Saturday, July 03, 2010

அமிர்தம் வழங்கிய நல்லாசிரியரே! நாகசாமி அவர்களே!!

வம்சதாரா கதையில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருப்பேன்.
‘தேனடையில் தேன் கிடைக்கும் என்ற நிலையில் அருகே செல்கையில் தேனடையில் அமிர்தமே வந்து அதுவும் நம் வாயில் நேரடியாக விழுந்தால்’.

அந்த உணர்ச்சியை நேரடியாகவே அனுபவித்தோம்.

இதன் பூர்வகதையை சுருக்கமாக சொல்லிவிடலாம்.

மாயவரத்துக்கு அருகே, திரு இந்தளூரில் கழுகண்ணிமுட்டம் எனும் இடத்தில் கைலாசநாதர் கோயிலின் அருகே தோண்டும்போது பத்தடி ஆழத்திலிருந்து ஒரு மாபெரும் புதையல், சென்ற மே மாதம் 20ஆந்தேதி கண்டெடுக்கப்பட்டது.
புதையல் மிகப் பெரிய பொக்கிஷமாய், ஏராளமான சிலைகளுடன், 86 பெரிய செப்பேடுகளுடன் கிடைத்தது, தமிழகத்திலேயே ஒரு புயலை உருவாக்கிவிட்டதுதான் (ஆர்வலர்கள் மத்தியில்).


(தொட்டால் பூ மலரும் - தாமிரப்பத்திரங்கள்)

11ஆம் நூற்றாண்டு அம்மையப்பர், நால்வர் சிலைகள் (இதில் மாணிக்கவாசகர் சிலையும் இருப்பதால் அவர் காலம் நிச்சயமாக 10ஆம் நூற்றாண்டுக்கு முன்புதான் என்று கூட புரிந்திருக்கும்) ஏகப்பட்ட கோயில் பூஜைக்கான சாமான்கள் என்பதோடு அந்த ’86 செப்பேடுகள்’ கிடைத்ததில்தான் இருப்பதிலேயே மிக விசேஷம் என்று சொல்லலாம். அதுவும் மிகப் பெரிதான செப்பேடுகள் ஏறத்தாழ 44 செண்டிமீடர் நீளமும் 24 செண்டி மீடர் அகலமும் சுமார் ஒன்றரை செண்டிமீடர் கனமும் கொண்டவை. முதல் எட்டு ஏடுகளில் கிரந்த எழுத்துகள், ஏனைய ஏடுகள் எல்லாமே தமிழ்.. தமிழ்.. தமிழ்தான்.. என்னென்ன விஷயங்கள் புதைந்துள்ளவோ.. இத்தனை பெரிய தகவல் பொக்கிஷம் கிடைப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்தத் தகவல் பொக்கிஷத்தினை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதுவும் கோவை கண்காட்சியில் வைப்பதாக ஏற்கனவே செய்திகளில் பரப்பிவிட்டது ஆவலைத் தூண்டிவிட்டதுதான். தமிழ்மாநாடு வாழ்க..


(தொட்டுட்டேனே - விஜய்)

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதல்நாள் எனக்கும் விஜய்க்கும் பொன்னாள். இதற்கு விஜய் மறுப்பு ஏதும் சொல்லமாட்டார் எனவே நினைக்கிறேன்.

மாநாட்டு அடாவடிகள் என்பது, அது எந்த மாநாடாக இருந்தாலும், ஒரே நிலைதான். மாநாட்டு நுழைவு வாயிலில் முதலில் சீராக பாதுகாப்பு முறைப்படியும், அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணத்தின் அடிப்படையிலும் உள்ளே அனுமதித்தார்கள்தான். மாநாடும் மிக நேர்த்தியாகவே தொடங்கினாலும், தடதடவென எங்கிருந்தோ பின்னேயிருந்து முன்னேறிவரும் படைகள் போல காவலர்களையும் மீறி அருகே ஓடிச் செல்லும் உடன் பிறப்புகள் கூட்டத்தாலும், சரியான முறையில் ஒலிபெருக்கி இல்லாததால் மேடையில் தலைவர்கள் பேசுவது ஏதும் புரியவில்லை என்பதாலும், சற்றுநேரம் பார்த்துவிட்டு, கலைஞரின் பேச்சு முடிந்ததும், நண்பர் விஜய்க்கு குறுந்தகவல் அனுப்பி வெளியே வரவழைத்தேன். இருவரும் அந்தப் பகுதி முழுவதும் ஒரு சுற்று சுற்றி வரக் கண்ணில் பட்டது அந்தக் கண்காட்சி அரங்கம். செம்மொழி மாநாட்டின் அடுத்தநாள் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் இருக்கப்பட்டிருந்தாலும், அனுமதி மற்றவருக்கு மறுக்கப்பட்டாலும், எங்கள் இருவரையும் வந்தனம் செய்து உள்ளே அனுமதித்தார்கள். (யார் வி.ஐ.பி, யார் வி.ஐ.பி. இல்லை என்பது காவலருக்குத் தெரியாமல் போனது ஒரு காரணம் என்றால், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று கூட காவலர்கள் நினைத்து ஒதுங்கிவிடவும் வாய்ப்புகள் உண்டு)

ஆக, எல்லோருக்கும் முன்பே இந்தக் கண்காட்சியை சாவகாசமாக சுற்றிப் பார்க்க வந்த வாய்ப்பு, அதுவும் சிற்பங்கள் சிலைகள் என்றதும் நம் விஜய் யின் முகத்தில் ஏகப்பட்ட குஷி,

நமக்குத் தெரிந்த ஒருவரிடம் இந்த மாயவரத்து புதிய கண்டுபிடிப்புகளான செப்பேடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அவர், ஆஹா.. பேஷாக வைத்திருக்கிறோம், அந்த அறைக்குச் சென்று பாருங்கள், என்றதோடு கூட ஒரு துணையும் அனுப்பிவைத்தார். அங்கே சென்று பார்த்தால் அங்கே ஒருவர் ஆர அமர்ந்து அந்த செப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். விஜய் சட்டென்று வாய் விட்டே கத்தி விட்டார்.. ‘ சார்.. நாகசாமி சார் அங்க இருக்கார் பாருங்க’

ஆஹா.. பழம் நழுவிப் பாலில் விழுந்து அது வாயில் விழுந்ததா, இல்லை அதற்கும் மேலே, இந்தக் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டேனே அந்த அமிர்தமா..
உடனே அங்கேயே அவரை ஒரு ‘லபக்’.

பசி நேரமாக இருந்தாலும், தொல்லியல் பேரறிஞர் டாக்டர் நாகசாமி அவர்கள் எங்களுக்கு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொன்னார்.

• 1053 ஆம் ஆண்டிலிருந்து, 1062 ஆம் ஆண்டுவரை இந்த செப்பேடுகள் செதுக்கப்பட்டு சோழ அரசன் விஜய ராஜேந்திரன் (ராஜேந்திர சோழனின் முதல் மகன் கொப்பம் போரில் வீரமரணம், பின் அவனது தம்பி இரண்டாம் ராஜேந்திரனின் பட்டாபிஷேகம், இதற்கும் முன்னால் ராஜேந்திர சோழன் தன் நான்கு மகன்களையும் ஒற்றுமையாக இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டி அறிவுறுத்துவது, போன்ற செய்திகள்
• இதுநாள் வரை பிற்காலச் சோழர்கள் முத்தரையரிடம் இருந்து தஞ்சையைக் கைபிடித்ததாகவே நாம் படித்துவந்தோம், அப்படி இல்லை, தஞ்சை கம்பவர்ம பல்லவனிடமிருந்து கைபற்றப்பட்ட தகவல் உள்ளது.
• அந்தணர்களுக்கு ஏராளமான அளவில் நிலங்கள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன
• இன்னும் ஏராளமான செய்திகள் புதைந்து கிடக்கின்றன. இவைகள் முழுவதும் படி எடுக்கப்பட்டு இன்னும் ஓரிரு மாதத்தில் நமக்கு வெளியே கிடைக்கும்.
• சிலைகள் மூலம் பல செய்திகள் வெளிவர உள்ளன. தற்போதைய நிலையில் மாணிக்கவாசகரின் ஐம்பொன் சிலையைக் கண்டதிலிருந்து, இனி யாரும் அவரை பத்தாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவர் என்று கூற முடியாது. (இப்படி இன்னமும் சிலர் சொல்வதால் இதைப் பதிப்பிக்கிறேன்)

டாக்டர் நாகசாமியுடன் அன்று மாலை பேரூர் கோயில் எங்களுடன் வரவேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டோம். அந்த 80 வயது இளைஞர் உடனே ஒப்புக் கொண்டார். (கூடவே விஜய் அன்றிரவு தன் மாமனார் வீட்டில் விருந்துக்கு கூட ஏற்பாடு கடகடவென செய்துவிட்டது இன்னொரு கதை)

23ஆம் தேதி அன்று என்னதான் மூவருமே அரசாங்க விருந்தினார்தாம் என்றாலும் அந்த மதிய வேளை விருந்து என்னவோ அந்த வளாகத்தில், அந்த மகா கூட்டத்தில் கிடைக்கவில்லை. டாக்டர் நாகசாமி அவர்களின் வாகனம் எங்கோ நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த வண்டியையும் தருவித்துக் கொள்ள முடியாத அளவில் வாகன நெருக்கடி.. ஆனாலும் எங்களுடன் அந்த இளைஞர் நடந்தார். கோவையில் வெய்யில் அவ்வளவாக இல்லையென்றாலும் அன்று பார்த்து ஊமை வெய்யில் வாட்டியதுதான். ஏறத்தாழ மூன்று மணியளவில் வெளியே எங்கோ கிடைத்ததை உண்டு எங்கள் இருப்பிடத்துக்குத் திரும்ப முயன்றால் வழியே இரண்டு மணிநேரம் வாகனங்களை நிப்பாட்டி விட்டார்கள். மாலை ஆறு மணியளவில்தான் அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லமுடிந்தது.

பெரியவருக்கு ஒரு அரைமணிநேரம் ஓய்வு கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஏழு மணிக்கு அவருடன் பேரூர் பயணித்தோம்.

2000 வருடங்களுக்கு முன்பு கட்டிய கோயில். தஞ்சைப் பகுதியில் உள்ள கோயில்கள் போல பரப்பளவில் பெரிது அல்ல என்றாலும், பேரூர் கோவில் சிற்பக் களஞ்சியங்களை உள்ளடக்கிய மிகப் புனிதமான புண்ணியத் தலம். இறைவன் பட்டீசுவரப் பெருமான். தலைவாசலில் நாயன்மார் நால்வரும் காத்திருக்க, கம்பீரமாகக் காட்சி தரும் இறைவனைத் தரிசிக்கிறோம். பச்சைநாயகி அம்மையின் அன்புப் புன்னகையில் அப்படியே கரைந்துவிடுகிறோம். வெளியே ஆனந்த நடராஜரின் திருச்சபையில் உள்ளே சென்று அவர் பாதம் பணிந்தோம்.

அம்மன் சந்நிதி முன்பும், நடனசபையிலும்தான் எத்தனை அதி உன்னதமான கலைச் சிற்பங்கள்.. சிற்பங்களைப் பார்த்ததுமே தொல்லியல் அறிஞரின் முகம் மாறிவிடுகிறது, ஒவ்வொரு கலை நுணுக்கங்களையும் விவரித்தார். ஒரு ஆடல் நாயக நாயகியைக் காண்பித்து, ‘இவர்கள் யார் என்று சொல்லுங்கள்.. பார்ப்போம்.. என்றார். அவரே பதிலும் சொன்னார். ‘இது குறவன் குறத்தி. ஆட்டம். எத்தனை அநாயசமாக அவளைத் தோளில் போட்டுக் கொள்வதாக செதுக்கியிருக்கிறான் பாருங்கள்..


ஆஹா.. என்ன அநாயசமாக குறவன் குறத்தியை தோளில் போட்டு ஆடும் சிற்பம் (பேரூர் கோயில்)'அட, இங்கே யார் தெரிகிறதா.. சுழன்று ஆடும் ஆண்.. தலைக்கட்டு ஒருவிதமாக கட்டிக் கொண்டு சுழற்சி முறையில் ஆடுவது போல சிற்பி செதுக்கியுள்ளான். எக்ஸெலண்ட்!.’


(சுழற்சியாய் ஆடும் அழகிய நாட்டிய புருஷன் - பேரூர் கோயில்)

ஏறத்தாழ ஒரு மணிநேரம் சிற்பங்களிலேயே செலவழித்தோம். பிறகு கோயிலை வலம் வருகையில் சுற்றுச் சுவர் மேடை முழுவதும் சிவலிங்கங்களை துணி வைத்துப் போர்த்தியிருந்ததைக் காண்பித்தார். ஆஹ்வானம் இன்னமும் செய்யப்படவில்லை. டாக்டர் நாகசாமி அங்கே எங்களை நிறுத்தினார்.

“பொதுவாக இந்த சிவலிங்கங்களை நாம் சரியாக வணங்குவதில்லை. ஒவ்வொரு சிவலிங்கமும் பெயரைப் பாருங்கள்.. அண்ணாமலை, காசி விசுவநாதர், கேதாரநாதர் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். ஆகையினால் இங்கே ஒரு லிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்து, காசி விசுவநாதா, நீயே இங்கு இந்த லிங்கரூபத்தில் எழுந்தருளவேண்டுமென்று ‘ஆஹ்வானம்’ செய்யும்போது, சட்டென இங்கே கோயில் கொண்டுவிடுவான். பொதுவாக அந்த இடத்தில் உள்ள கோயிலில் அந்தக் கடவுளை, சென்று தரிசித்தால் ஏதாவது புண்ணியம் என்று அந்தக் காலங்களில் நடை நடையாகச் செல்வார்கள். ஆனால் எத்தனை பேரால் அப்படி முடியும். அதனால் புகழ்பெற்ற ஊரில் உள்ள கடவுள்களையே இங்கு வரவழைத்து நம்மால் பூசை செய்யமுடிவதற்காகவும், அங்கு சென்றால் என்ன பேறு கிடைக்கும் என நினைக்கிறோமோ, அதே பேற்றினை அடையவும் செய்யப்பட்ட வழிவகைதான் இந்த தெய்வவழிபாடுகள். நம் முன்னோர் நமக்காக செய்தது. காசிக்கு சென்றுதான் விசுவநாதனை வணங்கவேண்டுமென்பதில்லை.. இதோ இங்கே அந்த காசி விசுவநாதனை வணன்ங்கினால் போதும்.. அவன் அருள் கிடைத்துவிடும்”

எத்தனை எளிய உண்மை.. டாக்டர் நாகசாமியார் இன்னும் எத்தனையோ விளக்கங்கள் கொடுத்துக் கொண்டே சென்றார். ‘வராஹி’ பற்றி ஒரு அருமையான கருத்து டாக்டர் நாகசாமியால் சொல்லப்படும்போது மிகப் பெரிய ஆச்சரியம் நமக்குள் எழுகிறது. அக்னியான சிவன் கடலுக்குள்ளிருந்து மேலே விஷ்ணுவாக வியாபித்து உலகத்தைப் படைக்கும் ஒரு ‘தியரி’தான் வராஹி.. இன்னொரு பதிவில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

அடுத்த இரண்டு நாட்களில் கூட பலசமயங்களில் டாக்டர் நாகசாமியாருடன் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம்.

கண்ணன் என் சேவகன் பாட்டில், பாரதி கண்ணனை வர்ணிக்கையில், நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய்.. என்று சொல்லிக் கொண்டே போவார்.

அன்று அந்த நல்லாசிரியரைப் பெற்றோம். தமிழன்னை உலகுக்குக் கொடுத்த பல கொடைகளில் நாகசாமி அவர்களும் ஒன்று என்று நிச்சயமாகச் சொல்வேன்.
நான், டாக்டர் நாகசாமி அவர்கள், வி்ஜய் - செப்பேடுகள் பின்புலத்தே)

Labels: