சித்திரம் பேசுதடி - சிந்தை மயங்குதடி
நம் நண்பர் விஜய் 'எஸ்.எம்.எஸ். எம்டன்' புத்தகத்திற்காக சிங்கப்பூரிலிருந்து தானே வரைந்து அனுப்பி வைத்த சில சித்திரங்களை இங்கு பதிவு செய்துள்ளேன். ஏன் புத்தகத்திலேயே பதிப்பித்திருக்கலாமே என சிலர் கேட்கலாம். எனக்கும் ஆசைதான். ஆனால் சில வேளைகளில் நம்மையும் மீறி செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.
ஒரு வார்த்தையில் வேண்டுமானால் நான் இப்படி சொல்வேன். அவருடைய அழகான பேசும் சித்திரங்களை என் கதையில் போட நான் கொடுத்துவைக்கவில்லை.
சித்திரங்கள் விவரம்:
சிதம்பரம்,கதையின் நாயகன். நிச்சயம் அப்பாவியான சுபாவம் இல்லையென்றாலும் ஒரு நாகரீகமான முறையில் முகபாவத்தை அளித்துள்ளார் விஜய்.
ராதை: நிச்சயம் இவள்தான் இந்தக் கதைக்கு நாயகி என்று சொல்லலாம்.. ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். சுமார் நூறாண்டுகளுக்கு முன் நம் பெண் சமுதாயம் (அதுவும் தமிழகத்தில்) எப்படிப்பட்ட நிலையில் இருந்திருந்தது என்பதை பாரதி பாடல்கள் மூலம் பார்க்கவேண்டும். அந்தக் கற்பனையில் விஜய் வரைந்திருக்கிறார்.
நோபிள்: இங்கிலீஷ்க்காரி என்பதால் நான் என்ன இரண்டாம் கதாநாயகியா என்று சண்டைக்கு வந்துவிடுவாள். ஆகையினால் இவளையும் நாயகி என்ற முறையிலேயே விஜய் வரைந்திருக்கிறார்.
சிரேஷ்டியார்: கதையில் சில முக்கியகட்டங்களின் சூத்திரதாரி. அவருக்கென ரூபம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சில நாட்கள் யோசித்துதான் விஜய் இவர் படத்தை வரைந்திருக்கிறார். மீசை வைத்த சிரேஷ்டியார்.. உம்.. பலே..
முகப்புப் படம்: இது விஜய் மனதில் எம்டன் புத்தகத்திற்காக அவர் போட்ட அழகான வடிவமைப்பு. முகப்பைப் பார்த்தால் யோகாவுக்கும் எம்டன் கப்பலுக்கும் என்ன சம்பந்தம் என்று வாசகர்களுக்குக் கேட்கத் தோன்றும்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் படம் வரைந்தால் எப்படி என்ற எண்ணத்தில் முதல் அத்தியாயத்தில் வரும் சமாதிக்கோயிலையும் விடவில்லை விஜய்.
சிற்பிகளின் கலைவண்ணத்தை மிக அழகாக வெளிக் கொணரும் விஜய் அவர்களுடைய கலைத்தாகம் சித்திரம் வரைவதிலும் வெளிப்படுவது மகிழ்ச்சியான செய்திதான். எதிர்காலம் முழுவதும் அவருடையதுதான்.
விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
திவாகர்
சிதம்பரம்
ராதை
நோபிள்
சிரேஷ்டியார்
முகப்பு (அட்டைப்படம்)
முதல் அத்தியாயம் - சமாதிக்கோயில்