Wednesday, June 27, 2007

திவாகரின்
விசித்திர சித்தன்

(அணிந்துரை : திரு எழில் முதல்வன் அவர்கள் (பேராசிரியர் டாக்டர் மா.இராமலிங்கம்)
முன்னைத் தமிழியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

திவாகர் எழுதியிருக்கும் 'விசித்திர சித்தன்' என்னும் இந்நாவலை பொதுநிலையில் ஒரு முறையும், சிறப்பு நோக்கில் இன்னொரு முறையும் படித்து முடித்த போது என்னுள் ஒரு கருத்து உறுதிப்பட்டது. எழுதுவார் எழுதினால் வரலாற்று நாவல்களும் சிறந்த இலக்கியப் படைப்பாக ஆக முடியும். இன்றைய தலைமுறையினரின் மூடிக்கிடக்கும் விழிகளைத் திறந்து, ஒளிமிக்க எதிர்காலத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும்.

வரலாற்றில் அறியப்பட்ட உண்மைகள் பல; அறியப் படாத விவரங்கள் மிகப் பல. அந்த எல்லைக்குள் அறியப்படாத நிகழ்வுகளை தம் கற்பனைத் திறத்தாலும், கை வண்ணத்தாலும் இட்டு நிரப்புவதே வரலாற்று நாவலாசிரியரின் பணியாகும். பல்லவர் வரலாற்றில் இவ்வாறு வெறுமையாகத் தெரிந்த காலக் கட்டத்தைத் தெரிவு செய்து, திவாகர் கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். நாவலைப் படித்து முடிக்கிற போது. 'இது இப்படித்தான் இருந்திருக்க முடியும்' என்றும், 'இது வேறு வகையாக நடந்திருக்க இயலாது' என்றும் ஒரு நம்பிக்கையை ஊட்டுவதே நாவலின் வெற்றியாகும். இந்த நாவல் வெற்றியை அறுவடை செய்திருக்கிறது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சில காலம் சமண சமயத்தில் இருந்து மீண்டும் சைவத்திற்கு திரும்பினான், வைதீக சமயத்தை வளர்த்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. இதன் அடிப்படையில் அவன் எத்தகைய சூழ்நிலையில் சமணத்தைச் சார்ந்தான் என்பதையும் எத்தகைய அனுபவங்களால் மீண்டும் அகச்சமயத்திற்குத் திரும்பினான் என்பதையும் கதாசிரியர் அருமையாக - படிப்போர் முழுமையாக ஏற்றுக்கொள்கிறாற்போல் - எழுதியிருக்கிறார். எல்லா மோதல்களும், எல்லா உடன்பாடுகளும், மகேந்திர வர்மன் என்னும் மையப்புள்ளியில் வந்து ஆரக்கால்களாகக் குவிய, கதை என்னும் சக்கரம் தங்கு தடையின்றி உருண்டோடுகிறது.

நாவலாசிரியர் திவாகர் வரலாற்றில் தமக்குள்ள ஈடுபாட்டையோ, அத்துறையில் மேற்கொண்டிருந்த பரவலான உழைப்பையோ காட்டுவதற்காக மட்டும் இந்நாவலை எழுதியிருக்கிறார் என்று சொல்லமாட்டேன். அவருக்கிருக்கும் நம் சமகால வாழ்க்கையைப் பற்றிய நனவுணர்வே (Awareness of our contemporary Life) அவருக்கு தூண்டுகோலாக அமைந்து, அவரை வரலாற்றின் பக்கம் இழுத்துப் போயிருக்கிறது. இன்றைய உலகில் எங்கு நோக்கினும் சமயத்தின் பெயரால் பூசலும், பிணக்கும், எல்லை கடந்த பயங்கரவாதமும் பல்கி வரக் காண்கிறோம். சமய நல்லிணக்கத்தோடு வாழக் கற்றுக் கொள்ளாதவரை இன்றைய மனிதனுக்கு உய்வு இல்லை; உயர்வு இல்லை, கடைத்தேற்றம் இல்லை. இந்த உண்மையை நேரடியாக உணர்த்துவதை விட, கடந்த கால பின்னணியில் கதைபொதி பொருளாக்கி எழுதிக் காட்டினால், படிப்போருக்கு ஆழமாகப் புரியும். அக்கதையின் ஒளிவீச்சில் சமகாலப் பிரச்சினைகளை அதன் ஆழ அகலத்தோடு புரிந்து கொள்ள முயல்வார்கள் என்று நினைத்திருக்கிறார். இவ்வாசிரியரது நோக்கம் உயர்ந்தது; விழுமியது.

இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால், நாவலாசிரியர் எப்பக்கமும் தன் சார்பு நிலையைக் காட்டாமல் முழுக்க முழுக்க புறநோக்கு நிலையிலேயே அனைத்தையும் சித்தரித்துப் போவதுதான். இப் புற நோக்கு அணுகுமுறையே (objective approach)இந்த நாவலின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகிறது.

இந்நாவலில் வரும் விசித்திரனும், கோமதி முனியும், காதம்பரியும், காந்தாவும், வணிக சிரேட்டிகளும் - ஏன் - ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் உறுதியாக நின்றே கருத்துக்களை விவாதிக்கின்றனர். ஆனால் நிகழ்ச்சிப் போக்குகளின் கட்டாயத்தினாலும், தம் அனுபவ அடிப்படியில் பெறும் விழிப்புணர்வாலும் இவர்கள் அடையும் மனமாற்றம் செயற்கையானதன்று. உயிர்மையின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் தவிர்க்கவியலாத விளைவு. கதையில் பேசப்படுவது வெறும் மதமாற்றமல்ல; இயல்பாக உருவாகும் ஆன்மீகப் புரட்சி. அது மட்டுமா? "அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்/ அவரவர் விதி வழி அடைய நின்றனரே" என்னும் குரல் பாட்டில் இடம் பெறும் பல்லவிபோல், கதையின் உள்ளீடாக கருத்தளவில் ஒலிக்கிறது.

கதை மாந்தர் படைப்பில் திவாகர் நல்ல வெற்றியைப் பெறுகிறார். அடிப்படைவாதியான (Fundamentalist) வச்சிரநந்தி; கண்ணன் காட்டும் வழியே தம் வழியெனப் பற்றற்றுச் செயல்படும் பீமவர்மர்; ஒரு தவறைச் செய்துவிட்டு மனமாற்றம் பெற்று அஹிம்சைக்காகவே உயிர்விடும் கோமதி முனி; காதலுக்கு காரியம் யாவற்றிலும் கைகொடுக்க முந்துறும் காதம்பரி; கொண்ட கொள்கைக்காகத் தம் காதலனுடன் இணங்கியும் சற்றே பிணங்கியும் செயல்படும் கொம்மை - எல்லாக் கதை மாந்தர்களுமே நம் மன அரங்கத்தில் உயிரோடு நடமாடுகின்றனர். தன் விசித்திரமான போக்கினாலும் சித்தம் கலங்கா செயற்பாட்டினாலும் நம் நெஞ்சைக் கவரும் மகேந்திரவர்மனை யார்தாம் மறக்கமுடியும்?

நாவல் ஆந்திர நாட்டுக் கிருஷ்ணை நதிக்கரையில் தொடங்குகிறது. சோழநாட்டின் காவிரிக்கரையில் முடிகிறது. நாவலின் உச்ச கட்ட நிகழ்வுகள் சிவசைலத்தில் நிகழ்கின்றன. நதிக்கரையில் தொடங்கிய கதை மெள்ள மெள்ள வளர்ந்து மலை முகட்டுக்குப் போய், மீண்டும் இறங்கி நதிக்கரையில் முடிவதாகக் காட்டுவதிலும் ஒரு நுட்பமான கட்டுமானத் திறன் இருப்பது எனக்குப் புலப்படுகிறது.

சுருங்கச் சொன்னால், இந்த நாவல் எடுத்தேன், படித்தேன், தூக்கிப் போட்டேன் என்னும் நிலையில் அலட்சியப்படுத்ததற்கு உரியதல்ல. இந்த நாவல் அவ்வகையில் அடங்காது. "தனித்திருந்து படித்தேன்; உணர்வு பெற்று விழித்தேன்; புத்துலகை உருவாக்கத் துடித்தேன்" என்று படிப்போர் சொல்லும் நிலையில்தான் இந்த நாவல் எழுதப் பட்டுள்ளது.

நாவலாசிரியருக்கு என் நல்வாழ்த்துக்களும் மனம் திறந்த பாராட்டும் உரியது.
அன்புடன்
எழில் முதல்வன்.

-------------------------------------------
விசித்திரச் சித்தன் - வெளியிட்டோர் - பழனியப்பா பிரதர்ஸ், 25, பீடர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014.

Labels: