அம்ருதா
வம்சதாரா, திருமலைத்
திருடன் வரிசையில் என்னுடைய இன்னொரு புதினமாக ‘அம்ருதா’ எனும் புதிய புத்தகம் இணைகின்றது...
சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்படுகின்றது.. பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட சரித்திர நாவல்தான்
எனினும் என்னுடைய ஏனைய நாவல்களின் விவரணைப் பின்னணியிலிருந்து சற்று விலகி எழுதிய நாவலாகத்தான்
என் மனதுக்குப் படுகின்றது.. ஆனால் இது இப்படித்தானா என்று வாசகர்கள்தானே சொல்லவேண்டும்!!
பாரதத்தின் சரித்திர
நிகழ்வுகளில் பெண்களின் பங்கினைப் பற்றி தகவல்கள் ’அதிகம்’ இல்லைதான் . அதிலும் அரசகுமாரிகள்
என வரும்போது அவர்கள் திருமணச் சந்தையில் பேரம் பேசப்படுவதைப் போலத்தான் அரச காரியங்களுக்காகப்
பயன்படுத்தப்பட்டதை சரித்திர ஆசிரியர்கள் விவரித்துள்ளனர். இப்படிப்பட்ட ஆணாதிக்க சூழலில்
ஒரு சரித்திரப் புதினத்தில் பெண்களின் முக்கியப்பங்குடன் கூடிய நிகழ்வுகளைப் பொருத்தி
இந்தக் கதையைப் புனைந்துள்ளேன்.
ஏற்கனவே என்னுடைய
நாவல்களில் முக்கியமான பாத்திரமாக சோழ மன்னன் குலோத்துங்கனைக் கொண்டு வந்துள்ளேன்.
இந்த குலோத்துங்கன் தாய்வழித் தோன்றல் மூலம் மிகப் பெரிய சோழதேசத்துக்கு மன்னராக அங்கீகரிக்கப்பட்டவர். தந்தைக்குப்
பின் மகன், மகனுக்குப் பின் அவனுடைய மகன் எனும் ஆணாதிக்க வாரிசுப் போட்டியில் தாய்வழித் தோன்றலான குலோத்துங்கன்
எப்படி மிகப் பெரிய பேரரசராக அங்கீகரிக்கப்பட்டார் என்பதை எழுத வேண்டும் என்பது என்
பல்லாண்டு ஆசை. தமிழின் சிறந்த படைப்பிலக்கியமான கலிங்கத்துப் பரணியில் ஒரு சில செய்திகளும்,
வடமொழி சிருங்கார காவியமான ’விக்கிலமங்கசரிதா’ வும் சில சான்றுத் தகவல்களைத் தெரிவித்தாலும்
இவைகள் வெகு சூசகமாகத்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பது என்னவோ வாஸ்தவம்தான்.
தாய்வழித் தோன்றலில் மன்னனான குலோத்துங்கர் எப்படி ஆட்சிபீடம் ஏறினார் என்பதை சரித்திர ஆய்வாளர்கள்
இன்னமும் தெளிவாகச் சொல்லவில்லைதான். ஆனால் இன்றைய தென் ஆந்திரப் பகுதிகளின் குலோத்துங்கனைப்
பற்றிய பூர்வீக செய்திகள் கல்வெட்டாக, செப்பேடுகளாக நிரவி இருக்கிறது. நிறைய ஆய்வுகள், நிறைய செய்திகள், சில ஆந்திரப் பேராசிரியர்களுடன் கலந்துரையாடல்களுக்குப் பிறகுதான் இந்தப் புதினத்தை எழுத ஆரம்பித்தேன். காலவிரயம் அதிகம் ஆனாலும் நிறைவாக ஒரு காரியம் செய்வதால் ஏற்படும் திருப்தியே அலாதிதான். அந்த திருப்தி இப்புதினத்தை எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.
குலோத்துங்க அரசன்
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலும் சோழதேசத்தை மிகச் சிறப்பாக ஆண்டவன் என்பது சரித்திரம்
படித்த அனைவருக்கும் தெரியும்தான். அந்த பதினொன்றாம் நூற்றாண்டில் பாரதத்தில் மிகப்
பெரிய சாம்ராஜ்யமாக குலோத்துங்கனின் அரசு இருந்ததாக ஆங்கில பேராசிரியர்கள் வியந்து
எழுதி இருக்கிறார்கள்.. இத்தனைக்கும் யுத்தங்கள் கூட ’அவ்வளவாக’ அடிக்கடி நடைபெறாத
அமைதியான ஆட்சியாக இருந்ததாகவும் பாராட்டுகிறார்கள்.
’அம்ருதா’வைப்
பற்றிய கருத்துரைகளையாகவும் அணிந்துரையாகவும் மனமுவந்து அளித்து புதினத்துக்குப் பெருமை சேர்த்த மலேயா
தமிழ் எழுத்தாளர் திருமதி மீனா முத்து, மரபு ஆய்வாளர் திருமதி சுபாஷினி டிரெம்மல்,
மூத்த பெண் எழுத்தாளரான திருமதி சீதாலக்ஷ்மி, கணக்காயர் பர்வதவர்த்தினி இவர்கள் அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்.
ஒரு சித்ராபௌர்ணமி
நாளின் அடுத்த நாளிலிருந்து தொடங்கி அடுத்து வரும் பத்துநாட்களுக்குள் ஏற்படும் சம்பவங்களில்
தொகுப்பாக இந்தக் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆந்திராவின் கிருஷ்ணை நதியில்
தொடங்கி சோழநாட்டில் இந்நிகழ்வுகள் முடிவடைவதால் ஆந்திரத்தின் பழைய தகவல்கள் பலவும்
தரப்பட்டுள்ளன. சாதிகளின் கொடுமைகள் அந்தக் காலகட்டத்திலேயே மனித சமூகத்தின் சாபக்கேடாக
இருந்ததையும், பெண்களை சூதக்காய்களாக எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டனர் என்பதையும்
ஆனாலும் நல்லவர்களின் தன்னலமில்லாத சேவைகளும் தேசபக்தியும் எப்படியெல்லாம் ஒரு தேசத்தைக்
காப்பாற்றுகின்றன என்பதையும் முக்கியமாக நம் தேசத்து சக்தி வழிபாட்டுச் செய்திகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
புத்தகத்துக்கு இனிய நண்பர் கோவை ஜீவா அவர்கள் அட்டைப்பட ஓவியத்தை அருமையாக அமைத்துள்ளார்கள்.
புத்தகம் படிப்பது
வாசகர்களுக்கு சிரமமாக இருக்கக்கூடாது என்பதில் சற்று எச்சரிக்கையாகவே இருந்திருக்கிறேன்
என்பதை முன்னமேயே தெரிவித்து விடுகிறேன். என்னுடைய ஏனைய புத்தகங்களை வாசகர்கள் ஏற்றுக்
கொண்டு வாழ்த்தியதைப் போல ‘அம்ருதா’வும் வாழ்த்தப்படுவாள் என்ற நம்பிக்கையோடு
திவாகர்.
(ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே..
.புத்தகத்தின் விலை ரூ.330/= (தான்).
கிடைக்குமிடம் - பழனியப்பா பிரதர்ஸ்,
25, பீட்டர் சாலை, சென்னை 600 014 (#044-28132863 // 43408000) மற்றும், மதுரை, திருச்சி,
கோவை, ஈரோடு கிளைகளிலும் கிடைக்கும்).