உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நானும்
Thanks for the excellent hospitality of Tamilnad Government. நன்றியை முதலில் சொல்லிவிடவேண்டும். நன்றாகவே கவனித்தார்கள். எந்த ஒரு குறையும் இல்லை என்பதைத் தாராளமாகவே சொல்லலாம்.
செம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்தவுடன், இதனை ஆதரித்தவர்களை விட, போகவேண்டாம் என்று சொன்னவர்கள் அதிகம் என்று ‘அன்போடு’ இங்கே சொல்லிவிடுகிறேன்.. இது தமிழ் மகாநாடா அல்லது கட்சியின் மாநாடா என்று குழுமங்களில் கேட்டவர்கள் அதிகம். ஆய்வரங்கங்களைப் பொறுத்தவரை மாற்றாரின் இந்தக் கருத்தை மாற்றிவிட்டது தமிழக அரசு என்றுதான் சொல்லவேண்டும்.
சான்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆன்றோர்களின் ஆவலான முகங்களை அரங்கத்தில் இந்த நான்கு நாட்களிலும் கண்டபோதும், உயர்ந்த பேராசிரியர்களின் உன்னதமான சிந்தனைகளைக் கேட்கும்போதும், பண்பார்ந்த பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டபோதும் இளைஞர்களின் உற்சாகமான பங்கேற்றலை அறிந்தபோதும், மகளிரின் மங்காத புன்னகையோடு மலர்ந்த கட்டுரைப் பேச்சுகளைக் கேட்டபோதும், தமிழின் மீது உள்ள எதிர்கால நம்பிக்கை ஏராளமாக மிளிர்கிறது.
எனக்கென்று பார்க்கும்போது, நான் அங்கே சந்தித்த சான்றோர்கள், பேராசிரியரும், பேரறிஞருமான பெரியவர் எஸ்.என்.கந்தசாமி, தொல்லியல் பேரறிஞர் டாக்டர் ஆர். நாகசாமி, அருட்செல்வர் நா.மகாலிங்கம், முன்னாள் தஞ்சை துணைவேந்தர் ஈ. சுந்தரமூர்த்தி, இந்நாள் கோவை துணைவேந்தர் முருகேச பூபதி, ஆன்மீக அறிஞர் தவத்திரு ஊரன் அடிகள் இவர்களுடன் நடந்த நீண்ட கலந்துரையாடல்கள் நிச்சயமாக அடுத்து வரும் என் எழுத்துகளில் பிரதிபலிக்கும் என்றே நம்புகிறேன்.
நமது விஜய் மூலமாக அறிமுகமான கொங்குநாட்டு எதிர்கால நட்சத்திரமான ஆர்வமிகு இளைஞர் சங்கர் வானவராயரின் அன்பும் நட்பும் கிடைத்தது ஒருபக்கம் மகிழ்ச்சியென்றால் தாம் பிறந்த நல்நாட்டுக்கும், பண்பாட்டுக்கும் பயனளிக்கும் செயல் செய்யவேண்டும் எனும் அவரது தெளிவான நல்நோக்குப்பார்வையும் வேறொரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தது.
இன்னொரு வகையில் இந்த மாநாட்டில் கிடைத்த பலன், ’தேவாரம் தெலுங்கில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நான் இரண்டு பேராசிரியர்களை கூட்டணி சேர்த்துள்ளேன். காஞ்சி பல்கலைக்கழகத்து சங்கரநாராயணனும், சென்னை பல்கலைக்கழக மூர்த்திகாரு வும் உதவுகிறார்கள்.
எனக்கு ஒதுக்கப்பட்டது நக்கண்ணையார் அரங்கம். நண்பர்களுக்கு பெயரை எடுத்துச் சொல்லி முடிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. (கடைசியில் ‘நக்கண்ணையார்’ பற்றி கூட தெரியாத நீங்களெல்லாம் எப்படி இங்கே வந்தீர்கள் என்று ஒரு போடு போட்டதால் எல்லாரும் அடங்கிவிட்டார்கள். நல்லகாலம், அவர்கள் என்னை திருப்பி எதுவும் கேட்கவில்லை!!) முதல்நாள் மற்றும் கடை நாள் தவிர பாதுகாப்புக் கோட்டை போல உள்ள கொடீசியா ஆய்வரங்கத்திலேயே செலவழித்தாலும் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். பல பழைய நண்பர்கள் முகம் புதுப்பித்துக் கொண்டோம். பல பேராசிரியர்களின் அறிமுகம், அவர்கள் எழுதியுள்ள பல புத்தகங்களின் அறிமுகம், உற்சாகமான இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கைகள் என ஏராளமாக எழுதிக்கொண்டே போகலாம்தான்.
என் பார்வையில் சில தகவல் துளிகள்:
• தமிழ்ப் பல்கலைக் கழகம் மிகப் பரவலாக உழைத்திருப்பது இந்த ஆய்வரங்கத்திலும் பரவலாகவே தெரிகிறது. ஆனால் அதற்குரிய அங்கீகாரமோ, பாராட்டோ அந்தப் பல்கலைக்கழகத்துக்குக் கிடைக்குமா என்று பிறகுதான் தெரியவரும்,
• ஆய்வரங்கக் கட்டுரைகள் கூட ஒரு நடுநிலையுடன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதும் இந்த மாநாட்டின் மையநோக்கு காக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவரும். சமயம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்தன. பக்தி இலக்கியம், சமயத் தத்துவங்கள் பற்றிய தாராளமான பார்வையும் இந்த மாநாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
• சரித்திர ஆவணங்கள், சிற்பநோக்கு பரவலாக அலசப்பட்டது. ஆனால் சில தவறான சரித்திரத் தகவல்கள் ஆங்காங்கே சில சரித்திரப் பெருமக்களாலேயே ஆய்வரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது வருத்தத்துக்குரியது. குறிப்பாக ஒரு சென்னைப் பல்கலைக்கழகப் பெண்மணி தன் கட்டுரையில் ராஜராஜசோழன் மறைந்த வருடம் கி.பி 1016 (உண்மையில் 1014) என்று சொல்லிக்கொண்டே தொடர்கிறார்.
• நாத்திகமும், பெரியார் கொள்கையும் கூட தாராளமாகப் பேசப்பட்டது. பிராம்மணர்கள் பலர் கலந்துகொண்டார்கள் என்றாலும் பிராம்மண எதிர்ப்புக் கட்டுரைகளும் இருந்தன (ஆனாலும் கொஞ்சம்தான்). நாடகம் பற்றிய கட்டுரைகளில் பலரும் கலைஞர், அண்ணா ஆற்றிய பணிகள் (ஆனாலும் கொஞ்சம்தான்) பேசப்பட்டன.அதிசயமாக நண்பர் ஆராதியின் வேதாந்தக் கருத்துகள் உள்ளடிக்கிய கட்டுரை வாசிக்கப்பட்டது.
• ஆய்வரங்கங்களில் தமிழே பிரதானமாகப் பேசப்பட்டது என்றாலும் ஆங்கிலத்துக்கும் குறைவில்லை. மலேய எழுத்தாளர் சங்கம் என்ற ‘கோட்’ போட்டு, ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வரங்கத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு மலாய் அரசு நிதி உதவி அளித்ததாகக் கேள்வி. நல்லதுதான்.
• தமிழ் இணைய மாநாட்டு ஆறு ஆய்வரங்கங்கள் கூடவே தனியாக செம்மொழி அரங்களிலிருந்து சற்று தூரம் விலகி நடத்தப்பட்டது சற்று விசித்திரமாகப் பட்டது. அந்த மாநாட்டு நிர்வாகிகள் நிறைய பேர் எனது இணைய நண்பர்கள் என்றாலும் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் அந்த ஆய்வரங்கங்களில் பார்வையாளர் கூட்டம் மிகக் குறைவு. இதைப் பத்திரிகையாளர்கள் படம் எடுத்துப் போட்டாலும், இணையப் பேச்சாளர்களின் கருத்துக்களையும் பரவலாகவே பத்திரிகைகள் பதித்தன.
• என்னுடைய ஆய்வரங்கமான நக்கண்ணையார் அரங்கு நிர்வாகத்தை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பேராசிரியரும் 10 மாணவ மணிகளும் நிர்வகித்தனர். ரொம்ப சுறு சுறு. அவர்களைப் பாராட்டிய கையோடு என்னுடைய வம்சதாரா புதினத்தை அவர்களுக்குப் பரிசளித்தேன். (சுறு சுறு போய் அவர்கள் அனைவரும் புத்தகத்தில் ஆழ்ந்துபோனது இன்னொரு கதை).
முத்தாய்ப்போடு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
செம்மொழிக்காக சுமார் இருபது ஆய்வரங்கங்கள். நான்கு நாட்கள், நான்கு அமர்வுகள். ஒவ்வொரு ஆய்வரங்கத்திலும் நான்கு பேச்சாளர்கள், இப்படி இருக்கும்போது ஆய்வரங்கப் பார்வையாளர்கள் என்று பார்க்கும்போது முதல்நாள் கூட்டம் இல்லை என்றதும் எனக்கும் விஜய்க்கும் எங்கள் ஆய்வரங்கத்துக்கும் இந்தக் கதியோ என்று சற்று பயம் ஏற்பட்டது. சகோதரி ஜெர்மனி சுபா, தனக்கு வீடியோ கேமரா ஒன்றே போதும் என்றார்!! (அதற்கேற்றாற்போல செய்திகளிலும், டி.வியிலும் சுபா மயம்தான்!). ஆனாலும் அடுத்தநாள் களைகட்டத் தொடங்கியது.
என்னுடைய கட்டுரைக்கும், விஜய் யின் கட்டுரைக்கும் மிகப் பரவலாக ஆதரவு கிடைத்தது. ஆய்வரங்கமும் நிரம்பி இருந்தது. எனது ஆய்வரங்கத் தலைவரான கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு முருகேச பூபதி, தன் முடிவுரையில் என்னுடைய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அத்தனைக் கருத்துக்களையும் உடனடியாக ஆதரித்து அங்கேயே ஒரு தீர்மானமும் எடுத்துப் அரசாங்கத்துக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் தமிழர் இனத்தின் வளர்ச்சிவிகிதம் குறைந்து வருவதாக நான் ஆதாரத்தோடு குறிப்பிட்டது அவரது ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. இந்தக் குறிப்பையும் பதிவு செய்தார். அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் ஆணையம் ஒன்று சென்னையில் மிக அவசியம் என்றும் பதிப்பித்துள்ளார்.
இது நல்ல செய்திதானே..
Some Pictures, (Photo Courtesy Mr. Vijay)
with Bala Pillai of Tamilnet discussing seriously on unknown subject.
(The Grand Son of Maraimalai Adigal intervening, in Centre Prof.Murugesa Bhupathi, VC.)
(I was talking on my subject while the other speaker takes photograph)
(Shankar Vanavarayar, Me, Dr.Nagasami, Arutchelvar,& Kalyan of Project Madurai)
Labels: தமிழ் செம்மொழி மாநாடு திவாகர்