels: