"என்ன கவிஞரே... ஊருக்குப் புதியவரோ?"
"அட.. உனக்கும் தெரிந்துவிட்டதா?.. நான் புலவன் என்பதை எப்படி கண்டுபிடித்தாயோ?"
"இந்த 'நீர்ப்பெயற்று' கடலை 'ஆ' வென வாயைப் பிளந்துகொண்டே ரசிக்கிறீர்கள்.. ஆடை சற்று கந்தல்...ஆனால் உம் கண்களில் ஒரு மின்னல் ஒளி... இது போதாதா உம்மைக் கவிஞன் என காட்டிக் கொடுக்க?..."
ஆஹா.. பெரிய ஆள்தான் போ.. சரி..சரி.. காஞ்சிக்கு போகும் வழி சொல்லேன்..."
"இந்தக் கடல் பக்கமிருந்து மேற்கே சென்றால் காஞ்சி.."
"திசை தெரியாமல் கேட்கவில்லை அப்பா.. வழி ..வழி கேட்கிறேன்.. புரிந்ததா?"
காஞ்சிக்கு நீர் போக வேண்டும்.. அவ்வளவுதானே.. வாரும்.. நானும் அந்தப் பக்கம்தான்.. இப்படியே பொடி நடை போட்டால் காஞ்சி வந்துவிடும்.."
நல்ல வாய்ப் பேச்சுக்காரந்தான் நீ.. இதோ பெரிய கடல் கண்முன்னே வெள்ளம் போல் வருகின்றது..இங்கிருந்து காஞ்சி வெகு தொலைவில் இருப்பதாக எல்லோரும் சொன்னால் நீ ஏதோ பொடி நடை என்கிறாய்..."
"கவிஞரே! கடல் நீர் வெள்ளம் போல நம்மை நோக்கி பெயர்ந்து வருகிறது என்று அழகாக சொன்னீர்..அதனால்தான் இந்த ஊரை 'நீர்ப்பெயற்று' என்று அழைக்கிறார்களோ என்னவோ... அதோ அங்கே பாரும்.. அந்தக் கடல் நீரில் எத்தனை அழகான பெண்கள் எத்தனை ஆனந்தமாக நீர் விளையாட்டு விளையாடுகிறார்கள்... சிரிக்காமல் பாரும் அந்தப் பெண்ணை.. தன் செவிப்பூணைத் நீரில் தொலைத்துவிட்டு தன் மெல்லிய வளைகரங்கள் குலுங்க தவிக்கும் அழகைப் பாரும்... அடடே..அதோ அந்த நீலவண்ண மீன்கொத்திப் பறவை அவள் செவிப்பூணை பளபளக்கும் மீன் என நினைத்து கொத்தி எடுத்து செல்கின்றதே.. பாவம் அந்தப் பெண். சரி சரி கவிஞரே! இதையெல்லாம் பார்க்காமல் 'கருமமே கண்ணாயினார்' போல் காஞ்சி நோக்கி நடை போட்டால் கடலிலிருந்து காஞ்சி பொடி நடைதான்.."
"இதோ பார்.. நான் காணாததையெல்லாம் எனக்கும் காண்பித்துவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் வா..என்றால் எப்படி? கவிஞன் என்றால் இயற்கையை ரசிப்பவன் ஐய்யா..அந்தப் பறவையையும்,பெண்களையும், கடலையும் பெயர்ந்து வரும் நீரையும் அப்படியே பார்த்து கொண்டே இருக்கலாம்தான்.."
"நீர் காஞ்சிக்கு போக வேண்டுமா.. வேண்டாமா?"
வேண்டும்..சரி சரி.. நடையைக் கட்டு.. என்ன இருந்தாலும் இந்த நீர்ப்பெயர்ற்று ஊர் பரபரப்பாகவே இருக்கிறதய்யா.. அங்கே பார்.. பெருங் கப்பல்கள் எத்தனை அனாயாசமாக நங்கூரம் போட்டு நிற்கின்றன..நல்ல நல்ல குதிரைகள் இறங்குகின்றனய்யா.. உம்... வணிகம் அதிகம் நடைபெறும் ஊர்தான்.. செல்வம் அதிகம் உள்ள ஊர் போலும்.. பாலும் நெல்லும் எங்கு பார்த்தாலும் அதிகம் தெரிகிறதே..அதோ.. அந்த நெல் வயல் ஒத்தையடிப் பாதையில் வரிசையாக நடந்து வரும் பெண்களைப் பார்.. எத்த்னை நளினமான நடை..ஆஹா.. அவர்களின் ஆடைகளின் பளபளப்பு அவர்களின் அலங்கார நகைகளின் பளபளப்பை ஈடு
செயகிறதய்யா..நல்லது.. நல்லது.. நாடு வளமாக இருந்தால் நல்லதுதான்.."
"கவிஞர்கள் எப்போதும் இப்படி நல்லதையே நினைத்து சொல்வதால்தான் நாடு வளமாக இருக்கிறது.. அதோ அந்தப் பெண்கள் அணிந்த கொன்றை மலர் கூட கண்களுக்கு குளுமையாக காட்சியாக இருக்கிறதே.. அந்தப் பெண்களின் நடையைப் பாருங்களேன்.. கோடை மழையைக் கண்ட மயில்களின் துள்ளல் நடை..பாருங்களேன் அப்படியே துள்ளித் துள்ளி நடந்தாலும் கீழே விழாமல் அவர்கள் நூல் பந்துகளை தூக்கிப் பிடிக்கும் அழகே தனிதான்..ஏன் புலவரே.. அவர்கள் கால் சிலம்பு பொன்னால் செய்யப்பட்டதோ.. கிண்கிண்' என இனிமையாக சலங்கை சத்தம் நம் காதில் விழுகிறதே.."
'"நீ சரியான பெண்பித்தன்.. பேசாமல் நடையைக் கட்டுவாயா.. தங்கம்..அது இது.. என வர்ணிக்கிறாய்?"
"ஓஹோ! புலவர் வறுமையால் வாடுகிறார் போலும்.. சரி..சரி.. உம்மை எதற்கு உசுப்பெற்றவேண்டும்?..இவர்களையும் இந்த வழியில் உள்ள இந்தக் கிராமத்து செல்வங்களையும் பார்த்து கொண்டே போனால் நடை அலுக்காது என்பதற்காக சொன்னேன்.."
"அது என்னவோ உண்மைதான் தம்பி.. இந்த வழித்தடம் கூட நன்றாக இருக்கிறது..பார்.. ஒவ்வொரு ஊரிலும் பாதைகளை எவ்வளவு நேர்த்தியாக செப்பனிட்டு சரியான இடங்களில் மாட மாளிகைகள் எழுப்பி உள்ளார்கள்... அந்த வயல்களில் பாரேன்.. அந்தக் காளை மாடுகள் கூட களையாகத் தெரிந்தாலும் களைப்பில்லாமல் உழவுக்கு உழைக்கின்றதே.. உம்... வரப்புகளில் கூட தண்ணீர் அதிகம் தெரிகின்றது..வரப்புயர மண் உயரும்.. சரியான சொல்தான்.."
"மண் உயர் மன்னன் உயர்வான்.. மன்னன் உயர மாந்தர் உயர்வார்".. "இப்போது புரிகிறதா கவிஞரே.. ஏன் இங்கு செல்வம் கொழிக்கின்றது என்று்?.."
புரிகிறது.. நன்றாகவே புரிகிறது.. ஆஹா! அதோ எதிரே தெரிகின்றதே.. அதுதான் காஞ்சியோ? உன்னோடு பேசிக்கொண்டே வந்ததில் பொழுதே தெரியவில்லை..நடையும் துளியும் அலுக்கவில்லை.. நீ சொல்வது போல 'கடலிலிருந்து காஞ்சி பொடி நடைதான்"...
"அது வெளிப்புறத்து ஊர் புலவரே... காஞ்சியை நீர் சரியாக காணவேண்டும்..நடையை சற்று வேகமாக கட்டும்..சொல்கிறேன்.."
---------------------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மாமல்லபுரத்திற்கு பழையபெயர் 'நீர்ப்பெயற்று' என்பது. மேல கண்டது அனைத்தும் 'கடியலூர் உருத்திரங்கண்ணனார் நேரில் கண்டு 'பெரும்பாணாற்றுப்படை' யில் எழுதியதுதான்..
(வண்ட லாயமொ டுண்டுறை.....என்று தொடங்கும் பாடல் வரிகள்). சரி.. கண்ணனார் அன்று கண்ட அந்தக் கால காஞ்சியையும் சற்றுப் பார்ப்போமே..
அன்புடன்
திவாகர்.