Monday, May 21, 2007

மாமல்லபுரம் முதல் காஞ்சி வரை - 2
"என்ன பார்த்தீர் புலவரே..நீரே சொல்லும்...காஞ்சி உமக்கு பிடித்துள்ளதா?"

"என்ன தம்பி இப்படி கேட்டுவிட்டாய்? காஞ்சியை முழுதும் பார்த்துவிட்டால் எனக்கு இந்த நகரத்தைவிட்டு செல்ல மனம் வராதோ என்னவோ..."

'சரிதான் கவிஞரே! இப்படி எல்லா அயலூர்க்காரர்களும் சொல்லிகொண்டிருந்தால் நாங்கள் உள்ளூர்க்காரர்கள் எங்கே போவதாம்?"

'கேட்க மறந்துவிட்டேன்.. 'நிறைய மாளிகைகளின் வாசல்களிலே மலை போல் சோறு போட்டு அதன் மேல் குடம் குடமாக நெய் ஊற்றுகிறார்கள்.. ஏன் தம்பி?'

"அது யானைகளின் உணவு புலவரே.."

"யானைகளுக்குக் கூட காஞ்சியில் நெய்ச்சோறு உணவா? கேட்கவே இன்பமாக இருக்கிறது..வளமையான நகரம்தான்.. ஆனால் குரங்குகள் அந்த நெய்ச்சோற்றை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டு ஓடும் காட்சிதான் சிரிப்பு வருகிறது...:"

"புலவரே.. யானை நம் கட்டுப்பாட்டுக்குள் வளரும் பிராணி.. நாம்தான் சோறிடவேண்டும்.. ஆனால் குரங்கு அப்படியல்ல.."

"ஆனாலும் காஞ்சி மிகப் பெரிய ஊர்தான் தம்பி.. காஞ்சி வரும் வரை பொடி நடை என்று சொல்லி சொல்லியே அழைத்து வந்ததால் கால் வலி தெரியவில்லை. ஆனால் ஊருக்குள் நுழைந்து ஒவ்வொன்றாய் பார்க்கப் பார்க்க கால் வலி எடுக்க ஆரம்பிக்கின்றது.."

"உண்மைதான்.. நீர் ஒரே நடையில் காஞ்சியை சுற்றிப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப் பட்டால் இப்படித்தான் கால் வலிக்கும்..எங்கள் காஞ்சியில் எத்தனை சத்திரங்கள் பார்த்தீர்கள்?.. அங்கு எங்காவது தங்குங்கள்..ஒன்று சொல்கிறேன்.. எங்கள் காஞ்சியை போல ஒரு நகரத்தை நீங்கள் எங்கும் காணமுடியாதது.. ஏன்.. சொர்க்கம் கூட காஞ்சிக்கு சற்று குறைவுதான்.. அதோ அந்த சாலைகளைப் பாருங்கள்.. எத்தனை அகலமான சாலையாக இருந்தாலும் எத்தனை மக்கள் கூட்டம் பார்த்தீரா? எங்கெங்கும் விழாக் கோலம்தான் இங்கு.. அதோ அந்த மக்கள் கூட்டம் இந்த ஊர் மக்கள் இல்லை. ஆனால் அவர்களின் கடவுளுக்கு விழா எடுக்க இங்கு வந்துள்ளார்கள்..இங்கு எல்லோரும் வரலாம்.. எல்லாக்கடவுளையும் கொண்டாடலாம்..'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை இந்தக் காஞ்சியில் மட்டுமே பார்க்கலாம் கவிஞரே..."

"நீ சொல்வதெல்லாம் சரி தம்பி.. அதோ அதுதான் அரண்மனையோ.. அதன் மேற்கே பாரேன்.. செவ்வானம் எத்தனை அழகாக இருக்கிறது..கொள்ளை அழகுதான்.. சரி தம்பி.. அந்த செவ்வானத்தைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?"

"பஞ்ச பாண்டவர்க்கும் கவுரவ நூற்றுவர்க்கும் நடந்த யுத்தத்தில் அந்த போர்க்களமே குருதியால் சிவந்து கிடந்ததாம்.. ஒருவேளை அந்தக் குருதி அந்த செவ்வானத்தில் கரைந்துவிட்டதோ என்னவோ?"

"என்ன குரூர சிந்தனையப்பா.. ஒருசமயம் மென்மையாக பெண்மையைப் புகழ்ந்து பேசுகிறாய்.. சிலசமயம் இப்படி ரத்த சிந்தனை வயப்படுகிறாய்.."

'கவிஞரே..மென்மையும் வன்மையும் நிறைந்ததுதான் இந்த உலகம்.. சரி.. சரி.. உமக்கு இந்த நாட்டு அரசனைக் காணவேண்டாமா?"

"ஆஹா.. அதற்காகத்தானே வந்தேன்.. தம்பி அந்த இளந்திரையனிடம் என்னை அழைத்து செல்வாயா..அவனை நான் போற்றிப் பாடும்போது நீயும் பக்கத்தில் இருந்தால் எத்தனை நல்லது?

"நீர் ஏன் அவனைப் போற்றிப் பாட வேண்டும் புலவரே? இந்த அழகான நிலத்தைப் பெற்றதற்கு அவனல்லவா போற்றவேண்டும்?.. நீர் ஒன்று செய்யும்.."

"என்ன"

"நாம் இந்த நாட்டில் கண்ணால் கண்டதை எல்லாம் அழகிய தமிழில் தொகுத்து ஒரு கவிதை வாசியும்..இது நீர் அவனுக்கு தரும் பரிசு.. பதிலுக்கு அவனும் உம்மை நன்றாக கவனித்துக் கொள்வான்.."

"அப்படியே செய்துவிடுகிறேன்.. நாளை என்னை அரச சபைக்கு அழைத்து செல்வாயா?

"நானா? வேண்டாம்.. நான் உம்மோடு வந்தால் உமக்கு வரும் பரிசை எல்லாம் நானே தட்டி சென்று விடுவேன்.. ஏனெனில் நானும் உம்மோடு சேர்ந்துதானே காட்சிகளைக் கண்டவன்..அதையே நானும் கவிதை வடித்துப் பாடி விட்டால்? .."

"ஆஹா.. கவிதை என்றால் உனக்கு அவ்வளவு எளிதாகப் படுகிறதா.. தமிழ் விளையாடவேண்டுமய்யா..சரி.. உன்னோடு இனி என்ன பேச்சு.. நான் தனியாகவே செல்கிறேன்.. நீயும் வந்து உன் கவிதைகளை எடுத்து விடு.. நானும் பாடுகின்றேன்.. பார்த்துவிடுவோம்.. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை...?

"அடடா..இந்த கவிஞர்களே இப்படித்தான்..புசுக் கெனக் கோபம் மட்டும் எங்கிருந்தோ வந்துவிடுகிறது..பார்ப்போம் புலவரே.. நாளை சபையில்..."

(அடுத்த நாள் காலையில் 'பெரும்பாணாற்றுப் படை கவிதைத் தேனைச் சுமந்து கொண்டு கண்ணனார் காஞ்சி மன்னனைக் காணச் சென்றார்..அங்கு அவர் சக பயணியும் காணப்பட்டான் - அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு..)

அன்புடன்
திவாகர்.

Labels: