ஏடு தந்தானடி இறைவன் - 6 (தேவாரத்துக்கு அப்பெயர் எப்போது வந்தது?)
உலகமனைத்தும் உள்ள தமிழர்களெல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. உலகத்தில் வரையப்பட்ட அல்லது எழுதப்பட்ட அல்லது பாடப்பட்ட எந்த ஒரு எழுத்து இலக்கியத்துக்கும் இல்லாத ஒரு பெருமை தேவாரத்துக்கு மட்டுமே உண்டு. மிக அதிகமான அளவில் கல்வெட்டுகளில் காணப்படுவது தேவாரம் மட்டுமே.
ஆம். தேவாரப்பாடல்களைப் பாடுவதற்காக வழங்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஏராளமான கல்வெட்டுகளாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. தமிழில், வடமொழியில் என பாடல்பெற்ற தலங்களில் எல்லாம் இந்தத் தேவாரப்பாடலுக்காக ஏதாவது ஒரு கொடை வழங்கும் நிகழ்வாக அந்தக் கல்வெட்டில் பதியப்பெற்றதை நினைக்கும்போதே நமக்கு உள்ளம் குளிர்கிறது. வேறு எந்த இலக்கியத்துக்கும் கிடைக்காத பெருமையை அன்றைய மக்களும் மன்னர்களும் தேவாரப்பாடலுக்கு அளித்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும்போது அந்தப் பாடல்கள் எந்த அளவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து நாநிலத்தில் உள்ளோரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கவேண்டும் என்றும் வியக்கத் தோன்றுகிறது. சிவபாதசேகரனாகிய ராஜ ராஜ சோழன் காலத்திலேயே நூற்றுக்கணக்கில் வடக்கே ஆந்திர தேசத்திலிருந்து தென்கோடி ஈழம் வரை மூவர் பாடல்கள் மிக அதிகமாகப் பாடப்படுவதற்கான உதவிகள் வழங்கப்பட்ட கல்வெட்டுகள் வழங்கப்பட்டு அவை இன்று நமக்கு கிடைத்தும் உள்ளன.
தேவாரம் என்றால் தே-வாரம் என இரண்டாகப்பிரிந்து தெய்வத்தின் மீது பாடப்பட்ட சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் எனப் பொருள் படும் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். வாரம் எனும் சொல் சிலப்பதிகாரத்தில் வருகிறது. ‘வாரம் பாடும் தோரிய மடந்தையும்’ என வரும் வார்த்தையால் வாரம் என்றால் இசையோடு கூடிய பாடல் என்று இதற்கான காரணத்தைக் கூறுகிறார்கள். "வாரமாய் வணங்கு வார் வல்வினைகள் மாயுமே" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
மேலும், வாரம் என்றால் உரிமை எனப் பொருள் கொள்ளலாம் என சைவ சித்தாந்த கட்டுரைகளில் காணப்படுகின்றன.. இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பை - உரிமையை உள்ளவாறு தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல் என்ற பொருளும் இதற்கு உண்டு என்பதைக் காணலாம்.
இன்னும் சிலர் தே-ஆரம் அதாவது தெய்வத்துக்கு அணிவிக்கப்படும் பாமாலை, அணிகலனாக பொருள் கொள்கிறார்கள். ஆனாலும் தேடித் தேடிப்பார்க்கையில் தேவாரம் எனும் ஒரு சொல்லை மூவர் முதலிகளோ அல்லது பின் வந்த திருமுறை ஆசிரியர்களான நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்றோர்களோ குறிப்பிடவில்லை என்றுதான் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் தம் புத்தகம் ஒன்றில் குறிப்பிடும்போது தேவாரம் எனும் சொல்லை வழிபாடு எனும் பொருளாகத்தான் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறார்.
ஏற்கனவே சில கல்வெட்டுகளின் விவரங்களைப் பற்றி எழுதினோம். அவற்றில் மூவர் பாடல்களுக்கு தேவாரம் எனும் சொல் தவிர்க்கப்பட்டு அவை திருப்பதியம் என்றே வரையப்பட்டுள்ளது. இவைகளில் ராஜ ராஜன் காலம் வரை அதாவது 10ஆம் நூற்றாண்டு முடிவு வரை பார்த்தோம். பதினொன்று, பன்னிரெண்டு நூற்றாண்டின் கல்வெட்டுகளிலும் மூவர் பாடல்கள் திருப்பதியம் என்றே அழைக்கப்படுகின்றது.
அதே சமயத்தில் ராஜராஜன் காலத்திலும் ராஜராஜனுக்குப் பிறகும் வந்த அரசர்களின் காலத்திலும் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் தேவாரம் எனும் சொல் காணப்படுகின்றது, ஆனால் இந்த 'தேவாரம் என்பது எப்பொருளில் வழங்கப்பட்டு வந்தது’ என்பதையும் பார்ப்போம்.
காலம்: முதல் இராசேந்திர சோழன் காலம் – இடம் தஞ்சை பெரிய கோவில் - செய்தி: ”.....பெரிய பெருமாளுக்கு 'தேவார' தேவராக எழுந்தருள்வித்த தேவர் பாதாதி கேசாந்தம் ஐவிரலிலே இரண்டுதோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தமும் உடையவராகக் கனமாக பித்தளையால் எழுந்தருளுவித்த சந்திரசேகரத்தேவர் திருமேனி ஒன்று”(SII Vol 2, no. 38)
இதன் சாரம் என்னவென்றால் ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்த வேளான் எனும் அரசு அதிகாரி ஒருவன் தம் தலைவர் ராஜராஜசோழன் வழிபட்ட சந்திரசேகரரின் (சிவபெருமான்) திருமேனியை கி.பி 1015 ஆம் ஆண்டில் வடிவமைத்த செய்தியே கல்வெட்டில் பதித்திருப்பது. ஆகையினால் இங்கே தேவாரம் என்பது தெய்வத்தை 'வழிபடுவதாக' எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே சொன்னோம். திருப்பதியம் என்ற பெயரில் மட்டுமே தேவாரப் பாடல்கள் அழைக்கப்பட்டன் என்பதை. இங்கே தேவாரம் என்ற சொல்லுக்கான திரு நாகசாமியின் விளக்கத்தைப் பார்ப்போம்.
"The inscription is explicit in its statement that Thiruppadiyam was recited at the Devaram of the sthana matha, thereby clearly stating that the term Devaram stands for a sacred place of worship and does not refer to the hymns. The hymns are referred to as Thiruppadiyams".
தேவாரம் என்றால் வழிபாடு என்பதற்கு இன்னொரு ஆதாரமாக இதோ ஒரு தமிழ்க் கல்வெட்டைக் காண்போம்.
அரசன்: முதலாம் ராசேந்திரன். இடம்: கங்கை கொண்ட சோழபுரம்:(கல்வெட்டு உள்ள இடம் - பெரிய கோயில் தஞ்சை)
செய்தி: உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்ட சோழபுரத்து கோயிலுனுள்ளால் முடிகொண்டசோழன் திருமாளிகையில் வடபக்கத்து ’தேவாரத்து’ச் சுற்றுக் கல்லூரியில் தானம் செய்தருளாயிருந்து உடையார்ஸ்ரீ ராஜராஜ ஈசுவரமுடையார் கோயிலில் ஆசாரிய போகம் நம் உடையார் சர்வசிவபண்டிதைசைவாசிரியர்க்கு (vol 2, SII no.20)
சதாசிவப் பண்டாரம் அவர்கள் இக்கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில் இங்கே திருமாளிகை எனக் குறிக்கப்படுவது அரண்மனையாகும். தேவாரம் என்பது அரசன் நாள்தோறும் தான் தன் வழிபடு கடவுளைப் பூசிப்பதற்காக அரண்மனையில் அமைத்திருந்த வழிபாட்டறையாகும். ஆகவே இக்கல்வெட்டில் வந்துள்ள தேவாரம் என்ற சொல் வழிபாடு நிகழ்ந்து வந்த இடத்தை மட்டுமே குறித்தல் எனக் கொள்ளவேண்டும்.’ என்கிறார்.
அதே சமயத்தில் இந்த வழிபாட்டறைகளை முறையே சீர்செய்து ஒவ்வொரு நாளும் அரசருக்கான தேவைகளை அந்த அறையைக் காண்காணிக்கும் அதிகாரிக்கு ‘தேவார நாயகம்’ எனப் பெயர் அதாவது அப்பதவியின் பெயர் கொண்டு அறியலாம். இதே ராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் ஐந்தாம் ஆண்டில் பதஞ்சலிப் பிடாரன் என்போன் இத்தகைய தேவார நாயகமாகப் பணியில் இருந்தான் என்பதை (EI no. 97 of 1932) ஓர் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
பதினோராம் நூற்றாண்டிலும் தொடர்ந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டிலும் தேவாரம் என்பது வழிபாட்டுக்குரிய சொல்லே என்பதை இன்னொரு கல்வெட்டு ஊர்ஜிதம் செய்கிறது.
காலம்: முதலாம் குலோத்துங்கன், இடம்: திருக்களர்
செய்தி: நம் தேவாரத்துக்கு திருப்பதியம்பாடும் பெரியயோன் மறைதேடும் பொருளான.... அகளங்கப்பிரியனுக்கும்.... வம்சத்தார்க்கும் காணியாக.... செய்யக்கடவன எல்லாம் செய்யப்பண்ணி.... இப்படிக்கு கல்வெட்டு பண்ணுக – இது திருவாய்மொழிந்தருளிய திருமுகப்படி’ SII Vol 8 no.260)
இங்கே திருப்பதியப்பாடல்களை வழிபாடு செய்து எனப் பொருள் கொள்ளவேண்டும். இதே போல அல்லூர் கல்வெட்டிலும் (SII Vol. 8 no. 675) உறையூர்க் கூற்றத்து திருவடகுடி மகாதேவர் ஸ்தானமடம் தேவாரத்துக்குதிருப்பதியம் விண்ணப்பஞ்செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையன்’ என வருகிறது. இப்படி தேவாரமும் திருப்பதியமும் கலந்து வரும் இவ்விரு கல்வெட்டுகளிலிருந்து தேவாரம் எனும் சொல்லுக்கும், திருப்பதியம் எனும் சொல்லுக்கும் பொருள் வேறு எனத் தெரிந்து கொள்ளலாம்.
தேவாரப்பாடல்கள் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டது முதல் குலோத்துங்கன் காலத்தில். இதைப் பற்றிய ஒரு கல்வெட்டு வெண்பா வடிவில் சிதம்பரம் கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது
முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா(று)
ஒத்தமைத்த செப்பேட்டி னுள்எழுதி - இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசைஎழுதி னான்கூத்தன்
தில்லைச்சிற் றம்பலமே சென்று."
முதல் குலோத்துங்கன் படைத்தலைவன் மணவிற் கூத்தன் காளிங்கராயன் என்பான், மூவர் பாடிய திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்து, திருக்கோயிலுள் சேமமுற வைத்தான் என இக்கல்வெட்டு சொல்கின்றது. ஆனால் இங்கேயும் தேவாரம் எனும் சொல் பயன்படுத்தவில்லை. மூவர் எழுதிய பாடல்கள் என்றே போற்றப்பட்டுள்ளது.
இன்னொரு கல்வெட்டு பன்னிரெண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (கி.பி.1110) முதல் குலோத்துங்கன் காலத்தில் வெட்டப்பட்டது. இக்கல்வெட்டுச் செய்தியின் படி குலோத்துங்கன் தொண்டை மண்டலம் சென்றபோது தக்கோலம் எனும் ஊரில் திருவூறலிறைவனை வழிபட்டு அவ்வூர் மண்டபம் ஒன்றில்பகல் பொழுது தங்கியிருந்ததைக் கல்வெட்டாக வடித்திருக்கிறார்கள். மன்னன் அங்கே இறைவனை வழிபட்டதை ‘திருவூறல்பெருமானை தேவாரஞ் செய்து’ என வடிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இங்கேயும் வழிபாட்டு சொல்லாகவே தேவாரம் அமைந்துள்ளது. ஏற்கனவே இத் தொடரில் 12 ஆம் நூற்றாண்டில் திருநீற்றுச் சோழனான இரண்டாம் குலோத்துங்கன் திருமறைக்காட்டுக் கோயிலில் தானே மூவர் பாடல்களை திருப்பதியம் எனக் குறிப்பிட்டு அவைகளைத் தாமே பாடுவதையும், அவன் இல்லாத பட்சத்தில் அந்த உரிமையை இன்னொருவருக்கு உரிமையாக்கி சாஸனம் செய்ததையும் படித்திருந்தோம்.
ஆகையினால் பல்லவர் காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தேவார மூவர் பாடல்கள் சோழர்கள் காலத்திலும் தேவாரம் எனும் பெயரால் அழைக்கப்படவில்லை. திருப்பதியம் எனும் பெயரால்தான் அழைக்கப்பட்டுள்ளன. திருப்பதியம் பற்றிய கல்வெட்டுகள் ஏராளமாக (நூற்றுக்க்கணக்கில்) உள்ளன, அவை ஒவ்வொன்றையும் நாம் இங்கே சாட்சிக்காக இழுக்கப்போவதில்லை. திருப்பதிகங்களை மேலும் உலகறிய வைத்து பன்னிரெண்டாம் நூற்றாண்டில் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழார் கூட தேவாரம் எனும் சொல்லை திருத்தொண்டர் புராணத்தில் பயன்படுத்தவில்லை.திருப்பதியம் என்றே அழைத்தார்.
பதின்மூன்றாம் நூற்றாண்டு சோழர்களின் வளர்ச்சி குறைய ஆரம்பித்த காலம். அதுவும் அந்த நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நன்றாக இருந்த சோழர்கள் பின்பாகத்தில் தங்கள் ஆட்சியை முடித்துக் கொண்டதாகக் கூட கூறலாம். இந்த கால கட்டத்தில் திருமுனைப்பாடி நாட்டில் சிற்றரசனாக ஆண்டு பிறகு சோழ சக்கரவர்த்தியையும் அவன் அமைச்சர்களையுமே சிறையிலிட்டு சாகஸம் செய்தவன் கோப்பெருஞ்சிங்கன் எனும் பல்லவன். ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு பல்லவன் காலத்தில் சோழப் பேரரசை மறுபடியும் ஆரம்பித்து நிலைநாட்டி நானூறு ஆண்டுகள் நிலையாக ஆண்ட சோழர்கள், பதின்மூன்றாம் நூற்றாண்டில் அதே பல்லவ வம்சத்து அரசன் மூலமாக தங்கள் அழிவையும் தேடிக்கொண்டதை சரித்திரம் இன்றைக்கும் சொல்லும். இப்படிப் புகழ்பெற்ற பதின்மூன்றாம் நூற்றாண்டு பல்லவன் கோப்பெருஞ்சிங்கனை புகழ்ந்து அழகிய தமிழில் பாடிய ஒரு கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இங்கே தேவாரம் எனும் சொல் வருவதால் அந்தக் கல்வெட்டை முழுமையாகத் தருகிறோம். (EI VOL.23, NO.27)
பொன்னி நாடனும் உரிமையும் அமைச்சரும்
இருப்பதுன் சிறைக்கோட்டம்
பொறுப்பிரண்டென வளர்ந்த தோள்வலியினால்
கொண்டது சோணாடு
கன்னி காவிரி பகிரதி நின் பரி
யாடுதண் துறை வாவி
காவல் மன்னவர் திறையுடன் வணங்குவது
உன்பெருன் திருவாசல்
வென்னிடாத போர் கன்னடர் வென்னிடப்
பொருத்துதுன் பெருஞ்சேனை
விளங்கு செம்பொனின் அம்பலக் கூத்துநீ
விரும்பிய தேவாரம்
பின்னி காவல் அவனி நாராயண
பேணு செந்தமிழ் வாழப்
பிறந்த காடவ கோப்பெருஞ் சிங்கனின்
பெருமை யார் புகழ்வாரே
இந்தப் பாட்டின் பொருள் (பொதுவாக) காடவர்கோன் (பல்லவ அரசன்) சோழநாட்டின் அரசபரம்பரையையே சிறை வைத்து, தன்னை எதிர்த்த அனைத்து மன்னர்களையும் வென்று அவர்களை கப்பம் கட்டம் வைத்துக் கொண்டும், அதே சமயத்தில் தில்லையம்பலத்தானை விரும்பி வழிபட்டுக்கொண்டு (அல்லது பூஜை செய்து கொண்டும்) வரும் கோப்பெருஞ்சிங்கனின் பெருமையை யாரால்தான் வியந்து பாராட்டமுடியும்? என வருகிறது.
இங்கே முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது தேவாரம் எனும் சொல் வழிபாடு என்ற பொருளிலேயே இன்னமும் இருப்பதைப் பற்றிதான். இவன் காலம் கி.பி 1212 லிருந்து 1270 வரை சொல்லப்படுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் ஏறத்தாழ 1230 லிருந்து 1260 வரைக்குள் இருக்கலாம். இந்த மன்னனால்தான் தமிழகத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்ற விதத்தில் இவன் மீது எனக்கு ஒரு ஆற்றாமையும் உண்டு என்றாலும் நாம் சோழர்களைப் பற்றிப் பேசாமல் தேவாரம் பற்றி எழுதுகிறோம் என்ற நினைவும் கூடவே உள்ளதால், இந்த ஆற்றாமை என்னுடனே போகட்டும். ஆக அந்தப் பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் தேவாரம் வழிபாட்டுக்குரிய சொல்லாகவே தமிழகத்தில் இருக்கிறது என்று கொள்ளலாம்.
பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவம் அவர்கள் திருப்பதியம் என்றே மூவர் பாடல்களை திருமுறை கண்ட புராணத்தில் வர்ணிக்கிறார்.
பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி
பிறங்குதிரு வெண்ணெய் நல்லூர்ப் பித்தாவென்னும்
இன்பமுதல் 'திருப்பதிகம்' ஊழிதோறும்
ஈறாய்முப் பத்தெண்ணா யிரமதாக
முன்புபுகன் றவர்நொடித்தான் மலையிற் சேர்ந்தார்"
ஆக இங்கேயும் திருப்பதிகம் என்ற சொல்லே ஆளப்படுகின்றது.
ஆனால் இதே நூற்றாண்டில் 1330-40 ஆண்டு வாக்கில் தொண்டை மண்டலத்தில் ராச நாராயண மல்லிநாத சம்புவரையன் என்போன் ஆண்ட சமயத்தில் இரட்டைப் புலவர்கள் என்று சொல்லப்பட்ட முதுசூரியனாரும், இளஞ்சூரியனாரும் சேர்ந்து பாட்டுகள் எழுதிப் பாடுபவர்கள். சிவபக்த சிரோன்மணிகள். தில்லையம்பலத்தானை போற்றியும் காஞ்சியில் குடிகொண்ட ஏகாம்பரனைப் போற்றியும் இவர்கள் பாடிய பாடல்கள் தமிழ் இலக்கியவானில் அக்காலத்தில் ஒளி வீசியவை. இவர்கள் பாடிய ’ஏகாம்பரநாதருலா’ எனும் நூலில்தான் முதன் முறையாக திருப்பதிகங்கள் ‘தேவாரம்’ என்றழைக்கப்படுகின்றன. (சதாசிவப்பண்டாரத்தார்)
மூவாத பேரன்பின்மூவர் முதலிகளும்
தேவாரஞ்செய்த திருப்பாட்டும்
என ஏகாம்பரநாதருலாவில் இந்த இரட்டையர்கள் எழுதிப் பாடினார்கள். பேரரசர் என்று ஒருவர் இல்லாமல் சிற்றரசர்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்த இரட்டையர் ஊர் ஊராகச் சென்று தேவாரப் பாடல்களையும் விருப்பத்துடன் பாடுவார்களாம். இதில் முதுசூரியனார் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவர். இளஞ்சூரியனாரோ கண்ணிழந்தவர். இளஞ்சூரியனார் தோளில் முதுசூரியனார் நாடெங்கும் பயணம் செய்து சிவத்தலங்கள் செல்வர். தங்கத்தில் எத்தனை குறை இருந்தாலும் தரத்தில் குறையாது என்ற கவியரசர் பாட்டுக்கேற்ப இந்த இரட்டைப் புலவர்கள், தங்கள் உடலில் ஏற்பட்ட குறைகளைப் பொருட்படுத்தாமல் ஞானத்தால் தமிழை வரித்த்தோடு மூவர் புகழையும் பரப்பிய இந்த சிவபக்தர்களால் திருப்பதியத்துக்கு தேவாரம் எனும் பெயர் சூட்டப்பட்டு இன்றளவும் இறை பக்தர்களால் சிலாகிக்கப்படுகின்றது.
தேவாரம் எனும் தெய்வ இலக்கியம் காலத்தால் அழியாத, அழிக்கமுடியாத அளவில் இத்தனை பெருமை பெற்றதில் தமிழராகிய நமக்குதான் எத்தனை பெருமை..
இந்தப் பதிவுடன் எனக்குப் பிடித்த அப்பர் சுவாமிகளின் தேவாரப்பாடலுடன் இக்கட்டுரைத் தொடரை தற்போதைக்கு முடித்துக்கொள்கிறேன். இறைவன் அருள் கிடைத்தால் இன்னொரு முறை அப்படி சந்தர்ப்பம் கிடைக்கும்போது தேவாரத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும்.
மைப்படிந்த கண்ணாளும் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன்ஓர் உவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன்இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே. (தி. 6. ப. 97. பா. 10)
(இக்கட்டுரைத் தொடர்ந்து படித்து ஆதரித்து வரும் அன்பர்களுக்கு நன்றி! மேலே உள்ள சிற்பங்கள் 1) சோழர் காலத்து அப்பர் செப்புத் திருமேனி 2) ஞானக்குழந்தை ஞானப்பால் குடித்து ஆடுவது 3) சோழர் காலத்து சம்பந்தர் செப்புத் திருமேனி - இறைவனிடம் தாளக்கட்டு பெற்றுப் பாடும் கோலம், 4) சுந்தரர் திருவையாறப்பனைக் காண காவிரியை விலகச் சொல்லி பாட, காவிரி இரண்டாக பிளந்த சிற்பம் - எல்லா சிற்பங்களுக்கும் நன்றி, நண்பர் விஜய், சிங்கப்பூர், மேலும் பல சிற்ப விவரங்களுக்கு அவருடைய வலைப்பகுதி இங்கே