சீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் கேள்விகளும்.
இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோட்டம் உண்டு. என் நாடகம் ஒன்றில் சீதை அக்கினியில் குளிப்பித்தது என்பது கதாநாயகனாகிய இராமன் தன்னை ஒருபடித் தாழ்த்திக் கொண்டு தன் அருமை மனைவியின் புகழ்பரப்பச் செய்யத்தான், என வசனம் எழுதினேன். கலிஃபோர்னியா வாசியும் என் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பேராசிரியை ராஜம் அம்மா இதைப் படித்துவிட்டு அவர்கள் சில கேள்விகள் எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலாகத்தான் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். படியுங்கள். போகப் போக விவரங்கள், கேள்விகள் புரியும்.
************
அன்புள்ள ராஜம் அம்மா!
முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.. பொதுவாக ராம நவமியன்று ராமரைப் பற்றி எழுதுவது சில வருடங்களாக வழக்கப்படுத்திக் கொண்டுள்ளேன். காரணம் அந்த ஒரு நாளாவது ஸ்ரீராமன் நினைவில் சில மணித்துளிகள் செலவழிக்கலாமே என்றுதான். ஆனால் இந்த ராமநவமியன்று அவன் திருவுளம் வேறாகியுள்ளது என்பது உங்களின் கடிதம் மூலம் நிரூபித்துள்ளான். ’அவனை அதிக நேரம் நினை மனமே’ என்று போதித்துள்ளான். அவன் எப்போதுமே அப்படித்தான்.
உங்கள் பதிவில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு ஒவ்வாததாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
1. சீதையை அக்கினியில் குளிப்பித்து அவள் கற்பின் மீது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டது (!)
2. கர்ப்பஸ்திரீ சீதையை அடவிக்கு அனுப்பி ஒரேயடியாக தள்ளிவைத்தது.
இது பற்றியெல்லாம் நான் புதிதாக என்ன பதில் சொல்வது.. ஆனால் கொஞ்சம் பொறுமை கொண்டு நீங்கள் படித்தால் ஏதேனும் புதிய விஷயம் கிடைக்கலாம். மேலும் ஒரு கோரிக்கை. தயை செய்து திறந்த மனத்துடன் இதைப் படிக்கவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தவறு என அந்தத் திறந்த மனதுக்குப் பட்டால் நீங்கள் உரிமையோடு என்னைக் கண்டிக்கலாம். சரியென்று பட்டாலும் சொல்லி விடுங்கள். உங்கள் தமிழுக்கும், தனிப்பட்ட முறையில் உங்கள் பண்பான உணர்வுகளுக்கும் நான் அடிமை. இப்போது இதை எழுதும்போது யாருக்குப் பதில் எழுதுகிறோம் என்பதை நினைத்துக் கொண்டே ‘ கொஞ்சம் அடக்கி வாசி; என என் அடிமனது கண்டித்துக் கொண்டே இருக்கிறது.
சீதையின் அக்னிப்பிரவேசம்:
தமிழ் மண்ணில் கடந்த ஐம்பதாண்டு காலமாக எத்தனையோ கணக்கிலடங்கா பட்டிமன்றங்களில் இந்தச் செய்திகள் மிகப் பெரிதாக வாதாடப்பட்டுள்ளன.. இந்தப் பட்டி மன்றங்களில் சீதையின் பரிதாபநிலை கேட்டு அவளுக்காக மருகி அழுதவர் பலபேரைப் பார்த்திருக்கிறேன். ஏன் நானே சில சமயங்களில் ஸ்ரீராமன் மீது கோபம் கொண்டுள்ளேன். ஆனால் அப்படிப் பேசியவர்கள் வேறு இடங்களில் ஸ்ரீராமனுக்கு ஆதரவாகவும் சீதை அக்கினியில் குளிப்பித்தது சரிதான் என்று கூட மாறிப் போய் பேசுவர். அடக் கடவுளே.. அப்படியானால் தமிழ்ப் பேச்சாளர்களின் மகிமையினால்தானா இந்தப் பிரச்சினை இத்தனைப்பெரிதாக எழுகிறது என்று கூட நினைப்பேன். அதுதான் உண்மையோ என்னவோ என்று பல சமயங்களில் தோன்றும். பல புத்தகங்கள், பல கவிதைகள் அக்கினிப்பிரவேசத்தால் மெருகேறியுள்ளன. சீதை மட்டும் அக்கினிப் பிரவேசம் அன்று செய்திராவிட்டால் பல கவிஞர்களின் கற்பனை வறண்டு போயிருந்திருக்குமோ என்று கூட தோன்றும். ஏனெனில் தெலுங்கு நாட்டில் இதைக் காணவில்லை. அங்கெல்லாம் ராமபக்தி மட்டும்தான் உண்டு.
எனக்கு மூதறிஞர் ராஜாஜியை அவருடைய கடைசிகால கட்டத்தில் அடிக்கடி (தினந்தோறும் குடிநீருக்காக மதிய வேளையில் - பள்ளிக்குப் பக்கத்து வீடு) சந்திக்கும் பேறு கிடைத்தது. அவை பள்ளி நாட்கள். பள்ளிக் கல்வி முடியும் போது மாணவர்களான எங்கள் நால்வருக்கு அவர் எழுதிய பழைய புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார். எனக்குக் கிடைத்தது அவர் எழுதிய ராமாயணம் ஆங்கில நூல். அப்போது உடனடியாக படிக்கவில்லை.. ஆனால் பாதுகாத்து வந்தேன்.விஜயவாடா சென்ற பிறகுதான் ஒருநாள் சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தேன். அதை முடிக்கும்போது ராஜாஜியின் வரிகள் ‘ஐய்யோ ராமகாதையின் கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டேனே’ என்று மனமுருக அவர் எழுதி ராமபட்டாபிஷேகத்தினை முடித்திருப்பார். கடைசியில் முத்திரை வரிகளாக எத்தனைதான் ஸ்ரீராமன் மகாபுருஷனாக செயல்பட்டு அத்தனை அசுரர்களையும் அழித்து லோககல்யாணம் செய்திருந்தாலும் அவன் சீதை அக்கினி பிரவேசத்தின் போது நடந்துகொண்டது எனக்குப் பிடிக்கவில்லைதான்’ என்று எழுதியிருப்பார்.
புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் எனக்கு அவர் கருத்தில் ஈடுபாடுகொண்டு, இராமன் செய்தது சரிதானா என்று மனம் ஒருபக்கத்தில் வலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் காலம் செல்லச் செல்ல வால்மீகி ராமாயணத்தைப் பலபேர் சொல்ல பலதடவை கேள்விஞானம் பல விஷயங்களில் பெற முடிந்தது. கம்பராமாயணப் புத்தகங்கள் வாங்கினோம். நண்பர்களுடன், பெரியவர்களுடன் விவாதித்தோம்.. கம்பர் வால்மீகியை விட தீவிர ராமபக்தர். அவர் கருத்தும் மனதுக்குள் விவாதிக்கப்பட்டதுதான். அக்கினிப்பிரவேசம் சரிதானா, அது ஏன் நடத்தப்படவேண்டும்..
ராமகாதையில் ஒவ்வொரு நாளும்நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் வால்மீகி எழுதவில்லைதான். இப்படி எழுதாத வால்மீகி வெகு எளிதாக சீதையின் அக்கினிப் பிரவேசத்தையும் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ளாமல் யுத்தம் முடிந்தவுடன் சுக்ரீவனுக்கு பட்டம் கட்டினோமா, அயோத்தி திரும்பினோமா என்று அவர் நிகழ்வைக் கொண்டு சென்றிருக்கலாம். இதனால் சீதையின் இந்தக் கட்டமே தெரியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு..
நன்றாக இந்த இடத்தில் சில விஷயங்களைக் கவனிக்கவும்..
#அதாவது சீதையின் கற்பு விஷயத்தில் அந்த யுத்த களத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்று சீதையை விடுவித்து அழைத்துச் செல்லும் கதாநாயகனை அவ்விடத்தில் கேள்வி கேட்போர் யாரும் இல்லை. ஸ்ரீராமனையே அதுவும் அந்த அசகாய சூரனை ராவணனை அவன் பத்துத் தலைகளையும் அறுத்த இடத்தில், இப்படி ஒரு கேள்வி கேட்பதா.. அது முடியுமா?
#சீதையின் ஸ்ரீராமபக்தி அதாவது பதிபக்தி கேள்விக்கு அப்பாற்பட்டதாக கதையின் மொத்தக் கட்டத்திலும் சொல்லப்பட்டது. குறிப்பாக சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையைத் தான் மீட்டுச் செல்வதாக வரும் கட்டத்திலும், இராவணன் அசோகவனத்தில் கண்டு தன்னை ஏற்றுக் கொள்ளும்படிக் கெஞ்சும் கட்டத்திலும் சீதையின் பதிபக்தி மிக அதிகமாகத் தெரியவரும். தன்னை மீட்டுச் செல்வதாகச் சொன்ன அனுமனை மென்மையாகக் கண்டிப்பாள்., அசுரனையோ துச்சமென மதித்து ஏசுவாள். இராமனின் கையில் ஏற்படப்போகும் ராவணனின் முடிவை அவனுக்கு முன்பே தெரிவித்தவள் சீதை. இதையெல்லாம் அந்த இடத்தில் நேரடியாகக் கவனித்த அனுமன் பின்னாட்களில் - அதாவது யுத்தத்துக்கு செல்லுமுன்னர் - இராமனிடம் தெரிவித்தும் இருப்பான் அல்லவா.. சீதையின் பரமபக்தனாக மாறியவனாயிற்றே..
சுந்தர காண்டத்தில் அனுமனுக்கு சீதையே சொல்லும் காகாசுரனின் கதையை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
வனவாசத்தின் போது வனத்தில் ராமன் சீதையின் மடியில் தலைசாய்த்து நிம்மதியாக உறங்கும் நேரத்தில் காக்கை ஒன்று சீதையின் மார்பகத்தைக் கொத்துகிறது. ஆனால் சீதைக்கு எங்கே தன் கணவன் உறக்கம் தெளிந்து எழுந்துவிடுவானோ என்ற கவலையினால் அந்த வலியைப் பொறுத்துக் கொள்கிறாள். ஆனாலும் காக்கைக் கொத்தக் கொத்த மார்பகத்தின் ரத்தம் ஸ்ரீராமன் மீது பட அவன் எழுந்துகொள்கிறான். கோபம் கொண்டு காக்கையை ஓட ஓட விரட்டுகிறான். கடைசியில் காக்கை சீதையின் காலடியில் வந்து வீழ்கிறது. இரக்கம் காட்டுகிறாள் சீதை. இங்கே ஸ்ரீராமனின் கோபத்தைக் காணவேண்டும்.ரௌத்ரமூர்த்தியாக மாறுகிறான். சீதைமேல் அவன் கொண்ட காதல் இப்படியெல்லாம் அவனை மாற்றுகிறது. அப்படிப்பட்ட ஸ்ரீராமன் வந்து தன்னை மீட்டு அழைத்துச் செல்லும் வரை காத்திருப்பதுதான் ஒரு பத்தினிக்கு அழகு என்கிறாள் சீதை.
ஆகையினால் இந்த ராமாயணக் காதையில் சீதையின் கற்புக்காக அக்கினிப் பிரவேசம் என்ற ஒன்று தேவையே இல்லை.சரி அப்படியே நடந்திருந்தாலும் வெற்றிவீரன் ராமனின் புகழுக்குக் களங்கம் ஏற்படும் விதத்தில் இதை ஏன் வால்மீகி எழுத வேண்டும்.. தேவை இல்லையே.. .
ராமன் மானிடனாக அவதாரம் செய்தான். மானிடனாக கல்வி, வீரம் கற்றான். முனிவர்களை அவர்கள் துயரிடமிருந்து காப்பாற்றினான். யாரும் முறிக்கமுடியாத வில்லை முறித்து சீதையைக் கைக்கொண்டான். பின்னர் மாற்றாந்தாய்க்காகக் காட்டுக்குச் சென்றான். காட்டு வாழ்க்கையை அனுபவித்த சமயத்தில் சீதையைப் பறிகொடுத்து கோபம்கொண்டு வானரர் படை துணைக்கொண்டு அசுரனை அழித்து சீதையை மீட்டு அயோத்தி சென்று பட்டாபிஷேகம் சூட்டிக் கொண்டான்.
ராஜம் அம்மா!.. இந்த நான்கரை வரியில் இராமாயணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் விவரித்தால் ராமனின் வீர தீர பராக்கிரமங்களையும் விரிவாகப் பேசினால் ‘சீவகசிந்தாமணி’ அளவில் சீவகனின் வீரதீரசாகசத்தைப் போல ஒரு சிறு காவியமாகப் படைக்கலாம். அவ்வளவுதான். ஆனால் காலாகாலத்துக்கும் பேசப்படும் ராமாயணத்தை அப்படி எழுதவில்லை. அதற்கு ஆதிபெயர் சீதாயணம். சீதை எனும் துயர்மிகுந்த பெண்ணின் கதை இது. அவள் துயரம் மிகத் தெளிவாகப் பரவ வேண்டும். அவள் செய்த தியாகம், ஸ்ரீராமன் மேல் கொண்ட பற்று, பாசம், காதல் அதற்கும் மேலே ஸ்ரீராமனே தன்னை விடுதலை செய்து மீட்டு அழைத்துச் செல்வான் என்ற நம்பிக்கை. சுந்தரகாண்டம் முழுவதும் அவள் புகழ்தான், அவள் மேன்மைதான் பேசப்படுகிறது. சீதையை ஆசைகாட்ட,ராவணன் அவள் தந்தை போல மாறி அசோகவனத்தில் வருகிறான். ராவணனை மணந்துகொள் என்று அறிவுறுத்திய ஜனகனை தந்தையென்றும் பாராமல் ஏசுகிறாள். எப்படிப்பட்ட பதிபக்தி இது என்று ராவணனே மயங்குவதாகக் கூட வால்மீகி எழுதுவார்.அப்படிப்பட்டவள் தன் தூய்மையை நிரூபிக்க அக்னியில் குளிக்கவேண்டுமாம்.
அப்படியானால் ராஜாஜியும் ராஜம் அம்மாவும் சொன்ன கருத்து நியாயமாக இருக்கிறதே என்று கேட்கத்தான் தோன்றும். ஆனால் தீர ஆராய்ந்து பார்க்கும்போது இவர்களும் இருவரும் எத்தனைதான் தெளிவாக, ஞானிகளாக இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட கருத்தை ஓர் சார்பு முறையாகத்தான் பார்த்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் எதிர்த்துப் பதில் சொல்லும் நான் இவர்கள் இருவரை விட நான் ஞானம் மிகுந்தவனா என்றால் நிச்சயம் இல்லை..
உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
//ஆகா, ஆகா, அக்னிக்கும் ராமனுக்கும் சீதைக்கும் இடையே ஒரு mutual agreement இருந்திருந்தால் ... கல்ச்சரோ காவியப்படைப்பாளனோ ஏன் ராமனைத் தீக்குள் அனுப்பவில்லை? குளூகுளூ என்ற தீயில் அவன் புகுந்து புறப்பட்டிருந்தால் ... ? தீக்குள் அனுப்பப் பெண் என்பவள்தான் கிடைத்தாளோ? வாய்பேசமுடியாத விலங்குகளையும் வாய்பேசும் உரிமையில்லாத பெண்களையும் தீக்குள் அனுப்பிய சமூகத்தின்மேல் எனக்கு மதிப்பில்லை. சீச்சீ என்றுதான் உதறுகிறேன்//
கணவன் மனைவியாக ஸ்ரீராமனும் சீதையும் இந்த மண்ணுக்காக நிகழ்த்திக்காட்டிய ஒரு நிகழ்ச்சிதான் அம்மா.. ஸ்ரீராமன் அவளைத் தீக்குளிக்கச் சொல்லவில்லை. ஆனால் அவ்ள் தீக்குளிக்கையில் ஏதும் பதில் பேசவில்லை. ஏனெனில் அவனுக்கும் தெரியும் சீதைக்கும் தெரியும் அக்கினிக் குளியலும் அருவிக் குளியலும் அவர்களுக்கு ஒன்றே. இதை அனுமனும் அறிந்ததால்தான் அங்கே மௌனம் சாதிக்கிறான். இது கணவன் மனைவி பிறருக்காகவோ அவர்களுக்காகவோ விளையாடியது போலத்தான்.
ராஜம் அம்மா, நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்.. அதற்கு தயை கூர்ந்து பதில் தரவேணும்.
1.சீதை தானும் காட்டுக்கு வருவதாக ராமனிடம் விண்ணப்பிக்கும்போது ராமன் வேண்டாமென்று மறுக்கிறான். ஒரு பெண் தன்னோடு துயரத்தை அந்த அடவியில் பங்கு கொள்ளவேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதை ராமனைக் கடிந்து கொள்கிறாள். இராமனை ‘பேடி’ என இகழ்கிறாள்.
கேள்வி - சீதை இப்படி வாய்க்கு வந்தபடி சொல்லலாமா? நல்ல எண்ணத்தில் சொல்லப்பட்ட அந்த மறுப்புக்கு இதுதான் பதிலா?
2.. பொன்மானைக் கண்டதும் தனக்காகப் பிடித்துத் தரும்படி கேட்கிறாள் சீதை. கேட்பதில் தவறில்லை.. ஆனால் இளவலைக் காவல் வைத்து செல்கிறான் ராமன். ஆனால் ‘லட்சுமணா’ என்ற கூவல் கேட்டுப் பதறும் சீதை லட்சுமணனை அனுப்ப, அவன் அண்ணன் கட்டளையிட்டதற்காக அங்கேயே இருப்பேன் என்று மன்றாடுகிறான். ஆனால் சீதை கேட்கவில்லை.. அவனை நா கூச திட்டுகிறாள்.. அவன் நடத்தையையே சந்தேகிக்கிறாள்.
கேள்வி - இப்படியெல்லாம் எல்லாமறிந்த சீதை இளவலைத் திட்டலாமா? கணவன் சொல்படிதானே காவலுக்கு அங்கேயே நிற்கிறான்?.
3. இளவல் வேறு வழியில்லாமல் கோடு கிழித்து காப்பு வைத்துவிட்டு செல்லும்போது ராவணசந்நியாஸி பிட்சை கேட்கும்போது தன் நிலையும் தர்ம நெறி பலவும் தெரிந்த சீதை, எத்தனைதான் சந்நியாஸி கோட்டைத் தாண்டி வரச் சொன்னாலும், கோட்டைத் தாண்டிச் செல்லலாமா?
அறியாமல் செய்தால் அது தவறு. அறிந்து செய்தால் அது தப்பு. சீதை ஏன் இந்தத் தப்பை அறிந்தே செய்யவேண்டும்?
ஆனால் மேற்கண்ட மூன்றும் இல்லாமல் இருந்தால் இராமாயணம் என்பதே வந்திருக்காது என்கிற தெரிந்த பதிலைச் சொல்லவேண்டாம். எனக்குத் தெரியவேண்டியது, நீங்கள் சொன்னீர்களே ‘வாய் பேச முடியாத பெண்’ என்று. அந்தப் பெண் சீதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்.
4. சுந்தரகாண்டத்தில் அனுமன் வாலுக்குத் தீயிட்ட சங்கதியையும், லங்கா நகரம் தீயில் அழிவதையும் லங்கிணிகள் பயந்துகொண்டே சீதையிடம் சொல்லும்போது, சீதை சொல்கிறாளே ‘ராமன் என்கிற கணவனின் பத்தினியாகிய நான் சொல்கிறேன். அக்னி தேவா, அனுமனுக்கு உன்னால் அந்தத் தீங்கும் நேரக் கூடாது,”
கேள்வி - அக்னி தேவன் அப்படியே செய்கிறான்.. அதெல்லாம் இருக்கட்டும் அக்னி தேவன் ஏன் அப்படி செய்யவேண்டும்?
ராஜம் அம்மா, பதில் தாருங்கள். இந்தப் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.
அடுத்த கேள்வி:
//வயிற்றில் உண்டான கருவுக்காக மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓர் அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தபின் சீதை உயிரை மாய்த்துக்கொண்டதைப் போற்றும் சமுதாயம் இது. 4. நான் எழுதினால் ... அரசாளும் ஆணவம் பிடித்த அப்பனுடன் பெற்ற பிள்ளைகளை அனுப்பிவிட்டு ... அனாதை ஆசிரமத்தில் அமைதியாகப் பொழுதுபோக்கும் சீதையை உருவாக்குவேன்.//
ஸ்ரீராமனுடன் சீதா தேவி மிகுந்த சந்தோஷமான நாட்களை வனத்திலும், அதன் பின் ஏற்பட்ட ராவணவதத்துக்குக்கப்பாலும் அயோத்தியில் சில காலமும் கழித்தவள். சீதையின் சரித்திரத்தின் ஆரம்பமே சூசகமாகத்தான் நமக்குத் தெரிவிக்கிறது ராமாயணம். அவள் ஸ்ரீராமனைப் போல பிறந்தவளா.. இல்லை பிறப்பே இல்லாமல் பூமியில் கிடைத்தவளா.. அவள் யார்? ஸ்ரீலக்ஷ்மியின் அவதாரமா, பூதேவியின் மறு உருவா? அல்லது சாட்சாத் சிவபெருமானே பெண்ணின் தன்மை இத்தகையது என்றறிய (இப்படி ஒரு கதையும் உண்டு) சீதாவாக அவதாரம் எடுத்தானா.. சீதையின் தாய் தந்தையர் யார் என்கிற கேள்விகளுக்கு வால்மீகி ராமாயணத்தில் நான் கேட்ட வரை மிகச் சரியான தகவல்கள் இல்லை.
அவள் வரவைப் பற்றி கம்பன் வர்ணனை திருமகளாக இருந்து மணமகளாக வரும்போது ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்பதாக இருக்கிறது. அது பாற்கடலில் பள்ளிகொண்டவனைப் பிரிந்தவள் அதன் பிறகு மணமகளாக ஆனபின்னர் பார்க்கிறாள். இது வால்மீகியில் இல்லை. பின் சீதை என்பது யார்? இது மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கு ராமாயணத்தில் பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் மேலே கேட்கப்பட்ட கேள்வி சீதைக்குப் பொருந்தும் என்பது என் தாழ்மையான கருத்து. ஒருவேளை அவள் திருமகள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால் தெய்வத்துக்கு ஏதும் சிரமம் என்பதே கிடையாது. தெய்வம் தனக்கென நிர்ணயம் செய்து கொண்டதை கேள்வி கேட்பதற்கு நாம் யார்? பார்வதிதேவி காத்யாயினியாக, காமாட்சியாக அவதரித்து பூமியில் சிரமங்களுடன் தவம் செய்தாள். நாம் ஏனென்று கேட்கிறோமா? இல்லையே.. அதுபோலத்தான் சீதைக்கு நேர்ந்த சிரமங்களும். சீதை மாநிடப் பெண் என்று சொன்னால் அதற்கு ராமாயணத்தில் ஆதாரம் ஏது?
உத்தரகாண்டத்தில் சீதை காட்டில் சிரமப்பட்டதாக எதுவும் எழுதவில்லை.. ஆனால் இராமன் மிகுந்த அவஸ்தைக்குள்ளானான். ராஜ்ஜியம் ஆளுவது என்பது அந்தக் காலத்தில் சத்திரய தர்மத்துடன் கூடிய ஆளுமையைக் காண்பிக்கவேண்டும். இந்தக்காலக்கண் கொண்டு ராஜ்ஜியம் ஆளுவதை நோக்கமுடியாது. அப்படியே நோக்கினாலும் இரண்டு மாதிரிகள் கீழே தருகிறேன்.
1. தர்மம் - மன்னர்கள்/ஆள்பவர்கள் ஸ்வதர்மம் காத்து ஆளவேண்டும் - ஜீலியஸ் சீஸர் சந்தேகத்திற்கப்பாற்பட்டவாறு இருக்க வேண்டும். சமீபகால உதாரணம் பில் கிளிண்டன் - மோனிகா விவகாரம். இந்த விஷயத்தில் பில் பீஸ் பீஸாக்கப்பட்டார். (நமது நாட்டிலும் இத்தகைய விவகாரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவை தர்மம் தவறியதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்) நம் நாட்டில் கூட குற்றம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் ஆட்சி கிடையாது. உதாரணங்கள் உண்டு..
2. தலை சரியாக இருந்தால் நாடு உருப்படும், மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி - எல்லா விஷயங்களிலும்.
சீதையைப் பிரிந்தது அந்த ஸ்வதர்மத்தில் சேர்த்திதான்.. உத்தரகாண்டம் பிரகாரம், இராமன் அவைக்கு முனிவர்கள் வருகிறார்கள். நாடு ஆளுமை பற்றி ராமச்சந்திர சக்கரவர்த்தி அவர்களைக் கேட்கிறார். முனிவர்கள் அனைவரும் நாட்டின் சுபிட்சத்தை, அரசனின் நல்லாட்சியைப் போற்றிவருகிறார்கள், என்கிறார்கள். இராமன் அவர்களை அப்படியே விடுவதாக இல்லை. வேறு எதிர்வார்த்தைகள் யாரும்பேசவில்லையா என்று கேட்கிறார். உண்மையே பேசும் முனிவர்கள் ‘துணிவெளுப்பவன் ஒருவனின் வம்புப்பேச்சையும் சீதா பிராட்டியை சற்று இழிவாகப் பேசியதைக் குறிப்பாக சொல்கிறார்கள். பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சொல்லியும் சத்திரிய தர்மத்தின் படி அவன் சீதையைக் காட்டில் கொண்டுவிடுமாறு (முதல்நாள்தான் சீதை இராமனிடம் தாம் இருவரும் ஓடியாடி மகிழ்ந்திருந்த காட்டுக்கு ஒருமுறை செல்லவேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கிறாள்) சக்கரவர்த்தி ராமச்சந்திர மூர்த்தியாக ஆணை போடுகிறான். அவள் போனதும் சீதாராமனாக அவள் நினைவாகவே தன் வாழ்க்கையைக் கழிக்கிறான்.
அஸ்வமேதயாகம் செய்யும் போது கூட தன் மனைவி உருவத்தை பக்கத்தில் வைத்துச் செய்வதாக எழுதுகிறார்கள். சீதையின் வாழ்க்கை மகன்களோடு கழிகின்றது. ஸ்ரீராமனின் வாழ்க்கை தாமரை இலை நீர் போல கடமை மட்டுமே செய்யும் தர்மசீலனாகத் தொடர்கிறது. ஏன் பிற்பாடாவது மனைவியை அழைத்திருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். இது அவர்களாகவே தங்களுக்கென விதித்துக் கொண்ட ஒரு செயல். அதனை அதன் கண் விடல் என்பதே பொருத்தம். இது ஒரு தவ வாழ்வு இருவருக்குமே.. இல்லையென்றால் சீதை தன் குமாரர்களிடம் ராமகாதையை ஊரெங்கும் பரப்பிட வற்புறுத்தியிருப்பாளா. சீதை தாய் மட்டுமல்ல. தவசீலி.
உத்தரகாண்டத்தை நம்மாழ்வார் படித்திருக்கிறார் ராஜம் அம்மா.. தான் திரும்பி வைகுண்டம் செல்லும்போது புல் பூண்டு போன்ற ஈன ஜன்மங்களுக்கும் உய்வளித்தான் ஸ்ரீராமன் என்பார். படித்தால் ராமனின் கதையை மட்டுமே படியுங்கள் என்று வேறு அறிவுறுத்துகிறார். (கற்பார் ராமபிரானையன்றி மற்றும் கற்பரோ)
ஸ்ரீராமநவமியன்று இந்தப் பதிவை இடவேண்டுமென்பது அவன் கட்டளை போலும்.
ஸ்ரீராம ஜெயராம சீதாராம்
அன்புடன்
திவாகர்.