Saturday, June 23, 2007

கண்ணன், வயது 25 இருக்குமோ..இருக்கும்..இருக்கும்..
துறுதுறுவென்ற பார்வை, சுறுசுறுப்பான நடை, முகத்தில் கறுகறுவென்று சற்றே வளர்ந்த தாடி,
இடுப்பில் வேட்டியும் அதன்மேல் ஒரு துண்டையும் கட்டிக்கொண்டு தோளில் ஒரு தண்ணீர்க் குடத்தையும் சுமந்துகொண்டு 'கடமையே கண்ணாயினார்' போல இருந்தவர் என் கண்களுக்கு சற்று வித்தியாஸமாக தென்பட்டதில் வியப்பில்லைதான்.

இடம் : திருநகரி (திருவாலி)... சீர்காழியிலிருந்து கிழக்கே ஒரு ஐந்து கிலேமீட்டர் சென்றால் புத்தம் புதியதாக தென்படும் அழகிய கோயில் கோபுரம்.. ஆனால் ஊர் மிகப் பழமையானது. திருமங்கை மன்னன் தன் மனைவி குமுதவல்லி நாச்சியாரோடு கோயில் கொண்ட ஊர். வயலாலி மணவாளப் பெருமாள் அமர்ந்த நிலையிலும், திருமஙகை ஆழ்வாரை ஆட்கொள்ள வந்திருந்த கல்யாண ரங்கனாதர் உற்சவ் மூர்த்தியாகவும் அருள் தரும் ஊர். இஙகு யோக நரசிம்மர் மிகவும் பிரசத்தி பெற்றவர். அவருக்கு தனி சன்னிதி உண்டு.

இந்த ஊர் நமக்கு ஒரு காலத்தில் சொந்த ஊர்தான். தற்சமயம் அந்த பெருமாளைத் தவிர நமக்கு யாரும் சொந்தமென்று இல்லை.

ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் இந்த ஊரில் தனித் தனிக் கொடி மரங்கள் உண்டு. இருவருக்கும் தனித் தனி பிரம்மோற்சவங்கள்.. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று (ஆழ்வார் திருநட்சத்திரம்) திருமங்கை மன்னனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடக்கும். சின்ன வயதில் இந்த கார்த்திகை நாளுக்காகவே நாங்களெல்லாம் ஆவலாக காத்திருப்போம்... காரணம் விதவிதமான பிரசாதங்கள்.. மதியம் ஒருமணிக்கு மேல்தான் சாத்துமுறை.. எப்போது பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.. பாட ஆரம்பிக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டே இருப்போம்.. பல்லாண்டு பாட ஆரம்பித்துவிட்டால் எந்த நேரத்திலும் பிரசாத வினியோகமும் ஆரம்பித்துவிடும்.. முதலில் சுண்டல்,பஞ்சாமிர்தம், சக்கரைப் பொங்கல்,வெண் பொங்கல்... என ஆரம்பித்து எல்லா வகையும் ஒவ்வொன்றாக இரண்டு கைகளிலும் போட்டுக்கொண்டே வருவார்கள்.. 1970 களில் நாதமுனி என்றொரு பட்டர்..பிரமாதமாக புளியோதரை செய்வார். மடைப்பள்ளி நாதமுனி புளியோதரை என்றால் ஒரு ரசிகர் கூட்டமே நாவில் ஜலம் ஊறிக் கொண்டு ஓடிவரும்.

அடடே.. கண்ணனை அப்படியே விட்டுவிட்டோமே.. கண்ணன் சீரங்கத்துக் காரர். அவரும் பட்டர்தான் ஆனால் தொழில் முறையில் ஆடிட்டர். திருவரங்கன் சேவையில் உள்ள திருவாளர் வேதவியாஸ பட்டாச்சாரியாரின் மகன். ஒவ்வொரு கார்த்திகை நாளன்றும் நம் கண்ணன் திருவரங்கத்திலிருந்து திருநகரி வந்து விடுவார்.

நாங்கள் திருநகரி (பத்து நாட்களுக்கு முன்பு) சென்றது யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்வதற்காகத்தான்... அன்று பார்த்து கார்த்திகையும் சேர்ந்துகொண்டதால் ரெட்டிப்பு மகிழ்ச்சி வேறு.. நம்ம ஊர்க்காரன் என்று தெரிந்ததும் பட்டர்கள் பார்த்து பார்த்து செய்தார்கள். பத்பநாப பட்டர் திருமஞ்சனம் செய்ய, பெரியவர் எம்பார் விஜயராகவாச்சாரியார் மந்திரங்கள் ஓத, கண்ணன் வெகு உற்சாகத்துடன் அங்கும் இங்கும் ஓடி உதவி செய்தும், பக்கத்தில் உள்ள கிணற்றில் இருந்து நீர் எடுத்து உதவ, வெகு திருப்திகரமாக நடத்திக் கொடுத்தார்கள். ஒரு அவசர கதியும் காணப்பட்டது.. அவசரத்திற்கு காரணம் இதே குழுதான் மறுபடியும் ஆழ்வார் கார்த்திகை திருமஞ்சனமும் ஆரம்பிக்கவேண்டும்.. இந்த அவசரத்திலும் கண்ணனிடம் பேசும் சந்தர்ப்பமும் கிடைத்தது.

"சீரங்கத்திலேர்ந்து ஒவ்வொரு கார்த்திகைக்கும் தவறாமல் வருகிறீர்களே..என்ன இழுக்கிறது இந்த ஊரில்?"

கண்ணன் புன்னகை செய்தார். திருமங்கை ஆழ்வாரின் சன்னிதி கோபுரத்தை அவர் கை காண்பித்தது. "அந்த ஆழ்வார்தான் சார்.. எங்க சீரங்கத்தில ஏழு அடுக்கு போட்டு நிதானமா பெரிய கோயிலைக் க்ட்டிட்டு இங்க சாதுவா இருக்கறார்.. அவர்தான் இழுக்கறார்.." சொல்லிவிட்டு வாயில் புன்னகை மாறாமலே பதிலுக்குக் கூட காத்திராமல் குடத்தைத் தூக்கி கொண்டு விரைந்தார்.

ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டே திருமங்கை ஆழ்வாரின் சன்னிதி நோக்கி நடந்தோம். அங்கும் திருமஞ்சனம் ஆரம்பமாகிவிட்டது. ஆனந்தத்தோடு அன்பையும் சேர்த்து தம்மை தன் பக்தர்கள் அபிஷேகம் செய்விப்பதை தம்பதி சமேதராக ஆழ்வார் அனுபவித்துக் கொண்டிருந்தார். அங்கும் கண்ணன்.. பழையபடி அதே உழைப்பு..அதே பக்தி.. அதே சிரிப்பு.

நான் ஆழ்வாரை உற்று பார்த்தேன். ஆழ்வாரின் பார்வை காந்த சக்தியாய் என்னைத் திருப்பி இழுத்தது. இந்த காந்த சக்தியும் கவர்ச்சியும்தான் அந்தப் பழைய காலத்தில் குமுதவல்லி நாசியாரையும் அவர் மூலம் அன்னதானம் செய்வித்து அந்த ஆண்டவனான நாராயணனையே இழுத்ததோ... ஆழ்வாரின் கவர்ந்திழக்கும் சக்திக்கு நராயாணனே கட்டுப்படும்போது சீரங்கத்து ஆடிட்டர் கண்ணன் கட்டுப்படுவதில் என்ன ஆச்சரியம்?..ஒருவேளை கண்ணன் கார்த்திகைக்கு வராமல் போனால்தான் ஆச்சரியம்...

மதியம் ஒரு மணி அளவில் பத்து பட்டர் பிரசாதங்களை வழங்கினார். அருமையான சுவை..அவரிடம் நாதமுனியின் புளியோதரையை ஞாபகப்படுத்தினேன். 'நிச்சயம் அந்தச் சுவையை கொண்டு வருவோம் சார்..' சிரித்துகொண்டே சொன்னார்.

சன்னிதியை விட்டு வெளியே வருமுன் திருமங்கை மன்னனை ஒருமுறை பார்த்துவிட்டுத் தான் வந்தேன்..

'மறுபடியும் கூடியவிரைவில் இன்னோருமுறை கார்த்திகைக்கு வரத்தான் வேண்டும்'.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
திருநகரிக் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை 25ஆந்தேதி நடைபெறுகிறது. திருமங்கை மன்னன் படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பவர்கள் திரு செந்தில் அவர்களின் வலைப்பதிவில் பார்க்கலாம். http://thiruvaikuntavinnagaram.blogspot.com

அன்புடன்
திவாகர்.

Labels: