Tuesday, June 02, 2009




விஜயவாடா எங்கள் விஜயவாடா - பகுதி 1

மறுபடியும் நம் நண்பர்களுடன் இரண்டு நாள் விஜயவாடா பயணம் இனிமையாகவே இம்முறையும் கழிந்தது. வருடத்தில் ஒருமுறை மே மாதத்தில் அல்லது டிசம்பர் மாதத்தில் சந்திப்பது என்ற முடிவை எப்போது எடுத்தோமோ அந்த முடிவை இந்நாள் வரை செயல்படுத்திவருவதும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஊரில் காலை வைத்தவுடன் நாங்கள் வழக்கமாகச் செய்வது அன்னை கனகதுர்காவை தரிசனம் செய்வதுதான். அந்த சிரித்த முகமும், அருள் பார்வையையும், எல்லோரும் தம் மக்களே என்பதை சொல்லாமல் சொல்லும் இதழ்களும், இன்னும் எத்தனைமுறை வந்தாலும் என்னைப் பார்த்துவிட்டுதான் செல்லவேண்டும் என்று கட்டளையிடும் கண்களும்.. காணக் காணத் திகட்டாதவள்.. நெஞ்சில் நினைக்க நினைக்க இனிப்பவள்

விஜயவாடாவைப் பற்றி ஏற்கனவே என்னுடைய சில கட்டுரைகள் சில திங்கள் இதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் அந்த ஊரைப் பற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத நம்மிடம் ஏராளமான விஷயங்கள் இருப்பதே ஒரு பெருமைதான் என்று சொல்லவேண்டும்.

இதே மே மாதத்தில்தான் ஒருநாள் (1977 இல்) முதன்முறையாக அந்த ஊரில் எனது வலது (அல்லது இடது) கால் வைத்து நுழைந்தவன் நான். வெய்யில் கொளுத்தோ கொளுத்தும் மங்கல நாளில் (அன்று 117 டிகிரி ஃபாரன்ஹீட்) அந்த ஊருக்குள் நுழைந்தபோது, அந்த வெப்பத்தின் கொடுமையை கொஞ்சமும் தாங்கமுடியாமல் அன்னபூர்ணா ஏஸி தியேட்டரில் தஞ்சம் புகுந்தவன். முதன் முதலாக நாகேஸ்வரராவின் புத்தம்புது தெலுங்கு படத்தை மத்தியான ஷோ பார்த்தவன். அப்போதுதான் புதியதாய் கட்டப்பட்ட திரை அரங்கின் சுகமான குளிர் வசதியில் பாதி தூக்கம், பாதி படம் என்று பார்த்துவிட்டு வெளியே வந்தவனின் காதுகளை மறுபடியும் வெப்பம் சர்ரென ஒரே தாக்காக தாக்கி அதிரவைக்க, மறுபடியும் அந்த தியேட்டரிலேயே சரண் அடைவதுதான் விவேகம் என்று பலமாக என்னுடைய அத்தனை உணர்வுகளும் அதிவேகமாக அறிவுறுத்த, டிக்கெட்டுக்காக பார்த்தால் ஒரு நீண்ட க்யூ. இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று தைரியமாக ஒரு பெண்ணின் அருகே சென்று ஆங்கிலத்தில் ஒரு டிக்கெட் வாங்கி உதவும்படி கேட்க, என் பணத்தை வாங்கும் அதே சுப வேளையில் அவள் கணவனோ (அல்லது காதலனோ) அவளை முறைக்க, அப்படியும் என் மேல் பரிதாபப் பட்ட அந்தப் பெண்மணி டிக்கெட் வாங்கிக் கொடுத்து உதவத்தான் செய்தார் என்பது எனக்கு ஆச்சரியத்தோடு ஒரு கர்வத்தையும் அந்த ஊரின் குறிப்பாக பெண்மணிகளின் தங்கக் குணத்தை அறியும் சந்தர்ப்பத்தையும் முதன் முதலில் அந்த ஊர் ஒருசேர தந்தது என்பதையும் இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். (பின்னாட்களில் இவர்கள் (பக்கத்துவீட்டுக் காரர்கள்) காலை டிபன் அனுப்புவார்கள். இரண்டு மூன்று இட்லி தொட்டுக் கொள்ள ஆவக்காய் விழுதுடன்.)

ஆனால் வரும் காலங்களில் இந்த வெய்யில் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை நான் வந்த அந்த நன்னாளில் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் விஜயவாடா வெப்பம் எல்லாம் பழக்கப்பட்டு, வழக்கப்பட்டுவிட்டால் அது கூட சுகமாகவே தெரியும் என்பதைக் காலம் எத்தனையோ முறை உணர்த்ததான் செய்தது.

விஜயவாடா எனக்கு உலகத்தை இன்னதெனப் புரிய வைத்த ஊர். இந்த ஊர் மக்கள் மண்ணின் மைந்தர் கொள்கைகளில் தீவிரப் பற்றுடையவர்கள் என்றாலும் நம் தமிழினம் என்றால் ஒரு விதமான தனிப் பற்று அவர்களுக்கு உண்டு. (தமிழர்கள் என்பார் அறிவாளிகள் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்.) எனக்கு எல்லா சமூகத்தினரோடும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்தித் தந்த ஊர் விஜயவாடா. தமிழ்நண்பர்கள் (இளைஞர்கள்) நாங்கள் ஒரே குழுவாக இங்கு செயல்பட்டது ஒரு வேடிக்கையான உண்மை.

முதன்முதலாக நண்பர்கள் அனைவரும் ஐயப்பமாலை போட்ட தருணத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு பக்திபூர்வமானவை என்றால் அதே நண்பர்கள் படையைத் திரட்டி ஒருமுறை முருகன் கோயில் திருவிழாவில் நடக்க இருந்த தமிழ்-தெலுங்கு சண்டையை வலுவுக்கு அழைத்துப் பிறகு தவிர்த்ததும் மறக்கமுடியாததுதான். தமிழ்மொழி மூலம் பாடங்களைக் கற்கும் பள்ளி ஒன்று இருந்ததால் தமிழரை ஒன்றுசேர்ப்பது சற்று எளிதாகத்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் இளைஞர் படை என்றால் பள்ளி நடத்தும் முதியவர்களுக்கு சற்று ஆகாதுதான். இயற்கையான காரணம்தான்.. இளைஞர்களைக் கண்டால் வரும் சாதாரண பயம்.. (!!!) எல்லாம் முருகன் கோயில் சண்டைக்குப் பிறகு வந்ததுதான்.

முருகன் கோயில் ஒன்று சென்ற நூற்றாண்டில் கனகதுர்கா குடியிருக்கும் அதே இந்திரகிலாத்திரி மலையில், அம்மனுக்கு சற்று வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டது. நாங்கள் 1979-80 களின் ஆரம்பத்தில் அடிக்கடி செல்லும் ஆலயம். ஒருமுறை ஸ்கந்த ஷஷ்டி உற்சவத்தின் போது ரொம்ப ரொம்ப அதிகமாக (!) ஏற்பட்ட தமிழ்ப் பற்றின் விளைவினால் கோயில் முன் வாகாக அமைந்த பாறையில், தமிழில் அருள்மிகு வள்ளி-தேவசேனா சமேத ஸுப்ரமணிய தேவஸ்தானம் என்று வெள்ளைப் பெயிண்டினால் மிகப் பெரிதாக எழுதினோம். முதலில் வேடிக்கைப் பார்த்த தெலுங்கு பக்தர்கள் நாங்கள் ஏதோ சினிமா பாடல் எழுதுவதாக நினைத்துக் கொண்டார்களாம். ஆனால் உண்மை தெரிந்தவுடன் சத்தம் போட ஆரம்பித்தனர். அதெல்லால் தமிழில் எழுதக்கூடாது, வேண்டுமானால் சமுஸ்கிருதத்தில் எழுதிக்கொள் என்று ஆலோசனை வேறு.. நாங்கள் பிடிவாதம் பிடித்து எழுதிவிட்டோம். இது சண்டைக்கு ஆதி காரணம், மற்றும் பாதி காரணம். மீதிக் காரணமெல்லாம் எங்கள் இரு குழுக்களிடையே வாய்ப்பேச்சு மீற மீற உருவானதுதான்.

முருகன் கோயில் அமைந்த விதமும் முருகனுக்கு மிகவும் பொருத்தமாக மலைக் குன்றில் அமைந்ததும் முருகனுக்குப் பிடித்தமே. ஆனால் அந்தக் கோயில் மேலே செல்ல ஒரே ஒரு திசையில்தான் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்ததால், அந்த வழியையே மேலே-கீழே உள்ளோர் உபயோகிக்கவேண்டும். சட்டென எங்களுக்கும் தெலுங்கருக்கும் கொடவு (தகறாறு) பெரிதாகிப் போனது. விஜயவாடாவுக்கே உரித்தான மிக அருமையான, காதுக்குத் தேனாக இனிக்கும் கெட்டவார்த்தைகளால் எங்களில் தெலுங்கு தெரிந்தோருக்கும் உண்மையான தெலுங்குக் காரர்களுக்கும் சொற்போர் ஆரம்பமானது. எனக்கும் என் நெருங்கிய சில நண்பர்களுக்கும் இந்தச் சண்டையில் பிடித்தமில்லை. காரணம், தமிழ்க்கார பெண்களும் குழந்தைகளும் அதிகம் இருந்ததாலும், ஒருவேளை கைகலப்பில் இந்தச் சண்டை தொடங்கிவிட்டால் இவர்களை யாருமே கவனிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த நிலையில்தான் இன்னொரு திடுக் தகவல்.. கீழே அடிவாரப் படிகளில் சில ரௌடிக் கும்பல் எங்களுக்காக காத்திருப்பதாக தகவல் கிடைத்தது. மேலே உள்ள சண்டை கீழே பரவினால் நமக்குதான் டேஞ்சர். சொல்லிப்பார்த்தோம். என்னுடைய ஃபேமஸ் quote - ‘நம்ப எல்லாரும் இந்தியர்கள், இங்கே தெலுங்கும் கிடையாது, தமிழும், ,கிடையாது’ என்று அடிக்கடி இங்கிலீஷில் சொல்லிப்பார்த்தாகிவிட்டது. (இந்த வார்த்தையை இப்பவும் நம் நண்பர்கள் வட்டம் சொல்லிக்காட்டுவது கூட உண்டு). இதற்குள் எங்கள் நண்பன் ஒருவன் எப்படியோ கீழே நழுவிவிட்டான். அவன் தனக்குத் தெரிந்த ரயில்வே போலிஸ் சூப்பிரெண்டெண்ட் (இவர் நடிகை மஞ்சுளாவின் அப்பா என்று பின்பு கேள்விப்பட்டேன்) மூலம் லோகல் போலிஸை வரவழைத்ததால் முதலில் வரிசையாக பெண்களையும் குழந்தைகளையும் கீழே அனுப்பிவைத்தோம். பிறகு கொஞ்சம் முறைத்துக் கொண்டே நாங்களும் வெளியேறினோம். (அதாவது கைகலப்பு சண்டை என்று வந்தால் நாங்களும் தயார்தான் என்பதைப் போல பார்வை). அதன் பிறகு எங்களுக்கு உள்ளூர் தமிழர் மத்தியில் கொஞ்சம் மவுசு கூடியது என்றே சொல்லலாம். ஆனால் அதே சமயத்தில் நம்ம தமிழ்ப் பெரியவர்கள் ‘அவசரக்காரப் பசங்க, ஏதாச்சும் ஆகியிருந்தா யாரு பொறுப்பு’ என்று முனகிக் கொண்டிருந்தனர் என்பதையும் இங்கே சொல்லிவிடவேண்டும்..

ஆனால் இந்தப் ‘புகழ்’ எங்களுக்கு வேறு விதத்தில் கை கொடுக்க ஆரம்பித்தது. அதுதான் நாடகம் போடுவது என்ற முடிவுக்கு வந்தது. மேடை நாடகங்கள் மூலம் அங்குள்ள தமிழரை கலக்கிய அனுபவங்கள் வேறு விதமானவை.

இன்று மிக மோசமாகிப்போய்விட்ட இலங்கை இனக் கலவரத்தை எதிர்த்து அந்த ஆரம்ப நாட்களிலேயே (ஆகஸ்டு 16, 1983) விஜயவாடாவில் ஒரு மிகப் பெரிய தமிழர் ஊர்வலத்தை நடத்திக் காட்டியதும் அந்த ஊர்வலத்தில் கல் குவாரியில் வேலை செய்யும் ஏழைத் தமிழ் தொழிலாளர்களும் கலந்து கொண்டதையும் நினைத்தால் இப்போதும் மனதுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் ஆந்திர அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு தமிழ்க்கார ஏ.எஸ்.பி, எங்களைத் தனியாக வரவழைத்து ஊர்வலத்துக்கு எதிராக அறிவுரை செய்ததும், நாங்கள் அவரை ‘முடிந்தால் உதவி செய்யுங்கள்.. இல்லையேல் தயவு செய்து குறுக்கிடாமல் இருந்தாலே போதுமானது’ என்று சொன்னதையும் நினைத்துப் பார்க்கிறேன். கொழும்புவில் தமிழர்களின் வாழ்வை சூறையாடிய ஜெயவர்த்தனேயைக் கண்டனம் செய்த அந்த ஊர்வலத்தினை லோகல் பேப்பர்கள் வெகு தாராளமாகவே போட்டோவுடன் பெரிய செய்தியாக பிரசுரித்திருந்தன.

இன்னும் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.. தமிழினம் ஒற்றுமையாக செயல்பட்டால் எதையும் சாதிக்கமுடியும் என்று எனக்குத் தனிப்பட்ட வகையில் போதித்த ஊர் விஜயவாடா..

அடுத்து வரும்:

திவாகர்

Labels: , , ,