Saturday, June 02, 2007

அவனுக்கு மனத்தளவில் எதையும் வைத்து பாதுகாக்கத் தெரியும்
அவள் அவனுக்கு நேர் எதிரானவள் எதையும் பளிச்சென்று சொல்லிவிடுவாள்

அவன் அதிகம் பேசுவதில்லை
அவளோ துறு துறு என எந்நாளும் எந்நேரமும் பேச்சு பேச்சுதான்

அவன் நடை கூட நிதானம்தான்
அவளோ துள்ளல் நடை

அவன் வேடிக்கைக்கு கூட யாரையும் எள்ளி நகையாடத் தெரியாதவன்
அவள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை - மனதிற்கு பட்டதை பட்' டென பேசும்போது, அதுவும் அடிக்கடி பேசும்போது சில சமயம் சிலர் மனம் புண்படலாம், அவள் கவலைப்படுவதில்லை.
அவன் கண்கள் கூட ஏதோ யோசிப்பதைப் போல அடிக்கடி மூடிக்கொள்ளும்
அவள் கண்களோ பரபரத்து சுற்றும் விழித்துப் பார்க்கும் பார்வையில் மீனும் வெட்கிப்போகும்.

மீன் என்றல்லவா சொன்னோம், சரிதான் அவள் மதுரைக்காரிதான். அந்த மதுரைக்காரக் குறும்புப் பெண்ணுக்கு சென்னையில் வேலை கிடைத்ததாக செய்தி வந்ததால் - அந்த இனிய செய்தியை தோழியுடன் பகிர்ந்து கொள்ள அவள் இல்லத்திற்கு செல்ல - அட அவன்தான். தோழியின் அண்ணனாம். சென்னையில் இருந்து வந்தவன். பரபரத்த ஒரு நல்ல நேரத்தில்தான் அவனை அவள் பார்த்தாள்.

இந்த முறை அவன் கண்கள் மூடிக்கொள்ளவில்லை. சாதாரணமாகவே நிதானமானவன் அந்தப் பாவையின் பார்வைக்கு தன் நிதானத்தை இழந்தது வாஸ்தவம்தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால் எப்போதும் பரபரக்கும் அவள் கண்கள் சட்டென சாய்ந்து நிலம் பார்த்தது ஏன் என்று அவளுக்கும் தெரியவில்லை.

தோழிப் பெண் வழி அனுப்ப, ஏதும் பேசாமலே ரயில் வண்டியில் ஏறும் வனிதையைப் பார்த்தபோது அவள் தோழிக்கு புதிர் போல் தோன்றினாள். சடசட என அருவி போல கொட்டும் வார்த்தைகள் கூட தூவானம் வெளுக்க மழை நின்றது போல் நின்று போனது. ஏனடி திடீர் மெளனம் என்று தோழி கேட்டாள். சொல்லத்தெரியவில்லை இவளுக்கு. எதையும் பளிச்சென பேசுபவள் ஏன் எதையோ மறைக்கிறாள் என்று
தோழிக்கும் புரியவில்லை. சரி.. இவளுக்கு என்னவோ ஆயிற்று.. போனவுடன் குறுந்தகவல் கொடு என்றாள்.
மனதில் பட்டதைச் சொல்லும் வழக்கத்தை விட்டுவிடாதடி என்று அறிவுரையும் கூறித்தான் அனுப்பி வைத்தாள்.

அவள் சென்னை சென்றாலும் அவள் மனம் என்னவோ முந்தைய இரவின் நினைவே அவளிடம். தோழி கேட்டபடி தன் மனதில் பட்டதை மின்தகவல் அனுப்பினாள்.

"நேர் வந்து நின்னைக் கண்டு நேற்று ராத்திரியே மீண்டேன்
ஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரக் காணேன்
ஆர் வந்து சொல்லினும் கேளேன் அதனையிங்கனுப்புவாயே
"

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேதநாயகம்பிள்ளை (1826-1889) மாயவரத்தில் முன்சீபாக பணிபுரிந்து வந்தார். தன் ஆருயிர் நண்பரான சுப்பிரமணியத் தேசிகரை (அப்போதைய திருவாவடுதுரை சைவ ஆதினகர்த்தா) ஒரு மாட்டுவண்டியில் சென்று சந்தித்து பகலெல்லாம் அளவளாவி இரவு விடை பெற்று வீடு (மாயவரம்) வந்தவருக்கு நண்பரை மறுபடியும் காணும் ஆவல் ஏற்பட்டு விட்டது. ஒரு கவிதை மடலை எழுதி தன் வண்டிக்காரனிடம் அனுப்பி வைத்தார்.
'சூர் வந்து வணங்கு மேன்மை சுப்பிரமணியத் தேவே' என்று ஆரம்பித்து மேற்கண்டவாறு முடியும் செய்திக் கவிதை தான் அது.

சரி..மாயூரம் வேதநாயகம் பிள்ளையைப் பற்றி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால் காரணம் உண்டு. அவர்தான் முதன் முதல் தமிழ் நாவலை எழுதி தமிழ்த்தாய்க்கு காணிக்கை சமர்ப்பித்தவர். இந்த தமிழ் நாவல் உலகில் சாதனை படைத்தவர்களில் இரண்டு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. கல்கியும் தேவனும்தான் அந்த இருவர்.
தேவன் மறைந்து தற்சமயம் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஐம்பதாவது நினைவு ஆண்டில் தேவனைப் பற்றி சிறிது எழுதுவோமே என்றுதான் இப்படி ஆரம்பித்துள்ளேன்.

Labels: