தமிழ்மணத்தில் ஸ்டார் அந்தஸ்து:
தமிழ்மணம் என்னை இந்த வார நட்சத்திர பதிவாளராக எப்படி தேர்ந்தெடுத்தார்களோ யான் அறியேன். நட்சத்திர பதிவாளர் என்றதும் இதுவரை வந்த மற்ற நட்சத்திரப் பதிவுகளைப் படித்தபோதும், அவர்கள் ஒவ்வொரு பதிவிலும் கையாண்ட தொழில்நுட்பம், படங்கள், தரம் இவற்றைப் படித்து பிரமித்துப் போய்விட்டேன். இவர்கள் அளவுக்கு என்னால் எழுதி பதிவு செய்ய முடியுமா என்றால் சந்தேகம்தான்.
நம்மாழ்வார் பாடல் நினைவுக்கு வருகிறது.
"இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன்கவி பாடும் வைகுந்தநாதனே"
இப்படி பாடல் பாடிவிட்டு அவர் ஆண்டவனைக் கேட்பார் - 'எத்தனையோ பரம பக்தர்கள் காத்திருக்க என்னைத் தேர்ந்தெடுத்து உன் புகழ் பாட வைத்தாயே, உனக்கு என்ன கைம்மாறு செய்வேனோ', என்று கேட்பார் - அப்படி கேட்டாலும் நம்மாழ்வாரின் உண்மையான பெருமை பகவானுக்குத் தெரியும். அதனால் ஆண்டவன் நம்மாழ்வாரை தமிழ் வேதம் பாட வைத்தான்.
ஆனால் நமக்கெல்லாம் அப்படி இல்லை என்று நன்றாகவே தெரியும். இது தமிழ்மணம் அதிருஷ்டவசமாக கொடுத்த பரிசுதான். ஆனாலும் தமிழ்மணம் மூலமாக ஒரு சுறுசுறுப்பு கிடைத்துள்ளது என்று சொல்வேன். சாதாரணமாகவே என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் என் சோம்பலை ஓட ஓட விரட்டியுள்ளது. 'இந்த ஏழு நாட்களும்' தொடர்ச்சியாக நேரத்துக்குள் வெவ்வேறு கட்டுரைகள் பதிவு செய்யவேண்டுமே என்ற கவலையையும் பொறுப்புணர்ச்சியையும் ஒருங்கே தந்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.
தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவாளர் என்பதால் பலபேர் வாழ்த்துகளை என்னுடைய மெயிலுக்கே அனுப்பிவைத்துவிட்டார்கள். குழுமங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களெல்லாம் மறுபடி வந்து இந்த வலைப்பூவைப் பார்க்கும் விதத்தில் அடிக்கடி எழுதி பதிவு செய்வதற்கு இந்த உற்சாக வாழ்த்துகள் பயன்படும்.
வலைப்பூக்கள் மூலமாக எத்தனையோ நல்ல கருத்துகள் கொண்ட கட்டுரைகள் எங்கிருந்தோ எல்லாம் வெளிப்படுகின்றன. பிரபல தமிழ் வாராந்தரிகள் இந்த நல்ல நல்லக் கட்டுரைகளையெல்லாம் எழுதியவர் அனுமதி பெற்று அனைத்துத் தரப்பினரும் படித்து மகிழும் வகையில் தங்அள் இதழ்கள் மூலம் வெளிக்கொணரவேண்டும். மேலை நாடுகளில் பிரபல தினசரிகளே நல்ல 'பிளாக்குகளை' தேர்ந்தெடுத்து பிரதி தினம் வெளியிடுகிறார்கள்.
அதுவும் 'தமிழ்மணம்' திரட்டித் தரும்போது, தேன் சுமந்து வரும் வலைப்பூக்களின் தேனை மற்ற எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வாரந்தரிகள் தயக்கம் காட்டக்கூடாது. சமீப காலங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தினசரி இங்கிலீஷ் வலைப்பூக்களை முதல் பக்கத்தில் முதல் பத்தியில் சற்று கோடி காட்டுகிறது. இதைப் போலவாவது தமிழ்ச் செய்தி பத்திரிகைகளும், வார மாத இதழ்களும் செய்து காட்ட முன்வரவேண்டும்.
'விஜய், அசின், நமிதா, த்ரிஷா மற்றும் அஜித் போன்றோர் வலைப்பூக்கள் இருந்தால் சொல்லுங்கள்.. அதை முழுவதும் வேண்டுமானாலும் போட்டு பக்கத்தை நிரப்பி தமிழ் நெஞ்சங்களுக்கு ஆத்ம திருப்தியை தருவோம்' என்று வாராந்தரிகள் சொன்னாலும் சொல்வார்கள். இன்றைய தமிழ் இதழ்களின் நிலை அப்படி..
ஆனாலும் வாரந்தரிகளை விட பலரது வலைப் பூக்கள் மிகவும் முன்னேறிய நிலையில் வழங்கப்படுகின்றன. ஆடியோ-விஷுவல், அரிய வகைப் படங்கள், கருத்தான செய்திகள் என பல வலைப் பூக்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன.
காலம் மிக மிக வேகமாக முன்னேறிக்கொண்டே இருக்கும் இந்த காலகட்டத்தில் பேப்பர் உபயோகமும் வெகுவாக குறைந்துகொண்டே போகும்.. இது காலத்தின் கட்டாயமோ என்னவோ.. நீண்ட ஆயுள் கொண்ட வலைப் பூக்கள் மென்மேலும் செழித்து வளரும். மணம் வீசும். சந்தடி சாக்கில் சக வலைப் பதிவாளர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் - எதையும் விமரிசனம் செய்யுங்கள், மற்றவர் மனம் புண்படாதபடி ; எதையும் போற்றிப் புகழுங்கள், தேவையான அளவு மட்டும்.
அன்புடன்
திவாகர்
Labels: தமிழ் மணத்தில் ஸ்டார் அந்தஸ்து..