Friday, December 26, 2008


எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914

அடியேன் எழுதிய தமிழ் நாவல் எஸ். எம். எஸ். எம்டன் நமது பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. புத்தக வெளியீட்டு விழா பின்னர் வைத்துக் கொள்வதாக திட்டம் உள்ளது.

எஸ். எம். எஸ். எம்டன் நாவலுக்கு அணிந்துரை அருளியவர் பெரியவர் திரு நரசய்யா அவர்கள். அந்த அணிந்துரையை இதோ உங்கள் பார்வைக்கு:
------------------------------------------------
S M S எம்டன் 22-09-1914
சரித்திர புதினம் - எழுதியவர் - திவாகர்
பதிப்பாளர்: பழனியப்பா பிரதர்ஸ்,
25, ராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை - 600 014
------------------------------------------------

அணிந்துரை: நரசய்யா (கடலோடி, மதராசப்பட்டினம் ஆசிரியர்)

திவாகரின் சரித்திரத் தேடல்:

சரித்தரப் புதினங்களில் ஆசிரியர்கள், சான்றாக, ஒரு சிறு சரித்திர இழையைப் பிடித்துக் கொண்டு, முடிந்தமட்டில் பெரும் வடங்களைத் தயாரித்து விடுகிறார்கள். சரித்திரப் பின்னணி, காலத்தால் பின் செல்லச் செல்ல, ஆசிரியர்களுக்குச் சாதகமாகவேப் புனையும் முயற்சி அமைந்துவிடுகிறது. எந்த சரித்திரப் புதின ஆசிரியரும் இம்முறைக்கு விதிவிலக்கல்ல; அவரவர்கள் திறமைக்கேற்ப அவரவர் தமது கதைகளைப் புனைகின்றனர். அவ்வாறு பிறந்த கதைகளின் வெற்றியோ தோல்வியோ ஆசிரியர்களின் கைவண்ணத்தால் மட்டுமே அல்லாது சரித்திரத்தின் திருப்புமுனைகளால் அல்ல.

திவாகர், சரித்திரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அதே மாத்திரத்தில் சரித்திரத்தினின்றும் சிறிதும் பிரியாது, உண்மையே மையமாகக் கொண்டு சிறந்த புதினங்களை ஏற்கனவே படைத்து வெற்றியும் கண்டவர். அவ்வாறு அவர் படைத்த புதினங்களில் எழுதுகையில் தாம் கண்ட சில அரிய விஷயங்களை அப்போதே வைப்பு நிதி போல வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு தக்க சமயம் வரும்போதில் அவற்றைப் பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கலாம்.

சோழ மாமன்னனும், எஸ். எம். எஸ். எம்டனும் அவ்வாறு கலக்கக்கூடிய வாய்ப்பு எப்போதோ அவருள் துளிர்த்திருக்கவேண்டும். காலத்தால் இந்நிகழ்வுகள் 900 ஆண்டுகள் பிரிந்திருப்பவை; இந்நிகழ்வுகளை மிகவும் ஜாக்கிரதையாக அவர் சேர்க்க எடுத்திருக்கும் துணிவும் முயற்சியும் சாதாரணமானவையல்ல; தெரிந்தே புதைமணலில் இறங்குவது போன்றது.

சரித்திரத்தின் சுவைநலம் நிறைந்த அழகுணர்ச்சியும், அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் குறைத்திடாமல் ஒரு புதினத்தைப் புனைகையில் இரண்டு விரிவாக்கங்கள் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒன்று - சரித்திரப் பின்னணிக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்வுகளை அடக்கியாள்வது; இது 19ஆம் நூற்றாண்டின் ஆங்கில ஆசிரியர்களான டிக்கன்ஸ் போன்றவர்கள் கையாண்ட முறை. அடுத்த முறை - சரித்திரம் அளிக்கும் வாய்ப்புகளைக் கொண்டு, அந்தந்த மொழிக்கேற்ப, சமுதாய விதிகளின்படி தமது திறமையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விருந்து படைப்பது. தமிழில் மிக சாமர்த்தியமாக இம்முறையைக் கையாண்டு அமோக வெற்றியைக் கண்ட கல்கி, பல சரித்திர ஆசிரியர்களுக்கு முன்னோடியாக அமைந்துவிட்டார்.

கல்கியில் தளத்தைப் பின்பற்றி சோழர்கள் சரித்திரப் பின்னணியில் தாமிருக்கும் இடமான கலிங்கத்து அருகாமை தமக்குக் கைகொடுத்திட ‘வம்சதாரா’ என்ற புதினத்தை எழுதியபோதே தனக்கென்று ஒரு பாணியையும் வகுத்துக் கொண்டுவிட்டார் திவாகர்.

‘திருமலைத் திருடனும்’ ‘விசித்திர சித்தனும்’ வெளிவந்தபோது சரித்திரம் அவர் கைகளில் மெருகுடன் கலையுரு பெற்றன.

ஆனால், எஸ். எம். எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்திரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை. இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட்டிருக்கும் பெருமை திவாகரையே சாரும். ஆங்கிலத்தில் ‘க்ளோக் அண்ட் டேகர் மிஸ்டரி’ என்ற வகையாக, படிப்பவரை நாற்காலியில் விளிம்பில் அமர்த்திவிடும் தன்மை கொண்டதாக கதை உள்ளது. கதையைப் படித்துத்த்தான் அதன் வலிமையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் அதன் பரிமாணத்தை விட்டகன்று, நான் அதிசயப்பட்ட பின்னணியை மட்டும் பற்றிக் கூற விரும்புகிறேன்.

எனது நூலான ‘மதராசபட்டின’த்தில் (பக்கம் 120) - ‘மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பலில் ஒரு இந்தியரும் பணியாற்றியிருக்கிறார், அவர் டாக்டர் சம்பகராமன்பிள்ளை என்பவர், இந்தியாவிலிருந்து மருத்துவப் படிப்புக்கு ஜெர்மனி சென்ற இந்த மனிதர் அதில் சேவை புரிந்ததாகத் தெரிகிறது’ என்று எழுதியுள்ளேன். இந்த விவரம் சரியானதா இல்லையா என்று தெரிந்துகொள்ள எவ்வளவோ முயன்றும் என்னால் இயலவில்லை. ஆனால் எம்டன் ‘க்ரூ மேனிஃபெஸ்ட்’டில் அவ்வாறு ஒரு பெயரும் இருக்கவில்லை என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். ஆனால் அவ்வாறு அளிக்கப்பட்ட பட்டியல் எவ்வளவு தூரத்திற்கு நம்பத்தகுந்தது என்று என்னால் கூற இயலவில்லை. ஆகையால் இக்கதை எவ்வாறு உண்டானது என்பதை என்னால் ஆராய்ந்து கூறவும் முடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சென்னை வந்திருந்த எம்டனைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மானியரும் (ஜோஷிம் பாட்ஸ்) இந்தியர் பெயர் ஒன்றும் பட்டியலில் இருக்கவில்லை என்றுதான் சொன்னார்.

ஆகையால் நாம் அறிந்துகொள்ளக்கூடியவை:

1. எம்டன் மதராசை 1914 செப்டெம்பர் மாதம் 22ஆம் நாள் இரவு தாக்கியது
2. சுலபமாக மதராசை அது அழித்திருக்கமுடியும். ஆனாலும் அவ்வாறு செய்யாது ஏதோ ஒரு காரணத்தால், 130 குண்டுகளை மட்டும் துறைமுகத்து எண்ணெய் டேங்குகள் மீது வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது
3. இந்தப் பின்வாங்கலுக்கு சரியான காரணம் ஏதும் கூறப்படவில்லை
4. சம்பகராமன் பிள்ளை என்ற ஒரு டாக்டர் அக்கப்பலில் இருந்ததாகக் கூறப்பட்டாலும் அம்மாதிரி பெயர் ஒன்றும் பட்டியலில் காணப்படவில்லை.

இந்த முக்கிய நான்கு விவரங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் திவாகர்.

பின்வாங்கலுக்குக் காரணம் ஒரு இந்தியராக இருக்கலாமோ என்ற ஒரு ஐயத்தை உண்டாக்குகையில் நாமும் அதை நம்புமாறு ஒரு பிரமையும் உண்டாக்கிவிடுகிறார். அவர் வார்த்தைகளில் கூறவில்லை என்றாலும், ஒரு போர்க்கப்பலில் மற்றொரு தேசத்தினர் இருப்பதை தஸ்தாவேஜுகளில் காப்டன் காண்பிக்காமலிருக்கலாம் என்று நம்மை நம்ப வைத்துவிடுகிறார். இது இந்தப் புதினத்திற்கு ஒரு மிக்க வலிமையான பின்புலத்தை அளித்துவிடுகிறது

ஆங்கிலப் போர்க்கப்பல் ‘யார்மவுத்’ போல நான்காவது புகைப்போக்கியை வைத்துக் கொண்டு ஏமாற்றி இந்துமகா சமுத்திரத்தில் வலம் வந்த போதும் கோகோ தீவுகள் அருகே எம்டன் ஆஸ்திரேலியக் கப்பல் ‘சிட்னி’யால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு, தரை தட்டி நின்றதும் 131 மரணங்களும் 65 வீரர்கள் காயமடைந்து இருந்ததும் சரித்திர உண்மைகள். திவாகரின் கதை இவற்றில் சற்றும் பிறழாது முன்செல்கிறது.

சரித்திரப் பின்னணி தவிர இந்து ஆகம விதிமுறைகளும் சிவாச்சாரியார்களின் ராஜபக்தியும், படிப்பவரை ஆச்சரியத்தில் திளைக்க வைக்கின்றன. மகுடாகமத்தினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ளுமாறு எழுதியுள்ளார். புதினத்தில் வரும் பாத்திரங்களான சிவபக்தர்கள், ராதை, சிதம்பரம், துரைமார்கள், நோபிள், கப்பல் காப்டன் மூல்லர் மற்றும் மிக்கே முதலானோர், நூலைப் படித்து முடித்த பின்னரும் நம் மனத்தை விட்டு அகல மறுக்கிறார்கள்.

இதுதான் திவாகரின் வெற்றி!

நரசய்யா
சென்னை-20
narasiah@yahoo.com

--------------------------------------------------------------------------

Labels: