3. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா
”தில்லை மூதூர் ஆடிய திருவடி” என்று கீர்த்தி திருவகல் பாடலை ஆரம்பித்துள்ள மாணிக்கவாசகர், தில்லையை ’மூதூர்’ (மிகப் பழைய ஊர்) என இங்கே சிறப்பாக வர்ணித்திருப்பது கவனிக்கத் தக்கது. கடல்கொண்ட தமிழ்ப்பகுதிகளைக் குறிப்பிட்ட இளங்கோ அடிகள் கூட மதுரையை ‘மூதூர்’ என சிறப்பாக அழைத்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழகத்தைப் பற்றி கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வரலாற்றினை எந்த சரித்திர ஆசிரியராலும் இந்த நிகழ்ச்சி நடந்தது இப்போதுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாதுதான் (சமுத்திர குப்தன் பல்லவனை வென்றது தவிர). கல்வெட்டுகள் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டிலிருந்து அதிகமாக வர வர நாம் சென்றுபோன காலங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு தோராய அளவில் கணக்கிட்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்துக்கு களப்பிரர் வருகையும் ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டு வரை பல சரித்திர ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. களப்பிரர் காலத்தில் சரித்திரசம்பந்தமான எவ்வித ஆதாரமும் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் அபூர்வமான வகையில் ‘நாவலர் சரிதத்தில்’ ஒரு தகவல் கிடைத்துள்ளது,
மூவேந்தர்களையும் ஒரு சேர வீழ்த்திய களப்பிர அச்சுதராயன் என்பான் ‘தில்லை நகரில்’ முடிசூட்டிக்கொள்கிறான். அவன் அருகே சங்கிலியால் கட்டப்பட்டு சிறைப்பட்ட மூவேந்தர்களும் அவன் புகழைப் பாடவேண்டுமெனக் கட்டளை. சேரன் (தினையும் செந்நெல்லும் நிறைந்த அச்சுதனின் பெரு மாளிகையின் முன்வாசலில் – முற்றத்தில், முரசுகளும் சங்கும் ஊத தேர்களில் வந்த அரசர்கள் அவனுக்காக காத்திருப்பது) எனப் பாடுகிறான். இரண்டாவதாக சோழன், அந்த முற்றத்தில் காணப்படும் அரசர்களின் காலோசை, அந்த முரசுகளின் ஓசையைக்கூட மட்டுப்படுத்தும் என்று பாடுகிறான். ஆனால் பாண்டியன் இவர்களைப் போல ஒரேயடியாகப் புகழவில்லை. மாறாக அச்சுதனை மட்டம் தட்டிப் பாடுகிறான்.
“குறையுளார் எங்கிரார் கூர்வேல் விராமன்
நிறையாறு திங்களிருந்தான் – முறைமையால்
ஆலிக்கும் தானை யலங்குதா ரச்சதமுன்
வாலிக்கிளையான் வரை”
(குறையிலாத மனிதன் யார்? கூர்வேலையுடைய ராமன் வாலியின் இளையோன் சுக்கிரிவனுக்காக ஆறு மாதம் காத்திருக்கவில்லையா. அதேபோலத்தான் நானும் பெரும்படை கொண்ட அச்சுதனுக்காக இங்கே காத்திருக்கிறேன் (சுருக்கமான விளக்கம்)
இந்தப்பாட்டின் பொருளால் தன்னை குரங்கினத்தலைவனுக்கு இணையாகவும், பாண்டியணை ராமனாகவும் வர்ணித்தது அச்சுதனுக்குக் கோபத்தை எழுப்பியது. தண்டனையை அதிகப்படுத்த ஆணையிட உடனே அவனை சாந்தப்படுத்தி இன்னொரு பாடலைப் பாடுகிறான் பாண்டியன்.
“குடகர் குணகடலென்றார்த்தார் குடார்க்
கிடவர் வடகடலென்றார்த்தார் – வடகடல்
தென்கடலென்றார்த்தார் தென் தில்லை அச்சுதன் நின்றன்
முன் கடை நின்றார்க்கு”
ஒரேயடியாக தடாலடிப்புகழ்தான். அதாவது தென் தில்லையில் அச்சுதன் அரண்மனை முற்றத்தில் இருந்த அரசர்கள் எண்ணமாவது இப்படி இருந்ததாம். அச்சுதன் படையைப் பற்றி மேற்கு நாட்டார் ஏதோ படையின் எல்லை கீழ்க்கடல் வரை நீளும் என்றும் தென்கடல்பகுதியின அது வடகடல் எல்லை வரை நீண்டதாம் எனவும் வடபுலத்தாரோ தென்கடல் வரை நீண்டதாக சொன்னார்களாம்..
மூவேந்தர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் இங்கே கவனிக்கப்படுவது தென் தில்லை என வரும் ஒரு சொல். இப்பாடல்களை வைத்து அச்சுதன் மூவேந்தர் முன்னிலையில் தில்லையம்பலத்தான் கோயிலில் முடிசூட்டிக்கொண்டதாக பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தனது நூலில் எழுதியுள்ளார். மேலும் அச்சுதக்களப்பராயன் பற்றி ‘புத்ததத்தா’ எனும் பௌத்தமதப் புலவர் பாலி மொழியில் மிகவும் புகழ்ந்துள்ளார். அவர் எழுதிய வினய வினிச்சாயா எனும் நூலில் அச்சுதன் தமிழகத்தில் குறிப்பாக சோழப்பகுதிகளை ஆண்டதைக் குறிப்பிட்டுள்ளார் (PT Srinivasa Iyengar’s The early History of Tamils).
புவனேஸ்வரம் உதயகிரி கந்தகிரியில் உள்ள கல்வெட்டு (ஒன்றாம் நூற்றாண்டு - மலையின் பாறையின் மேல் விட்டத்தில் பதிப்பித்திருக்கிறார்கள். இன்றும் விவரமாகக் காணலாம்)ஒன்றில் ஒரு பகுதி காரவேல அரசன் தமிழகத்தின் மீது படையெடுத்து 113 வருடங்கள் ஒன்றாய் இருந்த தமிழக மூவேந்தர்களை முறியடித்தது பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கல்வெட்டுச் செய்தியும் அச்சுதக் களப்பராயன் செய்தியும் ஒன்றா அல்லது களப்பிரர் என்பவர் கல்ச்சூரி அல்லது காரவேலர் வம்சமா என்பதும் இன்னமும் நிரூபிக்கமுடியவில்லை.
தில்லையம்பதி மிகப் பழைய ஊர் என்பதில் வாதபேதம் வராது என்றாலும் தில்லையம்பலத்து இறைவன் பற்றிய் செய்திகள் எப்போது வந்தது என்பதைச் சற்று ஆராயவேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அல்லது கிபி முதலாம் நூற்றாண்டு சிற்பம் (மூலம்-விக்கி) என சில சிற்பவரலாறுகள் கூறப்பட்டாலும் அவை சரித்திர நோக்கில் ஆராய்கையில் கால விவரங்களில் குழப்பங்கள்தான் மிஞ்சும்.
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஆடலரசனான சிவனை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது..
திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்
செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலை யசையாது
வார்குழை யாடாது மணிக்குழ லவிழா
துமையவ ளொருதிற நாக வோங்கிய
விமைய னாடிய கொட்டிச் சேதம் சிலம்பு 28 67 - 75
(நன்றி - சைவம் தளம்)
அதுவும் உமையவள் அவன் ஆடும் நடத்தினைக் காணும் வர்ணனையும் கவனித்துப்
பார்க்கும்போது இது ஆனந்த தாண்டவமாக தில்லையில் ஆடல்வல்லான் ஆடிய
நாட்டியம் தான் என்பதும் மறைமுகமாக விளங்கும். இளங்கோ இன்னொரு இடத்தில்
மதுரை மாநகரத்து வெள்ளியம்பலத்தான் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம்பலத்து
(பதிகம், 39-41)
வெள்ளியம்பலத்தில் ஆடலரசன் இருப்பதற்கு முன்பே தில்லையிலும் ஆனந்த தாண்டவம் ஆடும் கூத்தன் கோயில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இதன்கண் தெரிகிறது. சரி, இளங்கோ தம் சிலம்பில் திருமலையைப் பற்றியும் திருவரங்கத்தையும் பற்றிச் சொன்னவர் தில்லையையும் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். ஆனால் திருவரங்கம், திருமலைக் கோயிலைப் பற்றிச் சொன்னது பாதைவழி காட்டுவதற்காக மட்டுமே. அந்தப் பகுதியில் கோவலனும் கண்ணகியும் அடிகளும் பூம்புகாரிலிருந்து மதுரை செல்லும் நடுவழியில் எந்தப் பாதையில் சென்றால் மதுரை வரும் என்பதற்காக போகிற போக்கில் காண்பிக்கப்பட்ட சரித்திரப் பொருத்தமான வார்த்தைகள் இவை. இந்த வழியில் தில்லையம்பதி வருவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லையென்பதால் தில்லையைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆடலரசனின் ஆனந்த தாண்டவம் பற்றிய அற்புதக் குறிப்பை அவர் கவிதைப் படுத்திய நயம் மிக அருமை.
ஐந்தாம் நூற்றாண்டு பல்லவமன்னரான ஐயடியார் காடவர்கோன் தன் ஷேத்திரத் திருவெண்பாவில் முதல் பாடலாகக் குறித்திருப்பது தில்லை பொன்னம்பலம் பற்றித்தான். இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐயடிகள் பற்றிய செய்தியை சுந்தரரும் தம் திருத் தொண்டத் தொகையில் சேர்த்திருக்கிறார்.
ஓடுகின்ற நீர்மை ஒழித்தலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற
நல்லச் சிற்றம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
(வாழ்க்கை ஓடுகின்றது.. உற்றார் உறவினரும் உம்மை விட்டு பிரிகின்றார். எப்படியும் முடிவில் போய்ச் சேரவேண்டிய மயானத்துக்குப் போவதற்கு முன்பே, நல்ல நெஞ்சே.. திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக! - சுருக்கமான விளக்கம்)
ஐயடிகள் தனது சகோதரனான சிம்மவர்ம பல்லவனை திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருக்குளத்தில் குளிக்கவைத்து அவன் தொழுநோயைப் போக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இதனால் சிம்மவர்மன் திருச்சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்பர். ஆனால் இதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சிம்மவர்மன் என்ற பெயரில் மூன்று விதமான காலகட்டத்தில் பல்லவ அரசர்கள் இருந்தனர் என்பதற்கான சில செப்பேடுகள் ஆந்திரத்தில் (கோவூர்-நெல்லூர் செப்பேடு) கிடைத்துள்ளன. இவர்களில் எந்த சிம்மவர்மனின் சகோதரர் ஐயடிகள் என்று தெரியவரவில்லை. ஆனாலும் ஐயடிகள் மகேந்திரனின் தந்தையான சிம்மவிஷ்ணு (550-580) காலத்துக்கும் முற்பட்டவர் என்று வரலாற்றாசிரியர் உடுமலை திரு என்.சுப்பிரமணியன் தனது தமிழ்நாடு வரலாறு – (முதல் பகுதி) நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பதினோராம் திருமுறையில் நக்கீரதேவனார் எழுதிய பாடல்களில் பொன்னம்பலம் பற்றிய ஒரு வரி வந்தாலும், நக்கீரதேவர் எந்தக் காலகட்டவர் என்பதை ஆராய இன்னொரு கட்டுரை தேவை என்பதால் அந்தப் பாடலை நாம் இங்கே கொண்டுவரமுடியாது.
"தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்” என்று அப்பர் சுவாமிகளால் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தில்லைச் சிற்றம்பலம் அவர் காலத்துக்கு பல நூறு ஆண்டுகள் முன்பேயே இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றும் சித்தர்களால் வழிபடும் சில தலங்கள் கொல்லி மலைக் காடுகளிலும் மலை மேலும், கடற்கரை ஓரத்திலும் இருப்பதாக அறிகிறோம். தில்லைவனம் என்பதே தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. முதலில் வனங்களுக்கிடையே இருந்த கோயில் காலம் போகப் போக வெளிப்பட்டிருக்கவேண்டும். இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் புராணங்களில் பெயர் பெற்றுள்ளது உண்டு. தில்லைக்கு புலியூர் என்று ஒரு கால கட்டத்திலும் (தேவாரப்பாடல்களுக்கு முன்பு – வியாக்ரபாதர் அல்லது புலிக்கால் பாதர் பூசித்ததால் வந்த பெயர், பெரும்பற்றப்புலியூர் என்ற பெயரில் தேவாரப் பாடல்கள் காலத்துக்கும் பின்னும் (ராஜராஜசோழன், குலோத்துங்கன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது), சிதம்பரம் என நிகழ்காலத்திலும் காலத்துக்கு ஏற்ப பெயர்கள் மாறிகொண்டே வருகின்றன. சிதம்பரம் எனும் பெயர் திருமூலர் திருமந்திரத்திலும் இடம் பெற்றுள்ளதால், வடமொழிப் பெயரான சிதம்பரம் புராணகாலத்திலும் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழில் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள், வடமொழியில் சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் புலிக்கால் முனிவரின் வேண்டுதலுக்கேற்ப தில்லை நடராசனின் ஆனந்த தாண்டவமே பொற்சபையில் ஆடப்பட்டதாகத் தெரிவிப்பதால், அரசாண்ட மன்னவர்களும் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டு முதல் அவரது சபை கனகசபையாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு பொன் வேய்ந்திருக்க வேண்டும். அதை சிம்மவர்ம பல்லவன் செய்திருந்தாலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் (பராந்தகன், குலோத்துங்கன் போன்றோர்) தொடர்ந்து வந்தாலும் பொன்னம்பலத்தான் என்ற பெயருக்கேற்ப அரசர்கள் ஆலயத் தொண்டு செய்தார்கள் என்றே சொல்லவேண்டும்.
ஆக மாணிக்கவாசகர் மனமுருகப் பாடி உருகி, ஆண்டவனுடன் அங்கேயே ஐக்கியமாகிய இந்த ஆனந்த தாண்டவன் ஆடிய கோயில் தேவார காலத்துக்கு முற்பட்டதாக இருந்தது என்பது ஒரு பக்கம் வெளிப்படையாகவே தெரிந்தாலும், மாணிக்கவாசகர் உறுதியாக இந்தப் பழைய காலத்துக்குச் சேர்ந்தவர்தானா என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அத்துடன் அவர் தில்லையில் நிகழ்த்திய வாத விவரங்கள் அக்காலகட்டத்திலா என்பதையும் ஆராயவேண்டும். தில்லையில் மட்டும் இல்லை, வாதவூரார் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோயில்கள் எப்போதிலிருந்து வழிபாட்டுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும். அவர் சமய வாதிகளை எப்படிக் கையாண்டார், அவர் காலத்தில் உள்ள சமய நிலை எப்படி இருந்தது, என்பதையும் பார்க்கவேண்டும்.. ஆனால் இவை எல்லாவற்றையுமே அவர் பாடல்களிலிருந்தே சற்று சுருக்கமாகவே பார்ப்போம்..
திவாகர்
இன்னும் வரும்